Thursday, August 13, 2020

NEELAKANTA BRAMMACHARI

 

 
               
   மறந்து போன ஒரு தியாகி பற்றி...  J K  SIVAN 

இதோ  ஆகஸ்ட் 15 நெருங்கிவிட்டது. 73 வருஷம் ஓடிவிட்டது. எவ்வளவு சுதந்திரமாக  வாயில் வந்ததை எல்லாம் பேசுகிறோம். பிரருக்கு  துன்பம் விளைவிக்கிறோம்,  மதம் ஜாதி என்று ஒருவரை ஒருவர் எலியும் பூனையுமாக  பிராண்டுகிறோம்.  சொத்து குவிப்பு, சுயநலம், தன்னலம் இதெல்லாம் வேண்டுமென்றா சுதந்திரம்  வாங்கினோம்.  இதற்கா   யார்  யாரோ ஜெயிலுக்கு போனார்கள்? தூக்கிலே தூங்கினார்கள்,  சவுக்கடி பட்டார்கள், செக்கிழுத்தார்கள்.  குடிக்கவா, இல்லை நாட்டுக்கு உழைக்கவா அண்டைமாநிலம்  பாண்டிச்சேரி சென்றார்கள்?  அவர்களில் ஒருவரை இன்று நினைக்கிறேன்.  அதிகம் நாம் நினைத்த்துப்பாராத ஒருவரைப் பற்றி  சொல்வது தான் அவசியம். தெரிந்த காந்தி, நேரு, சுபாஷ், ராஜாஜி, எல்லாம் விட வெளியே தெரியாமல் மறைந்தவர்களை தான் நாம் வணங்கி நினைவு கூர வேண்டும்.

நீலகண்ட  பிரம்மச்சாரி  பிறந்தது  1889, டிசம்பர் 4.  சீர்காழியை அடுத்த எருக்கஞ்சேரி கிராமத்தில். 1905ல் கர்சன் ஹிந்து  முஸ்லீம்   பகுதியாக வங்காளத்தை   ரெண்டாக பிரித்ததால்  நாடு முழுவதும் கொந்தளிப்பு .  விபின்  சந்திர பால்  இதை எதிர்த்து   போராடினார். சென்னை கடற்கரையில் பல கூட்டங்களில்  ஆங்கிலேயரை எதிர்த்து  காரசாரமாக பேசி  அவற்றைக் கேட்ட பல இளைஞர்கள் புரட்சி வீரர்களாக மாறியபோது,  நீலகண்ட  பிரம்மச்சாரி   ஒருவர்.  வெள்ளையனை எதிர்த்து வீராவேச பேச்சு. அனல் வீசும்.  

1907ல் இவருக்கு மகாகவி பாரதியாரின் தொடர்பு . தேசபக்தர் சந்திரகாந்த் சக்ரபர்த்தி  சென்னை வந்தபோது நீலகண்டனை அவருக்கு பாரதி அறிமுகம் செய்ய  நீலகண்டனைத் தனது புரட்சி இயக்கத்தில்  சேர்த்துக்  கொள்கிறார். சந்திரகாந்த். 

1908ல் இவர் தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய இடங்களுக்குச் சென்று சந்திரகாந்த் சக்கரபர்த்தியின் தொடர்பால் 'அபிநவ  பாரத இயக்கம் தொடங்கினார்.  திருநெல்வேலியைச் சுற்றி பல ஊர்களில்  ரகசிய கூட்டங்கள். ஆள்  சேர்ப்பு.. நீலகண்டனை  ஆங்கிலேய ரகசிய போலீசார் கண்காணித்தனர் 
பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து தப்பி பிரெஞ்சு காலனி புதுச்சேரி சென்று கொஞ்சகாலம். 

புதுச்சேரியில்  சைகோன் சின்னையா என்பவர் நடத்தி வந்த அச்சகத்தில்  'சூர்யோதயம்' எனும் பத்திரிகையைத் தொடங்கி அதில் பாரதியாரின் சீடனும், தம்பி என்று அவரால் அழைக்கப்பட்ட பரலி சு.நெல்லையப்பரை பணியில் அமர்த்திக் கொண்டார். வ.உ.சியின் உற்ற தொண்டனாக இருந்த மாடசாமிப் பிள்ளை தலைமறைவாகப் புதுச்சேரியில் இருந்தார்.     

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்   ராணுவ பயிற்சி   அளித்து  வீரர்களை  வடக்கே உருவாக்குமுன்பு,  தெற்கே  துப்பாக்கியில் சுட பயிற்சி  6000  பேருக்கு கொடுத்த வீரர்  நீலகண்ட பிரம்மச்சாரி.  அவரது  சுதந்திர புரட்சி இயக்கத்தில்   20000 பேருக்கு மேல்  படைவீரர்கள். வ.உ.சிக்கு தண்டனை வழங்க காரணமாக இருந்த ஆஷ் துரையைக் கொல்ல திட்டம் வகுக்கப்பட்டது.  நீலகண்ட ப்ரம்மச்சாரியிடம் துப்பாக்கி  பயிற்சி  பெட்ரா வாஞ்சிநாதன் ஆஷ் துரையை மணியாச்சியில்   சுட்டுக் கொன்று   தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.   

நீலகண்ட பிரமச்சாரி நேர்மை பற்றி ஒரு வார்த்தை.  இயக்கத்த்துக்காக  பணம் கையில் நிறைய சேர்ந்தது.  அவர் அப்பா வைதிக பிராம்மணர்.  பிள்ளை ஏதாவது சம்பாதித்து பணம் அனுப்புவான் என்று ஏமாந்தவர். ஒரு கடிதம் எழுதுகிறார் '' நீலகண்ட  குடும்பம் காசில்லாமல் தவிக்கிறது  ஒரு  பத்து ரூபாய் அநுப்பேன்''.   நீலகண்டன் பதிலே  எழுதவில்லை. ஒரு பைசாவும்  பொதுப்பணத்திலிருந்து தொடக்கூடாது என்ற வைராக்கியம். யாராவது ஒரு வருக்கு இருக்கிறதா இந்த வைராக்யம்  இப்போது?  அப்பா குடும்பத்தை காலி செய்துகொண்டு மாயவரம் போய் வேதம் சொல்லிக்கொடுத்து   ஏதோ சொற்பமாக சம்பாதித்து ஜீவிதம். . 

ஆஷ் கொலை வழக்கில் 14 குற்றவாளிகள்.  எல்லோருமே 25 வயதுக்கு  கீழே.. நீலகண்ட பிரம்மச்சாரி  வயது 21. சங்கர கிருஷ்ணனுக்கு 22.  ஆஷ் கொலை நடந்த தேதி ஜுன் 17, 1911.  திருநெல்வேலி சிறப்பு நீதிமன்றத்தில்  செப்டம்பர் 11-ல் விசாரணை.1912 பிப்ரவரி 12-ல் தீர்ப்பு. நீலகண்டருக்கு 7 வருஷம்  சிறை   சென்னை கோவை சிறைகளில்  கழிந்தது.  கடுங்காவல்  என்பதால் விறகு வெட்டச் சொன்னார்கள். நான் ஒரு அரசியல் கைதி. எனக்கு இந்த வேலைகள் தரக் கூடாது, படிப்பதற்கு புத்தகங்கள் வேண்டும் என்று போராடி வெற்றி பெற்றார். ர் தண்டனை வெறுங்காவல் தண்டனையாக மாறியது. ஜெயில் உடை நீக்கி சாதாரண உடையில் இருக்க அனுமதிக்கப்பட்டார்.  பிறகு  பாளையங்கோட்டை சிறை.  பிறகு பெல்லாரி சிறை. 

 1914ல் உலக யுத்தம் தொடங்கிய சமயம்  சிறையிலிருந்து தப்பியோடி மாட்டிக்கொண்டு,  எக்ஸ்ட்ரா  தண்டனை.  ஏழரை ஆண்டு  முடிந்து  1919 ஆகஸ்ட் 14ம் தேதி  விசாகப்பட்டினம் சிறையிலிருந்து விடுதலை    15 வருஷம்  பர்மாவில்   ரங்கூன் சிறையில்  வாசம்.   அப்புறம் வெளியே  வந்ததும் ஆங்கிலேயர் அரசுக்கு எதிர்த்து பிரசாரம். புரட்சி இயக்க  வீரர்களுக்கு  பல   துன்பங்கள்.  மீண்டும் விடுதலைப் போராட்ட  வே லைகளில் ஈடுபட சென்னை விஜயம்.  தங்க இடம் இல்லை. கையிலும்  காசு  இல்லை. வறுமை, பகல் எல்லாம் மெரினா பீச்.  ராத்திரி. எழும்பூர் ரயில் ஸ்டேஷன்.
 
இந்த 'அபினவ பாரதம்' எனும் புரட்சி இயக்கத்தைச் சேர்ந்த தொண்டர்கள் பல துன்பங்களை ஏற்க வேண்டியிருந்தது. சில நாட்கள் உண்ண உணவின்றி, இரவில் ராப்பிச்சைக்காரர்கள் போல பிச்சை எடுத்து சாப்பிட்ட அனுபவமும் இவர்களுக்கு உண்டு

திருவல்லிக்கேணியில்   நிறைய வீடுகளில் திண்ணை. அதில் ஏதாவதொன்றில் தூக்கம்.  பசித்தால்  கார்பொரேஷன் குழாய் பம்ப் அடித்து  தண்ணீர் பசியை விரட்ட . ராப்பிச்சை  சில  இரவுகளில்  பசியாற்றியது.  

அப்படி ஒரு இரவு  பாரதியார்  வீடு  என்று  தெரியாமலேயே  அவர்  வீட்டிலேயே போய் பிச்சை கேட்க  

'' நீலகண்டா.. உனக்கா இந்த நிலை''  என்று கண்ணீர் சிந்தி வீட்டினுள் அழைத்துச் சென்று பார்த்தால் பாரதியார் வீட்டில்  ஒரு பருக்கை சோறு கூட இல்லை.    ''நீலகண்டா  நான்  என்ன செய்வேன்.  என் சட்டை பையில்  காலணா (3 நயா பைசா இப்போது)   தான்  இருக்கிறது. ஏதாவது கிடைத்தால் வாங்கி  சாப்பிடு ''    

அப்போது காலணாவிற்கு  மதிப்பு   இருந்தது.ஒரு  பாக்கெட் பிஸ்கட், தோசை , இட்டலி யாவது வாங்கி சாப்பிட வழி உண்டு. 

 தனது  இயலாமை, வறுமையை நினைத்து   கண்ணீர் விட்டு  வருந்தி அப்போது  பாரதி முழங்கியது தான்   '' ''ஒரு மனிதனுக்கு உணவு இல்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்''

 நீலகண்ட பிரம்மச்சாரி   இப்போதைய பாகிஸ்தானிலுள்ள முல்டான் சிறையிலும், வாசம் செய்தவர்.   தனக்கென  எதுவும்  இல்லாத  சந்நியாசியாக  பிற்கால வாழ்க்கை.  மனது எதிலும்  ஈடுபடக்கூடாது என்று  சதா சர்வ காலமும்  ஓம்  என்ற பிரணவ மந்திரம் ஜபம்.   மைசூரில்  நந்தி மலையடிவாரத்தில் ஆயிரம் அமைத்து  ''ஓம்'' காரானந்த சுவாமிகளாக வாழ்ந்து 88வது வயதில் 1978, மார்ச் 14ம் தேதி காலமானவர்.

 நம்மில்  எத்தனைபேருக்கு   இவரைத் தெரியும்?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...