நங்கநல்லூர் J K SIVAN
அரை நூற்றாண்டுக்கு முன் - 5
காலம் மாறியதால் மக்களின் எதிர்பார்ப்புகள், நம்பிக்கைகள், பொருளாதார வசதி போக்குவரத்து வசதி இதெல்லாமும் மாறுகிறது. அதனால் சூழ்நிலையும் அதோடு சேர்ந்து மாறும்போது இயற்கை புது வடிவம் பெறுகிறது. இதுவா பழைய நங்கநல்லூர் என்று கேட்க வைக்கிறது.
நங்கநல்லூர் புதிய ரயில் நிலையம் பழவந்தாங்கல் என்ற பெயரில் பெற்றுவிட்டது. ரயில்வே கேட் தொந்தரவு சுரங்கப்பாதை மூலம் அகற்றப் பட்டுவிட்டது. அதே போல் மீனம்பாக்கமும் தனது ரயில்வே கேட்டையும், பரங்கிமலை தனது ரயில்வே கேட்டையும் தொலைத்துவிட்டு சுரங்கப்பாதைகள் பெற்றன. வீடுகள் வயலை நிரப்பின. மரங்கள் மாண்டன. சிறு கோவில்கள் கொஞ்சம் பெரிதாயின. மக்கள் குடியேறவே, ஆட்டோ, டாக்சி பஸ் வசதிகள் பிறந்தன. குதிரை வண்டிகள், கை ரிக்ஷா, சைக்கிள் ரிக்ஷா, அதிலேயே மோட்டார் வைத்தது எல்லாமே காணாமல் போய்விட்டன. நடப்பவர்கள் எண்ணிக்கை குறைந்து போய்விட்டது. டாக்டர் சொன்னால் தான் நடப்பவர்கள் இப்போது பெரும்பாலோர்.
மழைநீர் அடித்து செல்லும் சாலைகள் பல, கழிவு நீர் கால்வாய்கள், மழைநீர் கால்வாய்கள் பெற்று நீரை ஓரமாக ஒதுக்கி விட்டது. சுடுகாடுகள் இருந்த பகுதியில் உயிரோடு வாழ அடுக்கு வீடுகள் தோன்றின. சைக்கிளில் சென்றவர்கள் ஸ்கூட்டர் மோட்டார் சைக்கிள், கார்களில் பயணிக்க தொடங்கினர். தனி வீடுகள் ஒவ்வொன்றாக அடையாளம் இழந்து ஒரு சுவற்றின் அடுத்த பக்கம் இருப்பவன் தெரியாதவனாகி விட்டான். இப்போது தீபாவளி பொங்கல் எல்லாம் வீடு வீடாக சென்று பகிர்ந்து கொள்ளும் பழக்கம் காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து மறைந்து விட்டது. கம்ப்யூட்டர், மொபைல் வசதிகள் வந்து ''சார் போஸ்ட்'' என்ற சத்தம் கேட்குமா, லெட்டர் வருமா என்று எதிர்பார்த்த காலம் மலையேறி விட்டது. கடிதம் எழுதும் பழக்கம் ஒழிந்து எல்லாம் கம்ப்யூட்டரில் தான். '' க்ஷேமம் உபய குசலோபரி , இங்கு எல்லோரும் நலம், அவ்விடம் யாவரும் நலமா?'' எல்லாம் கேலிக் கூத்தாகிவிட்டது.
ஒரு விஷயம். காலம் மாறலாம். காட்சிகள் மாறலாம். கருவூலமாக ஒவ்வொருவர் நெஞ்சிலும் பசுமரத்தாணியாக நிறைந்த பழைய நினைவுகள் என்றும் மாறாது.
அப்போதும் இப்போதும் தில்லை கங்காநகர் நங்கநல்லூரில் ஒரு பகுதி.
அங்கே 16வது தெருவில் 1970 களில் ஸ்ரீ ராஜ ராஜேஸ் வரி கோவில் தோன்றியது. ராஜகோபால ஸ்வாமிகள் என்பவர் முன்னின்று காட்டுகிறார் என்று கேள்விப்படுவோம். நான் இந்த ஊருக்கு வந்த போது அந்த கோவில் இல்லை. அடிக்கடி சைக்கிளில் அந்த கோவில் கட்டும்போது வேடிக்கை பார்க்க செல்வேன். கோவில் கட்டுவது என்பது எளிதா? அதற்கு என்னை முதலில் அழைத்து சென்றவர் காந்தி எனும் ஒரு இன்சூரன்ஸ் கம்பெனியில் பணி புரிந்த நண்பர். அந்த கோவிலுக்கு உழைத்த ஒரு தொண்டர். ராஜகோபால ஸ்வாமிகள் தான் அன்றும் இன்றும் சர்வமங்கள ராஜராஜேஸ்வரி ஆலய நிறுவனர். ராஜராஜேஸ்வரி ஆலயம் நங்கநல்லூரில் வரசித்தி விநாயகர் போல இன்னொரு முதல் முதல் தோன்றிய பிரபல மான புராதன கோவில்.
ராஜகோபால ஸ்வாமியைப் பற்றி தெரியாத வர்களுக்கு ஒரு சிறிய தகவல் .
அழகிய சிங்கராச்சாரியாருக்கும் ராஜம்மா ளுக்கும் புத்ரபாக்யம் இல்லை. நரசிம்மபக்தர். '' குமர குப்பம் பெருமாள் ரெட்டியைப் போய் பார்'' என்று அருள் வாக்கு. நரசிம்ம பக்தர் பெருமாள் ரெட்டியை தரிசித்தபின் பிறந்த மூன்று குழந்தைகளில் கடைசி பையன் ராஜகோபால். குடும்பம் வீடு மாறியது.
எட்டு வயது ராஜகோபாலன் தெருவில் விளையாடிக்கொண்டிருந்தான். அவர்கள் வசித்தக வீட்டுக்கு அருகே ஒரு பெரிய வீட்டுக்கு யாரோ ஒரு ஸ்வாமிகள் வரப் போகிறார் என்று பேச்சு. தடபுடல் ஏற்பாடுகள். ராஜகோபாலனுக்கு ஸ்வாமிகள் என்றால் யார் எப்படி இருப்பார் என்று பார்க்க ஆசை. மரங்கள், புதர், ஒரு கிணறு, அதை தாண்டி அந்த பெரிய வீட்டிற்கு சென்றான். ஒரு அறையில் சுவாமியார் உட்கார்ந்திருந்தார். ஆறு அடி உயர ஆஜானுபாகு சாமியார். ஜடாமுடி, தாடி மீசை, உடம்பெல்லாம் திருநீறு. பளபளக்கும் கூர்மையான கண்கள். ராஜகோபாலன் மெதுவாக நெருங்கி அவரைப் பார்த்தான். சுவாமியார் கண்களும் அவனை நோக்கியது. சிரித்துக்கொண்டே
''வா. உனக்கு ஒரு ஜபம் சொல்லித்தருகிறேன்'' என்கிறார்
''எனக்கு ஜபம் எல்லாம் ஒன்றும் வேண்டாம்'' என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டான். அவரைப் பார்க்க வேண்டும் என்று மனதில் உள்ளூர ஆசை இருந்தது.
அடுத்த நாளும் அந்த பெரிய வீட்டுக்குள் மீண்டும் சென்று எல்லோரையும் பார்த்தான். சுவாமியார் இருந்தார். அவர் மீது பார்வை போனபோது அவர் அவனையே பார்ப்பது தெரிந்தது.
''வா உனக்கு ஜபம் சொல்லித்தருகிறேன்'' என்கிறார். மறுத்து விட்டு மீண்டும் ஓட்டம்.
மூன்றாம் நாளும் அவரை அங்கே சென்று பார்க்கிறான். அருகே நிற்கிறான். அந்த சுவாமியார் கையால் அவனை அணைத்து அருகில் இருந்த ஜல பாத்திரத்தில் நீர் எடுத்து அவன் தலையில் தெளிக்கிறார். அவனை அழைத்து அருகில் ஒரு ஓரமாக அறையில் உட்கார வைக்கிறார். காதில் ஒரு மந்திரம் சொல்லி தலையைத் தொடுகிறார். ஒரு மின்சார சக்தி அவனுள் பாய்ந்தது.
''இந்த மந்திரத்தை விடாமல் ஜபித்துக் கொண்டே இரு . உனக்கு நல்லதே நடக்கும். உனக்கு முன்னால் எப்போதும் பத்து கால் அடிகள் தூரத்தில் அம்பாள் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி நடந்து கொண்டிருப்பாள். எப்போதும் நீ அவளை பின் தொடர்ந்து செல்வாய்.''
தனக்கு மிக முக்கியமான, ஸ்ரீ சக்தி உபாசனையில் மஹா ரஹஸ்யமான மஹா ஷோடஸி மந்திரம் உபதேசிக் கப்பட்டிருக்கிறது என்று சிறுவன் ராஜகோபாலனுக்கு அப்போது தெரியவில்லை. இது அகஸ்திய ரிஷிக்கு ஹயக்ரீவர் உபதேசித்த ஷோடஸி மந்திரத்தை விட சிறந்தது என்பார்கள். இதன் மஹிமை உணர்ந்தவன் ராஜாவாக இருந்தால் தன்னு டைய ராஜ்யத்தையே ஏன் தனது தலையையே கூட வெட்டி தர தயாராக இருப்பான். ஆனால் ஒருபோதும் இந்த ஷோடஸி மந்திரத்தை விட்டுத் தரமாட்டான். சொல்லி கொடுக்க மாட்டான். இன்னொரு விஷயம். ராஜ கோபாலனுக்கு தனக்கு உபதேசம் பண்ணியவர் குரு ஸ்ரீ தத்தாத்ரேயர் தான் என்பதும் தெரியாது. ஸ்ரீ குரு தத்தாத்ரேயர் பகவானை பூரணமாக அறிந்தவர், ப்ரம்மா விஷ்ணு மகேஸ்வரன் எனும் த்ரிமூர்த்திகளின் அவதாரம்.
ராஜகோபாலன் மாறிவிட்டான். அன்று
முதல் ஜெபத்தில் ஆழ்ந்துவிட்டான். இரவும் பகலும் பல மணிநேரங்கள் . இரவெல்லாம் வீட்டில் மற்றவர்கள் உறங்கியபின் பல மணிநேரங்கள் ஜெபத்தில் மும்முரமாக ஆழ்ந்துவிடுவான். போகப்போக வீட்டில் மன அமைதி கிடைக்கவில்லை.
ஒருநாள் கால் தானாகவே சோளிங்கர் நரசிம்மர் ஆலயம் நோக்கி நடந்தது. மலைப்படிகள் ஏறி நரசிம்மன் முன் நின்றான் பிரார்த்தித்தான். கிரி ப்ரதக்ஷிணம் செய்தான். இரண்டு மூன்று புஷ்கரணிகள் அடிவாரத்தில் உண்டு. லட்சுமி தீர்த்தம் என்று பெயர். அதன் அருகில் குறுகலான மலைப்பாதை ஒன்று அருகே வளைந்து ஒரு சிறு காடு நோக்கி சென்றது. அங்கே என்ன இருக்கும் என்று பார்க்க மனம் உந்தியது. காட்டுப் பாதையில் நடந்தவன் எதிரே ஒரு சிறு குகை வாயை பிளந்துகொண்டு நின்றது. அதன் உள்ளே நுழைந்தான். ஒரு குளம் தெள்ளிய நீரோடு தெரிந்தது. அங்கு மிங்குமாக நிறைய தாமரை மலர்கள் அதில் மிதந்தது. சூரிய ஒளியில் தாமரை மலர்கள் ஜொலித்தது.
''இங்கே ஜெபம் பண்ண மனம் விழைகிறது. பண்ணிவிட்டு வீடு திரும்ப எண்ணம். நேரம் ஆகிவிட்டதே. சீக்கிரம் திரும்ப வேண்டும்'' அமர்ந்தான். கண்ணை மூடினான். த்யானத்த்தில் ஆழ்ந்தான். நேரம் காலம் போவதே தெரியவில்லை.
தியானம் சட்டென்று கலைந்தது. கண்ணை திறந்தவனுக்கு ஆச்சர்யம். ''அட ரெண்டு ராத்ரி பகல் ஆகி விட்டதா? நேரம் போனதே தெரியவில்லையே? '' என்று யோசித்தவன் எதிரே அம்பாள் நின்றாள்.
''எழுந்திரு, திரும்பிப்போ '' ஸ்ரீ ராஜராஜேஸ்வரி உத்தரவிட்டாள்.
சாவி கொடுத்த மெஷின் போல் எழுந்தான், நடந்தான். வீடு நோக்கி நடந்தான்... கதவு சார்த்தி இருந்தது. தட்டினான். அம்மா தான் கதவை திறந்தாள். எதற்கு அம்மாவின் கண்களில் ஜலம் . வாரி அணைத்துக் கொண்டாள். எதற்கு அவ்வளவு ஆனந்தம்?
ஹா ஹா! நாலு வருஷங்கள் கழித்து தொலைந்து போன மகனைப் பார்க்கும் தாய்க்கு ஆனந்தமாக இருக்காதா?? நாலு வருஷங்களா ஆகிவிட்டது........ ரெண்டு மூன்று நாள் என்று நினைத்தேனே .
..
15 வயதில் ராஜகோபால ஸ்வாமிக்கு ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி கடாக்ஷம், தரிசனம் கிடைத்திருக்கிறதே. அதன் பிறகு மஹா ஷோடசி ஜபம் அஜபமாகிவிட்டது. எந்த வித முயற்சியும் இன்றி தானாகவே விடாமல் அவரிடமிருந்து எந்நேரமும் தொடர்ந்து வெளிப்பட்டது.
நங்கநல்லூர் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்பாள் கோவிலைப் பற்றி எழுதுகிறேன். இந்த எழுத இடமில்லை.
No comments:
Post a Comment