ஆலயமணியின் காந்த ஓசை - J K SIVAN
விநாயக சதுர்த்தி முடிந்து களிமண் பிள்ளையாரை எருக் கம்பூ மாலை, வயிற்றில் ஒரு ரூபாய் காசுடன், வேண்டிக் கொண்டு கிணற்றில் கரைத்த காலம் போய் விட்டது. இப்போது கிணறு இல்லை. சிலர் சத்தம்போடாமல் அருகே உள்ள கோவிலில் சுற்றிவரும்போது எங்காவது வைத்து விடுவார்கள். கடலில், பீச்சில் சென்று போடுவதற்கு எல்லோராலும் முடியாது.
காசு என்று சொல்லும்போது ஒரு ஞாபகம் வருகிறது. வில்லிப்புத்தூரில் ஆண்டாள் கோவில் சென்றபோது அவள் முகம்பார்த்த கிணறில் குனிந்து பார்த்த போது கண்ணுக்கு நிறைய காசுகள் தான் தென் பட்டது. வேலூர் ஸ்ரீ புரம் தங்க கோவில் உள்ளே செல்ல அப்போதெல்லாம் காசு கிடையாது. கோவிலைச் சுற்றி உள்ள பளிங்கு குளத்தில் காசை விட்டெறிவார்கள். திருப்பதி ஸ்ரீரங்கம் போன்ற பெரிய கோவில்களில் சுவற்றில் இடுக்கில் காசை செருகுவதும் ஒரு வழக்கம். இந்த பழக்கம் வடக்கத்தி காரர்களிடம் தான் அதிகம். ஆற்றில் குளங்களில் காசை எறிவார்கள். இப்படி காசை விட்டெறிந்தால் அது நிறைய நம்மிடம் திரும்பி வரும் என்று ஒரு நம்பிக்கை.
பழைய காலத்தில் காசுகள் முக்கால் வாசி செப்புக்காசுகள். தண்ணீரில் செம்பு சேர்ந்தால் உடலுக்கு நல்லது. ஆற்று குளத்து கிணற்று அப்படியே நீரை குடித்தார்கள். வீடுகளில் செப்பு தவலைகளில் குடிநீர் வைத்திருப்பது வழக்கம். ஆகவே அக்காலத்தில் போல செப்புக்காசுகள் இப்போது இல்லாத போது நிக்கல் காசை நீரில் வீசுவதில் அர்த்தமில்லை.
இன்னொரு விஷயம். பெண்களில் காலில் ரெண்டாவது நீண்ட விரலில் மெட்டி அணிவதில் ஒரு ரகசியம் உண்டு. மெட்டி கல்யாணம் ஆனவள் என்று காட்டுவது ஒருபுறம் இருக்கட்டும். ரெண்டாவது நீண்ட விரலில் ஒரு நரம்பு பெண்களில் கருப்பையோடு சம்பந்தப்பட்டது. கருப்பையை பலப்படுத்த காலில் அணிந்த உலோக மெட்டி கால் விரல் நரம்பை நடக்கும்போது அழுத்திக்கொண்டே இருக்கும். ரத்த ஓட்டம் சீராக சென்று கருப்பை ஆரோக்யமாக சுகப்பிரசவத்துக்கு உதவ தயாராக இருக்கும் சீரான ரத்த ஓட்டத்தால் குறித்த நாளில் மாத விடாய் நிகழும் என்று சொல்கிறார்கள். என்ன விஞ்ஞான அறிவு !நமது முன்னோருக்கு என்று கை தட்ட தோன்றவில்லையா. தாயின் கருப்பை ஒரு ஆலயம். நாம் உயிர்ச்சக்தி பெற்ற புனித இடம். ஆகையால் தான் ஆலயத்தில் தெய்வம் இருக்கும் இடம் கருவறை எனப்படுகிறது. ஜன்னல் இல்லாத, இருட்டு அறை . ஒரே வாசல்.
கோவில் பற்றி சொல்லும்போது அங்கே மணி அடிக்கிறார்களே அதில் உள்ள ரகசியத்தை சொல்லி இந்த கட்டுரையை நிறைவு செய்கிறேன். ஆகம சாஸ்திரத்தின் படி கோவில் மணி தீய சக்திகளை விரட்டும் சக்தி வாய்ந்தது. ஆலயமணியின் ஓசை மனதை தீய எண்ணங்களிலிருந்து விடுவிக்கிறது. கற்பூர ஹாரத்தி தரிசனத்துக்கு டாங் டாங் மணி அடிப்பதைக் கேட்டதும் ஓடுகிறோம். அந்த சத்தம் நமது மனதில் உள்ளே ஒரு புத்துணர்வை அளிப்பதை, மனது புனிதப்படுத்துவதை அனுபவித்திருக்கிறீர்களா?. சிதம்பர நடராஜாவின் கோவில் மணியின் சத்தத்தை இணைத்திருக்கிறேன். click the link
https://youtu.be/POlxPfeWe1Q
https://youtu.be/POlxPfeWe1Q
கேட்கும்போதே உள்ளே என்னவோ செய்யும். கேளுங்கள். வெண்கலத்துக்கு ஒரு கம்பீரமான தனி அதிர்வு உண்டு. உயரே அது அடித்து ஆலயத்தில் எதிரொலிக்கும் சுகம் எழுத வராது. நமது மூளையின் இடது வலது பாகங்களில் அந்த சத்தம் ஒரு தெம்பை ஊட்டுவதற்கு காரணம் நமது உடலில் ஏழு மையங்களில் அந்த ஒலி , குறைந்தது ஏழு வினாடிகளுக்கு ஒரு நல்ல ஆரோக்ய உணர்வை, அதிர்வு சக்தியை அளிக்கிறதாம். அதனால் உடலில் நோயின் சக்தி குறைந்து, மறைந்து, நம்ம உடல் நலம் பெறுகிறோம். குணமடைகிறோம். கோவிலுக்கு போனேன் வியாதி குணமடைந்துவிட்டது. வைத்யநாதன் சரி பண்ணிவிட்டான் என்கிறோம்.
No comments:
Post a Comment