Thursday, August 6, 2020

SWAMIJI'S UPADESAM

                             
     
     DEFEAT  THE DEFEATIST TENDENCY  -  J K  SIVAN  

கீதையில்   11 வது  அத்யாயத்தில்  கண்ணன்  அர்ஜுனனுக்கு தனது  விஸ்வரூப தர்சனம் காட்டுகிறான். 

''அர்ஜுனா,  உன்னால்  எதுவுமில்லை.  சர்வமும்  நானே, எல்லாமே  என்னில்  அடக்கம், ஆகவே  பயத்தை விடு,  தோல்வி எண்ணம் மனதில் வேண்டாம்.   சந்தேகம், விரக்தி எதாலும் துவண்டு  விழாமல்   நீ  ஒரு கருவி  உன்னை நடத்தி செல்பவன் நான் என்று புரிந்து  செயல்படு.   நானே  எல்லாம், என்னால் தான்  எதுவும்  என்று உணர்ந்து  எழுந்திரு, உன் கடமையை ச் செய்,   புதிய தெம்போடு   என்மேல் பாரத்தை போட்டு  உன் கடமையைச்செய்''    என்று தட்டி எழுப்புகிறான்.

இதை ஒரு தலைசிறந்த வேதாந்தி   ஒருவருக்கு  ஞாபகப்படுத்தினார்.  அந்த சம்பவம் இது:  

" என் வாழ்க்கையில் 1958ல் நடந்த ஒரு நிகழ்ச்சி இது.  ஒரு முக்கியமான திருப்பம் என் வாழ்வில் அது. விவரமாக சொல்கிறேன்.

என் சிறு வயதில் எனக்கு  வானில் பறக்க வேண்டும் என்று தீராத ஆசை. கனவு.   எனது பள்ளிப்பருவத்தில்  ஒரு அருமையான ஆசிரியர் அமைந்தது என் பாக்யம். சிவசுப்பிரமணிய  ஐயர் . 

''டேய் , உனக்கு  நான் வழி சொல்கிறேன் அப்படி செய்.   விண்  வெளி  பயணம் பற்றிய விஞ்ஞானம் படி.  வான சாஸ்திரம்  தெரிந்து கொள்''   என்றார் .  நான்  விண்வெளி பொறித்துறை கல்லூரி ஒன்றில் சேர்ந்தேன். 1957ல்   ஆகாய ஊர்தி  பொறித்துறையில் பட்டம் பெற்றேன்.   ஆகாய விமான ஓட்டுநராக பனி புரிய என் ஆசை அல்லவா ?   அது தானே என் கனவு.    விமானப்படை யில் சேர  விண்ணப்பித்தேன்.  என் அதிர்ஷ்டம் பாருங்கள்.   விமானப்படை  பைலட் தேர்வுக்கு   இன்டெர்வியூ வுக்கு  என்னை  அழைத்தார்கள்.   வடக்கே  டேராடூன் போகவேண்டும். நான் வாழ்ந்தது தென்கோடி தீவில்.   வீட்டிலிருந்து புறப்பட்டு சென்னை சென்று, அங்கிருந்து டெல்லிக்கு சென்று, அங்கிருந்து டேராடூன் போகவேண்டும்.  போனேன்.  ஒருவகையில் இந்தியாவில் நீண்ட பிரயாணம் அது.   இந்தியாவின்  பல இடங்கள், மக்கள்  எல்லாம் அறிந்துகொள்ள  ஒரு சந்தர்ப்பம் அந்த நீண்ட பயணம்.  எவ்வளவு வளமுள்ள, அற்புதமான செழுமை மிக்க நாடு நமது என்று புரிய வைத்தது.   

டேராடூனில்  நாலு நாள் பிழிந்து எடுத்தார்கள்.  ஓட்டம், உடல்பயிற்சி,  தனித்தனியாக, கூட்டமாக  தேர்வு கூட்டம்,  நேர்   காணல் ,   25 பேர் என்னைப்போல  விண்ணப்பித்தவர்களில்   கடைசியில்  ஒன்பது  பேரை மட்டும் தேர்வு   செய்தார்கள்.  நாலு நாள்  கடின தேர்வு பரிக்ஷைகளில்  ஒருவாறு  நான் ஒன்பதாவதாக தேர்வு செய்யப்பட்டேன்.   அவர்களுக்கு  எட்டு பேர் மட்டும் தான் தேவையாக இருந்தது.  

''தம்பி நீ வருத்தப்படாதே .  மருத்துவ பரிசோதனை கடினமாக  நடக்கும்  எட்டு பேரில் எவனாவது ஒன்றிரண்டு பேர்  தேர்வு செய்யப்படவில்லையென்றால் உனக்கு  சந்தர்ப்பம் கிடைக்கும். பொறு. என்கிறார்கள்.   கடவுள் சித்தம்  அப்படி இருக்கும்போது நான் என்ன செய்ய.   அந்த எட்டு  பேரும்  மருத்துவ சோதனையிலும் தேர்வு பெற்றுவிட்டார்கள். ஆகவே எனக்கு இப்போது இடம் இல்லை. 

மனம் ஒடிந்து விட்டது.   டெல்லிக்கு ஒரு பஸ்ஸில்  ஏறி  போகலாம்  என  நினைத்தேன்.  சில  பஸ்கள்   ரிஷிகேஷ்  ஹரித்துவார் வழியாக சென்றது.  அந்த மார்கமாக செல்வோம் என்று ஏறி உட்கார்ந்தேன். ஆஹா  என்ன அழகு கொஞ்சும்  இடம்.   விடிகாலை  பாஸ்  டேராடூனிலிருந்து  கிளம்பியது.  ரிஷி கேஷ் அடைந்தபோது  எதிரே  பளபளவென்று  கங்கை நதி.   பளிங்கு மாதிரி தண்ணீர்.  ஹிமயத்திலிருந்து பனி உருகி வெள்ளி மாதிரி ஓடிவருகிறது.    இதில் ஸ்னானம் செய்யவேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்டது.  நவம்பர் மாதம் குளிர்.   இருந்தாலும்  இந்த  அரிய  சந்தர்ப்பம் மறுபடியும் எப்போது கிடைக்கப்போகிறது?   ஜில்லென்று நீரில் ஆனந்தமாக குளித்தேன்.   பையில் வேஷ்டி இருந்தது.  அணிந்து கொண்டு எதிரே பார்த்தேன். அக்கரையில்  அழகான ஒரு கட்டிடம்.  ஆனந்தமாக இருந்தது. பெயரும்  ஆனந்த குடீர்.   அது சுவாமி  சிவானந்தரின் ஆஸ்ரமம். உள்ளே போனேன்.   

சுவாமி சிவானந்தா ஒரு மேடையில் உட்கார்ந்து கொண்டிருந்தார்.  அவர் எதிரியே மௌனமாக  நூற்றுக் கணக்கான பக்தர்கள்  அமைதியாக அவரது சத்சங்க  பிரசங்கம் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.   மெதுவாக நானும் கடைசி வரிசையில் அமர்ந்தேன். 

பகவத் கீதை பிரசங்கம்.  பதினொன்றாவது அத்தியாயம்.  விஸ்வரூப தர்சனம்  பற்றிய அற்புத ஸ்லோகங்களை விளக்கிக்கொண்டிருந்தார்.   எப்போதும்  பிரசங்கத்தை முடிவில்  எதிரே பக்தர்களில் யாரவது ரெண்டு பேரை  குறிப்பிட்டு அழைத்து  விசாரிப்பார்.  

அன்று பார்த்து  அவர் அழைத்த ரெண்டு பேரில் நான் ஒருவன்.  எதற்காக என்னை  அழைத்தார்?.  அவருடைய அறைக்கு  அழைத்து சென்றார். 

'' நீ  தமிழ்  நாட்டு  பையனா?''
''ஆமாம்  ஐயா ''
''உன் பெயர் என்ன ?'' என்று கேட்டதும் என் பெயரை சொன்னேன். 
''அது சரி, ஏன்  நீ சோகமாக காண்கிறாய்?
எனக்கு தூக்கி வாரி போட்டது.  எவ்வளவு கூர்மையான  பார்வை கொண்ட ஞானி.  எப்படி நான் சோகமாக இருக்கிறேன் என்று  எதிரே இருந்த நூற்றுக்கணக்கான  பேரில்  முன் பின் தெரியாத என்னிடம் கவனித்திருக்கிறார். “ 
''ஸ்வாமிஜி,   உங்களிடம் எல்லாவற்றையும் சொல்கிறேன்.  ஆகாய விமானப்படையில் சேர  இன்டெர்வியூ வுக்கு டேராடூன் வந்தேன். கைக்கெட்டிய வேலை  கை நழுவி விட்டது என்று விவரம் சொன்னேன்.  விமானியாகும்  என் ஆசை நிராசையாக போய் விட்டது. நான்  தேர்வு செய்யப்படவில்லை'' 
அந்த மஹான் என்னை  ஏற  இறங்க பார்த்தார்.  அந்த மாமனிதர் முன் நான் எவ்வளவு சிறிய கொசு.  அருகில் இருந்த ஒரு    கீதை புத்தகத்தை எடுத்து  11 வது அத்தியாயத்தை  எடுத்து கிருஷ்ணன்  அர்ஜுனனுக்கு   ஆண்ட சராசரமும் தானே என்று காட்டி  ஊக்குவித்ததை எடுத்து சொன்னார்.   தோல்வி மனப்பான்மையை  தோற்க ச்செய்'' என்று அழகாக  ஆங்கிலத்தில்  DEFEAT  THE DEFEATIST  TENDENCY '' என்று சொல்லி இதை மூன்று தரம் சொல்லு'' என்றார்.  சொன்னேன்.  அதன் உள்ளர்த்தம் புரிந்தது.  மனம் ஆனந்தமாகியது. சிரித்தேன். 
எனக்கு  20 புத்தகங்கள் பரிசாக கொடுத்தார்.  தமிழிலும் ஆங்கிலத்திலும் அவர் எழுதியவை. 

நண்பர்களே, இது என்னால் மறக்கமுடியாத  ஒரு நிகழ்ச்சி.   சூரிய மண்டலத்தில்  சூரியன்  71 முறை  சுற்றி வந்துவிட்டான்.  வருஷத்துக்கு ஒரு சுற்று. என் வாழ்வில் இப்போது 72வது சுற்று நடக்கிறது.  71வயது எனக்கு முடிந்து விட்டது. 

ஸ்ரீ சிவானந்த ஸரஸ்வதி  உபதேசித்த அந்த மந்திரம் என்னுள் ஆழ பதிந்து விட்டது.   எப்போதும்  என் கஷ்டங்களில், முயற்சியில் தோல்வி அடைந்தபோது அது எனக்கு புத்துணர்ச்சி புது தெம்பு அளிக்கிறது. n அது என் அனுபவம். 

அடடே,  நான்  '' சுவாமி சிவானந்தா   உன் பெயர் என்ன என்று கேட்டபோது  அந்த மனிதர்   சொன்ன பெயரை  எழுதாமல் விட்டு விட்டேனே.  அவர்  ஸ்வாமிகளிடம் சொன்னது 

 என் பெயர்   APJ  அப்துல் கலாம்.  ஓ  இப்போது தெரிகிறதா  ராமேஸ்வரம் தீவில் ஒரு  எளிய   முஸ்லீம்   குடும்பத்தில் அவதரித்து படித்து முன்னேறி  இந்தியாவின் சிறந்த விண்வெளி விஞ்ஞானி ஆகி, பாரதம் பெருமைப்படும் ஜனாதிபதியாக மக்கள் மனதில் என்றும் வாழ்பவர்.  ஹிந்துக்கள் முஸ்லிம்களை வெறுப்பவர்களா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...