Tuesday, August 11, 2020

BAGAVAN RAMANA



                                                                 எச்சம்மா.. J K  SIVAN  


நமது  குடும்பங்களில் சிலவற்றில் அல்ல பலவற்றில்  லக்ஷ்மி  என்கிறபெயர்  லஷ்மி, லெஷ்மி, லெச்சுமி, எச்சுமி,  லெச்சம்மா, எச்சம்மா என்றெல்லாம்  அபிமானத்தோடு அழைக்கப்படுபவை.  இப்போது நாகரிகமாக பெயர்கள் வைத்துக்கொள்ளும்  பெண்கள் இப்படி கூப்பிட்டால்  எப்படி ஏற்றுக்கொள்வார்கள்,  REACT பண்ணுவார்கள் என்று  எண்ணிப்பார்க்க பயமாக இருக்கிறது. 

திருவண்ணாமலையில் ஒரு எச்சம்மா பாட்டி இருந்தாள் பாவம் அடுத்தடுத்து கணவன், பிள்ளை, ரெண்டு பெண்களை இழந்து அனாதையானவள். இருந்தும்  குரு கடாக்ஷத்தால் வாழ்வில்  துன்பங்கள் தொடராது என்று நம்பிக்கை கொண்டவள்.  இளம் வயதில் விதவை, படிப்பு வாசனை கிடையாது,  பணமோ சொத்து சுதந்தரமோ இல்லாதவளு க்கு போக்கிடம் எது?  அவள்  நம்பிக்கை அவளை ஸ்ரீ ரமணரிடம் கொண்டு சேர்த்தது.  முதலில்  பகவானை தரிசித்தவள்  ஒரு மணி நேரம்  அங்கே அவர் முன் அமர்ந்தாள்.  மகரிஷி அவளோடு பேசவில்லை.  ஆனால் அந்த  ஒருமணிநேரத்திலும்  அதற்கப்புறமும் கூட   அந்த  ஆஸ்ரமத்தில் அவளுக்கு  இதுவரையில் காணாத ஒரு மன நிம்மதி ஏற்பட்டது.  அவள்  சந்தோஷத்தை  அனுபவிக்க தொடங்கினாள். வானில் பறந்தாள்  என்று கூட  சேர்த்து சொல்லலாம்.  துன்பத்திலிருந்து  படமுடியாத துயரத்திலிருந்தும் கஷ்டத்திலிருந்தும் விடுபட்டவர்களுக்கு தான் அந்த  சுகம் தெரியும்,  அனுபவம் புரியும். ஏதோ ஒரு காந்த சக்தி அவளைக் கவர்ந்து விட்டது.  தேனுண்ட நரி  சுற்றுவதை போல  எச்சம்மா  ரமண மஹரிஷி இருந்த விரூபாக்ஷ குகை அருகே  காணப்பட்டாள் . அவளுக்கு என்ன தோன்றியதோ பகவானுக்கு  நல்ல மடி சமையல்  பெற்ற தாய்  செல்லக்குழந்தைக்கு  அளிப்பது போல் தினமும் கொண்டுவர ஆரம்பித்தாள்.  விரூபாக்ஷ குகை  அப்போதெல்லாம்   அதிக ஜனநடமாட்டமில்லாத  காடு மண்டிக்கிடந்த  மலைமேல் ஒரு இடம்.  கையில்  சாப்பாட்டுக் கூடையோடு மலைமேல் ஏறி செல்வாள் எச்சம்மா.  வழியில் மலைமேல் இருந்து  கீழே இறங்குப வர்களை பார்ப்பாள், அநேகர் முகம்  ஏமாற்றத்தோடு காணப்படும் . 

''பாட்டிமா,  எதுக்கு  கஷ்டப்பட்டு மூச்சு வாங்க  மலை ஏறுகிறே.  அங்கே  பகவானை குகையில் காணோம்.  வெகுநேரம் காத்திருந்து தரிசிக்காமல் திரும்புகிறோம்''

''எங்கே போயிடுவார், அங்கே தான் இருப்பார். வாங்கோ எங்கூட  நான் காட்றேன்''   எச்சம்மா அவர்களையும் திரும்ப அழைத்துக்கொண்டு மலை ஏறுவாள். என்ன மாய மந்திரம்  எச்சம்மாவுக்கு தெரியும்?  

அவர்கள் முதலில்  குகைக்கு சென்றபோது   பகவான் ஒரு கோவணாண்டியாக  குகைச் சுவரை  கற்களை மண்ணில் குழைத்து பூசி சுவர் எழுப்பிக் கொண்டிருந்தார்.

அவர்களுக்கு  ரமணரை தெரியாது.  பார்த்ததில்லை.   ஆகவே  அந்த கோவணாண்டியை  வேலையாளாக மதித்து.

''சுவாமி எங்கேப்பா இருக்காரு?''  என்று கேட்டார்கள்.

''எனக்குத் தெரியாதே''  என பதில் சொல்லி இருக்கிறார் பகவான் ரமணர்.  வெகு நேரம்  காத்திருந்துவிட்டு அவர்கள் கீழே இறங்கியிருக்கிறார்கள்.  இப்போது  எச்சம்மாவோடு சென்றபோது அவரைப்பார்த்ததும் திடுக்கிட்டார்.  ஸ்வாமியையா  நாம்  சாதாரண வேலைக்காரனாக எண்ணிவிட்டோம்''

அவர்கள் சென்றதும்  எச்சம்மா வருத்தத்தோடு   பகவானைக் கேட்டாள் 

''ஏன்  இப்படி பண்ணிட்டேள். பாவம்  அவா தெரியாம தானே அப்படிக் கேட்டிருக்கா?''

''என்னை என்ன பண்ணச் சொல்றே நீ.   நான் என்ன பண்ணமுடியும்.  என் கழுத்திலே ஒரு அட்டையிலே   ''நான் தான் ரமணா மஹரிஷி''  எழுதி கழுத்திலே தொங்கவிட்டுக்க சொல்றியா?''  என்று சொல்லி சிரித்தார்.

எச்சம்மாள் தன்னிடமிருந்த  பொருள்கள் எல்லாவற்றையும்  பகவானுக்கும் அவரது  பக்தர்களுக்கும் உபயோகமாக  ஏதாவது செய்வாள். 

ரமணரின் தாய்   அழகம்மாள் தன்னுடைய கடைசி காலத்தில்,   விரூபாக்ஷ குகைக்கு மகனைப் பார்க்க வந்தபோது   கூட  அவளைத் தன்னோடு தங்க அனுமதிக்கவில்லை .  எச்சம்மா  அழகம்மாளை  தன்னோடு திருவண்ணாமலை கிராமத்துக்கு கூட்டிச்சென்றுவிட்டாள் .  அழகம்மாவால் தினமும்  மலைமேல் ஏறி ரமணரை பார்ப்பது சிரமமாக இருந்தது.  

பாவம்  அழகம்மா, எல்லாவற்றையும் விட்டுவிட்டு எல்லோரையும் துறந்துவிட்டு  மகனைப் பார்க்க இங்கே வந்திருக்கிறாள். அவளை பகவானோடு தங்க அனுமதிக்க கூடாதா என்று பகவானுடைய  சீடர்களை   கேட்டாள்  எச்சம்மா.  

''அம்மாவானாலும்  பெண்கள் எவரையும்  இங்கே ஸ்வாமியோடு இருக்க அனுமதிப்பது தவறு  இப்போது அம்மாவை அனுமதித்தால் பின்னால்  எச்சம்மா   நீயோ,  மற்றும்  ஆஸ்ரமத்தில் உள்ள பெண்களும் அந்த உரிமை கோருவார்களே. அப்புறம் இது என்ன ஆஸ்ரமம்?''  என  மறுத்தார்கள்  சீடர்கள். 

''அதெப்படி அப்பா சரியாகும்.  இந்த உலகில் நானோ வேறு எந்த பெண்ணோ  அம்மாவாக முடியுமா? அவளுக்கு என்று தனி உரிமை கிடையாதா?  நான் இப்போ ஒரு சபதம் எடுத்துக்கறேன்.  நானோ ஆஸ்ரமத்தில் வேறு எந்த பெண்ணோ  பகவானை இப்படி வந்து இருக்க அனுமதி கேட்கமாட்டோம்''

இவர்கள் பேசுவது அனைத்தும் ரமண மஹரிஷி  கேட்டுக்கொண்டிருந்தார்.  அவர் மெளனமாக இருப்பது சீடர்கள் சொன்னதை ஆமோதித்து என்று  விளக்கினார்கள் சீடர்கள்.

பகவான் மெதுவாக  எழுந்தார்,  அம்மா அழகம்மாவின் கையை பிடித்துக்கொண்டார்.  ''வா  நாம் வேறு எங்காவது போவோம். நாம் இங்கே  தங்குவதில்  அவர்களுக்கு   விருப்பமில்லை '' 

அப்புறம் என்ன.  சீடர்கள் பகவான் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்கள். அழகம்மா மகனோடு இருப்பதில் ஆக்ஷேபணை எதுவும் இல்லை. கடைசிவரை அம்மா மகனைப் பிரியவில்லை. இந்த  பாக்யம்  அழகம்மாவுக்கு எச்சம்மாவால் தானே  கிடைத்தது.  
சேஷாத்திரி சுவாமிகளால்  ரமணர்  உலகத்துக்கு, நமக்கு,  கிடைத்தார்.   ப்ரம்மஞானி காட்டிய ஆத்ம ஞானி..
 


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...