ஸ்வர்கவாசம் 3 நாள் J K SIVAN
வாளாடி ஒரு உதாரண சின்ன ஊர். அதன் அருகே அதிகமாக காற்று ஊதிய பலூன் போல் திருச்சி பூதாகாரம் எடுத்து வெடித்துவிடும் அளவுக்கு பருத்து விட்டது. எங்கும் அடுக்காக உயர கட்டிடங்கள். மரங்கள் இறந்து விட்டன. விடாமல் அங்கும் இங்குமாய் எறும்புகள் போல சுறுசுறுப்பாக வித வித வாகனங்கள். மாற்றங்களுக்கு இடையே மாறாத மலைக்கோட்டை உச்சியில் தாயுமானவர் கோவில், உச்சிப்பிள்ளையார் கோவில் தெரிகிறது. நல்லவேளை உயரமாக இருந்தாலும் கட்டிடங்கள் தூரத்தில் கொள்ளிட காவேரி பாலத்தில் நான் ரயிலில் போகும்போது என் கண்கள் தேடிய மலைக் கோட்டையை அவை மறைக்கவில்லை.
திருச்சி சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து 5 கி.மீ தூரத்தில் வாளாடி கிராமம். முப்போகம் விளையும் பூமி. அருகே பிரபல ஊர் லால்குடி. லால்குடி ஜெயராமனை உலகம் அறிந்தாலும், அவர் பிறந்தது வாளாடியில் தான்.
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான திருவையாறு தியாகராஜ ஸ்வாமிகளின் ஒரு சிஷ்யர் லால்குடி ராம ஐயர். அவருக்கு ரெண்டு பிள்ளைகள், வாளாடி ராதாகிருஷ்ணய்யர், மற்றவர் குருசாமி ஐயர். ராம ஐயரின் பேரன் லால்குடி கோபாலயர், கொள்ளுப்பேரன் லால்குடி ஜெயராமன். எல்லோருமே வாளாடி ஊர்க்காரர்கள்.
வாளாடியில் மக்கள் பக்தியோடு வணங்கும் உலகாயி அனைவருக்கும் தாய். கிராம தேவதை. உக்கிர மானவள். ஆடு பலி உண்டாம். எல்லோரையும் ரக்ஷிப்பவள். ஒரு தனி கட்டுரை சுவாரஸ்யமாக எழுதி இருக்கிறேன் அவளைப்பற்றி.
வாளாடியில் காசி விஸ்வநாதர் இருக்கிறார். அம்பாள் ஆனந்தவல்லி. பழைய சிவன் கோவில். கீழ சிவன் கோவில் ஒன்று. அங்கே மகா பெரியவா வந்து பூஜை பண்ணி இருக்கிறார். வாளாடி சிவன் கோவிலில் நவகிரகங்கள் சூரியனை பார்த்த வண்ணம் சுற்றியுள்ளது. இந்த ஸ்தலத்தை பற்றி ஒரு சுவாரஸ்யமான கதை சொல்கிறார்கள்.
சத்தியாதரன் விதர்ப தேச ராஜா. ரொம்பவே நல்லவன் என்பதால் அவன் மேல் பொறாமை பக்கத்து ஊர் ராஜா துன்பராசனுக்கு. படையெடுத்தான். வெகுநாள் யுத்தம் நடந்து சத்யாதரன் தோற்றுவிட்டான் . அவனை துன்பராசன் வாளால் கழுத்தை வெட்டி கொன்றான். கணவனை இழந்த சத்யாதரன் மனைவி தானும் உயிர் துறக்க முடிவு கொண்டாள் . அனால் அவள் வயிற்றில் ஒரு சிசு உருவாகிக் கொண்டு இருந்ததே. அதை காப்பாற்ற காட்டில் சில காலம் ஒளிந்து வாழ்ந்தாள். பிரசவம் நேர்ந்தது ஒரு பிள்ளை பிறந்தான். நல்ல தாகம் அவளுக்கு தண்ணீர் குடிக்க ஒரு ஆற்றில் இறங்கி நீர் பருகும்போது அவள் காலை பசியோடு இருந்த முதலை கடித்து அவள் இறந்தாள். குழந்தை ஆற்றங்கரையில் அழுது கொண்டிருக்க உமா என்பவள் அந்த பக்கம் வருகிறாள். அதை எடுத்து வளர்க்கிறாள். தர்மதத்தன் எனப் பேர் சூட்டி வளர்க்கிறாள். அவள் முதல் மகன் சுசீலன். அவள் பரம ஏழை. ஒரு நாள் ஒரு முனிவர் ஊருக்கு வருகிறார். அவரிடம் தனது கஷ்டங்களை சொல்கிறாள்.
அந்த முனிவர் ''உன் வளர்ப்பு பிள்ளை ஒரு ராஜ குமாரன். முன் ஜென்மத்தில் பாண்டியன். சோழமன்னனை வெட்டிக் கொன்ற பாவத்தால் தானும் இப்பிறவியில் வெட்டிக் கொல்லப்பட்டான். அவன் தாய் சதி முற்பிறவியில் சதி செய்து ஓர் பெண்ணுக்கு விஷம் கொடுத்து கொன்றதால் இப்பிறவியில் முதலை கடித்து துன்புற்று இறந்தாள்''
உமா தன் பிள்ளை சுசீலனைப் பற்றிக் கேட்டபோது இவன் முற்பிறவியில் கஞ்சன் .வாங்கியே பழக்கப் பட்டதால் இப்பிறவியில் வறுமை. இவைகள் தீர சிவ வழிபாட்டினை மேற்கொள்ள வேண்டும்'' என்கிறார் முனிவர்.
ஆகவே இந்த வாளாடியில் காசி விஸ்வநாதர் வழிபாட்டில் உமாவும் பிள்ளைகளும் ஈடுபட்டு ஒருநாள் தோட்டத்தில் எதற்கோ குழி எடுக்கும்போது ஒரு பானையில் பொன்னும் பொருளுமாக புதையல் கிடைக்கிறது. அவர்கள் சுபிக்ஷமாக வாழ்கிறார்கள். தர்ம தத்தன் தன் தந்தை இழ்ந்த நாட்டை திரும்ப பெற்றான் . எல்லாவற்றுக்கும் காரணம் காசிவிஸ்வநாதர் அருள். யாராவது படம் எடுக்க கதை தேடினால் இந்த கதை உதவட்டும். படம் சக்கை போடு போடும்.
இங்கே மகிஷாசுர மர்த்தினி எப்போதும் சிவன் கோவில்களில் வடக்கு நோக்கி நிற்பவள் தெற்கு நோக்கி அருள் புரிகிறாள்.
வாளாடியில் ஒரு நூறு வயது பழைய வீட்டில் என் நண்பர் ஸ்ரீ தத்தாத்ரேயனுடன் தங்கி பல ஆலயங்கள் தரிசித்தேன். அற்புதமான மனிதர். ஒரு நூறு வயது நடராஜரை லக்ஷ்மிநாராயணன் ஆலயத்தில் காட்டினார்.
தத்தாத்ரேயர் வீட்டில் அவர் முன்னோர்கள் கருப்பு வெளுப்பில் மேல் அங்கவஸ்திரத்தோடு சிரிக்காமல் விழித்து தீர்க்கமாக '' என்னடா விடாமல் மூணு வேலை சந்தியாவந்தனம் பண்றியா, காயத்ரி சொல்றதுண்டா? என கேட்பது மாதிரி பார்த்தார்கள். கழுத்து நிறைய உருத்ராக்ஷம், நெற்றியை மறைத்து வெண்மையாக விபூதி பட்டை, அவர்கள் தத்தாத்ரேயனின் முன்னோர்கள், அப்பா, தாத்தா கொள்ளுத்தாத்தா போன்றவர்கள். அக்னீஸ்வரர், ஹஸ்தாமலகர் என்ற அற்புத பெயர்கள் கொண்டவர்கள். இப்போது அந்த வம்சத்தில் என் நண்பர் தத்தாத்ரேயர். ரிஷிகள் மஹான்கள் பெயர்களை கொண்ட இந்த குடும்பம் வாளாடியில் வாழ்ந்து ஊரை வளமான ஒரு சொர்க்கபூமியாக எல்லோரும் சந்தோஷமாக வாழ தமது தொண்டை புரிந்தவர்கள். தத்தாத்ரேயனுடன் சென்ற மற்ற ஆலயங்கள் பற்றி தனியாக சொல்கிறேன்.
வாளாடி ஒரு சின்ன சுறுசுறுப்பான கிராமம். திருச்சி ஸ்ரீரங்கம் அருகே உள்ள ஆன்மீக ஊர். காவிரி வளமை செழித்த பச்சை பசேல் என்ற வயல் கண் நிறைந்த காட்சியாக எங்கும் காணும் இடம். 16.12.2018 அன்று திடீரென்று சாயந்திரம் நாலு மணிக்கு அமைதியாக இருந்த அந்த அக்ரஹாரம் ஒரு புத்துயிர் பெற்றது. 'ஹலோ மைக் டெஸ்டிங் என்று ஒருவர் கரகரவென்று சப்தம் எழுப்ப, சற்று நேரம் க்ரீச் கீச் சப்தங்கள். அப்புறம் பிளாஸ்டிக் நாற்காலிகள் நகரும் சப்தம். வண்ண வண்ண சேலைகள், எழுப்பிய கலகல பேச்சு... எங்கிருந்து இவ்வளவு பேர் வந்து சேர்ந்து விட்டார்கள்?.
மறந்தே போனேன். அன்று அல்லவோ வாளாடி அக்ரஹாரம் அரங்கராஜன் குமாரமங்கலம் இளைஞர் நற்பணி மன்றம் அக்ரஹார லக்ஷ்மிநாராயண பெருமாள் கோவில் வாசலில் திறந்த வெளி கூட்டத்தில் இதிஹாஸ வினாடிவினா நிகழ்ச்சி. அதற்கு தானே தலைமை தாங்கி சிறப்பு உரை ஆற்ற நான் வாளாடி வந்திருக்கிறேன் என்ற நினைப்பு வந்தது. எனக்கு வாளாடியிலும் அண்டை அசல் ஊர் கோவில்களுக்கும் சென்று வந்த சந்தோஷத்தி்ல் உலகமே மறந்து போய் விட்டதே .
இந்த இதிஹாஸ வினாடி வினா நிகழ்ச்சி அமைப்பாளர் ஸ்ரீ வி. சீதாராமன் எனக்கு ஏற்கனவே பரிச்ச யமானவர். எங்கள் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் சேவா நிறுவனத்தில் ஒரு நிகழ்ச்சியில் அவருடைய இதிகாச வினாடி வினா கேட்ட அற்புத நினைவு இன்னும் இருக்கிறது. அதுவும் அவர் வாளாடிகாரர் வேறு. மிக சிறப்பாக ரெண்டு மணி நேரத்திற்கும் மேலாக அற்புத நிகழ்ச்சியை நடத்தி அக்ரஹாரத்தை அளவற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். சீதாராமனுக்கு இவ்வளவு விஷயம் எப்படி தெரிந்தது என்று யோசிப்பதற்கு இடமளிக்காமல் அவரது தந்தை வாளாடி வரதராஜ சாஸ்திரிகள் ஏற்கனவே பிரஸ்தான த்ரயம் எனப்படும் ப்ரம்ம சூத்ரம், பகவத் கீதை உபநிஷத் எல்லாவற்றையும் நிறைய கரைத்து குடித்து விட்டிருந்தது தான்.
எனக்கு தெரியாத எத்தனை விஷயங்களை நொடிப்பொழுதில் கற்றுக் கொடுத்தார். இது போன்ற உணர்வு பூர்வ உபயோகமான நிகழ்ச்சிகள் எல்லா கிராமங்கள், நகரங்கள் எல்லா இடத்திலும் நடக்க வேண்டும். தேவையற்ற விஷயங்களில் மனம் ஈடுபட எத்தனையோ விஷயங்கள் இருக்கிறதே. டிவி, யூட்யூப், வாட்சப், வாராந்திர, தின, சஞ்சிகைகள். அதெல்லாம் விட நேருக்கு நேர் நடக்கும் இந்த நிகழ்ச்சிகள் குழந்தைகளுக்கு மிக மிக அவசியம். வாளாடி மக்கள் கொடுத்து வைத்தவர்கள்..
அக்ரஹாரம் தெருவை மடக்கி ஞான மழை பெற்றது. பொழிந்தவர் சீதாராமன். அதில் நனைந்தவர்கள், ஐந்து வயது முதல் என் போன்ற 81+ கள் வரை எத்தனையோ பேர். எவ்வளவு ஆர்வத்தோடு விடை அளித்தார்கள். எல்லோருக்கும் ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவா நிறுவனம் தங்களது புத்தகங்களை பரிசாக அளித்ததில் அளவு கடந்த மகிழ்ச்சி. பிறவி எடுத்த பயன் சற்று புரிந்தது.
வாளாடியில் ரெண்டு மூன்று நாள் தங்கியபோது நான் அனுபவித்தது ஏதோ ஒரு கிராமத்து வாசம் அல்ல, ஸ்வர்கவாசம் தான்.
No comments:
Post a Comment