சென்னைக்கு மிக அருகில் உள்ள ஒரு திவ்ய க்ஷேத்ரம் திருப்போரூர். முருகன் கோவில் பிரசித்தம். நிறைய பேர் போயிருப்பீர்கள். சுமார் 400 வருஷங்களுக்கு முன் அங்கே ஒரு ஞானி இருந்தார். மதுரை மீனாட்சியின் செல்லக் குழந்தை என்று எல்லோரும் அவரை சொல்வார்கள். பெயர் சிதம்பர ஸ்வாமிகள். மீனாட்சி அருளால் சிறுவயதிலிருந்து கவி பாடும் திறன். அவர் இயற்றியது தான் ஸ்ரீ மீனாட்சி பிள்ளைத் தமிழ்.
கோயம்புத்தூரை சேர்த்த அவிநாசி ரெட்டியா ருக்கு புத்ர பாக்யம் இல்லை. ஒருநாள் அவர் வீட்டுக்கு ஒரு சிவபக்தர் யோகி குமாரதேவர் வருகிறார். ''நீயும் உன் மனைவியும் இந்த விபூதியை உட்கொள்ளுங்கள். புத்ர பாக்யம் ஏற்படும்'' என்று ஆசிர்வதித்தார். பிறந்த குழந்தை தான் சிதம்பர ஸ்வாமிகள். குமார தேவரிடமே பாடம் கற்றார். குமாரதேவரின் குரு சாந்தலிங்க ஸ்வாமிகளின் ஆசியும் பெற்றார். குமார தேவரிடம் 21 தீக்ஷை பெற்று ஞானியானவர்.
தியானத்தின் போது அடிக்கடி மயில் சிறகு விரித்து ஆடுவதன் காரணம் என்ன என்று குரு குமாரதேவரிடம் கேட்கிறார்.
''நீ உடனே மதுரை சென்று மீனாட்சியை வழிபடு.. '' குரு உபதேசம் அவரை மதுரை சென்று அங்கயற்கண்ணி புத்திரனாக மாற்றிவிட்டது. அம்பாள் மயிலுக்கு பதிலாக அவர் கண் முன் நர்த்தனம் ஆடினாள் . ''மீனாக்ஷி கலிவெண்பா'' பிறந்தது. கட்டாயம் ஒருமுறையாவது படிக்கவேண்டிய நூல்.
“சீராரும் பூங்கமலத் தெள்ளமுதே, சேயிழையே!
காராரும் மேனிக் கருங்குயிலே! –ஆராயும்
வேதமுதல் ஆகி நின்ற மெய்ப்பொருளே! மின் ஒளியே
ஆதிபராபரையே!அம்பிகையே! –சோதியே!”
என்று கடகட வென்று தமிழ் ஓடுகிறது. எளிதில் புரிகிறது.
"அன்ன நடைச்சி, அருமறைச்சி, ஆண்டிச்சி
கன்னல் மொழிச்சி, கருணைச்சி- பன்னுதமிழ்
வாய்ச்சி, சடைச்சி, வடிவுடைய மங்கச்சி,
பேய்ச்சி, இளமுலைச்சி, பேதைச்சி - காய்ச்சியபால்
வெண்ணெய் மொழிச்சி, வெளிச்சி, வெளி இடைச்சி
அண்ணுபுரம் தீயிட்ட அம்படைச்சி"
என்றெல்லாம் குழந்தையை நாம் திருட்டு குட்டி, பொல்லாது, நாக்குட்டி, பூனைக்குட்டி என்று கொஞ்சுவது போல் பலவாறாகப் பார்த்து பரவசமடைகிறார்.
மதுரை மீனாட்சி ஒருநாள் ''வடக்கே போ யுத்தபுரி என்றஊரில் என் குமாரன் ஆலயத் தை புனருத்தாரணம் செய்'' என்று ஆணை யிட்டாள். புறப்பட்டுவிட்டார் சிதம்பர ஸ்வாமி கள். யுத்த புரி தான் திருப் போரூர் முருகனை
தரிசிக்க ஆவல். வரும் வழியில் விருத்தாச லத்தில் குரு குமார தேவர் முக்தி அடையப் போவதை உணர்ந்து அங்கே சென்று அவரை வணங்குகிறார்.கிளியனூரில் ஞானம்மை எனும் பெண்ணுக்கு அருளாசி, அப்புறம் பொம்ம பாளையத் தில் சிவஞானபாலைய சுவாமிகளோடு ஏழுநாட்கள் இரவு, பகல் பாராமல் விவாதம்.
திருப்போரூரில் கந்தன் ஆலயம் இல்லை. யாரைக்கேட்டாலும் இங்கே முருகன் ஆலயம் கிடையாதே என்று வேம்படி விநாயகர் கோவிலைத்தான் காட்டினார்கள். அந்த கோவிலை ஒட்டி ஏராளமான பனைமரங்கள் வளர்ந்த காடு. பனங்காட்டில் கந்தனைத் தேடி அலைந்தார்.
ஒருநாள் பெண் பனை மரம் ஒன்றின் அருகே சுயம்புவாக கந்தன் ஸ்வாமிகளுக்கு கிடைத் தான். பெரு மகிழ்ச்சியோடு அவனைத் தனது
குடிசைக்கு கொண்டு போய் அபிஷேகம் அர்ச்சனை செய்து வழிபட்டார். ''முருகா உன் கோவில் எங்கேடா? தேடினார். கனவில் குரு குமாரதேவர் தோன்றி விபூதி அணிவிக்கிறார். துல்லியமாக முருகன் கோவில் இருந்த இடம் தெரிகிறது. குருவின் பாதார விந்தங்களில் விழுந்து எழுந்த போது குரு ஸ்வாமிநாதனாக காட்சி அளித்து பல்லவர்கள் கால கோவில் ஒன்று சிதிலமடைந்த நிலையில் தெரிகிறது. சிதம்பர சுவாமிகளால் கோவில் புனருத்தா ரணம் பெற்றதன் காரணம் எண்ணற்ற பக்தர்கள் ஸ்வாமிகளிடம் விபூதி பெற்று நோய் குணமானது. பக்தர்கள் உதவியோடு கோவில் எழும்பியது.
திருடர்கள் ஒருநாள் சுவாமிகள் குடிலில் திருட வந்தபோது அவரைத் தாக்க கைகளை ஒங்க, கைகள்அப்படியே நின்றுபோனது. கண் குருடானது . ஸ்வாமிகள் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. திருடர்கள் மன்னிப்பு கேட்டு, தாங்கள் திருடிய அனைத்து பொருள்களையும் கோவில் திருப்பணிக்கு சேர்ப்பித்தார்கள்.
இந்த நிகழ்ச்சி மேலும் பக்தர்களிடம் சென்றது .726 பாடல்களை கொண்ட ''திருப்போரூர் சந்நிதி முறை '' நமக்களித்தார். இதைத் தவிர திருக்கழுக்குன்றம் வேதகிரிசுரர் பதிகம், விருத்தாசலம் குமாரதேவர் நெஞ்சுவிடு தூது, விருத்தாசலம் குமாரதேவர் பதிகம், பஞ்சதிகார விளக்கம் ஆகியவையும் இயற்றினார்.
மீனாக்ஷி இட்ட பணியாக ஸ்வாமிகள் மூலம் நமக்கு திருப்போரூர் முருகன் கோவில் கிடைத்தது. மூலவர் சந்நிதி அருகே மண்ட பத்தில் தெற்கு பார்த்த யந்திர ஸ்தாபனம் இருக்கிறதே அது வேறு எந்த முருகன் கோவிலிலும் பார்க்க முடியாது. ஸ்வாமிகள் அமைத்தது. கூர்மம், அஷ்ட கஜங்கள் (எட்டு யானைகள்) அஷ்ட நாகங்கள், தேவ கணங்கள் கொண்ட பீடம். அதன் மேல் இந்த யந்த்ரம். சக்ரம். இதற்கான விசேஷ பூஜை முறைக ளை வழக்கப்படுத்தினார்.
கோவிலிலிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் கண்ணகப் பட்டு என்னும் கிராமத்தில் மடாலயம், ஒடுக்க அறை, பூஜை மடம் எல்லாம் அமைத்து அங்கேயே ஸ்வாமிகள் ஆழ்ந்த தவத்தில் ஈடுபட்டார். எங்கிருந்தெல்லாமோ பக்தர்கள் குழுமினர். சிலர் தீக்ஷை பெற்றனர்.
1659 வைகாசி விசாக த்தன்று மடாலயத்தின் ஒடுக்க அறைக்குள் இருந்து சுரங்க வழியே அருகில் உள்ள சமாதிக் குழிக்குள், வழிபாட்டுப் பொருட்களுடன் சென்று வழிபாடு நடத்தி சமாதியின் உள்ளேயே அமர்ந்து பரிபூரணத் துவத்தை அடைந்தார். அவர் சமாதி அடைந்த அதே நேரத்தில் திருப்போரூர் முருகன் சந்நிதியில் மூலவரின் சந்நிதியில் சிதம்பரம் சுவாமிகள் கூப்பிய கரங்களுடன் நகர்ந்து சுப்ரமணிய ஸ்வாமியோடு கலந்தது, ஐக்யமானதை அன்று முருகன் தரிசனம் செய்த பக்தர்கள் பலர் பார்த்தார்கள். பாக்கியசாலிகள்.கன்னக்கப்பட்டில் யாரும் இதுவரை சிதம்பர ஸ்வாமிகள் ஜீவ சமாதி என்றோ அதிஷ்டானம் என்றோ ஒன்றையும் ஏன் குறிப்பிடவில்லை???? மடாலயம் என்று மட்டும் ஏன் பெயர்??
ஒடுக்க அறையில் நிஷ்டை, யோகம் முதலானவற்றை சுவாமிகள் இப்போதும் அனுஷ்டித்து வருவதாக ஐதீகம். எனவே, அவருக்குத் தொந்தரவு கூடாதாம். எனவே வழிபாடு இல்லை. ஒரேயொரு விளக்கு மட்டும் 24 மணி நேரமும் சுடர் விட்டு எரிகிறது. சுவாமிகள் பயன்படுத்திய சுரங்கத்தை மேடையாக்கி மூடிவிட்டார்கள்.இன்றும் அங்கே அவர் உபயோகித்த புலித்தோல் ஆசனம், பாதரட்சை இருக்கிறது.
தினமும் காலை 8 முதல் 10 மணி வரை, மாலை 5 முதல் 7 மணி வரையிலுமாக இரண்டு வேளைகளில் பூஜை நடைபெறுகிறது. பௌர்ணமி தினங்களில் இரவு 7 முதல் நள்ளிரவு 12 மணி வரை அபிஷேகம், அலங்காரம், அன்னதானம், பஜனைகள் ஆகியவை சிறப்புற நடைபெறும். சுவாமிகளைத் தரிசிக்க வரும் பக்தர்கள் பலர், அன்றிரவு இங்கு தங்கி விட்டு, மறுநாள் காலையில் தரிசனம் முடித்து திரும்புகின்றனர். தவிர கிருத்திகை, ரோகிணி, விசாகம், பரணி ஆகிய நட்சத்திர தினங்க ளிலும் சுவாமிகளுக்கு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் சிறப்பாக இருக்குமாம்.