வீர சிவாஜி J K SIVAN
வாடா அப்ஸல் சந்திப்போம்....
' ஹும் அப்புறம் ?'' கர்ஜித்த சிவாஜியின் வலதுகரம் மீசையை முறுக்கியது. அருகில் இருந்தவர்கள் நடுங்கினார்கள். இப்படி சிவாஜி மீசையை முறுக்கினால் அவரது மனதில் ஏதோ ஒரு திட்டம் உருவாகி விட்டது. எவனுக்கோ மரணம் நெருங்கி விட்டது என்று அர்த்தம் என்று அனுபவம் சொல்லியது. 'சிவாஜி ஒரு பிரதாப் காட் மலைப்பாறையின் மேல் காலை ஊன்றி நின்றுகொண்டிருக்க எதிரே கைகட்டி ஒற்றன் சேதி சொன்னான். அவன் நம்பக மானவர் என்பதால் சிவாஜி அவன் பேச்சுக்கு மரியாதை கொடுத்து கேட்டுக் கொண்டிருந் தார்.
''மஹாராஜா, அப்ஸல் கான் பந்தர்பூரில் எண்ணற்ற பக்தர்கள் கண்களில் நீர் வடிக்க பாண்டுரங்கன் ஆலய புண்டலீகன் சிலை, மற்றும் சில சிற்பங்களை நாசமாக்கி பீமா நதியில் போட உத்தரவிட்டான். ஒரு பசுவை கொன்று அதன் ரத்தத்தை ஆலயத்தில் எங்கும் தெளிக்க சொன்னான்.....துளஜா பவானி ஆலயம் நாசமாக்கப்பட்டு விட்டு புனிதமற்று போய்விட்டது. அவன் வீரர்கள் அவன் கட்டளையில் இவ்வாறு அக்கிரமம்
செய்தார்கள்'' தூதன் கண்ணில் ஆறாக கண்ணீர் பெருகியது.
''இப்போது என்ன செய்கிறான். அவன் திட்டம் என்ன தெரியுமா உனக்கு?''
''இடுப்பில் கை வைத்துக்கொண்டிருக்கும் பாண்டுரங்கன் பஞ்சலோக சிலையை பந்தர்பூர் ஆலய நிர்வாகிகள் அர்ச்சகர்கள் எல்லோரும் அப்ஸல் கான் படை வரு முன்னேயே ஜாக்கிரதையாக அப்புறப்படுத்தி ஒளித்து வைத்துவிட்டார்கள். பண்டரிபுரத்திலிருந்து அப்ஸல் கான் ரஹீமத் பூர் வழியாக வாய் எனும் ஊருக்கு சென்றுவிட்டான். அங்கே தான்.....'' ஒற்றன் மேலே சொல்ல தயங்கினான்.
''தயங்காதே, பயம் வேண்டாம் எதுவானாலும் சொல்.. உன்னைத் தெரியும் எனக்கு.'' என்று சிவாஜி உறுமினார்.
''..மஹாராஜா, உள்ளூர் கொல்லர்களை கூப்பிட்டு ஒரு பெரிய இரும்பு கூடு ஒன்று தயாரிக்க சொன்னான்... அவர்களும் ஆளுயர இரும்புக்கூடு ஒன்று செயது அவனிடம் கொடுத்தார்கள்''
''இரும்புக்கூடா? அது எதற்கு?''
'
'மஹாராஜா.. சொல்லவே தயக்கமாகவும், பயமாகவும் நடுக்கமாகவும் இருக்கிறது.... அதில் தங்களை சிறைப்படுத்தி டில்லி சுல்தானுக்கு அனுப்ப அவனுக்கு உத்தேசம் என்று அருகில் உள்ளோரிடம் சொல்லி சிரித்தான்''
''ஹாஹாஹா'' என்று வாய் மலர்ந்து சிரித்தார் சிவாஜி. ''நல்ல எண்ணம் தான். ஆனால் அது நிறைவேற அவன் உயிரோடு இருக்க வேண்டுமே..''
சிவாஜிக்கு பீஜப்பூர் சுல்தானின் எண்ணம் நன்றாக புரியும். அவருடைய நம்பகமான ஒற்றர்கள் எதிரிகள் கூடாரங்களில் இருந்து அவ்வப்போது சிவாஜிக்கு விஷயங்கள் சொல்வார்கள். விஸ்வாச ராவ் என்றொரு உண்மையான சிவாஜி பக்தன் ஒரு சிறந்த ரகசிய படை ஒற்றன். அவன் ஒரு முஸ்லீம் பக்கிரியாக வேஷம் தரித்து அப்ஸல் கானின் கூடாரத்தில் பணியாளாக இருந்தான். அப்ஸல் கானுக்கு உடம்பு பிடித்து விட்டுக் கொண்டிருந்த போது அப்ஸல் கான் எதிரே இருந்தவர்களிடம் பெருமையாக சிரித்து பேசிக் கொண்டிருந் தான்..
''உங்களுக்கு சொல்கிறேன் கேளுங்கள். அந்த மலைத் திருடன், சிவாஜியை நிமிஷத்தில் என்னால் கொல்ல முடியும் . என் பலத்தின் முன் அவன் சுண்டைக்காய். ஆனால் அவனை உயிரோடு பிடித்து அந்த விஷமக்கார மலை எலியை கூண்டில் அடைத்து சுல்தானிடம் காட்ட வேண்டும். அவர் கையால் அவன் துடித்து சாக வேண்டும். தமாஷாக இருக்கும்.'' என்றான் அப்ஸல் கான்.
வசந்த ராவின் ரகசிய கூட்டாளி சிவாஜிக்கு உடனே இந்த சேதியை அனுப்பிவிட்டான். .
மறுநாள் மாலை சிவாஜியும் வீரர்களும் தங்கியிருந்த பிரதாப் காட் மலை அருகே வெள்ளைக்கொடி பறக்க அப்சல்கானின் தூதுவன் கிருஷ்ணாஜி பிலாக்கர் குதிரைமேல் வேகமாக வந்துகொண்டிருந்தான். சிவாஜியின் ஆட்கள் தடுத்ததும் நின்றான். தான் பீஜப்பூர் தளபதி அப்ஸல் கானின் தூதுவன். சிவாஜிக்கு ஒரு கடிதம் கொண்டுவந்திருப்பதாகவும் சொல்லவே அந்த கடிதம் சிவாஜிக்கு அனுப்பப்பட்டது. அதில் ''உடனே வாய் கிராமத்துக்கு வந்து என்னுடன் பேசவும்- அப்ஸல் கான் '' என்று சேதி இருந்தது.
''தூதனே, எதற்கு உன் தளபதி என்னை பேச கூப்பிடுகிறான், சொல்?''
''ஐயா மஹாராஜா, தளபதி தனக்கிருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி, பீஜப்பூர் சுல்தானிடம் பேசி உங்களை மன்னித்து, உங்கள் தவறுகளை மறந்து, உங்கள் நிலங்களை திருப்பி அளித்து, இனி அவற்றை கைப்பற்றாமல் தாங்கள் சுதந்திரமாக அவருக்கு உடன்பட்டு வாழ அனுமதி பெற்று தர முயல்கிறார். '' சண்டை இன்றி சமாதானமாக அன்புடன் வாழ்வோம் என்று நினைக்கிறார். அது விஷயமாக உங்களை நேரில் வந்து சந்திக்க இந்த கடிதம் கொடுத்தார்''
''அடாடா உங்கள் தளபதி அப்ஸல் கான் அவ்வளவு நல்லவர் என்று அறியாமல் போய்விட்டதே . என்மீது அவ்வளவு அக்கறையா, அன்பா, அவருக்கு. இவ்வளவு நல்லவரை நான் நிச்சயம் சந்திக்க விருப்பமாயி ருக்கிறேன். ஆனால் தொலைதூரம் வாய் கிராமம் வரை வர வசதியில்லை. அருகே இருக்கும் ஜாவுளி கிராமத்தில் சந்திப்போமே '' என்று நான் சொன்னதாக சொல். நான் எல்லா ஏற்பாடுகளையும் செயது அவரை நல்ல நண்பனாக வரவேற்கிறேன்.'' என்று பதில் செய்தி கடிதம் எழுதினார் சிவாஜி.
அன்றிரவு க்ரிஷ்ணாஜி பிலாக்கர் பிரதாப் காட் டில் தங்கினான். சிவாஜி யின் பார்வையில் அவர் கேட்க நினைத்த கேள்வி புரிந்தது.
'க்ரிஷ்ணாஜி, உண்மையாகவே என் மேல் அன்பாக, எனக்கு உதவித்தானா இந்த சந்திப்பு. பவானி மாதா மேல் ஆணையாக உண்மையை சொல்''. சிவாஜியின் வலது கரம் உடைவாள் கைப்பிடி மேல் இருந்தது. எந்த வினாடியும் அவரது கூரிய வாள் எதிராளியின் தலையை சீவும் என்று அவனுக்கு தெரியும்.
'' பிரபு, எனக்கு தெரிந்து உண்மையாக அப்ஸல் கான் எண்ணம் அதுவல்ல. உங்களை தனது கரத்தாலேயே கொல்ல அவன் திட்டம் இட்டிருக்கிறான் அவன் மல்யுத்த வீரன். யானை பலம் கொண்டவன். எனக்கு பயமாக இருக்கிறது. நீங்கள் ஆயுதமின்றி தனிமையில் அவனை சந்திக்கும்போது +எப்படியாவது உயிர் தப்பவேண்டும்'' அவனுக்கு பரிசு கொடுத்து அனுப்பினார் சிவாஜி.
அன்றிரவு சிவாஜி தூங்கவில்லை. மனம் துளஜா பவானி மேல் த்யானத்தில் இருந்தது. கனவில் துளஜா பவானி வந்தாள் . ''சிவாஜி, என் கோயிலை களங்கப்படுத்தி நாசமாக்கிய அப்ஸல் கானுக்கு நீ தண்டனை கொடு''.'' அம்மா அதற்கு பழி வாங்கவேண்டியது எனது கடமை. உன் ஆசி போதும் எனக்கு '' துளஜா பவானி அருளாசி வழங்கி மறைந்தாள்'மறுநாள் காலை பொழுது விடிந்தது.
''என்னைக் கொல்ல சதிசெய்தவன் அப்ஸல் கான். நான் முதலில் அவனைக் கொல்ல எண்ணம் கொள்ளவில்லை. ஆகவே அவனது சதிக்கு பதிலாக அவனை சதியால் கொல்ல வேண்டியது என் கடமையாகிவிட்டது'' சிவாஜி தான் நம்பிக்கை துரோகம் செய்யவில்லை என்று மனச்சாட்சியை திருப்பதி படுத்தினார். .
சிவாஜியின் தூதன் பண்டோஜி கோபிநாத், அப்ஸல் கானுக்கு சிவானியின் பிரத்யேக அழைப்பிதழை எடுத்துக்கொண்டு கிளம்பினான். பிரதாப் காட்டுக்கு வரவேண்டும் இரண்டு வாரங்களுக்கு பிறகு ஒரு நாள் ஜாவுளி கிராமத்தில் வரவேற்பு நாள் நேரம்
குறிப்பிடப்பட்டு இருந்தது. ரெண்டு வாரம் ஓடி விட்டது. அப்ஸல் கான் படை வீரர்கள் மஹாபலேஷ்வர் தாண்டி வந்து விட்டார்கள். பார் என்கிற கிராமம் வரை வந்தார்கள். தங்கினார்கள். அந்த சிறிய கிராமம் பிரதாப் காட் மலை அடிவாரத்தில் இருந்தது.
அடுத்த நாள் சாயந்திரம் சிவாஜி அப்ஸல் கான் சந்திப்பு. பிரதாப் காட் கோட்டையிலிருந்து ஒரு கால் மைல் தூரத்தில் ஜாவுளி குக்கிராமத் தில் சிவாஜி -அப்ஸல் கான் சந்திப்பு க்காக ஒரு பெரிய பந்தல் போட ஏற்பாடு செய்தார். ரத்ன கம்பளங்கள் விரிக்கப்பட்டிருந்தது. காலையிலே எழுந்துவிட்ட சிவாஜி தனக்கு பிடித்த மான காலை உணவை அருந்தினார். மதியம் யோசனையில் ஆழ்ந்தவாறு சற்று ஒய்வு. தூக்கம். மீண்டும் கனவில் துளஜா பவானி ஞாபகப்படுத்தி கவலைப்படாதே'' என்று ஆறுதல் தந்தாள். வாழ்வா சாவா போராட்டம் எதிரே ஊசலாடியது. மிகப்பலம் வாய்ந்த சுல்தான் படை யை ஒரு சில குதிரை வீரர்களோடு சிவாஜி சந்தித்து வெற்றி பெற முடியுமா?
துளஜா பவானி ஆலயத்துக்கு மாலை சென்றார்.அம்பாளை தரிசித்து வேண்டினார். '' நீயே கதி தாயே'' என்று மனம் வேண்டியது. ஒரு புஷ்பம் அம்பாளின் மேல் இருந்து அவர் கைகளில் விழுந்தது. அவள் ஆசி கிடைத்த சந்தோஷம். தைரியம் நெஞ்சு பூரா குடிகொண்டது.
தனது நம்பகமான உதவியாளர்கள் தானாஜி மலூஸாரே, பேஷ்வா மோரோ பிங்களேல், நேதாஜி பால்கார் ஆகியோர் சகிதம் நடந்தார். ''நண்பர்களே நமது படைவீரர்கள் கண்ணுக்கு தென்படாமல் எதிரே காணும் பீஜப்பூர் சுல்தான் படையை சுற்றி வளைத்து இருக்கவேண்டும். ஓடவோ தப்பவோ இடம் கொடுக்க கூடாது. எதிரி அப்ஸல் கான் தந்திரம் மிக்க பலசாலி. என்னை கொல்ல தான் இங்கே சதி திட்டத்தோடு வந்திருக்கிறான். நான் ஆபத்து சமயத்தில் ஒரு சங்கை ஊதுவேன். அடுத்த கணமே, வினாடியே, வீரர்கள் வெளிப்பட்டு அவன் படையை, அவன் எதிர்பார்க்கு முன்பே
தாக்க வேண்டும்.
தாக்க வேண்டும்.
அடுத்து சிவாஜி ஒரு இரும்பு சங்கிலியாலான ஒரு அங்கியை உடலில் கவசமாக அணிந்தார். அதன் மேல் தங்க புட்டா, ஜிகினா வைத்த மேல் அங்கியை தரித்து சங்கிலி உள் கவசத்தை மறைத்துக் கொண்டார்.ஒரு இரும்பு கவசத்தை தொப்பியாக தலையில் அணிந்து அது வெளியே தெரியாமல் தனது தலைப்பாகையை அணிந்து கொண்டார். இடது கை விரல்களில் கூரிய விஷம் தடவிய புலி நகம் போன்ற உறையை வெளியே தெரியாமல் மாட்டிக் கொண்டார். மிக கனமான, சிறிய கூர்மை யான பிச்சுவா, எனும் சிறிய கத்தி வலது கரத்தை மறைத்த அங்கியுள் எந்தநேரமும் தயாராக இருந்தது.
பிரதாப் காட் மலையிலிருந்து சிவாஜி மேற்சொன்ன சிலரோடு மட்டும் பார்ப்பதற்கு நிராயுதபாணியாக உடைவாள் இன்றி பந்தல் மேடைக்கு வந்தார்.
No comments:
Post a Comment