Sunday, October 13, 2019

KUTRALAM



 மூன்று நாள் சுவர்க்கத்தில்....J K  SIVAN 

மூன்று நாட்கள்  நங்கநல்லூரை விட்டு, எனது கம்ப்யூட்டரின்  மேல்  'கா'  விட்டு விட்டு  தென்காசி ஜில்லாவில் ஒரு கிராமத்தில் இருந்தேன்  என்பதை விட  வெளியுலக தொடர்பு இல்லாமல் இருந்தேன் என்பது ரொம்ப சரி. அங்கே  எனது மொபைல் போன் கூட வேலை செய்யவில்லை.  நான்  மயில்கள் , சில கோவில்கள், கிராமவாசிகள், பழங்கதைகள், கிடைத்த சாப்பாடு என்று இருந்தது எனது அன்றாட சென்னை வாழ்க்கையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட  அஞ்ஞாத வாசம்.  நடுவே  குற்றால அருவியில் குளிக்கும் சந்தர்ப்பமும் பல வருஷங்களுக்குப் பிறகு கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.  இன்று குற்றாலம் பற்றி மட்டும் கொஞ்சம் எழுதுகிறேன். மற்றதெல்லாம் நிறையவே இருக்கிறதே சொல்வதற்கு.

இப்போதெல்லாம் எப்போது சூரியன் கொளுத்தும். எப்போது மழை கொட்டும் என்று சொல்ல முடியாத வானிலை. நெருங்க நெருங்க சாரல் என்னை ஈரமாக்கி சுகமாக இருந்தது.  தூரத்தில் கண்ணுக்கெட்டிய உயரம் பிரம்மாண்ட கருப்பு மலை பிரதேசம். அதிலிருந்து வெள்ளை வெளேரென்று அகலமாக  அவ்வளவு நீர் இறங்கி  படிப்படியாக மலைப்பாறைகளில் குதித்து குதித்து கீழே வந்தது. தண்ணீரின் வேகத்தில் கரைந்து வழுக்கு பாறையாக கருப்பாகி மினுமினுப்பு.

ஓ வென்ற  தொடர் சப்தம். குளிக்கும் ஆசாமிகள், பெண்களின் கலீர் கலீர் ஆனந்த சிரிப்பு. ஒரு போலீஸ்காரர் ஒலி பெருக்கியில்   ''பிக்பாக்கெட் திருடர்கள்  இருக்கிறார்கள் ஜாக்கிரதை,  ஒருவரை ஒருவர் பிடித்தோ, தள்ளியோ விளையாடாதே   நகைகள், சாமான்கள் பத்ரம்''  என்று விடாமல்  பயமுறுத்திக் கொண்டே
 இருந்தார். ஏராளமாக பஸ்கள், தனியார் வண்டிகள், கிடைத்த கண்ணில் பட்ட மறைப்பில் துணி மாற்றிக்கொள்ளும் ஆண்கள். நெல்லிக்காய், மலையில் விளையும்  காய்கறிகள், பழங்கள், சூடாக வடை தோசை இட்லி வியாபாரிகள். மரப்பாச்சி யிலிருந்து மாங்கா தொக்கு வரை  எல்லாமே கிடைக்கும்.

நல்லவேளை,   எண்ணெய்  தேய்ப்பவர்கள், விற்பவர்கள் காணாமல் போனதால் எவரும் என் மீது எண்ணெய் தடவி சொந்தம் கொண்டாடவில்லை. சிறிது நேரத்திற்கு மேல் நின்று தண்ணீரில் ஊற  முடியாமல் கூட்டம் என்னை  அணைத்துக் கொண்டதால் நான் விலக நேரிட்டது.   

கடைசியாக பலவருஷங்களுக்கு முன்பு   நான் குற்றாலத்தில் குளித்தது ஒரு  இரவு பன்னிரண்டு மணிக்கு.  இருட்டில் வெள்ளை பிசாசு போல் ஓவென்று கூச்சலிட்டு  நிறைய வா வா என்று அழைத்தது. தபதப என்று தலையில் யாரோ அடித்து பிடித்து விட்டது போல், கழுத்து, முதுகு எல்லாம் இலவச மசாஜ். முதலில் குளிர் சில்லென்று உடல் சிலிர்த்தாலும் போகப்போக அதை விட்டு பிரிய மனமில்லாமல் ஒரு முக்கால் மணி நேரம் குற்றால உறவு நினைவுக்கு வந்தது.  இந்த இடத்துக்கு மெயின் அருவி என்று பெயர்.

சென்பகாதேவி  தேனருவி ஐந்தருவி புலி அருவி பெயர்கள் மட்டும் தான் தெரியும். எங்கே இருக்கிறது என்று இப்போது கூட தெரியாது என்பதால் உண்மையிலேயே  ''ஸ்நானப் பிராப்தி'' அவற்றோடு கிடையாது.  சில குரங்குகள் கஷ்டப்பட்டு  வீசி  எறியப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் இருந்த வடை, போண்டா, பக்கோடா தூள்களை வெளியே எடுக்க தெரியாமல் பிளாஸ்டிக் பைகளை கடித்து துண்டாக்குவதில் முனைந்திருந்தது மனதிற்கு கஷ்டமாக இருந்தது. பிளாஸ்டிக் எப்போது காணாமல் போகும்?

திரிகூட ராசப்ப கவிராயர் நினைவுக்கு வந்தார்.  வயிற்றில் நல்ல பசி. அருவியில் குளித்தவுடன் எப்படி இவ்வளவு பசி உண்டாகிறது, எல்லோருக்குமே? தென்காசி விஸ்வநாதரை பார்த்துவிட்ட பிறகு தான் கோவில் எதிரே உள்ள  போத்தி கடையில்  சுடசுட இட்லி சாம்பார், வடை சட்னி, நல்ல காப்பி..

காரில் காய்ந்த வேஷ்டி உடுத்து தென் காசி செல்லும்போது தான் தி.கூ.ரா. கவிராயரின் பாடல் முணுமுத்தேன். 

வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழிஎறிந்து வானவரை அழைப்பர்
கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பர்
தேனருவித் திரைஎலும்பி வானின்விழி ஒழுகும்
செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்
கூனல்இளம் பிறைமுடித்த வேணி அலங்காரர்
குற்றாலத் திரிகூட மலை எங்கள் மலையே !


குற்றாலநாதர் பற்றி நிறைய  எழுதவேண்டும்  சரியான  இடமாக பார்த்து தான் அமர்ந்திருக்கிறார். குற்றால மலை குரங்குகளின் ஸ்வர்கம்.  குரங்குகளில்  கூட  ஆண்  குரங்குகள் தான் பெண்களுக்கு பணியாளர்கள் .
நல்லபழங்களாக பறித்து வந்து தந்து நல்ல பேர் வாங்கவேண்டும். பெண் குரங்குகளுக்கு சாப்பிடும்போது கூட அலட்சியம். பாதி பழம் கடித்து கீழே விழும். திரிகூட மலை உச்சியில் இது நடப்பதால் கீழே விழும் பழங்களை தேவாதி தேவர்கள் கூட  ''இன்னும் விழாதா?'' என்று எதிர்பார்த்து விழும் பழங்களுக்காக கை  ஏந்தி நிற்பார்கள்.  கந்தர்வர்கள் ''வாருங்கள் இங்கே'' என்று  அந்த தேவர்களை கண் சிமிட்டி அழைப்பார்கள். திரிகூட மலையான, குற்றால மலையில் எங்கும் அநேக  மூலிகைகள் கிடைப்பதால் சித்தர்கள் சுற்றி அலைந்து கொண்டிருப்பார்கள்.  வியாதிகள், மரணத்தையே விலக்கும்  சஞ்சீவினி  மூலிகைகள்  இருப்பது  அவர்களுக்கு தான்  தெரியும்..  மேலே பார்த்தால்  குற்றால அருவி அலைகள், திவலைகள் மேலே எழும்பி வானத்தை தொட்டு விட்டு திரும்பும்.  மேலே சூரியன்  தனது 7 குதிரைகள் பூட்டிய தேரில்  செல்லும்போது குற்றால மலை நீரில் குதிரைகளுக்கு கால் வழுக்கும். தேரின் சக்கரங்களும் வழுக்கிக்கொண்டு ஓடும்.   இன்னும் நிறைய சொல்கிறேன்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...