பேசும் தெய்வம் J K SIVAN
எனக்கு வேண்டாம், அடுத்த
தலைமுறைக்குச் செய்
இது கொஞ்சம் நிதானமாக படித்து சிந்திக்க மட்டுமே....... செயல் படுவது உங்கள் சௌகர்யம்.
கீழே கண்டவைகளில் மகா பெரியவா சொன்ன சில வாக்குகளையும் மறக்கக் கூடாது என்பதற்காக சுருக்கி தருகிறேன்.
"பாப சிந்தனைகளைப் போக்குகிற புண்ய சிந்தனைக்கு பேர் ---- பரோபகாரம். சேவை மனப்பான்மை, தியாகம் எல்லாம். மொத்தத்தில் '' அன்பு''.
."தனக்கு" என்கிற நினைப்பு,அசூயை, வஞ்சனை எதுவுமே இல்லாமல் ஒரு காரியம் செய்கிறபோது தான் அதில் முழு ஈடுபாடு உண்டாகிறது.
நாம் செய்கிற காரியம் எப்படிப் பாபமாகிறது? " நமக்காக" என்று ஆசையோடு இதை அடைந்தே விட வேண்டுமென்று ஒரு வெறியோடு அலைகிற போது தான், அதை அடைய எவ்வித தவறையும் செய்யத் தூண்டுகிறது. அதால், சித்தத்தில் வெறுப்பு மனப்பான்மை, துக்கம், பயம், போன்ற அழுக்குகள் வண்டி வண்டியாக சுமக்கிறோம். இது தேவையா?
மேலை நாட்டில் சக்தியும் ஜடப்போருளும் ஒன்றே என்ற தவறான முடிவை நம்பி விஞ்ஞானிகள் அந்த அறிவில் தான் அணுகுண்டு தயாரித்தார்கள் என்பது புரியும்போது வருத்தமாக இருக்கிறது. இதனால் விளைந்த நாசம் எவ்வளவு? எத்தனை உயிர்கள் ஒரு குற்றமும் செய்யாமல் மடிந்தா ர்கள், எதற்காக இவ்வளவு நஷ்டம்? ஏன்? என்பது மறந்து போய் விட்டதா? விஞ்ஞா னம், புத்தி அளவில் நின்று , மனதை, இதயத்தை தொடாததால் விளைந்த விபரீதம் இது.
நாம் கண்ணால் மட்டும் பார்த்தா ரோஜா, மல்லி, ஊமத்தை என்று ரகம் பிரிக்கிறோம்? கண்ணுக்கு அந்த சேதியைச் சொல்வது புத்தியில் விளையும் ஞானம் அல்லவா? புத்தி முழுதும் ஞானம் வியாபித்தால் ரோஜா ஊமத்தை ரெண்டையுமே ஒன்றாக ஞானி அறிகிறான். அபேத ஞானம் இது.
நமக்கு ஞானம் இல்லாதபடியால், வேறு வேறாக பார்க்கிறோம். பேதம் தெரிகிறது. வித்யாசங்கள் வாழ்வில் பங்கு பெறுகின்றன. விருப்பு வெறுப்பு பிறக்கிறது. நமக்கு உண்மை ஏன் விளங்கவில்லை ? காரணம் நமது சித்தம் பூரா நிரம்பி இருக்கும் ''பேதம் , வித்யாசம், பாரபட்சம் என்கிற அழுக்கு.
அகண்டமாக இருப்பவன் ஒருவன் தான் கடவுள் என்கிற சாஸ்வதம். உண்மை. மற்றது எல்லாம் நினைவு, கனவு, அநித்யமாக தோன்றி தோன்றி மறைவது. மாயை. அழிவுற்றது. அழிவற்றது அல்ல.
ஒருவருக்கு சொந்தமாக ஊரில் கொஞ்சம் நிலம். அதில் வருஷாவருஷம் விளைச்சல் அதிகமாகிறது. "இந்த வயல் என்னுைடயது" என்பதால் விளைச்சல் அதிகமாகும் போது அவருக்கு மனம் குளிர்கிறது. ஆனந்தம் உண்டாகிறது. பிறகு விளைச்சல் குறைகிறது. உடனே அதை விற்று விடுகிறார். மறுபடியும் அதே நிலத்தில் விளைச்சல் கூடுகிறது. இப்போதெல்லாம் அதை பார்க்கிறபோது அவரது மனம் குளிருமா? "அடடா, போன வருஷம் நம்மிடம் இருந்தபோது தரிசாக வெறும் பொட்டலாக இருந்தது, இப்போது பார் அவன் அதிர்ஷ்டத்தை" என்று வயிற்றெரிச்சல் உண்டாகிறது. "எனது" என்ற சம்பந்தம் இருந்த போது மட்டும்தான், அமோக விளைச்சலால் குஷி ஏற்பட்டது. மற்றவனது என்கிற வித்யாசம் வந்தவுடன் அதே நிலம் அதன் விளைச்சல் விஷயம் அடியோடு மாறிவிட்டது. இன்னும் புரிகிறமாதிரி ஒரு உதாரணம். நங்கநல்லூரில் 1969-70ல் பொட்டலாக இருந்தபோது வாங்கிய ரெண்டு கிரௌண்ட் நிலம் சந்தோஷத்தை அளித்தது. ஐந்தாயிரம் ரூபாய்க்கு ரெண்டாயிரம் ரூபாய் லாபத்தில் அதை விற்றபோது அப்போதும் சந்தோஷம். இப்போது அந்த இடத்தில் ஒரு நாலு மாடி COMPLEX பல கோடி மதிப்பில் இருக்கும்போது ''அடப்பாவி இது என்னுடைய நிலம்.படுபாவி அவனுக்கு என்ன அதிர்ஷ்டம் பார்''. சந்தோஷம் போய் பொறாமை எப்படி வந்தது?
மகா பெரியவா சொன்ன ஒரு உதாரணம்:
பைத்தியக்காரன் ஒருவனிடம் கொம்பைக் கொடுத்து ''இந்தா இதைப்பிடித்துக்கொண்டு அரைமணி நேரம் நில்லு'' என்றால் அவனால் முடியாது. வேறு ஒருவனிடம் சொன்னால் அவனால் முடியும். ஆனால் ''இதைப் பற்றியே மட்டும் அரைமணி நேரம் நினைத்துக் கொண்டு இரு'' என்றால் எவனாலும் முடிய வில்லையே ஏன் ? மனதில் திரைப்படம் ஓடுகி றதே. மறுகணமே, ஆயிரக் கணக்கான எண்ணங்களை சினிமாப்படமாக ஒட்டுகிறதே எப்படி ஒன்றையே நினைப்பது? கொம்பு
விஷயத்தில் நாம் பைத்தியத்தை பற்றி சொன்னோமல்லவா. அதேபோல் ஞானி களுக்கு ''நினைப்பு'' விஷயத்தில் நாம் பைத்தியமாகத் தெரிவோம். குதிரை தான் நிறுத்தமுடியாதபடி ஓடுகிறதே!!
வேத அத்யயனம், தியானம், பூஜை ஆகிய வற்றை கஷ்டப்பட்டு அப்பியாசம் செய்வதால் கிடைக்கும் ஈசுவராநுபவத்தை தெய்வீக சங்கீதத்தின் மூலம், நல்ல ராக, தாள ஞானத் தின் மூலம் சுலபமாகப் பெறலாம். இப்படி , தர்ம சாஸ்திரம் என்னும் ஸ்மிருதியைத் தந்திருக்கும் யாக்ஞவல்க்ய மகரிஷியே சொல்லியிருக் கிறார். கடுமையான பிரயாசை இல்லாமல் சங்கீதத்தால் மோக்ஷ மார்க்கத்தில் போகலாம் என்கிறார்.
தேக பலமோடு, அஹிம்சை, தைர்யம், இதோடு சுய கஷ்ட நஷ்டம் பாராமல் பிறரைக் காப்ப வன் க்ஷத்ரியன். தீமையிலிருந்து பிறரைக் காப்பதே ''க்ஷத்ரம்'' இதை செய்வது க்ஷத்ரிய தர்மம். ஒவ்வொரு வரும் முடிந்தவரை பிறர்க்கு உதவலாமே. தோளில் தூக்கிக் கொண்டு ஆஸ்பத்ரிக்கு ஓடினால் தான் க்ஷத்ர தர்மம் இல்லை. கொஞ்சம் பண உதவி, வார்த்தையால் உதவி, சிறிய உடல் உதவி, கூட போதுமே.
பேசும்போது எப்போதும் அளவாகக் கணக்கா கப் பேசவேண்டும். வளவள வென்று பேசாமல் சுருக்கமாக இனிமையாக பேசக் கற்றுக் கொண்டால், புத்தியில் ஒரு தாக்ஷண்யம் , வாக்கில் ஒரு பிரகாசமும் உண்டாகும். சக்தியும் வீணாகாது. சண்டை வராது. தெரிந்து தான் வள்ளுவர் ''நா காக்க'' என்கிறார்.
சுற்றுமுற்றும் பாருங்கள் இப்போது யாராவது சந்தோஷமாக இருக்கிறார்களா? ஒருவரை ஒருவர் நேசிக்கிறார்களா? ஒரு சுவருக்கு அப்பால் இருப்பவனே யாரென்றே தெரிய வில்லை. தெரிந்தால் அது எதாவது ஒரு சண்டையின் போதாக இருக்கும். பரஸ்பர சௌஜன்யம் போய் விட்டது. போட்டி, பொறாமை, அதன் இடத்தை பிடுங்கி கொண்டுவிட்டது.
ஒருத்தன் ஆடம்பரமாக இருந்தால் மற்றவர் களுக்கும் அதில் ஆசை உண்டாகுமே! எலலாருக்கும் எல்லா ஆசையும் நிறை வேறுமா? ஏமாற்றம் உண்டாகிறது. அதால் விரோதம் முளைக்கிறது.
அரசாங்கம் ஒழுங்காக நன்றாக நடந்தால் தானே, மக்களுக்கு மானம், உயிர் இரண்டும் காப்பாற்றப்படும். தினமும் பேப்பர் விற்பதே இது இல்லாததால் வரும் விஷயங்களை நம்பித்தானே. பிறர்க்குச் சேவை செய்து பாருங்கள். அதில் கிடைக்கும் சுகம் தனி.
உண்மை பேசு. முடிந்தவரையில் பேசு. அதால் விளையும் நன்மையை நீயே உணர் வாய். ஒருவன் உண்மையே பேசி பழகிவிட் டால் முடிவில் அவன் எது சொன்னா லும் அது சத்தியமாகிவிடும். இப்படிப்பட்டவன் மனமறிந்து பொய் சொல்லமாட்டான்.
சத்தியம் எது? மனமும், வாக்கும் ஓன்றுபட் டிருப்பது. மனம் சுத்தமாக இருப்பது. வாக்கு மிருதுவாக சாந்தமாக இருப்பது. இதால் தனக்கும் சித்த சுத்தி. பிறருக்கும க்ஷேமம். நமது தலையாய கடமை, நம் வீட்டு குழந்தை
கள் நமது மத அநுஷ்டானங்களை விடாமல் பற்றி ஓழுகி, உத்தமமாக வாழ பெரியோர்கள் பழக்க வேண்டும். நமது ஆத்ம க்ஷேமத் துக்காகவே எண்ணற்ற ரிஷிகள், எத்தனை யோ சாஸ்த்ரங்களை நமக்கு கொடுத்தி ருக்கிறார்கள்.
மஹா பெரியவா சொன்னது நினைவுக்கு வருகிறதா?
'' எனக்கு கனகாபிஷேகத்துக்கு செலவழிக்கிறதை வேத சம்ரக்ஷணத்துக்கு செலவு பண்ணுங்கள். ' தினம் ஒரு மணியா வது 8- 10 வயது குழந்தைகளுக்கு வேதம் பரிச்சயம் பண்ணுங்கள். பேட்டைக்கு பேட்டை இதில் ஈடுபடுங்கள். இது தான் எனக்கு உண்மையான கனகாபிஷேகம். உற்சவம் எல்லாம் '''
ரிஷிகள் என்பவர்கள் கொம்பு முளைத்த வர்கள் அல்ல. மனித அறிவின் எல்லையை மீறி அகண்டமாக தன்னை பரிமளித்துக் கொள்பவனே ரிஷி. அவனால் வேத மந்த்ரங்கள் உலகிற்கு வந்திருக்கின்றன. லோகக்ஷேமத்துக்காக தன்னை வருத்திக் கொள்பவன் . எனவே ரிஷிகள் மந்திரங் களைக் கண்டவர்கள். (''மந்திர த்ருஷ்டா') என்று பேர் பெற்றவர்கள். இந்து மதம் ஒன்றிலே தான் யார் எந்த சமய மார்க்கத்தில் பிரயாணித்தாலும் முடிவில் ஒரே பரமாத்மாவிடம் ஐக்கியமாவார்கள் என்று ஒப்புக் கொள்ளும் பரந்த விசால மனப் பான்மை கொண்டது. எலலா சமயங்களுமே பரமனை வழிபட சாதனமாகும்.
நாம் வாழும் உலகே காரணம் - விளைவு - செயல், - அதால் விளையும் பிரதி செயல் என்ற எல்லைக்குள் தான் கட்டுண்டிருக்கிறது. பௌதிக சாஸ்திரம் [Physics] முழுவதும் இந்த உண்மையை த்தான் விளக்குகிறது. ஜடப் பிரபஞ்சம், ஜீவ ப்பிரபஞ்சம் இரண்டும் ஒன்றே. இந்த விதிப்படி பார்த்தால் நம் செயல்கள் அனைத்துக்கும் நிச்சயமாகப் பிரதி பலன் உண்டு. இன்று நாம் அனுபவிக்கிற சுகங்களுக்கும், துக்கங்களுக்கும் காரணம் இதுவே.
புரிந்ததா. இன்னொரு தரம் நிதானமாக படித்தால் இன்னும் கொஞ்சம் புரியும். அடிக்கடி படித்தால் பாதி புரியும். விடாமல் படித்தால் மனத்தில் இருப்பதே எழுத்தாக எதிரே தோன்றும்.
No comments:
Post a Comment