நான் பெற்றோருடன் சூளைமேட்டில் கிருஷ்ணாபுரம் எனும் தெருவில் கடைசியில் பஜனை கோவில் தெருவில் வசித்தபோது எதிர் வீட்டில் அம்புலிமாமா பத்திரிகை அலுவலகத்தில் வேலைபார்த்த க்ரிஷ்ணய்யா எனும் தெலுங்கர் வசித்தார். விஜயா வாஹினி ஸ்டுடியோ சம்பந்தப்பட்ட அலுவலகம் என்பதால் அவருக்கு எல்லா படங்களும் பார்ப்பதற்கு இலவச பாஸ் கிடைக்கும். அவர் வீட்டில் முக்கியமாக தெலுங்கு படங்கள் தான் பார்ப்பார்கள். அவர் மகன் நாகராஜன் எங்கள் நண்பன். ஆகவே வேறு யாரும் கிடைக்காததால் என்னை ஒருநாள் தி.நகர் பாண்டிபஜாரில் இருந்த ராஜகுமாரி தியேட்டருக்கு அழைத்து சென்றான். எனக்கு எந்த படமாக இருந்தாலும் பார்க்க சந்தர்ப்பம் கிடையாது என்பதால் பெரு மகிழ்ச்சி. போகவர நடைதான். அப்போது தான் முதல் முறையாக நாகராஜனோடு நான் பார்த்த முதல் தெலுங்கு படம் ''விப்ரநாராயணா '' அந்த படத்தில் நாகேஸ்வர ராவ் தான் விப்ரநாராயணா. பாஷை புரியாவிட்டாலும் என் இளம்வயதில் என் மனதில் குடிகொண்டவர் விப்ரநாராயணா எனும் தொண்டரடிப் பொடி ஆழ்வார். பானுமதி தேவதேவி. இது 1954ல். இப்போது பின்னோக்கி பல நூற்றாண்டுகள் சென்றுவிட்டோம்.
'' காவிரி சூழ் சோழநாடு சோறுடைத்து'' என்பதால் எங்கும் வளமை, சுபிட்சமாய் இருந்ததோடு தெய்வீகப் பிறவிகளும் அவதரிக்க காரணமாக இருந்தது தான் ஆச்சர்யம். அந்த சோழநாட்டில் ஒரு கிராமம் திரு மண்டங்குடி. நாலு வேதங்களும் கற்றுணர்ந்த அந்தணர்கள் வாழ்ந்த ஊர். சோழியன் குடுமி சும்மா ஆடாது என்று சொல்வார்களே, அந்த குடுமி சோழிய பிராமணர் வகுப்புக்கு 'விப்ரா' என்றும் ஒரு பெயர் உண்டு. அவர்கள் வைணவர்கள். நாராயணனையே தொழுது ஜீவிப்பவர்கள்.
இந்த வகுப்பு குடும்பம் ஒன்றில் வேத விசாரதர் என்று ஒரு பிராமணர். அவர் நாள் தோறும் நிறைய புஷ்பங்களை சேகரித்து மாலை கட்டி எம்பெருமானுக்கு சாற்றி மகிழும் வழக்கமும் பழக்கமும் கொண்டவர்.
எம்பெருமான் பிரதியுபகாரம் பண்ணாமலா இருப்பான்? பிராமணருக்கு பிரபவ வருஷம், மார்கழி மாதம் கிருஷ்ண சதுர்த்தி அன்று செவ்வாய் கிழமை, கேட்டை நக்ஷத்ரத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. சாதாரண குழந்தை அல்ல, சுவாமி! -- வேத விசாரதர் மலர்மாலை தொடுத்து சாற்றி பெருமாளை மகிழ்வித்ததால் பெருமாள் ஸ்ரீ நாராயணனின் வைஜயந்தி வனமாலையே, மனித குழந்தையாக பிறந்தது. குழந்தைக்கு புன்யாஹவசனம் செய்து விப்ர நாராயணன் என்று பெயர் சூட்டினார் பிராமணர். ஒருநாள் பெருமாளிடமி ருந்து வந்த சேனை முதலியார் தரிசனம் கிடைத்ததில் விப்ர நாராயணன் தனது பிறவிக்கான காரணம் புரிந்து கொண்டான். இதை அறிந்தபின் விப்ரநாராயணன் எம்பெருமானிடம் இன்னும் அதிக பக்ஷ பக்தி செலுத்தினார். எம்பெருமான் எங்கெல்லாம் குடிகொண்டிருக்கிறாரோ அங்கெல்லாம் சென்று அந்த க்ஷேத்ரங்களில் அவரை தரிசிக்க ஒரு ஆவல் பிறந்தது விப்ரநாராயணருக்கு.
ஸ்ரீரங்கம் அடைந்தவர் பாம்பணை மேல் பள்ளி கொண்ட ரங்கநாதனைக் கண்டவுடன். ''இதுவே போதுமே, வேறெங்குமே போக அவசியமில்லையே '' என்று எண்ணமும் தோன்ற 'இனி இங்கேயே தான் நான். என் ரங்கனுக்கு அன்றாடம் அருமையான மலர்மாலைகளை தொடுத்து சூட்டுவேன்'' என முடிவெடுத்தார்.
ஒரு அழகான நந்தவனம் தயாராகி நறுமணம் கொண்ட வெவ்வேறு ஜாதி வகை மலர்கள் பூத்துக் குலுங்கட நந்தவனத்தின் மையத்திலே ஒரு குடிசை தான் விப்ரநாராயணர் ஆஸ்ரமம். . திருமாலைத் தவிர, அவருக்கென்று தொடுக்கும் பூவைத் தவிர, பூவையர் மேல் புத்தி போகவில்லை, அதற்கு நேரமும் இல்லை.
ஊரே இந்த விப்ரநாரயாணன் என்கிற விந்தை மனிதனைக் கவனித்த போது வைகுண்ட நாதனுக்கும் பிராட்டிக்கும் அவனைத் தெரியாமலா இருக்கும்?.
''நாதா, இந்த விப்ர நாராயணன், உங்கள் மேல் உள்ள பக்தியால், அழகிய ஆணாக இருந்தும், ஏன் பெண்கள் மேல் மனம் செலுத்தாமல் அவர்கள் மூலம் பெறும் அன்பு, பாசம், நேசம் எதுவும் அறியாமல் உள்ளானே! அவன் எதிர்காலம் என்ன ஆகுமோ?'' என்று நாராயணனைக் கேட்டாள் திருப் பிராட்டி. .
''என்ன ஆகும் என்றா கேட்டாய், நீதான் பார்க்கப் போகிறாயே'' என்று சிரித்தார் எம்பெருமான்.
திருக் கரம்பனூர் என்று அருகே ஒரு ஊர். அதில் அக்காலத்திய முறைப்படி இறை பணியில் தம்மை அர்ப்பணித்த இரு பெண்கள் (தேவ தாசிகள் என அழைக்கப் பட்டவர்கள் ) ராஜ சபையில் நாட்டிய மாடுபவர்களாக அரசர்கள் ஆதரவில் வாழ்ந்தவர்கள். அந்த இரு பெண்களின் பெயர்கள் தேவி, தேவதேவி. இருவருமே மிகச் சிறந்த அழகிகள். பார்ப்போர் நெஞ்சங்களை வலை வீசி பிடித்து, பிழிந்து அடிமையாக்கும் விழிகளைக் கொண்டவர்கள். ஆடலோடு பாடவும் தெரிந்தவர்கள். கேட்க வேண்டுமா ராஜாவின் ஆதரவுக்கு, அவர்கள் செல்வாக்குக்கு?
சோழ ராஜா உறையூரில் அரண்மனையில் வசித்தான். அரசனின் நல் ஆட்சியில் எல்லோருக்கும் எங்கும் சுபிட்சமான வாழ்க்கை. அவர்களது ஆடல் பாடலில், அழகில் மயங்கி அரசன் முத்தும் பவழமும் பொன்னும், வைரமும் வாரி இறைத்தான் அவர்களுக்கு.
''தேவி அக்கா , நாம் போகும் வழியில் ஸ்ரீ ரங்கம் சென்று ரங்கநாதனை தரிசிக்க ஆவலாக இருக்கிறது. செல்வோமா?'' என்றாள் தேவதேவி, இளையவள், பேரழகி.
பல்லக்கு ரங்கநாதனின் கோவிலை நெருங்கியபோது வழியில் விப்ர நாராயணரின் நறுமண, மலர்கள் பூத்து குலுங்கிய நந்தவனம் கண்ணில் பட்டது.
''அமைதி சூழ்ந்த இந்த நந்தவனம் யாருடையது? இது பூலோகத்திலா, வைகுண்டத்திலா எங்கிருக்கிறது . இது போல் எங்குமே கண்டதில்லையே அக்கா ?''
''ஒ இது விப்ர நாராயணர் என்கிற ஒரு பிராமண பக்தருடைய நந்தவனம். அவர் செடி வளர்த்து மலர்கள் பறித்து தன் கையால் மாலை தொடுத்து அரங்கனுக்கு அன்றாடம் சாற்றும் ஒரு துறவி''
''அப்படியா, அவரைக் கட்டாயம் பார்த்து சேவிக்க வேண்டும் அக்கா'' என்றாள் தேவதேவி.
''அதற்கென்ன வா உள்ளே போய் அவரை தரிசிப்போம்'' என்றாள் தேவி.
அவர்கள் ஆஸ்ரமத்தில் நுழைந்தபோது நாராயணனைத் துதித்துக்கொண்டு மலர்ச்செடிகளுக்கு நீர் வார்த்துக் கொண்டிருந்தார் விப்ரநாராயணர். அவரது கம்பீரத்தில், அழகிய தோற்றத்தில், மனம் பறி கொடுத்து கண்டதும் காதல் கொண்டாள் தேவதேவி. தனது காதலை தெரிவித்து வணங்கினாள். ஏதோ ஒரு பூனை, நாயைப் பார்ப்பது போல் அவர்களைப் பார்த்து விட்டு அவர் துளியும் அவர்களை லக்ஷியம் செய்யாமல் தனது வேலையில் தொடர்ந்தார்.
''என்ன ஆணவம் இவனுக்கு? உலகமே மயங்கும் என் அழகில் மயங்காத ஒரு ஆடவனும் உண்டா? இந்த மனிதனை என் அழகில் மயங்கச் செய்கிறேன் பார்'' என்று வீரம் பேசிய தேவதேவி,
''அக்கா, இங்கே சில நாள் நான் தங்கி இவனை மாற்றிக் காட்டுகிறேன் பார். நீ போ. நான் என் சபதத்தை முடித்துவிட்டு வருகிறேன்'' என்றதும் தேவி சென்று விட்டாள். தேவ தேவி ஸ்ரீரங்கத்தில் இடம் பிடித்து தங்கினாள் .ஆடம்பர உடை ஆபரணங்களைக் களைந்தாள் . ரிஷிபத்னி போல காவி உடை அணிந்தாள். விப்ர நாராயணர் ஆஸ்ரமம் சென்றாள்
''யார் நீ? என்ன வேண்டும் உனக்கு?''
''சுவாமி நான் இதுவரை ஒரு நரக வாழ்க்கை அனுபவித்தவள். சொச்ச காலத்தையாவது தங்களோடு சேர்ந்து எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்து மன நிம்மதி பெற விழைகிறேன்.'' நடிக்கத் தெரியாதா தேவதேவிக்கு.
'' அடடா, என்னே அந்த பெருமாளின் கருணை. தாராளமாக இங்கே தங்கி நீயும் என் அரங்கநாதனுக்கு உன்னாலான சேவைகளை புரியலாம்''
ஒரு இயந்திரம் போல் தனது காரியங்களை செயது கொண்டிருந்தார் விப்ர நாராயணன். அவளை அருகே சேர்ப்பதில்லை. அவளை ஆஸ்ரமத்தின் வெளியே தங்க அனுமதித்தார்.
ஒரு நாள் கொட்டும் மழையில் நனைந்து வெளியே நின்றிருந்த தேவதேவி மழையில் ஒதுங்க இடம் இன்றி தவிப்பதைப் பார்த்துவிட்டு, உள்ளே பூஜை செய்து கொண்டிருந்த விப்ர நாராயணா இரக்கம் கொண்டவராய் அவளை உள்ளே அழைத்து தனது மேல் ஆடையை கொடுத்து உதவுகிறார். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவருக்கு அவள் சிஸ்ருஷைகள் செய்து நெருங்க, பஞ்சும் நெருப்பும் ஒன்றாகி விட்டது. பிறகு ஒருநாள் தனது சகோதரி, மற்றும் தாயிடம் அவரை அழைத்து செல்கிறாள். விப்ர நாராயணா அவளிடம் தன்னை இழந்த நிலையில் தன்னிடமிருந்த பொருள்களை எல்லாம் அவர்களிடம் கொடுத்துவிட்டு இனி கொடுக்க ஒன்றும் இல்லை என்ற நிலையில் அவர்களால் விரட்டப் படுகிறார். சோர்ந்து மனம் உடைந்த விப்ர நாராயணர் நந்தவனம் திரும்பி களைத்து நாராயணா எனக்கு தேவதேவி வேண்டுமே. அவள் வீட்டார் என்னை ஆண்ட விடவில்லையே என் செய்வேன் என்று மயங்கிய நிலையில் தேவதேவியின் தாய் வீட்டுக்கு யாரோ ஒருவர் வருகிறார்.
''யார் நீங்கள் என்ன வேண்டும் ?''
''அம்மா, என் குரு விப்ர நாராயணா, இதை தாங்களிடம் சேர்ப்பிக்க கொடுத்தனுப்பினார்''
ஒரு பெரிய வெள்ளிப் பாத்திரம் அவரிடமிருந்து பெற்ற தேவதேவியின் தாய்க்கு மகிழ்ச்சி இருக்காதா?
'' நீங்கள் சென்று விப்ர நாராயணாவை இங்கே வரச் சொல்லுங்கள்'' தாய் அவரை வீட்டில் அனுமதிக்கிறாள்.
இதற்குள் தேவதேவி உண்மையிலேயே அவரது தூய பக்தியால் ஈர்க்கப்பட்டு விப்ர நாராயணரின் அடிமையாகிறாள்.
வெள்ளிப் பாத்திரம் கொடுத்த சிஷ்யர் நந்தவன ஆஸ்ரமம் சென்று சோர்ந்து கிடந்த விப்ரநாராயணாவை எழுப்புகிறான்.
''யாரப்பா நீ ?''
''சுவாமி நான் தேவதேவி அம்மாள் வீட்டிலிருந்து வருகிறேன். அவர்கள் உங்களை உடனே வரும்படி செய்தி சொல்ல சொன்னார்கள் ''
''ஆஹா அப்படியா, நாராயணா என்னே உன் கருணை ! தேவ தேவியை தேடி ஓடிச் சென்ற விப்ர நாராயணரை அவள் அன்போடு கட்டி அணைக்கிறாள் .
ஸ்ரீரங்கம் ஆலயத்தின் அர்ச்சகர் மறுநாள் காலை வழக்கமான பூஜை செய்யும்போது அன்றாடம் உபயோகிக்கும் பெரிய வெள்ளி வட்டில் பாத்திரம் காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்து, ராஜாவிடம் முறையிட, ஊரெங்கும் அது தேடப்பட்டு, தேவதேவி வீட்டில் இருப்பதை கண்டுபிடித்து அவளும் அவள் தாயும் அரசர் முன்னே நிறுத்தப் படுகிறார்கள்.
விசாரணையில் ''விப்ர நாராயணர் தான் அதை தனது சீடன் மூலம் என் வீட்டுக்கு கொடுத்தனுப்பினார்'' என்கிறாள் தேவதேவியின் தாய்.
விப்ரநாராயணா அரசன் முன்னே கொண்டு வரப்பட்ட போது '' அரசே நான் இதை திருடவில்லையே, மேலும் எனக்கு யாருமே சிஷ்யர்கள் கிடையாதே'' என்கிறார். ஆனால் கோபம் கொண்ட அரசனால் கோவிளை சேர்ந்த பூஜா பாத்திரத்தை திருடிய குற்றத்துக்காக சிறையில் அடைக்கப் படுகிறார்.
''எம்பெருமானே, ரங்கநாதா இதென்ன சோதனை. உன் பாத்திரத்தை நானா திருடுவேன். எனக்கு ஏன் இப்படி ஒரு அவல நிலைமையை தருகிறாய்?
பக்தன் கதறிய நேரத்தில் பகவான் சோழ அரசன் கனவில் அவனுக்கு தானே சிஷ்யனாக வந்து அந்த பாத்திரத்தை எடுத்து தேவதேவி வீட்டில் கொடுத்ததை கூற திடுக்கிட்ட அரசன் அவரை விடுதலை செய்கிறான். பிறகென்ன. விப்ர நாராயணர் ராஜோபசாரங்களோடு கௌரவிக்கப் பட்டு அவர் பெருமை எல்லோருக்கும் புரிய அவருக்கும் எம்பெருமான் திருவிளையாடல் புரிகிறது.
''பகவானே, பக்தர்களுக்காக நீ என்னவெல்லாம் புரிகிறாய். உன்னைவிட உன் பக்தர்களே சிறந்தவர்களாக பாவிக்கும் பக்த வத்சலா. உன் பக்தர்கள் பாத தூளி என் சிரசில் படட்டும். இன்றுமுதல் உன் தொண்டர்கள் திருவடிப் பொடியாகவே நான் உன்னை சரணாகதி அடைகிறேன் என்று நெஞ்சுருகி, கல்லும் கரையும் பாசுரங்கள் அவரிடம் இருந்து வெளிவர அவரை நாம் தொண்டரடிப் பொடி ஆழ்வாராக அறிகிறோம். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவராக வணங்குகிறோம்.
திருப்பள்ளி எழுச்சி, 10 பாசுரங்களை கொண்டது. திருமாலை 40-45 பாசுரங்கள் கொண்டது. ஆழ்வாரின் 'பச்சைமாமலை போல் மேனி'' பாசுரம் நான் மட்டுமல்ல உங்களில் அனைவர் மகிழ்ந்து பாடும் பாசுரம் அல்லவா?
''வைஜயந்தி வனமாலா, உன் பூலோக அவதாரம் என் விருப்பப் படியே நடந்தது''என்று விஷ்ணுவும் மகிழ்ந்தார்.
No comments:
Post a Comment