தக்ஷிண சம்பிரதாய பஜனை பத்ததி - J K SIVAN
எல்லோராலும் சத்குரு ஸ்வாமிகள் என்று அழைக்கப்படும் சம்பிரதாய பஜனை பத்ததியை அறிமுகப்
படுத்திய மருதாநல்லூர் ஸ்வாமிகளுக்கு நிஜ பெயர் வெங்கட்ரமண தேசிகர். 1777ல் திருவிசநல்லூரில் பிறந்த தெலுங்கு பிராமணர். அங்கு இன்னொரு பிரபல பெயர் ஸ்ரீதர ஐயாவாள். ஆகவே இவரை மருதாநல்லூர் ஸ்வாமிகள் என்றே அடையாளம் காண்போம். நாடு முழுக்க சுற்றி மஹான்கள் இயற்றிய பக்திப் பாடல்களை திரட்டி அளித்தவர்.
அப்பாவிடம் வேத சாஸ்திரம் பயின்றவர். ராமாயண பாராயணத்தில் ராமநாம ஸ்மரணையில் வாழ்வின் பெரும்பகுதியை கழித்த வைதிக பிராமணர். அப்பா வழியில் சில வீடுகளில் ச்ராத்தம் போன்ற வற்றை நடத்தி வைத்து காலம் கழிந்தது.
ஒரு நாள் ஒரு கிரஹஸ்தர் வீட்டில் ச்ராத்தம் நடத்தி வைக்க ஒப்புக்கொண்டவர் அன்று காலையிலிருந்து ராமநாம ஜெபத்தில் தன்னை மறந்து சாயந்திரம் ஆகிவிட்ட பிறகு ''அடாடா இன்று ஒரு வீட்டில் ச்ராத்தம் நடத்த ஒப்புக்கொண்டு மறந்தே போய்விட்டேனே . என்ன செய்தாரோ உடனே போய் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று அந்த வீட்டுக்கு ஓடினார்.
''வாங்கோ ஏதாவது மறந்து போய் விட்டேளா திரும்பி வந்திருக்கீர்களே? என்று அந்த கிரஹஸ்தர் கேட்டதும் திகைத்தார் ஸ்வாமிகள்.
''இன்னிக்கு இங்கே ச்ராத்தம்........ அதை.....'' மென்று விழுங்கினார் ஸ்வாமிகள்.
''ஆஹா எந்த வருஷத்தை காட்டிலும் இந்த வருஷம் திருப்தியாக நீங்க நடத்திக் கொடுத்தேளே. எங்க எல்லோருக்கும் சந்தோஷம் இன்னொரு தடவை தாம்பூலம் வாங்கிக்குங்கோ''என்று சொன்னபோது ஸ்வாமிகளுக்கு உடல் நடுங்கியது. சாக்ஷாத் ராமனே அல்லவா அவர் போல் வந்து ச்ராத்தம் நடத்தி கொடுத்திருக்கிறான் !
ஸ்வாமிகள் குடும்பத்தை விட்டு பிரிந்து அயோத்திக்கு நடக்க முயன்று ஆந்திரா அடைந்த போது நிறைய பேர் திருப்பதி வெங்கடேசனை தரிசிக்க ஆடிப்பாடிக்கொண்டு நடப்பதை கவனித்தார். பக்தி பரவசம் மேலிட்டது. அன்றிரவே ஒரு கனவு. அதில் பகவன் நாம போதேந்த்ரர் ''வெங்கட்ரமணா , நீ பிறந்ததன் பயனை உணர்ந்து கொண்டாய். அயோத்திக்கு பிறகு செல்லலாம். திரும்பி ஊர் செல். அங்கே பகவன் நாம பக்தியை பரப்பு''
மருதா நல்லூர் திரும்பிய ஸ்வாமிகள் கோவிந்தபுரம் சென்று போதேந்திரர் சமாதியை தேடினார். எங்கும் கிடைக்கவில்லை. யாருக்கும் தெரியவில்லை. பத்து நாளாக தேடி, கடைசியில் ஆற்றங்கரையில் ஒரு இடத்தில் பூமியிலிருந்து மெல்லிதாக ராமநாமம் கேட்டது. போதேந்திரரின் ஜீவ சமாதி அங்கே இருப்பதை உணர்ந்தார். சரபோஜி மஹாராஜாவிடம் சொல்லி உதவி கேட்கலாம் என்று அரண்மனைக்கு சென்றார். அதற்குள் சரபோஜியின் கனவில் ஆஞ்சநேயர் தோன்றி ''உன்னைத்தேடி ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியே வருவார் அவருக்கு உதவு'' என்ற போது ராஜா பிரமித்தார். அன்றே மருதாநல்லூர் ஸ்வாமிகள் ராஜாவை அணுகி போதேந்திரருக்கு அதிஷ்டானம் எழுப்ப உதவி கேட்டதும் ராஜா சரபோஜி உடனே ஏற்பாடு செய்தார். கோவிந்தபுரத்தில் வீர சோழ ஆற்றங்கரையில் பகவந்நாம போதேந்திர ஸ்வாமி களுக்கு ஒரு அதிஷ்டானம் உருவாக்கினார் சத்குரு மருதாநல்லூர் ஸ்வாமிகள்.
மருதாநல்லூர் ஸ்வாமிகள் போதேந்திரர், ஸ்ரீதர ஐயாவாள், ஜெயதேவர், பத்திராச்சலம் ராமதாசர்,தியாகராஜ ஸ்வாமிகள், துக்காராம் , புரந்தர தாசர் போன்றவர்களின் பக்தி பாடல்கள், கீர்த்தனைகளை ஜனரஞ்சகமாக பக்தி பஜனையாக வாத்யங்கள் முழங்க சம்பிரதாய பஜனையாக இசைக்க வழிகோலியவர்.
இன்று ராதா கல்யாணம், சீதா கல்யாணம், ருக்மிணி கல்யாணம் என்று அற்புதமான நிகழ்ச்சிகளுக்கு பிதாமஹர் இந்த சத்குரு ஸ்வாமிகள்.
நாற்பது வருஷங்கள் மட்டுமே வாழ்ந்து அழியாப்புகழ் பெற்ற இந்த மருதாநல்லூர் ஸ்வாமிகள் திருவாவடுதுறையில் 1817ல் ராமநவமிக்கு முதல்நாள் ஜகத்ரக்ஷக பெருமாள் கோவிலில் சமாதி கொண்டவர்.
No comments:
Post a Comment