Monday, October 14, 2019

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம் J K SIVAN
பிரபஞ்ச சரித்திரம் மஹா பாரதத்தில் நிறைய உப கதைகள் இருப்பது தெரியும். அது தவிர அநேக உபதேச கதைகள் இருப்பது தான் ஆச்சர்யம். அநேக ரிஷிகள் மூலமாகவும், பீஷ்மர் வாயிலாகவும் சில உபமான கதைகள் நமக்கு கிடைக்கிறது. வேத வியாசர் இப்படி எல்லாம் நல்ல விஷயங்களை ரொம்பவே அள்ளித் தெளித்திருக்கிறார்
அவற்றை முழுவதுமாக படித்து சிறந்தவை சிலவற்றை சுருக்கமான கதைகளாக கொடுக்க முயற்சித்தேன். சில கதைகளை கொடுத்தேன். ஆனால் அந்த சமுத்திரத்தில் முத்துக் குளிக்க முழுகினால், எனது மஹாபாரதப் பயணம் பெரிதும் தடை படும் என்று புரிந்து விட்டது. இருந்த போதிலும், முத்துக்களின் மேல் உள்ள ஆர்வத்தால் பெரிதும் கவரப்பட்டு எண்ணற்ற முத்துக்களை சேகரிப்பதிலேயே வாழ்நாள் போதாததாகிவிடும் நிலை புரிந்து கொண்டேன். மஹா பாரதத்தில் நான் இன்னும் நிறைய சொல்ல வேண்டியிருக்கிறது. ஆகவே மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. மஹா பாரதத்தை எழுதி முடித்தபிறகு, சாவகாசமாக பீஷ்மர் உபதேசங்களை சேகரித்து உபகதைகளோடு பிரத்யேகமாக ஒரு புத்தகமாய் கொண்டு வந்தால் என்ன? இதற்கும் யாரேனும் உதவி செய்யவோ, வெளியிடவோ முன் வரமாட்டார்களா என்ன? என் மனதில் எண்ணங்களை உருவாக்குவதே அந்த மாயாவி தானே. எனவே தான் இதையும் ''கிருஷ்ணா உன் சித்தம் என் பாக்யம். நடப்பவன் நான், நடத்தி வைப்பவன் நீ '' என்று விட்டுவிடுகிறேன். ++ தனக்கு எப்போது மரணம் சம்பவிக்க வேண்டுமோ அப்போது அதை வரவழைக்கும் சக்தி பீஷ்மர் பெற்றவர் என்று அறிவோம். எனவே. யுத்தகளத்தில் உத்தராயண புண்ய காலத்தில் மானுட உடலை களைந்து விட தீர்மானித்தார். கிருஷ்ணன், ''யுதிஷ்டிரா, பீஷ்மரிடமிருந்து அவரது அனுபவ பொக்கிஷத்தில் முடிந்த வரையில் அறிவுரைகளை பெற்றுக்கொள்'' என்று கூறியதும் யுதிஷ்டிரன் அம்புப் படுக்கையில் மரணத்திற்கு காத்திருந்த பிதாமகரை அநேக கேள்விகள் கேட்கிறான். ராஜ்ய பரிபாலனம், யுத்த நெறி முறைகள், தர்ம சாஸ்திர வழிகள், வைராக்கியம், ராஜ தந்திரம், யாக யஞங்கள் அவற்றின் பலாபலன்கள். பெரியோர், ரிஷிகள், பிராமணர்கள், பசுக்கள், குடிபடைகள் அனைவரையும் எப்படி மனம் கோணாமல் ஆட்சி செய்வது. அனைவரின் அன்போடு நாட்டை , குற்றம் குறை, பாரபட்சமின்றி எப்படி ஆளுவது போன்றவைகளை சொல்லிக் கொடுக்கிறார் பீஷ்மர். நிறைய கதைகளை அங்கங்கே சொல்லி புரியவைக்கிறார். யுதிஷ்டிரரோடு, பஞ்ச பாண்டவர்கள் அனைவருமே பீஷ்மரிடம் அறிவுரைகளை பெறுகிறார்கள். அடுத்ததாக சாந்தி பர்வதத்தின் ரெண்டாவது பகுதியில் மோக்ஷ தர்மம் எனும் பர்வம் வருகிறது. இதில் ஒவ்வொரு மனிதனுக்கும் அன்றாட வாழ்வில் தேவையான ஆன்மீக பயிற்சியை போதிக்கிறார் பீஷ்மர். இன்ப துன்பம், சுக துக்கம், பற்று, வைராக்கியம், பக்தி போன்றவற்றை எளிமையாக பீஷ்மர் போதிக்கிறார். இந்திரியங்களை கட்டுப்பாட்டில் வைப்பது, ஆசா பாசங்களில் இருந்து விடுபடுவது, ப்ரம்ம ஞானம் பெறுவது பற்றி உபதேசிக்கிறார். குண த்ரயம், ஞானம், எல்லாம் அவர் யுதிஷ்டிரனுக்கு கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல் அறிவுறுத்திக் கொண்டிருந்த போது மற்ற பாண்டவர்கள் விருஷ்ணிகள் எல்லோரும் அருகிலே இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவும் தான். ''ஜனமேஜயா, பீஷ்மரிடம் யுதிஷ்டிரன் எல்லா விஷயங்கள் பற்றியும் கேள்விகள் கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் சந்தோஷமாக அவனுக்குப் புரியும்படி யாக பதில் சொல்கிறார். நிறைய கதைகள் சொல்லி விளக்கு கிறார். அவர்கள் பேச்சு, ஆன்மா, உடல், மரணம், மரணத்துக்குப் பின்?, கடவுள், மனித ஜனனம், கர்மா, அதன் பலன் என்று எல்லாம் விஷயங்கள் அனைத்தும் சுற்றி வளைந்து போகிறது. யுதிஷ்டிரன் படைத்தல், காத்தல், அழித்தல் எனும் மூன்று பிரபஞ்ச விதிகளை பற்றியும் அவற்றிற்கு பொறுப்பான பிரமன், விஷ்ணு, சிவன் ஆகியோர் பற்றியும் கேட்கிறான். ''பிதாமகரே , எனக்கு "செந்தாமரைக் கண்ணன், ஸாஸ்வதமானவன் பிரபஞ்சம் உருவாக காரணன்; எவன் எல்லா உயிர்களையும் தன்னுள் கொண்ட வனோ, எவன் எல்லா உயிர்களிலும் தான் குடி கொண்டவனோ, அவற்றை ப் பேணி பாதுகாத்து நம்மையெல்லாம் ரட்சிப்பவனோ , எவன் நாராயணன், ஹ்ரிஷிகேசன், கோவிந்தன், கேசவன் என்றெல்லாம் அழைக்கப் படுகிறானோ, எவனை எவரும் எதிர்கொண்டு வெல்ல முடியா தவனோ, அந்த விஷ்ணு வைப் பற்றி சகலமும் எனக்கு சொல்லுங்கள். தெரிந்து கொள்ள வெகு ஆவலாக இருக்கிறேன்'' என்கிறான் யுதிஷ்டிரன். "யுதிஷ்டிரா, நீ சொல்லும் அந்த விஷ்ணுவை பற்றி நான் ஜமதக்னி மகரிஷியின் புத்ரன் பரசுராம னிட மிருந்தும், தேவ ரிஷி நாரதரிட மிருந்தும், என் சகோதரன் கிருஷ்ண துவைபாயனிடமிருந்தும் (வேத வியாசர்) , வால்மீகி, மார்க்கண்டேய ரிஷி, ஆகியோரிடமிருந்தும் அறிந்து கொண்டேன். கேசவன் ஒருவனே பரமாத்மன். அவனை தான் புருஷன் என்று எல்லாவற்றிலும் நிறைந்தவனாக அறிவோம். ஒன்றே பலவானவன். கோவிந்தனைப் பற்றி நான் அறிந்த விவரங்களை நினைவு கூர்ந்து சொல்கிறேன். கேள். அவன் பஞ்ச பூதங்களின் காரணன். நாம் அறிந்த இந்த பிரபஞ்சத்தையே உருவாக்கி, தான் பாற்கடலில் பாம்பணை மேல் சயனிப்பவன். சர்வ உயிர்களையும் தோற்றுவித்து அவற்றின் ஆதாரமாக உள்ளவன். சகல உயிர்களுக்கும் உள்ளுணர்வை , (ஆன்மா) படைத்து அவற்றை உய்வித்து, முக்காலமும் உணர வழி வகுத்தவன். அவனது சங்கல்பத்தாலே அவன் இவ்வாறு பாற்கடலில் சயனித்திருக்கும் வேளையில் ஒருநாள் அவனது நாபியி லிருந்து ஒரு அழகிய தாமரை மலர்ந்து அளவற்ற காந்தியுடன் (பிரகாசத்துடன்) வெளிவந்தது. அதில் தனது சக்தியின் ஒரு பகுதியாக பிரமன் என்னும் ஒரு ஒளிக்கதிரை தோற்றுவித்தான். அப்போது எங்கும் பரவியிருந்த காரிரு ளில் மது என்ற ஒரு அசுரன் பலம் மிக்கவனாக உருவாகி இருந்ததால் அவன் பிரமனைக் கண்டதும் மோதுகி றான். பிராமனைக் காப்பதற்கு பரமாத்மா மது எனும் அந்த அசுரனைக் கொல்கிறார். எனவே தான் தேவர்களா லும் பிறராலும் மதுசூதனன் எனும் பெயரால் போற்றப் படுகிறார். பிரமன் தோன்றியது முதல் இனி அவனே தனது சங்கல்பத்தாலே சகல உயிர்களையும் தோற்றுவிக்கும் பணியை மேற்கொள் கிறான். பிரமனுக்கு 7 புத்திரர்கள் பிறக்கிறார் கள். மரீசி, தக்ஷன், அத்ரி, ஆங்கிரஸ், புலஸ்தியர், புலஹர், க்ரது ஆகிய ரிஷிகள் இவ்வாறு தான் தோன்றி னார்கள். மரீசிக்கு பிரம்மத்தை அறிந்த காஸ்யபர் ஜனிக்கிறார். தக்ஷன் மூலமே உயிர்கள் உருவாயின. தக்ஷன் பதிமூன்று பெண் களை பெறுகிறான். முதல்வள் திதி. காஸ்யபன் அந்த பதின்மூன்று பெண்களுக்கும் கணவனாகிறான். தக்ஷனுக்கு இன்னும் பத்து பெண்கள் பிறக்கிறார்கள். அவர்கள் தர்மதேவ தைக்கு பரிசாக அளிக்கப்பட்டு அஷ்ட வசுக்கள், ருத்ரர்கள், விச்வே தேவர்கள், சாத்தியர்கள்,மருத்துக்கள்என தோன்றி னார்கள். தக்ஷன் மேலும் 27 பெண்களை பெறுகிறான். சோமன் அவர்களுக்கு கணவனாகிறான். காஸ்யபரால் உலகில் கந்தர்வர்கள், குதிரைகள், பறவைகள், கிம்புருஷர்கள், மீனினம், தாவரங்கள் ஆகியவை உருவாயின. அதிதியால் தோன்றியவர்கள் ஆதித்யர்கள். அதிதியின் மகனாக ஒருமுறை விஷ்ணு வாமனனாக அவதரித்தான் என்று வாமன ஜெயந்தி அன்று படித்தது நினைவிருக்கும். தேவர்களும் அசுரர்களும் பெருகினர். அதிதி மூலம் தோன்றியவர்கள் தேவர்கள். திதி மூலம் தோன்றியவர்கள் தைத்யர்கள், அசுரர்கள். தனு மூலம் உருவானவர்கள் தானவர்கள்.

"விஷ்ணுவால் இரவு பகல், காலை, மாலை ,பருவங்கள், மேகங்கள், இதர அசையும் அசையா தோற்றங்கள் உருவாயின. விஸ்வங்கள், பூமி எல்லாமே தயாராகின. விஷ்ணுவின் வாயினின்று நூற்றுக்கணக்கான ப்ராஹ்மணர்கள், புஜங்களிலிருந்து க்ஷத்ரியர்கள், தொடைகளிலிருந்து வைஸ்யர்களும், பாதங்களிலிருந்து இதரர்களும் உருவானதாக புருஷ சூக்தம் சொல்கி றது. பிரம்மத்தை அறிவது சிறந்த ஞானமாகியது. வேதங்கள் உருவானது. விருபாக்ஷன் ஆவிகள், பேய் பைசாசங் கள் ஆகியவற்றின் அரசனானான். எம தர்மன் பித்ருக்கள், பாப புண்யசாலிகள் தலைவரானான். விஷ்ணு இது தவிர சகல நிதியங்களுக்கும் அதிபதியாக குபேரனை, நீர்நிலைகளுக்கு வருணனை, இந்திரனை தேவர்கள் தலைவனாக, என்று நியமித்தார். யுகங்கள் உண்டாயின. தீய சக்தி எண்ணம் கொண்ட வர்களும் நல்லதே மனதில் உள்ளவருமாக எண்ணற்ற பிறவிகள் எங்கும் தோன்றின. க்ருத யுகத்தை விட த்ரேதா யுகத்தில் தான் இத்தகையோர் பூமியில் பெருகினர். த்ரேதா யுகமும் த்வாபர யுகமும் சேரும் யுக சந்தியில் இரு சக்திகளும் அதிகரித்து பலப் பரிக்ஷையில் மோதின. இந்த கால கட்டத்தில் தான் கிருஷ்ணா வதாரம் தேவைப்பட்டது. நாரதர் எனக்கு சொல்லி தான் இதெல்லாம் தெரியும். ஸ்ரீ கிருஷ்ணன் ஒரு பூர்ணாவதாரம். "தாத்தா, பீஷ்ம பிதாமகரே , முதல் ப்ரஜாபதிகள் யார் யார்? ரிஷிகள் யாவர்?
''நான் தான் சொன்னேனே யுதிஷ்டிரா, பிரமனுக்கு ஏழு புத்திரர்கள் என்று. மரீசி, தக்ஷன், அத்ரி, ஆங்கிரஸ், புலஸ்தியர், புலஹர், க்ரது. இவர்களைத் தவிர ஸ்வயமாக தோன்றிய வசிஷ்டர் ஒரு ப்ரம்ம ரிஷி. இவர்களே முதல் ப்ராஹ்மணர்கள். அத்ரி வம்சத்தில் பத்து பிரசேதஸ்கள் தோன்றினார்கள். ப்ரஜாபதிகளில் முக்கியமானவன் தக்ஷ பிரஜாபதி. மரீசியின் மகன் காஸ்யபன். அரிஷ்டநேமி என்றும் சொல்வதுண்டு. அத்ரியின் இன்னொரு மகன் சோமன் .பல ஆயிரம் யுகங்கள் தவமிருந்தவன். தெய்வீக அரியமானன். சசபிந்து என்பவனுக்கு பதினாயிரம் மனைவி களாம். அவனது எண்ணற்ற பிள்ளைகள் தாங்களே ப்ரஜாபதிகள் என்று விளம்பினார்கள். விருஷ்ணிகுலம் இவ்வாறு சசபிந்துவால் உருவானது. இந்த உலகமே பிறகு அன்சன், அர்யமான், மித்ரன், வருணன், சாவித்ரி, தாத்ரி, விவஸ்வதன் த்வஷ்த்ரி, புஷன் ,இந்திரன், விஷ்ணு, என அவர்களை பன்னிரு ஆதித்யர்களாக ஏற்றது. காஷ்யபரின் வழி தோன்றல்கள் இவர்கள். நஸத்யன், தஸ்ரன் என இருவர் அஸ்வினிகள.

மெதுவாக இன்னும் முன்னேறுவோம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...