Sunday, October 27, 2019

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம்   J K  SIVAN 


                                          அறிவுக்கடலின் ஆத்ம அலைகள்.

நாம் தீபாவளி  கொண்டாடி,பட்டாசு வெடித்து, நிறைய  இனிப்பு தின்றுவிட்டு, புத்தாடையை கழட்டி விட்டு வழக்கம்போல் நமது கடமையாக மீண்டும் சில நாட்களாக போகாமல் இருந்த  குருக்ஷேத்திர யுத்த களத்துக்கு  செல்கிறோம். அங்கேயும்  தான்  வாண வேடிக்கைகள்  ரத்தத்தில் மறைந்து விட்டனவே.  மயான அமைதி நிலவுகிறது.  அங்கே  தான் யுதிஷ்டிரன் பீஷ்ம பிதாமகரிடம் உபதேசம் பெற்றுக் கொண்டிருக்கி றானே. நமது காதிலும் சில  நல்ல வார்த்தைகள் இனி விழட்டும்.


''யுதிஷ்டிரா, உனக்குத் தெரியுமா? ஒரு குழந்தையைப் பெற்றதை விட, அவனை நன்றாக கல்வி கற்கவைத்து, தேவையான சாஸ்த்ர ஞானத்தை அளிக்கும் முழுப்பொறுப்பு அவனது தந்தையை விட வேறு யாருக்கும் கிடையாது. தனது தந்தையிடமிருந்து தான் ஒருவன் சமூகத்தில் அவனது அந்தஸ்து என்ன, கடமை எது என்று அறிய முடியும். வேதகாலத்திலிருந்து தந்தை தான் முதல் ஆசான் ஒரு பிள்ளைக்கு. அப்பா என்றாலே ஒரு பரம சந்தோஷம். எவன் தந்தையை வணங்குகிறானோ அவன் பாபங்கள் சூரியனைக் கண்ட பனி போல் விலகும். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.

அதே போல் பிறந்தவன் ஒவ்வொருவனுக்கும் முதல் பலம் அவனது தாயே. அவனுக்கு பல குழந்தைகள்,பேரன் பெயர்த்திகள் இருந்தபோதும் அவன் தாய்க்கு என்றும் குழந்தை -- ரெண்டு வயசில் எப்படியோ அப்படியே...! அதனால் தான் தாயிற் சிறந்ததோர் கோயிலுமில்லை. அம்மா அவனது ஜனன காரணி. ஜனனி. என்ன வயதானாலும் தாயை இழந்தவனுக்கு உலகமே சூனியம்.

கர்பாதானம் கரு உற்பத்தியையும், , ஸ்ரீமந்தோன்னயனம் கரு எட்டுமாச அளவில் வளரும்போதும் புரிகின்ற சடங்குகள். அப்போது தான் கணவன் தனது தர்ம பத்னியின் நெற்றியில் வகிடுக்கு மத்தியில் குங்குமம் இடுகிறான். இவை பற்றியெல்லாம் நிறைய  விஷயங்கள் இருக்கிறது. அதில் புகுந்து எழுத முனைந்தால்  மஹாபாரதம்  தொடர  வாய்ப்பே இல்லை. 

தாய் தான் யாக குண்டம். தந்தை தான் அக்னி. ஓவ்வொரு இல்லத்திலும் அக்னி மூட்ட அரணிக்கட்டை இருந்த காலம் அது.

ஒருவன் வளர்வதே அவன் தாயின் அரவணைப்பில், அன்பால், பாசத்தால், நேசத்தால் தான்.

ஜாதகர்மம் என்ற சடங்கில் ''நீயே எனது வழித்தோன்றல், எனக்கு பெருமை சேர்ப்பவன், என்னைக் கரை சேர்ப்பவன்'' என்றும் ''நீ என் எதிரிகளை பிளக்கும் கோடாலி'' என்றும் தந்தை சொல்வது போல் வாசகம் வரும்.

பிறகு உபாகர்மாநடக்கும். அந்த காலத்தில் குருகுலவாசம் முடிந்து வந்ததும் பிள்ளைக்கு ஸமவர்த்தனம் என்ற வரவேற்பு சடங்கு செய்பவன் தந்தையே. இது கிரஹ சூத்திரங்களில் இல்லை. எனவே ஒரு உப சடங்கு. இதில் ''என் மகனே, நீ,   இனி நானே'' என்று தந்தை சொல்வான்.

மனைவியை காப்பாற்றுவதால் தான் கணவன் 'பர்த்தா'' ''பதி'' என அழைக்கப் படுகிறான். கணவனே
 கண் கண்ட தெய்வம் ஒரு மனைவிக்கு.

ஒரு மனிதன் தர்மத்துக்கு விரோதமாக தவறான காரியங்கள் செய்யக்கூடாது என்று நரகம், பாபம், தண்டனை, சமூக புறக்கணிப்பு, ஜாதி கட்டுப்பாடு என்று பல தடைகள் விதித்து எல்லோரும் அதை பின்பற்றி நேர்மையாக வாழ்ந்தனர். மனச்சாட்சிக்கு புறம்பாக நடக்காமல் உலகம் இயங்கிய காலம் அது.

ஒருவன் இறந்த போதும் அவனது உடலுக்கு அவன் ஆத்மாவுக்கு செய்யவேண்டிய சடங்குகள் நிறையவே இருக்கிறது. அதற்கான மந்திரங்கள் அர்த்தமுள்ளவை. நம்பிக்கையோடு புரிபவை. இறந்தவனுக்கு வாரிசாக இருப்பவன், அடுத்தவன், அவன் மகன், செய்யும் கடன் இது. இறந்தவன் உடலை இயற்கையோடு சேர்ப்பதற் கென்றே அர்த்தமுள்ள சில  மந்திரங்கள் உள்ளன. சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட வேத மந்திரங்கள் பிரத்யேகமாக இதற்கும் உண்டு. ஜீவன் ஒளி பெற்று இறந்த உடலிலிருந்து கிளம்பி அடுத்த உலகத்திற்கோ, அல்லது இதே உலகில் வேறு பிறவிக்காக  அடுத்த உடலைத் தேடியோ செல்கிறது. கர்மபலனுக்கேற்றவாறு அது அமையும். . அடுத்த உடலில் அந்த ஜீவன் குடிபுகும் முன்பும் , காத்திருக்கும்போதும் , அடுத்த உடலை அடைந்த பிறகும் என்று அதற்கு தேவையான நீர், ஆகாரம் எல்லாம் தனியாக இருக்கிறது. சில குறிப்பிட்ட தானங்கள் கொடுப்பதால் அது பலன் அளிக்கிறது .

ஸ்ராத்த காலத்தில் சொல்லும் மந்திரங்களின்  அர்த்தத்தை  தெரிந்து கொள்ளவேண்டும். தெரிந்தால் பாதிக்கு மேல் ஏன் இப்படி எல்லாம் செய்கிறோம், செய்யவேண்டும் என்பது புரியும். இருந்த உலகம், இருக்கப் போகும் உலகம் இரண்டையும் வைதரணி என்கிற பெரிய ஆறு ஓன்று இணைக்கிறது. அதை கடக்க  தேவையான படகு கோ தானம்.  அதைச்  செய்தால் தான் அந்த ஜீவன் பிராயணப் பட முடியும் என்கிறது மந்திரம். பிண்டங்களை நீரில் இறைப்பதன் மூலம் அந்த ஜீவன் ஆகாரம் பெறுகிறது.

ஒருவன் மூன்று கடன்களை செலுத்தவேண்டியிருக்கிறது. நன்றாக கற்று ஞானம் பெறுவதால் ரிஷிகளுக் கான கடன், யாக யஞங்களை விடாமல் செய்வதன் மூலம் தேவ கடனையும், ஸ்ராத்த காரியங்கள் தர்ப்பணங்கள் செய்வதன் மூலம் பித்ருக்களுக்கு சேரவேண்டிய கடன்களையும் புரியவேண்டும் என்கிறது மந்திரம்.

இதெல்லாம் புறக்கணித்து விட்டு நான் தான் ஜபம் தினமும் பண்ணுகிறேனே  மோக்ஷம் கிடைக்கும் என்று அலைவது பயனற்றது என்கிறது மந்திரம். கிரஹஸ்தாஸ்ரமம் விட்டு, பற்றுகள் நீக்கி, சன்யாசம் பெற்றவனுக்கு இது பொருந்தும்.

''யுதிஷ்டிரா, ஒரு மனிதனின் ஆறு பகைவர்கள் வெளியே இல்லை. அவன் உள்ளேயே இருந்து அவனைத் தின்கிறார்கள். பற்று, கோபம், கர்வம், பொறாமை, பேராசை, சந்தேகம்.

உயிர் உடலில் குடிகொண்டுள்ளதால் உடலுக்கு தேவையான அளவு மட்டுமே உணவு அவசியம். ருசிக்கு அல்ல. உள்ளே இருக்கும் வாயு, பிராணன் இயங்குவதற்கு தக்க அளவு.

ஒரு கதை நினைவுக்கு வருகிறது சொல்கிறேன் கேள் அப்பனே. நாரதன் ஒரு முறை அஸீத தேவளன் எனும் ஒரு ரிஷியை சந்தித்தபோது அவன் ''நாரதா, உலகத்தில் உயிர்களின் ஆரம்பம் முடிவு பற்றி சொல்லுங்கள்?''என்றான்.

''நீ என்ன நினைக்கிறாய் அது பற்றி அதைச் சொல்லேன்'' என்றான் நாரதன்.

''பரமாத்மா, தானே, பல உயிர்களாக உருவெடுத்து அவற்றிலிருந்து பிற உயிர்களும் தோன்றின. காலம் அவற்றின் தன்மையை மாற்றி மாற்றி செயல்பட வைக்கிறது. பஞ்ச பூதங்களின் சேர்க்கையே இந்த படைப்புகள். அவை அழியாதவை, ஆனால் உருமாறுபவை. நிரந்தரமானவை அல்ல. எனவே ஆரம்பமோ முடிவோ இல்லாதவை. எனவே இயற்கை அழிவற்றதே தவிர அவற்றிலிருந்து தோன்றுகின்ற தனித்தனி உயிர்கள் ஒரு காலவரையரைக்குட்பட்டவை. கர்மவினைக்கு கட்டுப்பட்டு அவற்றை நிறைவேற்றிய பிறகு தான் மோக்ஷம் அடைவன.''

''தேவளா , நீ சரியாக புரிந்து கொண்டிருக்கிறாய்'' என்றான் நாரதன்.

''இதையும் கேள். ஒரு அப்பாவும் பிள்ளையும் பேசினதை. மகன் ''மேதாவி''  என்ற பேருக்கேற்றவன். ''அப்பா, நீங்கள் வேதம் அறிந்தவர்கள். ஒவ்வொருவனும் ஒரு குறிப்பிட்ட காலம் தான் உலகில் வாழ முடியும் என்பதனால் என்ன தெரிந்து கொள்ளவேண்டும்?'' என்று 
கேட்டான்.

''முதலில் பிரம்மச்சரியம். அப்புறம் க்ரஹஸ்தாஸ்ரமம் , பிறகு வானப்ரஸ்தம் என்று தனது கடமைகளை செய்யவேண்டும், பற்று நீக்கவேண்டும். த்யானத்தில் ஈடுபடவேண்டும். ஆத்மா பரமாத்மாவோடு கலக்க வேண்டும். அதுவே மோக்ஷ நிலை'' என்றான் தந்தை. மரணம் இன்றியமையாதது. யாருக்காகவும் காத்து நிற்காது. தினமும் இரவும் பகலும் தோன்றி மறைவதே அதை ஞாபக படுத்துவதற்குத்தான். உலக வாழ்வில் ஒவ்வொரு நாளும் குறைந்து கொண்டு வருவதை உணர்த்துகிறது. அதனால் தான் நாளை செய்ய வேண்டி யதை இன்றே செயது முடிக்கவேண்டும். மத்தியானம் செய்ய நினைத்தால் அதை காலையிலேயே செய். மரணம் தான் டைம் தராதே. நல்லது கேட்டது ரெண்டுமே உன்னால் செய்ய முடியும்போது நல்லதையே செய்வோமே. தூங்குகிற மானை புலி சத்தம் போடாமல் கவ்விச் சென்று விடுமே! அன்பாலே எல்லாரையும் கவருவோமே, அவர்கள் அளிக்கும் அன்பில் குளிப்போமே''.

பீஷ்மர் யுதிஷ்டிரனுக்கு நிறைய நிறைய நல்ல விஷயங்கள் எல்லாம் சொல்கிறார். நாமும் சிறிது அவற்றில் கேட்போமே.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...