Sunday, October 6, 2019

BHARATHIYAR



                            அர்ஜுனனின் கேள்வி...J K SIVAN 

ஹஸ்தினாபுரத்தில் திருதராஷ்டிரன் அரண்மனையில்  பாண்டவர்களும் கௌரவர்களும்  சிறுவர்களாக இருந்தபோது ஒன்றாக விளையாடி துரோணரிடம் தனுர் வித்தை பயின்றார்கள். கர்ணன் அங்கேயே வளர்ந்ததால் அவனும்  அதில் ஒருவன்.  சின்னவயதிலிருந்தே  துரியோதனன் அவன் தம்பிகள், கர்ணன் ஆகியோருக்கு பாண்டவர்களைப்   பிடிக்காது. எதிரியாக நினைத்தார்கள் அல்லவா?

ஒருநாள் சாயங்காலம் அர்ஜுனன் கர்ணனைக் கேட்கிறான். அவர்கள்  சம்பாஷணை:

அ:  ''கர்ணா, நீ சொல்லுடா, சண்டை நல்லதா, சமாதானம் நல்லதா?''

க:   ' இது என்ன கேள்வி.  சமாதானம் தான்''

அ:  ' எதனால் அப்படி சொல்கிறாய்?''

க:   ''காரணமா?  அடே  அர்ஜுனா, சண்டை வந்தால் நான் உன்னை அடிப்பேன்,  நீ  அழுவாய், வாடுவாய், வதங்குவாய். எனக்கு இரக்க  சுபாவம், அதனால் தான் பாவம் நீ உதை வாங்குவானேன். அதை பார்க்க என் மனம் தாங்காது ரெண்டு பேருக்கும் கஷ்டம்.  ஆகவே தான் சமாதானம் என்று சொன்னேன்''

அ:  ''கர்ணா, நீ பாவம் பகல் கனவு காண்கிறாய்.நம்மை விடு அப்புறம் பார்த்துக் கொள்வோம். பொதுவாக சண்டையா, சமாதானமா, எது நல்லது சொல்?

க : ''போடா போக்கத்தவனே, பொது விஷய ஆராய்ச்சியில் எனக்கு  இஷ்டம் இல்லை '' என்று சொல்லி போய் விட்டான் கர்ணன்.

'இந்தப்பயலை  சரியான நேரத்தில் கொன்றுபோட வேண்டும் என்று மனதில் தீர்மானம் செயது கொண்ட அர்ஜுனன் துரோணரிடம் போய் இதே கேள்வியை கேட்டான்.

துரோணர்:  ''அர்ஜுனா, சண்டை தான் நல்லது''
அ :  ''எதனால் குருவே?''
து:  ''அடே பயலே  விஜயா,  சண்டையில் பணம் கிடைக்கும். பேர், புகழ் கிடைக்கும். இல்லாவிட்டால் வீர மரணம் கிடைக்கும். சமாதானத்தில் சகலமும் சந்தேகம்   ''ச ச ச''
அர்ஜுனன் பீஷ்மரிடம் சென்று அதே கேள்வியை கேட்டபோது அவர் சொன்னார்: 

பீ:  ''குழந்தாய்  அர்ஜுனா, சமாதானம் தான் நல்லது. சண்டையால் நமது க்ஷத்ரிய குலத்துக்கு  மஹிமை, பெருமை உண்டு. சமாதானத்தால் லோகத்திற்கே மஹிமை.''

அ :  '' தாத்தா  நீங்கள் சொல்வதில் நியாயம் இல்லை'' 

பீ  :   ''அர்ஜுனா,  காரணம் என்ன என்று சொல்லாமல் நீயாக  தீர்மானிக்காதே''

அ :  '' தாத்தா, காரணம் இது தான்.  சமாதானம் என்றால் கர்ணன் மேலேயும்   நான் தாழ்வாகவும்  போய்விடுவேன்.  சண்டை நடந்தால் தான் உண்மை தெரியும் ''

பீ:   ''அப்பனே அர்ஜுனா, தர்மம் மேன்மை உடையது. சண்டையோ, சமாதானமோ கடைசியில் தர்மம் தான் வெல்லும். ஆகவே, உன் மனதில் கோபங்களை நீக்கு. சமாதானம் தேடு. மனுஷ ஜீவன்களை  கூடப் பிறந்தவர் போல், அன்போடு நடத்து. அன்பே தாரகம். இது முக்காலும் உண்மை. அன்பே தாரகம்''  என்கிறார்  பீஷ்மர்.

சில நாட்களுக்கு பிறகு வேதவியாசர் அரண்மனைக்கு வந்தபோது  இதே கேள்வியை அர்ஜுனன் அவரிடம் கேட்டான். 

வேதவியாசர்:  ''அர்ஜுனா இதென்ன கேள்வி? சமாதானம் சண்டை ரெண்டுமே நல்லது தான். சமயத்துக்கு தக்கபடி நடக்க வேண்டியது.''

வளர்ந்து பல வருஷங்களுக்கு பின்னால் வனவாசத்தில் ஒருநாள் கிருஷ்ணனைக்  கண்டு அர்ஜுனன் அதே கேள்வியை கேட்டபோது கிருஷ்ணன் சொன்ன பதில்:

''இப்போதைக்கு சமாதானம் நல்லது. அதனால் தான் நான் உங்களுக்காக  சமாதானம் வேண்டி ஹஸ்தினாபுரம் போய் கொண்டிருக்கிறேன்..''

''ஆஹா  இந்த சிவன் பயல் இவ்வளவு நன்றாக கற்பனை செய்கிறானே''   என்று ஆச்சர்யம் வேண்டாம். இது மஹாகவி பாரதியாரின் ஒரு சிறு கற்பனை. ''பாரதியார் கதைகள் '' புத்தகத்தில் படித்ததின்  சாராம்சம் 





  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...