Tuesday, October 8, 2019

NANGANALLUR



நங்கநல்லூர்          J K SIVAN                          

        அரை நூற்றாண்டுக்கு முன்   - 4

வடிவேலன் ஹார்டுவேர் கடை 1969ல் இருந்தது. அங்கிருந்து தான்  கல் மண் எல்லாம் தருவிப்போம். சிமென்டுக்கு பெர்மிட் வேண்டும். நான் இந்தியா சிமெண்ட்ல வேலை பார்த்தேன். அதனால் எனக்கு  தேவையான சிமெண்ட் ஆபிஸ் மூலமாக சைதாப்பேட்டை கூட்ஸ் ஷெட்(GOODS SHED )ல் டெலிவரி கொடுத்து லாரி மூலம் கன்னிகா காலனி கொண்டுவந்தோம்.  ஒரு மூட்டை சிமெண்ட் 10 ரூபாய் கூட இல்லை அப்போது.   ராமநாதய்யர் ஆட்கள் நான்குமாதத்தில் வீடு கட்டிக்கொடுத்தார்கள்.  அதுவரை காலனியில்  பொன்னுரங்கம் என்ற கஸ்டம்ஸ் அதிகாரி வீட்டில் குடியிருந்தேன்.  வாசுதேவன் சபாபதி போன்றோர்  ரொம்ப உதவினார்கள்.  கலெக்டர் சபாபதி வீட்டில் தான் இருந்தது. அங்கிருந்து தான் போன் செய்வோம்.  அடுத்த தெருவில் சிங்கம் அய்யங்கார் வீட்டில் டெலிபோன் இருந்தது. அவர்  டெலிபோன் டிபார்ட்மெண்டில் என்ஜினீயர் என்பதால் அவர் வீட்டில் இருந்த போன் தான் எல்லோருக்கும் காலனியில் உதவியது.

கன்னிகா  காலனி வளர்ச்சி பற்றி கூறவேண்டுமானால் ஸ்ரீ  S. சபாபதி, கலெக்டர் சென்ட்ரல் எக்ஸ்சைஸ்  (central excise ), உதவி கலெக்டர்   KV  வாசுதேவன் பற்றி சொல்லியாகவேண்டும். இவர்கள் பொறுப்பெடுத்து ஒரு சங்கம் உருவாக்கினோம்.  அதற்கு தெற்கு நங்கநல்லூர் நல சங்கம்  என்று பெயர் கொடுத்தோம்.  நங்கநல்லூர் வடக்கு பக்கம், மார்க்கெட், கோவில்கள், பஸ் ரூட், தெருக்கள், கடைகள், மருத்துவ வசதி எல்லாம் பெருகி வர, தெற்கு பக்கம் வளர்ச்சி பெற வேண்டாமா. தெற்கே என்று எடுத்துக் கொண்டால், லட்சுமிநகர், மங்கையற்கரசி நகர், மேக்மில்லன் காலனி, கன்னிகா காலனி,யூனியன் கார்பைட்  UNION  CARBIDE  காலனி என்று புதிதாக  உருவாகும், வளரும் காலனிகள் நலத்தை மனதில் கொண்டு இந்த சங்கம் உருவானது. இதில் எங்கள் பகுதி தவிர  வோல்டாஸ்  VOLTAS  காலனியில் வசிப்பவர்களும் பங்கேற்றார்கள்.  தெருக்கள் பராமரிப்பு, , தெரு விளக்குகள்,  சகாய விலை கடைகள், ஆவின் பால், இரவு ரோந்து படை, நங்கநல்லூரை கடந்து வெளியே போக  சுரங்க பாதை, தெருக்கள் பெயர் பலகைகள்  என்று பல விஷயங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் எடுக்க உதவினார்கள்.

ஞாயிறு, விடுமுறை நாட்களில்  தெருக்களை செப்பனிடுவோம். பள்ளங்களை மண்ணால் மூடுவோம். கல்லு முள்ளு எல்லாம்  அப்புறப்படுத்துவோம். தெருக்குப்பைகளை வாரி கொளுத்துவோம். இதில் ஆர்வமாக  சிறுவர்கள் சிறுமிகள் பங்கேற்றார்கள். எல்லோர் வீட்டிலும்  டீ காப்பி கொடுத்தார்கள்.  இதே மாதிரி  விசில் அடித்துக்கொண்டு ராத்திரியெல்லாம் ரோந்து சுற்றும்போது இரவில் நிறைய வீடுகளில் காப்பி  டீ கொடுப்பார்கள்.

சபாபதி அமைதியான மனிதர். மிருதுவாக பேசுபவர். அதிகம் பேச்சு கிடையாது.  வாசுதேவன் குரல் கணீரென்று வெங்கலத்தில் ஒலிக்கும்.  பூஜைகள் விஸ்தாரமாக தினமும் பண்ணுவார். குடும்பத்தில் அனைவரும்  ''பிச்சி மந்தாரம் துளசி''  என்று  குருவாயூரப்பனை பாடுவது தெருவெல்லாம் ஒலிக்கும்.  என் குழந்தைகள் சத்தம் கேட்டு எதிர் வீட்டுக்கு  (வாசுதேவன் வீடு) ஓடிவிடும். அவர்கள் கை  நிறைய பக்ஷண, பழம் பிரசாதம் எல்லாம் கொடுத்து விடுவார். நிறையும் வருவோர் போவோர் ஜேஜே என்று எப்போது கல்யாண வீடு மாதிரி இருக்கும்.   திருமால் மருகன் கோவில் கன்னிகா காலனியில் இருக்கும்வரை வாசுதேவன் நினைவில் நிச்சயம் இருப்பார்.  சமீபத்தில் தனது 98 வது வயதில் பாலக்காட்டில் மறைந்த அவர் ஆன்மா சாந்திஅடைய பிரார்த்திப்போம். 

காலனி நிலம் விற்ற துரைசாமி ஒருவழியாக   ஒரு  பிளாட்  நிலத்தை  தானமாக வழங்க,  திருமால் மருகன் ஆலயம் கட்ட காலனி அங்கத்தினர் மீட்டிங்கில் முடிவாகி ஜரூராக  வேலை ஆரம்பித்தது.   அதற்கென எங்கள் சங்கம் முழுப் பொறுப்பேற்றது.

இதற்கிடையே சில சம்பவங்களை சொல்லவேண்டும்.
நிறைய  குழந்தைகள் நங்கநல்லூரில் அப்போது நேரு பள்ளிக்கூடத்தில் தான் படித்தார்கள்.  அரசினர் ஆண் பெண் பள்ளி  SSLC  வரை இருந்தது. அப்புறம் அது  +12 ஆக மாறியது.

தெற்கு நங்கநல்லூரில் எத்தனையோ  காலனிகளில்  ஒன்று MMTC  காலனி.  அதில் யாரோ ஒருவர் பிளாட்   வாங்கி  வீடு கட்ட நல்ல நாள் பார்த்து கடைக்கால் தோண்டினார்கள். ணங் என்று ஒரு ஏதோ ஒரு பாறைமேல் கடப்பாரை பட்டு ஜாக்கிரதையாக தோண்டினார்கள்.  மெதுவாக  ஒரு  கோவில் இத்தனை காலம் புதையுண்டு   மேலே கிளம்பியது.  அவ்வளவு தான் வீடு சமாச்சாரம் . புதை பொருள் ஆராய்ச்சி வந்தது.  டாக்டர்  நாகசாமி வந்தார். நங்கநல்லூர் முழுதும் புயலாக செய்தி பரவியது

ஒரு நாள்  ராத்திரி ஒன்பது மணி இருக்கும். ஒரே கூட்டம்.நங்கநல்லூர்  ராஜராஜேஸ்வரி ஆலய நிறுவனர்  ராஜகோபால ஸ்வாமிகள், மற்றும்  டாக்டர் நாகசாமி  ஆகியோர்  கூடியிருந்தனர்.  கல்வெட்டு  ஒன்று  அந்த புதையுண்ட கோவிலில் இருந்து கிடைத்தது. அதில் எழுதியிருந்த மொழி நமக்கு படிக்க முடியாத  தமிழ். பல்லவர் கால எழுதது. அதை சுலபமாக நாகசாமி படித்து அதன் அர்த்தம் சொன்னது:  கல்வெட்டு வாசகம்.

''ஸ்வஸ்தி ஸ்ரீ  கோவி  ராஜகேசரி பன்மற்கு  6வது புலியூர் கோட்டத்து சுரத்தூர் நாட்டு குன்றையூர்  தன்மீசர் தேவர்க்கு  சந்திராதித்தவர் பள்ளியெழுச்சி   கொட்டுவதாக , சோழநாட்டு தென்கரை மிழலைக் கூற்றத்து தென்குறு  மிஞ்சியூருடையான் சோழன் காரியாரியக்கியாகிய செம்பொன்கோவில் வடக் கடைய்ந்தடில் மூன்றில் நாயன்...........''. Continues...

ராஜராஜ சோழன் காலத்து சிவன் கோவில். அவனது 6வது ஆட்சி வருஷம் கட்டப்பட்டது.  ( கிபி  991) சிவன் பெயர்  தன்மீசர் மேற்றழி மஹாதேவர், செம்பொன்கொவில்  தன்மீசர், வீர சிங்கர், தர்மலிங்கேஸ்வரர்.   அம்பாள்  சர்வமங்களா தேவி.   இந்த பகுதி தலக்கணஞ்சேரி, புலியூர் கோட்டம் என்று கூறப்பட்டது. ராஜராஜனின் ஒரு குறுநில மன்னன் காரியாரியாக்கி  சோழன்  இந்த தன்மீசம்  எனும் பிரதேசத்தின் ராஜா. இங்கே இருந்த சிதிலமடைந்திருந்த சிவன் கோவிலை சீர்படுத்தி கட்டினான்.  நிலங்களை மானியமாக அளித்து சந்திர சூரியர் உள்ளவரை அதன் வருமானத்திலிருந்து கிடைக்கும் காசு கோவில் மணியோசைக்கு, அன்றாட பூஜைக்கு அருளினான் என்று அந்த கல்வெட்டு கூறுகிறது.   

தர்மலிங்கேஸ்வரர் கோவில்  நங்கநல்லூர்  கடைத்தெரு 4வது மெயின் ரோட்டிலிருந்து 2 கி.மீ. தூரம்.  கண்டுபிடிக்கப்பட்ட திலிருந்து ( 1960களில் ) விடுவிடுவென்று வளர்ந்தது. ஆகம சாஸ்த்ர கோவில் இப்போது  ஐந்து நிலை  ராஜகோபுரம் வரவேற்கிறது. அப்புறம்  பல வருஷங்களில் அபிவிருத்தி அடைந்து சிறந்த ஒரு  கோவிலாக விளங்குகிறது.  இந்த கோவிலைப்  பற்றிய ஒரு  வீடியோ கிளிப்பிங்  கோவில் பற்றி சொல்லும்
இன்னும் சொல்கிறேன். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...