''ஆடுவோமே பள்ளு பாடுவோமே'' J K SIVAN
சுதந்திர தினம். ஆகஸ்ட் 15,
''ஆடுவோமே பள்ளு பாடுவோமே'' என்று நிறைய பாட்டுகள் கேட்போம். இந்தவருஷம் மைதானத் தில் கொடியேற்ற கும்பல் இருக்காது. கரோனா எல்லோரையும் வீட்டோடு சிறைப்படுத்தியுள்ளது. அது சரி. அது என்ன ஸார் ''பள்ளு'' அதை பாட உங்களுக்கு தெரியுமா?
பள்ளு என்பது பண்டை காலத்தில் ஒரு இலக்கிய நூல் வகை என்று சொல்லலாம். ராகமோ தாளமோ அல்ல. நாடோடிப் பாடல் மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்கள். தமிழர்கள் நிலத்தை நான்காக பிரித்தனர். அதை தான் ''நானிலம்'' போற்றும் என்றெல்லாம் சொல்வோமே அந்த நானிலம். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல். இதில் சேராத இடம் பாலை, வாழத்தகுதி இல்லாத இடம். இந்த ஐந்தும் திணை எனப்படும். ஐந்திணைக்குள் இப்போது போக நான் தயாரில்லை.
- மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சித் திணை
- காடும், காடு சார்ந்த நிலமும் முல்லைத் திணை
- இவையிரண்டுக்கும் இடையில் அமைந்த பாழ் நிலம் பாலை எனப்பட்டது.
- வயலும் வயல் சார்ந்த நிலமும் மருதம் எனவும்,
- கடலும் கடல் சார்ந்த இடம் நெய்தல் எனவும் அழைக்கப்பட்ட
பள்ளு இலக்கியம் வயல், வயலை சேர்ந்த நிலம், மருதத்தை சேர்ந்தது. வயலில் அப்போதெல்லாம் உழைத்தவர்களை பள்ளர் என்போம். பழந்தமிழ் வேளாண்மைக் குடிமக்கள். பள்ளர்களின் எளிமையான வாழ்க்கை பல பாடல்களில் அற்புதமாக இருக்கிறது. எனக்கு பிடித்தது முக்கூடல் பள்ளு. படிக்க ரொம்ப கஷ்டம் இல்லை. இவ்வளவு இனிமையாக எழுதியவர் யார் என்றே இதை எழுதும் வரை தெரியவில்லை. தேடினேன். தேடிக்கொண்டே இருக்கிறேன்.....யாராயிருந்தாலும் வணக்கம் ஐயா,
முக்கூடல் பள்ளு பாடல்களில் ஒரு காட்சியோடு நிறுத்திக் கொள்கிறேன்.
ஒரு பள்ளனுக்கு ரெண்டு மனைவிகள். இதிலிருந்தே அவன் எப்படி ஆபத்துகளை, எதிர்ப்புகளை சமாளிக்கும் தைரிய சாலி என்று தெரிந்துகொள்ளலாம். ரெண்டு மனைவியரில் ஒருத்தி சைவ சமயத்தவள். மற்றவள் வைஷ்ணவ சமயம். சாதாரணமாகவே சண்டை உண்டு, இதில் சமயம் வேறு எரிகிற தீயில் எண்ணெய். இதனால் முட்டிக்கொள்பவர்கள் அவர்களோடு சேர்ந்து சிவனும் விஷ்ணுவும். பாவம், விதி யாரை விட்டது.
பள்ளன் வீட்டில் வழக்கம்போல் ஏதோ காரணமாக, காரணமில்லாமலேயே ரெண்டு மனைவிகளுக்குள்ளும் வாக்கு வாதம். சண்டை என்று சொல்வானேன்.
''என்னடி உங்க சாமி, துணி இல்லாம புலித்தோலை உரிச்சு இடுப்பிலே சுற்றிக்கொள்ளும் ஆளு:
''கட்ட ஒரு முழத்துண்டு மில்லாமல் புலித்தோலை உடுத்தானுங்கள் சோதி அல்லோடி
வந்தது பார் கோபம் மற்றவளுக்கு: ''என்னடி யோக்கியன் உங்க சாமி; புலித்தோலு கூட இல்லாம '' மரவுரியும் சேலையும் கட்டிக் கிட்டவரை பத்தி இம்புட்டு பேசுறே''
''கற்றைச் சடைகட்டி மரவுரியும் சேலைதான் பண்டுகட்டிக்கொண்டான் உங்கள் சங்குக் கையன் அல்லோடி''
''ரொம்ப நல்லா பேசிட்டதா நினைப்பா உனக்கு : அது சரி உங்கசாமிக்கு துணிதான் இல்லை, சோறாவது உண்டா? . ஊரெல்லாம் ஓட்டை வச்சிக்கிட்டு அலைஞ்சு பிச்சை எடுத்து அது கிடைக்காம விஷத்தை இல்ல தின்னவரு உங்க சாமி:
''ரொம்ப நல்லா பேசிட்டதா நினைப்பா உனக்கு : அது சரி உங்கசாமிக்கு துணிதான் இல்லை, சோறாவது உண்டா? . ஊரெல்லாம் ஓட்டை வச்சிக்கிட்டு அலைஞ்சு பிச்சை எடுத்து அது கிடைக்காம விஷத்தை இல்ல தின்னவரு உங்க சாமி:
''நாட்டுக்குள் இரந்தும் பசிக்காற்ற மாட்டாமல் வாரி நஞ்சையுண்டான் உங்கள் நாதனல்லோடி''
''ஓஹோ நீயி அந்தாலே போறியா. இதை கேட்டுட்டுப் போ; உங்க கிருஷ்ணசாமி மட்டும் எப்படியாம்? மனுசங்க யாரும் வீட்டிலே சேர்க்கல , வீட்டிலே சேர்த்தா வெண்ணையை திருடிப்பிடுவான், வீட்டுலே போக முடியாம மாட்டுப்பின்னாலே போய் பசி தாங்காம மண்ணை தின்னவனாச்சே, இவ்வளவு வீம்பா உனக்கு? ''
''ஓஹோ நீயி அந்தாலே போறியா. இதை கேட்டுட்டுப் போ; உங்க கிருஷ்ணசாமி மட்டும் எப்படியாம்? மனுசங்க யாரும் வீட்டிலே சேர்க்கல , வீட்டிலே சேர்த்தா வெண்ணையை திருடிப்பிடுவான், வீட்டுலே போக முடியாம மாட்டுப்பின்னாலே போய் பசி தாங்காம மண்ணை தின்னவனாச்சே, இவ்வளவு வீம்பா உனக்கு? ''
'' மாட்டுப் பிறகே திரிந்தும் சோற்றுக்கில்லாமல் வெறும்மண்ணையுண்டான் உங்கள் முகில் வண்ணணல்லோடி''
இது போல் அற்புதமான விஷயங்கள் யாரும் சொல்லக்காணோம். குழந்தைகளை நன்றாக வளர்த்து இது போன்ற பண்டைய சுவையான தமிழ் பாடல்களை அர்த்தத்தோடு சொல்லி கொடுத்தால் தமிழை விடவே மாட்டார்கள். தமிழ் தாய் மொழி என்றால் தாய்க்கு தான் இப்பொறுப்பு ஜாஸ்தி. தமிழ்த் தாய்மார்களில் எத்தனை பேர் தமிழ் படிப்பவர்கள், எழுதுபவர்கள் ???
No comments:
Post a Comment