தெவிட்டாத விட்டலா 2ம் பாகம்.J K SIVAN
1. இதோ அந்த ''தொண்டியா .
வாழ்க்கையில் எந்த குறிக்கோளும் இல்லாமல் தானுண்டு அருகே யுள்ள பாண்டுரங்கன் கோவில் உண்டு என்று வேறெந்த சிந்தனையும் இல்லாத வாழ்ந்தவர் ஒருவர் பெயரை சொல்'' என்றால் உடனே ''நாம தேவர்'' என்று யாரைக்கேட்டாலும் சொல்லிவிடுவார்கள். அவர் அப்பா ஒரு துணி தைக்கும் தொழிலாளி. இரவும் பகலும் உழைத்து அதில் கிடைத்த வருமானத்தில் அவர் ,அவர் மனைவி , தாய், நாமதேவரைத் தவிர மற்ற குழந்தைகள் என்று பலர் வாழும் கஷ்ட ஜீவனம்.
வயதாகிவிட்டதே. நாமதேவும் வளர்ந்து விட்டானே. ஏதாவது ஒரு தொழிலில் அவனை ஈடுபடுத்தலாம். அவனும் குடும்பத்துக்கு ஏதாவது சம்பாதித்து கொண்டு வந்து குடும்ப பொருளாதாரம் கொஞ்சம் உயரட்டுமே என்று அப்பா நினைத்ததில் எந்த தப்பு மில்லை.
அவருக்கு தெரிந்தது துணி வாங்கி விற்பது, துணி தைப்பது, ஆடைகள் தைத்து அடுத்த கிராமங்களில் சென்று விற்பது இது தானே. ஆகவே சில துணிகளை குறைந்த விலைக்கு வாங்கி வந்து அதை நாமதேவிடம் கொடுத்து, இந்த இந்த விலைக்கு இதெல்லாம் விற்று பணம் கொண்டுவா என்று சொல்லி அனுப்பினார் அப்பா.
நாமதேவ் துணிமூட்டையை சுமந்து கொண்டு கடைத்தெருவுக்கு போனான். கபடு சூது வாது தெரியாத பச்சை மண் அவன். வியாபாரத்தில் ஏமாற்றவோ, பொய்சொல்லவோ, நம்பிக்கை ஊட்டி துரோகம் செய்வதோ என்னவென்றே தெரியாதவன். அவன் மனது பூரா ஒருவன் தான் ஆக்கிரமித்து இருந்தான். அது பாண்டுரங்கன் எனும் விட்டலன். ஆகவே அவனுக்கு துணிகளின் ரகம், அவற்றின் அளவு, விலை, அடக்க விலை என்ன, லாபம் எவ்வளவு, விற்கும் விலை எவ்வளவு, பணத்தின் மதிப்பு எதுவுமே மண்டைக்குள் ஏறவில்லை.
அப்பா சொல்லித் தந்தது புரிவது போல் இருந்தது. ஆனால் புரியவில்லை.கடைத் தெருவில் ஒரு இடத்தில் துணி மூட்டையோடு அமர்ந்தான்.
''இதெல்லாம் போய் விற்று பணம் கொண்டு வா '' என்று அப்பா பாடம் சொல்லித்தந்து மூட்டையை தலையில் ஏற்றியது மட்டும் புரிந்தது. ஆனால் எப்படி விற்பது என்று தெரியவில்லை?
அவன் எதிரே ஒரு பெரிய மரத்தடியில் ஒரு பெரிய பாறை. உட்கார்வதற்கு என்று யாரோ உருட்டி வந்து போட்டிருந்தார்களோ, தானாகவே அது அங்கிருந்ததோ தெரியாது. அதன் மேல் உட்கார்ந்தான். காற்று ஜிலு ஜிலுவென்று வீசியது. யாரும் அருகில் இல்லை. எவரும் தொந்தரவு செய்யாமல் ஆனந்தமாக இருந்ததால் தனக்கு தெரிந்த பாண்டுரங்கன் பஜனை பாடல்கள் பாடினான். நேரம் ஓடியது. சோற்று மூட்டையை அவிழ்த்தான், பாதி உனக்கு விட்டலா என்று தூர பக்ஷிகளுக்கு எறிந்தான்.மீதி சாப்பிட்டான். மீண்டும் பஜனை பாடல்கள்.
மாலை நெருங்கியது இன்னும் சற்று நேரத்தில் சூரிய அஸ்தமனம் ஆகிவிடுமே. வீடு திரும்பவேண்டும் என்ற எண்ணம் மட்டும் மனதில் தோன்றியது. தினமும் சாயங்காலம் கோவிலுக்கு போகவேண்டும். பண்டரி நாதன் கோவிலில் தீபாராதனை விடாமல் சாயந்திரம் பார்ப்போமே இன்று தவற விடக்கூடாதே என்று தோன்றியது.
முட்டையிலிருந்து விரித்து வெளியே வைத்திருந்த அத்தனை துணிகளையும் திரும்ப மூட்டை கட்டினான்.
ஆஹா, வீடு திரும்பினால் அப்பா ''என்னடா நாமதேவ், இன்றைக்கு என்ன வியாபாரம் செய்தாய். எவ்வளவு விற்று பணம் சம்பாதித்தாய் , கொண்டுவா பணத்தை என்பா ரே, என்ன பதில் சொல்வது.? ஒரு துணியையும் இன்று விற்கவே இல்லையே? அப்பா கோபம் வந்தால் எப்படி கொம்பு பிளக்கும்படியாக அடிப்பார் என்று அனுபவம் ஞாபக மூட்டியது.
''கோவிலுக்கு போகவேண்டும் விட்டலனைப் பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் மேலிட்டது.
என்ன தோன்றியதோ. எல்லா துணியையும் அந்த பெரிய பாறை மீது வைத்தான். அந்த பாறை அவனுக்கு துணி வாங்கும் வியாபாரி யாக தோன்றியது.
''இதோ பார் நீ இந்த கடைத்தெருவில் ஒரு பெரிய வியாபாரி அல்லவா? பாறையே, உன்னிடம் இந்த துணிமூட்டையை கொடுத்து விட்டேன். இல்லை விற்றுவிட்டேன். எனக்கு லாபத்தோடு பணம் வேண்டுமே என்ன தருவாய் எவ்வளவு தருவாய்?'' அந்த பாறையை கேட்டான் நாமதேவ்.
அவனை அறியாமலேயே ஒரு சிறு பளபளவென்ற கருப்பு கல் அந்த பெரிய பாறையின் அருகே இருந்தது கண்ணில் பட்டது. அதனிடம் முறையிட்டான்.
''அந்த பெரிய வியாபாரிக்கு நான் விற்றதை நீ பார்த்தாயல்லவா அவன் பதில் பேசவில்லை. நீ தான் அந்த வியாபாரிக்கு நான் துணி எல்லாம் விற்றதற்கு சாட்சி, எனக்கு சேரவேண்டிய பணத்தை அந்த பெரிய பாறை வியாபாரி தருவான் என்பதற்கும் நீ தான் ''காரண்டீ''. நாளைக்கு வந்து பணம் வாங்கிக் கொள்கிறேன் ''
மூட்டையை பெரிய பாறை மேல் வைத்துவிட்டு அதற்கு துணி விற்ற சாட்சியாக அந்த கருப்பு சின்ன கல்லையும் துணி மூட்டைமேல் வைத்து விட்டு நாமதேவ் விடுவிடுவென்று வீட்டுக்கு திரும்பினான். பிறகு கோவிலுக்குள் ஓடினான்,
பாண்டுரங்கன் இடுப்பில் இரு கைகளை வைத்துக்கொண்டு பண்டரிபுரத்தில் நாமதேவுக்கு எதிரில் நின்று கொண்டிருந்தான். முகத்தில் மலர்ச்சி, கன்னம் அவன் மகிழ்ச்சி யை பூரிப்பில் காட்டியது. பூஜை நைவேத்யம் எல்லாம் முடிந்து சந்தோஷமாக நாம்தேவ் வீடு திரும்பியபோது அப்பா அவனை எதிர்பார்த்து ஆவலோடு காத்திருந்தார்.
'' காலையில் பெரிய துணி மூட்டை கொடுத் தேன், வெறும் கையோடு வந்தாயாமே , எல்லாம் விற்றுப்போய் விட்டதா? எங்கே பணம்.? எவ்வளவு லாபம் சம்பாதித்தாய். கெட்டிக்கார பயலாக இருக்கிறாயே? இத்தனை நாள் எனக்கு உன் சாமர்த்தியம் தெரியாமல் போய் விட்டதே? '' சந்தோஷமாக எதிர்பார்ப்புடன் கேட்டார் அப்பா
. .
'' ஒரு பெரிய வியாபாரிக்கு அத்தனை துணியும் விற்று விட்டேன் அப்பா. நாளை பணம் தருவான். அதற்கு சாட்சியாக ஒரு காரண்டீ ஆள் '' தொண்டியா'' வை நியமித்தேன். (தொண்டியா என்றால் மராத்தியில் ஒரு கல் என்றும் அர்த்தம், அதே நேரம் ஒரு சில குலத்தினர் அவர்கள் வியாபாரத்தில் சாட்சி, நமூதாக காரண்டீ கொடுப்பவர்கள்'. நமது ரிஜிஸ்டர் ஆபிஸ் களில் பணம் வாங்கிக் கொண்டு சாட்சி கையெழுத்து போடுவார்களே அவர்கள் மாதிரி ) நாளைக்கு பணம் கைக்கு வரும். ''
''சரி நாளைக்கு பணத்தோடு வா, இல்லை யென்றால் காரண்டீ கொடுத்த தொண்டியா வை அழைத்து வா. அவனிடம் நான் பேசிக்கொள்கிறேன் '' என்று அப்பா சொல்லிவிட்டு வெளியே போய்விட்டார்.
பொழுது விடிந்தது. நாமதேவ் கடைத் தெருவுக்கு சென்றான். மரத்தடியில் பெரிய பாறையை நெருங்கினான். பெரிய துணி மூட்டையை வைத்தோமே அங்கே அது ? காணோமே. ஓஹோ அதற்குள் அந்த கெட்டிக்கார பாறை வியாபாரி விற்றுவிட்டு எனக்காக காத்திருக்கிறானா? எங்கே பணம்? பாறை பதில் சொல்லுமா? சரி நீ தரவேண்டிய பணத்துக்கு காரண்டி கொடுத்த தொண்டியா எங்கே? கருப்பு பள பள கல் கீழே விழுந்து கிடந்தது. அதை கேட்டான் ? அதுவும் பணம் தரவில்லை, பதிலும் சொல்லவில்லை. சரி அப்பாவிடம் தொண்டியாவை அழைத்து போவோம் என்று அந்த குட்டி பள பள கல்லை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு போனான்.
''நீ பணம் வாங்கி தரவில்லை, அவனும் நீயும் பதிலும் பேசவில்லை. நீ ஓடிப்போய் விடலாம் என்று நினைத்தால் அது முடியாது என்னிடம். என்னை என்ன இளிச்சவாயன் என்று நினைத்தாயா? . அப்பா காலை வருவார் அவரிடம் எல்லாவற்றையும் பேசிக்கொள் . உன்னை பூட்டி வைக்கிறேன் அதுவரையில் இதிலே கிட '' என்று ஒரு சிறிய இருட்டறையில் அந்த கல்லை வைத்து பூட்டிவிட்டான் நாம்தேவ். '
'நடந்ததெல்லாம் பாண்டுரங்கனிடம் சொல்ல வேண்டாமா? அவனுக்கு தெரியாமல் என்னிடம் எந்த ரகசியமும் இல்லை '' என்று நேரே விட்டலன் ஆலயம் சென்றான் நாம்தேவ். ஆதியோடந்தமாக ரெண்டு நாளாக நடந்த தெல்லாம் சொல்லி தொண்டியா இன்னும் வாய் திறக்கவில்லை. பணமும் கொடுக்கவில்லை. எப்போது தருவேன் என்றும் சொல்லமாட்டேன் என் கிறான்'' என்று வருத்தப்பட்டான்.
விட்டலன் வழக்கம் போலவே சிரித்துக் கொண்டிருந்தான். அன்றிரவே அப்பா வந்துவிட்டார்.
'' எங்கேடா பணம். அல்லது அந்த தொண்டியா ஆள்?'' என்று கேட்டார்
.''பணம் கொடுக்கவில்லை. அந்த தொண்டி யாவை உள்ளே பூட்டி வைத்திருக் கிறேன் என்று சாவியை அப்பாவிடம் கொடுத் தான் நாம்தேவ்.
பூட்டிய அறையை திறந்த நாம்தேவின் அப்பா ஒரு ஆசாமி அதில் இருப்பான் என்று எதிர் பார்த்தவர் , ஒரு பெரிய தங்கக் கட்டி உள்ளே இருந்ததை பார்க்கிறார். பல லக்ஷம் பெறு ருமான பத்தரை மாற்று தங்கம். அப்பா மலைத்து போய் சிலையாக நின்றார். அப்பா கோபிப்பாரோ என்று பயந்து நின்ற நாமதேவரோ ''விட்டலா, என் அப்பாவின் கோபத்திலிருந்தும் அடியிலிருந்தும் என்னை காப்பாற்றியதற்கு நன்றி உனக்கு '' என்று சந்தோஷமாக கண்களில் நன்றி கண்ணீரோடு சொல்லிக் கொண்டிருந்தார் ''
பணமோ தங்கமோ துணியோ எதுவும் அவர் நினைவில் இல்லை.
No comments:
Post a Comment