Tuesday, October 29, 2019

SOMETHING IMPORTANT TO OBSERVE

இது ஒரு முக்கிய சமாச்சாரம். -   J.K. SIVAN

விறுவிறுப்பாக  இருக்கவேண்டும்  என்பதற்காக   எழுதுபவர்களோ, பேசுபவர்களோ,  ''இல்லாததை இருப்பதாக''  காட்டுவது  கொஞ்சம்  மகிழ்ச்சியை  உண்டாக்கவேண்டும் என்பதற்காக.  இது  வெறும் சாதாரண  சமாச்சாரமாக இருந்தால்  பரவாயில்லை.  சில எழுத்துகள் சிந்திக்க வைக்கும்.  சிலதை மறக்க முடிவதில்லை. என்றும் மனதை பிடித்துக்கொண்டிருக்கும்.   வெள்ளைக்கார  அறிவாளி   ரஸ்கின்  ஒரு மணி நேர புத்தகங்கள்,  எப்போதும் வாழும் புத்தகங்கள் (BOOKS  OF  THE  HOUR , BOOKS OF  ALL TIME ) என்று சில வகை புத்தங்களை பற்றி அழகாக எழுதியதை  பள்ளிக்கூட  காலத்தில் படித்தது  நினைவுக்கு வருகிறது.

எனக்கு தோன்றுவது  என்னவென்றால்  விறுவிறுப்பாக  ஏதாவது சொல்லவேண்டும் என்றால் அனாவசியமாக  ராமனையோ, கிருஷ்ணனையோ, பாரதத்தையோ, ராமாயணத்தையோ ஏன் அதில் நுழைக்கவேண்டும் ?  அவர்கள்  அப்படி நடந்துகொண்டார்கள், அதில் அப்படி வருகிறது  என்று ''நடந்தது'' போல் சொன்னால் தான்  சிலர்  நம்பிவிடுவார்கள்.  விஷயம் அறிந்தவர்கள் நம்புவார்களா?  யாருக்கு காதில் பூ சுற்றி நம்பவைக்க வேண்டும்?  ராமன் சொன்னான், கிருஷ்ணன் சொன்னான், சிவன் சொன்னான், பிரமன் சொன்னான் என்று தெய்வங்களை இப்படி சீரழிக்க வேண்டாமே. அவர்கள் சொன்ன கீதை, உபதேசங்களை, மந்திரங்களை, ஸ்லோகங்களை, அருத்தம்  தெரிந்துகொண்டு படித்தால் மட்டும் போதுமே, அதற்கு முதலில் அர்த்தம் தெரிந்துக்கொள்வது  தான் மிக மிக  அவசியம்.  அதில் வரும் கதைகளை  உள்ளது உள்ளபடியே விறு விறுப்புடன்  பிரபலப்படுத்தலாமே. நான்  என் சக்திக்கு இயன்றவரை அதைத் தான் செய்ய  முயல்கிறேன். 

ஒரு கதை யாரோ எழுதி இணையதளத்தில் சுற்றுகிறது எனக்கும் வந்தது.  யார் எழுதியது  என்பதே தெரியவில்லை. FORWARDED  என்று மட்டும் வந்தது.  என் எழுத்துக்கள் என் பெயரில்லாமல்  எத்தனையோ முறை எனக்கே  வந்திருக்கிறது.

அப்படி எனக்கு வந்த  ''FORWARDED'',    ஒரு கதை.  எதற்கு கிருஷ்ணனை இதில் இழுக்கவேண்டும்?  எதிர்காலம் இதை உண்மை என்று நம்பினால் நாம் துரோகம் செய்வதாகிவிடாதா.  தெய்வ  சமாச்சாரத்தை,    அசலை எதற்கு நகலாக்க , நக்கலாக்க வேண்டும்?

நான்  வியாசர் எழுதிய  ஆயிரக்கணக்கான  ஸ்லோகங்களை  அறிந்து அதை தமிழில் ஐந்தாம் வேதம் என்று  புத்தகமாக்கியவன்.  எனக்கு வந்த கதையில்  இப்படி ஒரு  சம்பவம்  எங்கும்  கண்ணில் படவே இல்லை.... எனக்கு வந்த கதையை சுருக்கி  என் வழியில் தருகிறேன்.

கிருஷ்ணன் அர்ஜுனன் ரெண்டுபேரும்  பேசிக்கொண்டே  ஒரு கிராமத்தில் நடக்கும்போது சம்பாஷணை:    

''கிருஷ்ணா நீ ஏன் கர்ணனை மட்டும் தானத்திற்கு சிறந்த உதாரணம் என்கிறாய்? என் அண்ணா  யுதிஷ்டிரன், ஏன் நாங்கள் எல்லோரும் கூடத் தான்  நிறைய தான தர்மங்கள் செயகிறோம்''

பதில் பேசாத கிருஷ்ணன் எதிரே  ரெண்டு மலைகளை  காட்டுகிறான். அர்ஜுனன் கண்ணெதிரே அவற்றை . அவற்றை கிருஷ்ணன் தங்க மலைகளாக்கினான்.

''அர்ஜுனா, இந்த ரெண்டு தங்க மலைகளை துண்டாக்கி கிராமம் முழுதும் இருபவர்களுக்கெல்லாம் விநியோகி, இலவசமாக  அளித்துவிடு. ஆனால் கடைசியில் ஒரு சிறு கடுகளவு கூட மீறக்கூடாது''

அர்ஜுனன் கிராமத்துக்குள் சென்று    ''எல்லோரும் வாருங்கள். உங்களுக்கு  தங்கம்  நிறைய தரப்போகிறேன் 'என்றான்.   கூட்டமோ கூட்டம். . புகழாரம் அவனுக்கு. பெரிய பெரிய  பெட்டிகள் பாத்திரங்களோடு  சாக்கு, கோணிகளோடு வந்தவர்களுக்கு   ரெண்டு மூன்று பகல் இரவு பூரா அர்ஜுனன் மலைகளை பிளந்து, தோண்டி, தூளாக்கி, எல்லோருக்கும் வழங்கினான். மலைகள் அளவில் குறையவில்லை. பல நாள் ஆகியும் மலைகள் குறையவில்லை. எடுக்க எடுக்க தங்கம் வளர்ந்து கொண்டே போயிற்று.

''கிருஷ்ணா, என்னால் இந்த  தங்க மலைகளை முழுதுமாக  குறைத்து ஒரு துண்டு பாக்கி இல்லாமல் வழங்கமுடியும் என்று தோன்றவில்லையே?  எப்படி அப்பா  இதை எல்லாம் ஒரு துளி இல்லாமல் பண்ணுவது?''

 ஓஹோ, அப்படியா, சரி இரு, கர்ணனை கூப்பிடுகிறேன்.  கர்ணன் வந்தான்.

''கர்ணா, இந்த தங்க மலைகளை உனக்கு அளிக்கிறேன்  ஒரு சிறு கடுகளவு கூட மீறாமல் எல்லாருக்கும் தானமாக வழங்க முடியுமா உன்னால்?

கர்ணன்  கிராமத்து மக்களை அழைத்தான். ''அதோ அந்த தங்கமலைகள் உங்களைச்சேர்ந்தது.  யாருக்கு  எவ்வளவு வேண்டுமானாலும் நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்'' என்று  சொல்லிவிட்டு போய்விட்டான்.

லட்டுவின் மேல் எறும்புகள் போல் மக்கள் வெள்ளம் அந்த மலைகளை கரைத்து எடுத்துக் கொண்டு போய்விட்டது.

அர்ஜுனன் பிரமித்தான்.  ஏன் எனக்கு இப்படி செய்ய தோன்றவில்லை?

'' அர்ஜுனா,  நீ இந்த மலைகளை உனதாக பாவித்து எல்லோருக்கும் விநியோகம் செய்ய முற்பட்டாய். கர்ணனோ இதை தனதாகவே எண்ணவில்லை.பாவிக்கவில்லை. தானம் செய்யவேண்டிய தங்கமலை அவர்களை சேர்ந்தது என்று அவர்களுக்கே அளித்துவிட்டு சென்றான். கர்ணனைப் பொறுத்தவரை தங்கமோ வெள்ளியோ  தனதாக மனதாலும் நினைக்கவில்லை.  தானம் தர்மம் அதை கொடுக்கும் மனது தான். நீ  உனதாக நினைத்து வெட்டி தானம் செய்ய முனைந்தாய்.  சுயநலமில்லாத பலனெதிர்பாராத தான தர்ம மனத்தினன் கர்ணன் முன் நீ எங்கே?  வாழ்க்கையை எளிதாகவோ, சிக்கலாகவோ மாற்றிக்கொள்வது அவரவர் மனப்பான்மை.''

இது நல்ல கதையாக இருக்கட்டும்.  ஒரு முல்லா, ஒரு ரிஷி, ஒரு யோகி சொன்னதாக சொன்னாலும் அது அருமையானதாகவே தானே இருக்கும். எதற்கு கிருஷ்ணன்?..... இங்கு தான் இடிக்கிறது.  தயவு செயது கடவுள்களை,  சாமானியர்களாக  சித்தரிக்க வேண்டாமே.  அவர்கள் மனிதனாக அவதரித்தது  ஏதோ ஒரு காரியத்துக்காக, இந்த மாதிரி கதைகளுக்காக இல்லை. இன்னும் பின்னால்  வரும் சில தலைமுறைகள் இது  கீதையில், பாரதத்தில்,  வருவதாக சத்தியம் செய்யும். வேண்டாம் அந்த அபச்சாரம்.  சாதாரண உண்மைகளை வலியுறுத்த,   இல்லாத ஒரு கற்பனை, கதைக்கு,   வேத நூல்களை, உயர்ந்த தெய்வங்களை, ஆச்சார்யர்களை, மகா புருஷர்களை  பாத்திரங்களாக்கினால்  யமன் கோபம் வந்து கொதிக்கும் பாம் ஆயில் சட்டியில் போட்டு நம்மை  அப்பளமாக, வடாமாக ,மோர் மிளகாயாக  பொறித்து விட வழி கொடுக்கவேண்டாம்.


Attachments area

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...