பேசும் தெய்வம் J K SIVAN
மஹா பெரியவா
ப்ரம்மேந்திராளும் பெரியவாளும்
மழை வரும் என்று டிவியில் ஒரு வானிலை அதிகாரி ஆசைகாட்டினார். ஆனால் வெளியே அப்பளம் , வடாம் காயும் அளவுக்கு வெயில் கொளுத்தி தள்ளியது. காற்றில் அனல். கோமதிநாயகம் போன் பண்ணி அரைமணியில் வரலாமா என்று கேட்டார்.வரச்சொன்னேன். வந்துவிட்டார். கையில் பழத்தட்டு?
''எதற்கு சார் இதெல்லாம்?'' கோமதி நாயகம் கோமுட்டி செட்டியார் தெலுங்கை விட தமிழ் நன்றாகவே பேசுவார். அருணாச்சல கவிராயர் பாட்டெல்லாம் பாடிகாட்டுவார். ''ராமனுக்கு மன்னன் முடி...'' ரொம்ப நனறாக இருக்கும் கேட்க.
''சிவன்மாமா, நான் எப்போ நங்கநல்லூர் வந்தாலும் உங்களை பாக்காம போறதில்லே. மஹா பெரியவா இப்போ இல்லை. பார்க்க முடியாது. அவாளைப் பற்றி அப்பப்போ எனக்கு சொல்ற உங்களையாவது இன்னிக்கு பார்க்க வேண்டும் என்று மனதில் பட்டது'' . கோமதி நாயகம் தட்டில் என் எதிரே அரை டஜன் ஆரஞ்சு பழங்கள்..
''இதோ பாருங்கோ செட்டியார் வாள், நான் ஒண்ணுமே இல்லை. வெறும் தூசி. பெரிய பெரிய மஹான்கள் எல்லாம் பெரியவா பத்தி பேசறா. எழுதறா, பாடறா. நான் அங்கே இங்கே ஏதாவது காதிலே விழுந்தது, படிச்சது, மனசுக்கு பிடிச்சதை யாரவது சொன்னது இதெல்லாம் எல்லோரோடும் சேர்ந்து அனுபவிக்கறவன்.''
''இன்னிக்கு எதாவது ஒரு விஷயம் பெரியவா பத்தி சொல்லுங்களேன். காது குளிர கேக்கறேன். நவராத்ரி சமயம் கொஞ்சம் நல்ல விஷயம் உள்ளே போகட்டும் என்று ஆசைப்படறேன்''
''சொல்றேனே. அதைவிட வேறே எது சந்தோஷம் எனக்கு சொல்லுங்கோ?''
மகா பெரியவா ஒரு சமயம் நெரூர் சதாசிவப் பிரும்மேந்திரர் அதிஷ்டானத்துக்கு, தரிசனத்து க்காக போயிருந்தா.
''சதாசிவ ப்ரம்மேந்த்ரர்னு கேள்விப்பட்டிருக்கேன். அவரைப் பத்தியும் சொல்லுங்களேன்''
''நிறைய எழுதியிருக்கேன். சுருக்கமா சொல்றேன். அவர் ஒரு அவதூதர். ப்ரம்ம ஞானி. சித்த புருஷர். ஒரு தடவை ஒரு முஸ்லீம் பிரபு வீட்டிற்குள் உள்ளே சென்று கையேந்தினார். ஒரு நாளைக்கு ஒரு தரம் தான் கையேந்துவார் அப்போது யார் என்ன கொடுக்கிறார்களோ அந்த ஒரு கவளம் தான் அன்னிக்கி ஆகாரம். மறுநாள் தான் அப்பறம். அந்த சாயபு வீட்டு பெண்கள் யார் இவன் நிர்வாணமாக நம் வீட்டுக்குள் நுழைந்தவன் என்று அந்த வீட்டு எஜமான் முஸ்லீம் பிரபுவுடன் சொல்லி அவன் கோபத்தோடு ஓடி வந்தான்.
அதற்குள் பிரம்மேந்திரர் அந்த வீட்டில் ஆகாரம் இல்லை என்று ஒரு பெண் சொன்னவுடன் சிவ ஸ்தோத்திரங்கள் சொல்லிக்கொண்டே காவேரிக்கு கரை நோக்கி நடந்தார். ஒரு கை ஜலம் அன்று ஆகாரம். அதுவே போதும் என்று நினைத்தாரோ என்னவோ. அதற்குள் அவர் பின் ஓடி வந்த கோபக்கார முஸ்லீம் கூரான வாளினால் அவர் வலது கையை தோளோடு வெட்டினான். சதாசிவ ப்ரம்மேந்த்ரரின் தோளிலிருந்து கை வெட்டுப்பட்டு கீழே விழுந்தது. அவர் ரத்தம் சொட்ட சொட்ட ஒன்றுமே நடக்காதது போல் காவிரி ஆற்றங்கரையை நோக்கி நடந்தார். முஸ்லீம் அசந்து போனான். தான் செய்தது தவறு என்று மனசாட்சி உறுத்தியது.
அந்த மகானிடம் ஓடிச்சென்று ''சாமி, நான் உங்கள் கையை வெட்டினேன் நீங்கள் ஒன்றுமே சொல்லாமல் உங்கள் ஸ்தோத்திரத்தை தடைபடாமல் சொல்லிக்கொண்டு நடக்கிறீர்களே. என்ன ஆச்சரியம் ஐயா இது?'' என்று கேட்டபோது தான் ப்ரம்மேந்த்ரருக்கு தனக்கு வலது கை இல்லை என்று தெரிந்தது. இருபது அடி தூரம் பின்னால் நடந்து கீழே இருந்த கையை இடது கையால் எடுத்து வலது தோளில் வைத்தார். அது முன் போல் சேர்ந்து விட்டது !!
நமக்கே இதை படிக்கும்போது மயிர் சிலிர்க்கிறதே, அந்த முஸ்லீம் நேராகவே இதை பார்த்தவனுக்கு எப்படி இருக்கும்.?''
அந்த ஞானியின் காலில் விழுந்தான். அவனையும் எல்லோரையும் போல் அன்பாக நேசித்து ஆசி வழங்கிவிட்டு அவர் காவிரி நதிக்கு சென்றார். ''மானஸ சஞ்சரரே'' பாடல் தொடர்ந்து பாடிக் கொண்டே சென்றார். (சதாசிவ ப்ரம்மேந்திராளின் மானஸ சஞ்சரரே பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும். அற்புதமான .சாமா ராக பாடல். அர்த்தம் பொதிந்தது.
''ஆஹா அற்புதம் சார் ' என்றார் கண்களில் நீருடன் கோமதிநாயகம்.
''சரி நான் பெரியவா பத்தி தொடர்கிறேன்.
சதாசிவப் பிரம்மேந்திரர் கிட்டே மஹா பெரியவாளுக்கு அலாதி பக்தி மரியாதை உண்டு. பிரமேந்திரர் பெயரைச் சொன்னாலும், கேட்டாலும், அப்படியே வெயிலில் பட்ட வெண்ணையாக உருகிப் போய்விடுவா பெரியவா.
அதிஷ்டானத்தில் ஜபம் நடந்தது. பெரியவா கலந்துண்டதாலே நல்ல கூட்டம். அதிஷ்டான அன்பர்களும், பெரியவாளுக்குக் கைங்கரியம் செய்யும் பணியாளர்களும், சுற்றி நின்று கொண்டார்கள்.
பெரியவா, அதிஷ்டானத்துக்குள் சென்று ஜபம் செய்வதையோ, சந்யாஸ முறைப்படி வணங்குவதையோ யாரும் பார்க்கக்கூடாது என்பது, ஸ்ரீமடத்து சம்பிரதாயம். மனித எல்லைகளைக் கடந்த தெய்வீகத்தில் கலந்து நிற்கும் விசேஷமான அபூர்வ சம்பவம் அது. இந்தக் கட்டுப்பாடு, பக்தர்களின் நலனை முன்னிட்டுத் தான் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.
சாதாரணமாக நம்மால் நூறு வாட்ஸ் மின்விளக்கின் ஒளியை வேண்டுமானால் பார்க்க முடியும். லட்சம் வாட்ஸ் மின் ஒளியை, பல கோடி சூரிய பிரகாசத்தை நமது கண் தாங்குமா? அதானால் தான் இந்த கட்டுப்பாடு.
அந்த நேரம் பார்த்து அங்கே வேக வேகமாக ஓடிவந்தார் ஒரு பக்தர் – ரங்கசாமி.
“நான் இப்போ பெரியவாளை உடனே தரிசனம் பண்ணனும். பிரசாதம் வாங்கிக்கொண்டு உடனே புறப்படணும்” என்று, மனம் திறந்து பெரியவா இருந்த இடத்தின் அருகிலே இருந்த தொண்டர்க
ளிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார்.
“சுவாமி, பெரியவா, கதவை சார்த்திக்கொண்டு ப்ரம்மேந்திரா அதிஷ்டானத்துக்குள் ஜபம் செய்து கொண்டிருக்கா, இப்போ யாரும் அவாளைத் தரிசிக்க முடியாது. தியானம் கலைந்து மஹா பெரியவா தானாகவே வெளியே வந்தவுடன் முதல் ஆளாக நீங்கள் அவரை தரிசனம் பண்ணிக்குங்கோ.”
வந்தவர், ரங்கசாமி, இலேசுபட்டவர் அல்லர்; ரொம்பவும் அமுக்கமான பேர்வழி!. மடத்துத்தொண்டர்களின் பேச்சைக் கேட்டு சமாதானம் அடைந்துவிட்டாற்போல, பாவனை செய்து கொண்டிருந்தார்.
மடத்தில் எப்போதுமே தொண்டர்கள் கொஞ்சம் அதிகமாகவே சுதந்திரமாக பேசுவார்கள், அதிகாரம். கட்டளை, கொஞ்சம் தென்படும். இதை அடக்குவாரின்றி கொஞ்சம் கணிசமாகவே அதிகமாக தெரிந்தது அன்று. தங்களுக்குள் அவர்கள் சுவாரசியமாக ஏதோ பேசிக்கொண்டிருந்த சமயம், இதை கண்கொட்டா மல் கவனித்துக் கொண்டிருந்த ரங்கசாமி கண் மூடி கண் திறக்கும் சமயத்தில் குபீரென்று தாவி மூடியிருந்த அதிஷ்டானத்தின் கதவுகளைத் திறந்து கொண்டு, உள்ளே சென்றுவிட்டார்!
இந்தத் தடாலடித் திட்டத்தை யாரும் எதிர்பார்க்காததால் மடத்து சிப்பந்திகள் எல்லோரும் திடுக்கிட்டு நின்றார்கள். அந்த நேரத்தில் அதிஷ்டானத்திலிருந்து பெரியவாளின் குரல், அதுவரையில் சிஷ்யர்கள் கேட்டறியாத ஒரு கம்பீரத்வனியில் தெளிவாகக் கேட்டது.
“நீங்கள் எந்த ம்ருத்யுஞ்ஜய ஜப-ஹோமமும் பண்ணவேண்டாம். உங்க வீட்டுக்கு ம்ருத்யு வரமாட்டான் திரும்பிப் போ”
பக்தர் ரங்கசாமி கதவை மூடிவிட்டு, சட்டென்று வெளியே வந்தார். அணுக்கத் தொண்டர்கள் ''ஏன் இப்படி செயதீர்கள் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு அவரை மொய்த்துக்கொண்டு விட்டார்கள். ரங்கசாமி கோபமே இல்லாமல், தான் அப்படி நடந்துகொண்டதற்கு ஒரு சுவாரசியமான ஒரு கதையை சொன்னார்.
''என்னுடைய ரொம்ப நெருங்கிய உறவினருக்கு, திடீரென்று நெஞ்சுவலி. பரிசோதனை செய்த டாக்டர்கள், “நாற்பத்தெட்டு மணி நேரம் தாண்டினா தான் பிழைப்பாரா என்று உறுதியாக சொல்ல முடியும்” என்று கை விரித்து விட்டார்கள். ஜோசியர், “ ரங்கா, உடனே ம்ருத்யுஞ்ஜய ஹோமம் பண்ணு '' என்று கட்டளையிட்டு விட்டார். அப்போ என் ஆப்த நண்பர், இங்கே என்னோடு பெரியவாளை தரிசிக்க வருபவர், '' நீ பேசாம உடனே பெரியவா கிட்டே போ. விஷயத்தை சொல்லி பிரசாதம் வாங்கிக் கொண்டு வாயேன் '' என்று ஆலோசனை சொன்னார்.
''பெரியவா எங்கே இருக்கா இப்போ'' என்று கேட்டசமயம், பக்கத்திலே இருந்த ஒரு பாட்டி “பெரியவா, இதோ பக்கத்திலே, நெரூர்லே தானே இருக்கார். அவாகிட்ட சொல்லிவிடுங்கோ,அவா பார்த்துப்பா” என்று சொன்னதை வேத வாக்காக ஏற்றுக் கொண்டேன். அதனாலே தான் அங்கே ஒரு உயிர் ஆபத்தில் இருக்கே என்று அவசரப் பட்டேன்.
ரெங்கசாமியுடைய பாக்யமோ, அதிர்ஷ்டமோ, பூர்வ ஜென்ம புண்யமோ, தெய்வமே அவருக்கு அருள்வாக்குக் கூறிவிட்டது! ''உறவினர் உயிருக்கு எந்த ஆபத்தும் இப்போ இல்லை''
ரங்கசாமி வீட்டுக்குள் நுழைந்தபோது அந்த நோயாளி சொந்தக்காரன் படுக்கையில் எழுந்து உட்கார்ந்து சிரித்துக் கொண்டிருந்தான். விட்டால் மூன்று வெங்காய அடை விழுங்குபவன் போல் பார்த்தான்.
“ இல்லையா பின்னே, இன்னும் ஒரு பல வருஷம் அந்த புண்யாத்மாவுக்கு பெரியவா கொடுத்த காரண்டி இருக்கிறதே'' இந்த விவரத்தை ராயவரம் பாலு சொன்னதாக தகவல்.
.
No comments:
Post a Comment