Monday, October 14, 2019

KUTRALA NATHAR



சித்ர சபை குற்றால நாதன்..  J K   SIVAN 

ராஜ ராஜ சோழன் புனருத்தாரணம் பண்ணி  கட்டிய எத்தனையோ கோயில்களில் ஒன்று சங்கு வடிவம்.குற்றால நாதர்கோயில் கிழக்கு நோக்கி உள்ளது.  மூலவருக்கு இடது பக்கம் பெருமாள் சன்னிதி இருந்தது. அம்பாள் குழல்வாய் மொழி அம்மன்.நாயக்கர் ஆண்டகாலத்தில் அகஸ்தியர் எனும் சிவனடியார் பெருமாளை பிரித்து விட்டார். குற்றாலம் பொதிகைமலை அருவி நீர் வீழ்ச்சி அருகில்  உள்ளது. தென்காசிக்கு மேற்கே 5 கி.மீ. தூரத்தில் உள்ள ஐந்து சபைகளில் (பஞ்ச சபை) ஒன்றான சித்ர சபை சிவாலயம். பராந்தக  சோழன் காலத்திலேயே இருந்த சிவாலயம்.

 திருக்குற்றாலநாதர் கோயிலில்  89 கல்வெட்டுக்கள். முதலாம் பராந்தகன் காலத்தில் (கி.பி.927-943) எழுதப்பட்ட 10 கல்வெட்டுக்கள் அதில் சேர்த்திகை. ஸ்தல விருக்ஷம் குறும்பலா. ஆலயத்தின் நாலு வாசலும் நான்கு வேதங்கள்.

கைலாசத்தில்  சிவன் பார்வதி கல்யாணம் நடந்தபோது மூவுலகும் கூடிவிட்டது.திருக்கயிலையில் சிவபெருமான் - பார்வதிதேவி திருமணத்தைக் காண மூவுலகத்தவரும் கூடி இருந்தனர். இதனால்  பாரம் தாங்காமல் வடக்கு திசை தாழ்ந்தும், தென் திசை உயர்ந்தும் காணப்பட்டது.  ஆகவே சிவன் அகஸ்தியரை  கூப்பிட்டு 

 ''நீ தான் சரியான ஆள். நேரே  தெற்கே போ. அப்போது பூமி சமமாகும்.' என்று கட்டளை இட்டார்.

'' சரி பரமேசா நான் போகிறேன், நான் அங்கிருந்து  எப்படி இங்கே நடக்கும்  உங்கள் கல்யாணத்தை பார்ப்பது.?

''உனக்கு பொதிகை மலை பகுதியில் உள்ள  திரிகூட மலையில் எங்கள் கல்யாண காட்சி தருகிறோம்.'' என்கிறார் சிவன். 

திரிகூட மலை தான்  திருக்  குற்றால மலை. அகஸ்தியர்  திரிகூட மலையில் சிவன் கோவில் எதுவுமில்லையே.  ஒரு சிறிய பெருமாள் கோவிலை தான் கண்டார். என்ன செய்வது? சரி பெருமாளை தரிசிப்போம் என்று ஜடாமுடி, ருத்திராக்ஷம், உடலெங்கும் விபூதியோடு வந்த அகஸ்தியரை வைணவர்கள் உள்ளே அனுமதிக்க வில்லை.  அகஸ்தியர்  நேராக  இலஞ்சி முருகனிடம்  போய்  தனது  நடந்ததெல்லாம் சொல்லி தன் வருத்தத்தை தெரிவித்தார்.

''நீங்கள்  ஒரு வைஷ்ணவர் உருவில் உள்ளே போய்  பஞ்சாக்ஷர மந்திரம் உச்சரித்து பெருமாளை சிவனாக கருதி வழிபடுங்கள் '' என்று முருகன் சொன்னபடி  செய்தார்.

 உயரமாக நின்ற பெருமாளின் தலையில் கைவைத்து  அழுத்தி ‘குறுகுக... குறுகுக...’ எனச் சொல்லி  குள்ளமான அகஸ்தியர் சிவனை தியானித்தார்.  அடுத்த கணமே, பெருமாள் இருந்த இடத்தில் சிவலிங்கம்!!  . வைணவர்கள் பெருமாளைக் காணாமல் கோபமுற்று அகஸ்தியரை தாக்க முற்பட ஒரு தர்ப்பை புல்லால் அவர்கள் திருப்பி  தாக்கப்பட்டு அவரிடம் மன்னிப்பு கேட்டார்களாம்.  அகஸ்தியர் அப்போது தான்  ‘மகாவிஷ்ணுவை சங்க வீதியின் தென்மேற்குப் பக்கத்தில் வைத்து வழிபடுங்கள்’ என்றாராம்.   அந்த விஷ்ணுவுக்கு இப்போது  ‘நன்னகரப் பெருமாள்’ . அப்புறம்  அகஸ்தியருக்கு திருக்குற்றாலநாதர்  சிவன் பார்வதி திருமண காட்சி தருகிறார். 

பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூன்று சிகரங்கள் குற்றால மலையில் இருப்பதால் ''திரிகூட'' மலை என பெயர் பெற்றது.  அம்பாள்  பராசக்தி சந்நிதிதான்    ‘தரணிபீடம்’எனும் ஒரு சக்தி பீடம். 
குற்றால நாதன்  சிவன் மேல்  குற்றால அருவியை போல் குளுகுளு வென்று மனம் இனிக்கும் ஒன்றிரண்டு பாடல்களை மட்டும் சொல்கிறேன்.

''சுற்றாத வூர் தோறுஞ் சுற்றவேண்டாம் புலவீர்குற்றால மென்றொருகாற் கூறினால்- வற்றாவடவருவியான் மறுபிறவிச் சேற்றில்நடவருவி யானே நமை.   

''புலவர்களே, பைத்தியம் போல்  எங்கெங்கோ கோவில்களுக்கு சுற்றாதீர்கள். பேசாமல் குற்றாலம் செல்லுங்கள். வற்றவே வற்றாத  குற்றால அருவி உடையவன் அந்த கங்கை அருவியை தலையில் சுமந்த சிவன். அவனை வணங்கினால் என்ன பயன் தெரியுமா, மறுபிறவி என்னும் சேற்றில் நாம் மீண்டும் மீண்டும் விழுந்து கரையேற தவிக்காமல் நம்மை கை தூக்கி விடுவான்.

''உற்றா ராருளரோ - உயிர்கொண்டு போம் போழுது குற்றாலத்துறை கூத்தனல் லானமக் குற்றா ராருளரோ.''  

அதோ வாசலில் யமன் பாசக்கயிற்றோடு நம்மை கட்டி தூக்கிக்  கொண்டு  போக நிற்கிறான். அப்போது எந்த சொந்த பந்தம் நம்மை காப்பாற்றும்? குற்றாலத்தானே, சிவனே  என்று அவனை சரணடை . வேறு யாராலும் நம்மை காப்பாற்ற முடியாது.''    

 இதெல்லாம்  அப்பர் எனும்  திருநாவுக்கரசர் கண்டறிந்த உண்மைகள். 

உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்கற்றாரை யான்வேண்டேன் கற்பனவு மினியமையுங்குற்றாலத் தர்ந்துறையுங் கூத்தாஉன் குரைகழற்கேகற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே.

' எனக்கு  யாருமே வேண்டாமப்பா. ஊரோ பேரோ எதுவும் தேவையில்லை. படித்தவன் யாரும் உபயோகப் படமாட்டான். தெரிந்து கொள்ளவும் வேறு எதுவுமில்லை.  குற்றாலத்தானே, சிவனே, நடராஜனே , உன் திருவடி  ஒன்றே சரணம். கன்றுக் குட்டிக்கு தெரிந்ததெல்லாம் அதன் அம்மா பசு மட்டும் தான்.  அது தான் நீ எனக்கு. என் மேல் கருணை  வை.''.   

இது யார் என்று பாட்டின் அற்புத வரிகளே சொல்லிவிடும்.  மாணிக்க வாசகர். 

திருவிடை மருதூர்க்காரர்  பட்டினத்தார்  ஒரு படி மேலே ஜம்மென்று போய் என்ன சொல்கிறார் பாருங்கள்.

''காலன் வருமுன்னே கண்பஞ் சடைமுன்னே
பாலுண் கடைவாய் படுமுன்னே - மேவிழுந்தே
உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே
குற்றாலந் தானையே கூறு.

''யமன் வரப்போகிறானா? , கண் பஞ்சடைந்து பார்வை நிலை குத்தப்போகிறதா?  பால்  வாயில் ஊற்றினால் உள்ளே போகாமல் கடை வாயிலில் வழிந்து ஓடப்போகிறதா? ஐயோ போய்ட்டியா, என்று பஸ்ஸிலும் ரயிலிலும் உறவும்  சுற்றமும், மேலே விழுந்து அழப்போகிறதா? தூக்கிக்கொண்டு போய் இந்த  உடலை சுடப்போகிறார்களா?  ஒரே ஒரு வேலை மறக்காமல் இப்போதே செய்..  ''குற்றாலநாதனே, சிவபெருமானே, ஓம் நமசிவாய'' என்று ஒரே ஒரு தடவையாவது  சொல்லப்பா... அவனால் தான்  உன்னை காப்பாற்றமுடியும்.

சொல்வீர்களா?????

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...