திருப்பதிக்கு போய் மொட்டை அடித்துக் கொள்வது போல் வில்லிபுத்தூரிலுமா? சிலம்பு ரயில் வில்லிபுத்தூரில் நின்றபோது எங்கள் பெட்டிக்குள் ரெண்டு மொட்டை தலைவர்கள் ஏறி சிரித்தார்கள். ஒருவர் சின்னவயது மற்றவர் ரிட்டையரான ஒரு போலீஸ் அதிகாரி. ஒருவரை ஒருவர் முன் பின் பார்த்ததே இல்லை என்றாலும் பல வருஷங்கள் நெருங்கி மனம் லயித்து ஒன்றிய பரஸ்பர அன்பு கொண்டவர்களாக பேச்சு. இப்படி பழகு வது நமக்கு மட்டுமே உரித்தானது. பண்பாடு. மூன்று நாள் தென்காசி ஜில்லாவில் கிராமங்கள் அக்ரஹாரங்கள் ,கருடசேவை, குற்றாலம் எல்லாம் முடிந்து நங்கநல்லூர் திரும்புகிறேன்........ரயிலில் நேரம் போவது தெரியாமல் நான் ராதா ஆண்டாள் கிருஷ்ணன் பற்றி பேசுகிறேன். ... .அரசியலுக்கு என் பேச்சில் இடம் இல்லை. . கிருஷ்ணன் பற்றி பேசுவதில் அவர்களுக் கிருந்த விருப்பம் அவர்கள் பேச்சிலும் முக மலர்ச்சியிலும் உடல் உற்சாகத்திலும் தெரிந்தது. என்னை மேலும் ஊக்குவித்தது...
ராதை கிருஷ்ணன் உறவு விசித்திர உறவு. ப்ரேமையும் பாசமும் நிரம்பியது. அதில் மனது லயித்து விட்டால் வேறு எந்த உறவும் இரண்டாம் பக்ஷமாகிவிடும். அந்த உறவில் ஈடுபட்ட ஜீவனுக்கு அன்னம் வெறுத்துவிடும், தூக்கம் அகன்று விடும், பித்தம் பிடித்து விடும். கண்கள் காதுகள் , மனம் எல்லாமே அந்த உறவில் ஈடுபட்ட மற்றொரு ஜீவனுக்காகவே தன்னை அர்ப்பணித்து விடும். இதை சாதாரண மனிதர்களின் காலத்தோடு ஒரு போதும் சாப்பிடக்கூடாது. ஏதோ ஒரு சினிமாவில் பேசுவானே ..''இது மனித காதலல்ல, அதையும் தாண்டி புனிதமானது....''
மனித காதல் என்பது வயதுக் கோளாறில் இப்படி ஒரு உறவு தோன்றினால் அது காலப்போக்கில் மாறிவிடும். நெருக்கம் நீர்த்து விடும். உண்மையான இரு அன்புள்ளங்கள் பிணையும்போது அங்கு வயதில்லை, உருவமில்லை, ஜாதியில்லை, பேதமில்லை, பசியில்லை, தாகமில்லை, ஒன்றில்லையேல் மற்றொன்றில்லை. மனதால் நெருங்கும்போது உடலுக்கு அங்கே இடம் இல்லை. மனம் ஒன்று தான் அங்கு ஒன்றை ஒன்று தேடும் வஸ்து. ஒரு மனதில் மற்றொன்று பூரணமாக வியாபித்து விட்டால் இரண்டும் ஒன்றாக அல்லவோ ஆகிவிடுகிறது.
மனமானது கொள்ளை பேச்சு பேசும்.அதைப் போல் வாயால் பேசமுடியாது. கண்கள் ஆயிரம் செய்தி சொல்லும். அதை வாயோ, புத்தகமோ எழுத்தோ, சொல்லவே முடியாது. பேச்சு ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்ததாக வெளி வரும். அதற்கு எந்த பாஷ்யமும் வியாக்யானமும் சொல்ல இயலாது. சம்பந்தப் பட்ட ஜீவன் ஒன்றே தெளிவாக அறியும்.
மேலே சொன்ன ராதை கிருஷ்ண உறவைத் தான் தெய்வீக காதல் என்பதே தவிர சினிமாவில் காசு வாங்கிக்கொண்டு வயதான இருவர் மரத்தை ச்சுற்றி ஓட்டப் பந்தயம் ஆடுவதில் இதை தேடவேண்டாம். இருக்கவே இருக்காது. புத்தகங்களில் விரசமாக படித்து தடம் மாற வேண்டாம்.
மீண்டும் வலியுறுத்துகிறேன். கண்ணன் ராதையின் உறவு, ஆண்டாள் அரங்கனின் உறவு , மீரா கிரிதாரியின் உறவு, ஆழ்வார்கள் நாராயணன் உறவு, நாயன்மார் சிவனின் உறவு, ரிஷிகள் தேவாதி தேவன் மேல் கொண்ட பக்தி உறவு, இது போன்றவை. இதில் ஆண் என்றும் பெண் என்றும் பால் உணர்வே கலக்கவே இல்லை.
ஆணும் பெண்ணாகவும் இருந்தாலும் சரி. ஒரே பாலராக இருப்பினும் சரி, பண்பு துளியும் அங்கே குறையாது.
'' காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி....'' இது ஆண் பெண் உறவு பற்றிய பாலுணர்வு அல்லவே.
ஒரு ஆழ்வார் தன்னை பெண்ணாகவே பாவித்தார். பெயரே திரு மங்கை ஆழ்வார்... ஆழ்வார்கள் பராங்குச நாயகி, பரகால நாயகி என்றெல்லாம் தம்மை அடையாளம் காட்டினார்கள். இப்படி காதல் வெளிப்படுவது தான் கொள்வது தான் நாயக நாயகி பாவம் (பாலு என்று சொல்லும்போது வரும் ''பா"' ) .
''உனக்கே யாம் ஆளாமே...'' என்பது அதீத சரணாகதி நிலை.
மேலே சொன்னதெல்லாம் எதற்காக என்றால் ஒரு மஹா கவிஞரும் பெண்ணாகி விட்டார். போதாததற்கு கண்ணனை தன்னுடைய காதலனாக மனதில் இருத்தி தனது அனுபவத்தைச் சொல்கிறார். இனி அவர் (ள்) தனது காதல் நிலையை சொல்கிறாள் :
''இந்த காதல் இருக்கிறதே, ,அடடா, ஓருவளை அது ஆட்கொண்டுவிட்டால் அவளே அந்த காதலன் எண்ணமாக மாறி, என்னமாக துடிக்கிறாள்?
''என்னம்மா பெண்ணே ஒரு மாதிரி இருக்கிறாய் . உடல் நலம் சரியில்லையா. ஏன் இப்படி தூண்டிற் புழுவினைப்போல் துடிக்கிறாய்.?''
''ஒன்றுமில்லை அம்மா'' என்று சொல்கிறாளே தவிர சுடர் விட்டு எரியும் ஒரு தீபம் எண்ணையை குடித்து எதிர்ப்படும் காற்றில் அசைந்து அசைந்து எரிவது போலே நீண்ட காலமாகவே மனம் ''அலை பாயுதே கண்ணா'' தான். .
யாருடனும் பேசப் பிடிக்கவில்லை, ஏனெனில் பேசும் நிலையில் மனம் இல்லையே. தனிமையைத் தேடுகிறது. ஏன்? அப்போது தானே அவனையே பற்றி யார் தொந்தரவும் இல்லாமல் நினைக்கலாம்! கூண்டுக்கிளிக்கு பறக்க ஆர்வம். நிலைமை அதை சிறைப்படுத்தி யிருக்கிறதே.
என்றைக்கு அவனை நினைத்து விட்டாளோ , அவளுக்கு இது நாள் வரை பிடித்த தெல்லாம் அந்த ஒரே கணத்தில் பிடிக்காமல் போய்விட்டதே .
தனியே பாய் மீது படுத்தேனே. தூக்கம் வந்ததா? ''பாலிருக்கும் பழமிருக்கும், பசியிருக்காது, பஞ்சணையில் காற்று வரும்.... தூக்கம் ?? புரண்டு புரண்டு படுத்து களைத்து உடல் அசதியில் தான் தூக்கம்.
இந்த காதல் வந்த வேளையிலிருந்து அம்மாவைக் கூட பிடிக்கவில்லை. முன்பெல்லாம் என் சினேகிதிகள் வந்தால் ஒரே கும்மாளம். கூடை கூடையாய் பேச்சு. இப்போது அவர்கள் ஏன் வருகிறார்கள்? பிடிக்கவில்லை. ''ஐயோ வந்து விடுவார்களோ'' என்று அச்சம், அருவருப்பு...ஏன்... காதல் ..!
அம்மா பிடித்த உணவெல்லாம் பண்ணிப் போட்டாளே, உள்ளே போகவில்லையே.. முன்பெல்லாம் வாசல் ரேழியிலிருந்தாலே உள்ளே சமையற்கட்டில் அம்மாவின் நளபாகம் வாசனை மூக்கைத் துளைக்குமே. வாயில் எச்சில் ஊருமே சாப்பிட. இப்போது, ''சீ. இதுவா. வேண்டாம்... காதல்...!!
''உனக்கு என்ன பூ பிடிக்கும் ராதா ?
''மல்லிகைப் பூ. எனக்கு சரம் சரமாக தலையில் வைத்துக் கொள்ள பிடிக்கும். ஏனோ இப்போது மல்லிகையும் அதன் மணமும் கூட அலுத்து விட்டதே.. ஏன் ? காதல்....!!
''என்னடி பெண்ணே, நான் ஒன்று கேட்டால், நீ ஏதோ சம்பந்தா சம்பந்தமில்லாமல் பதில் சொல்கிறாய்?... குணம் மாறி விட்டதே?
எதுவுமே மனதில் ஏறவில்லை என்றால் பதில் குழப்பமாகத்தானே வரும்...ஏன்? .. காதல்!!
உலகில் எதெல்லாம் எனக்கு சுகத்தை அளித்ததோ அதெல்லாம் இப்போது என்னை நரகத்தில் தள்ளுகிறது. நான் தேடும் சுகம்... கண்ணன் கண்ணன் கண்ணன் ...
''கண்ணா , நீ எங்கே, கண்ணிலே பட மாட்டேன் என்கிறாயே, எதற்கு கண்ணன் என்று பெயர் மட்டும் உனக்கு? இதனால் என்ன விளைந்தது தெரியுமா ?
பாலுங் கசந்ததடீ! படுக்கை நொந்த தடீ! கோலக் கிளிமொழியும் - செவியில் குத்த லெடுத்த தடீ!
நாலு வைத்தியர்களைக் கூட்டி வந்தார்கள் என்னைப் பரிசோதிக்க. அவர்கள் கை நாடி பார்த்தார்கள், என் கழுத்தில் கை அழுத்தி ஜுரம் பார்த்தார்கள், நாக்கை நீட்டினேன், கண் மேலே பார்க்க சொன்னார்கள், முதுகை தடவினார்கள், எழுந்தேன், நடந்து காண்பித்தேன். வயிற்றை பிசைந்து வியாதி தேடினார்கள்.
நாலு வைத்தியரும் - இனிமேல் நம்புவதற் கில்லை... இனி ஆண்டவன் விட்ட வழி .....அவ்வளவு தான்....!! என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்கள்.
சும்மா இருப்பார்களா என் வீட்டில்? ஆற்றின் பாலத்துக்கு பின்னால் ஒரு மாந்த்ரீகன். வீட்டு வாசலில் சூலம் நட்டு அதில் எலுமிச்சம்பழங்களை குத்தி வைத்திருப்பான். அவன் வீட்டை சுற்றி வேப்ப மரங்கள், ஒரு அம்மன் சிலை. உடுக்கு சத்தம் சதா கேட்டுக்கொண்டே இருக்கும் .பயமாக இருக்கும். அங்கே என்னைக் . கொண்டு போனார்கள்.
அவன் என்னைப் பார்த்து என்ன சொன்னான் ? மேலும் கீழும் பார்த்தான். சோழிகளை வீசினான் எதையோ பார்த்தான் தலை ஆட்டினான். ''கிரகம் சரியில்லை இப்போ இந்தப் பெண்ணுக்கு, கொஞ்சம் இப்படித்தான் படுத்து மென்று ஒரே போடாக போட்டு விட்டான். ..
தூக்கமில்லாமலேயே கனவு கண்டேன்... என் கண்ணில் படாத கண்ணன் என் நெஞ்சைத் தொட்டு என்னைக் கொள்ளை கொண்டு விட்டானே.
இனம் புரியாத இன்பம் அது. தூங்கியிருந்தால் தானே கண்ணைத் திறப்பதற்கு. அவனை எங்கே பார்ப்பது? மனதில் மட்டும் எப்படி இவ்வளவு பெரிய அளவில்லாத மகிழ்ச்சியை உண்டு பண்ணிவிட்டான் அந்த மாயக் கள்ளன், கண்ணன்.
ஒருவன் பரம சந்தோஷத்தில் இருந்தால் நான் என்ன சொல்கிறோம்? ''ஆசாமிக்கு உச்சி குளிர்ந்திருக்கு.''
ஆமாம் உண்மை. எனக்கு உச்சி, இமய எவரெஸ்ட் பனிமலை போல் குளிர்ந்தது. உடம்பு சரியாகி விட்டது. மாடியிலும் வீட்டு எல்லா பகுதிகளிலும் மனது பிடித்து வளைய வந்தேன் . எல்லோருடனும் கல கல வென்று சிரித்து பேசினேன். பயம் ஏக்கம் எல்லாம் என்னை விட்டுப் பறந்து போச்சு. என்ன ஆச்சர்யம். திடீரென்று என் மேனியில் ஒரு புது அழகு வந்திருக்கிறதே. நான் தான் ரதியா? ராதாவா? ராதிகாவா... ராதா....ராதா ராதா
அவன் என் நெஞ்சில் தொட்ட , அந்தக் கை பட்ட இடம் -- அதை எண்ணும் போதெல்லாம், எப்படி பனிக்கட்டி போல் குளிர்ந்திருக்கிறது. என் மனதில் எப்படி ஒரு சாந்தி, அமைதி, சந்தோஷம்,
''எண்ணி எண்ணி பார்க்க மனம் இன்பம் கொண்டாடுதே'' பாட்டு என் நினைவுக்கு வந்து விட்டது. உரக்க பாடுகிறேன். யார், எது, எவன் காரணம் இதற்கெல்லாம்?
''நித்திரையில் வந்து தொட்டு எழுப்பின வித்தகன் யாரோடி தோழி?'' பாட்டின் அர்த்தம் இப்போது தான் புரிகிறது.யோசித்து யோசித்து மண்டை காய்ந்தது.
எதிரேயே நின்றான் நான் கவனிக்க வில்லை. எதிர் சுவரில் புல்லாங்குழல் கொண்டு நின்றான்.......கண்ணா. நீயா. நீயா, நீயா !!!
++
''கண்ணன் என் காதலன்'' என்கிற தொகுப்பில் மகா கவி சுப்ரமணிய பாரதியார் கற்பனயில் வளர்ந்த கண்ணன் தான் மேலே சொல்லப்பட்டவன். அவரது பாடல்களை விரும்பி படிக்க கீழே பார்க்கவும்
கண்ணன்-என் காதலன்
செஞ்சுருட்டி-திஸ்ர ஏக தாளம்
சிருங்கார ரசம்
தூண்டிற் புழுவினைப்போல்-வெளியே
சுடர் விளக்கினைப் போல்,
நீண்ட பொழுதாக -எனது
நெஞ்சத் துடித்த தடீ!
கூண்டுக் கிளியினைப் போல்-தனிமை
கொண்டு மிகவும் நொந்தேன்;
வேண்டும் பொருளை யெல்லாம்-மனது
வெறுத்து விட்ட தடீ!
பாயின் மிசை நானும்-தனியே
படுத் திருக்கையி லே,
வாயினில் வந்ததெல்லாம்-சகியே!
தாயினைக் கண்டாலும்-சகியே!
சலிப்பு வந்த தடீ!
வளர்த்துப் பேசிடு வீர்;
நோயினைப் போலஞ்சி னேன்;-சகியே!
நுங்க ளுறவையெல் லாம்.
உணவு செல்லவில்லை;-சகியே!
உறக்கங் கொள்ளவில்லை;
மணம் விரும்பவில்லை;-சகியே!
மலர் பிடிக்கவில்லை;
குண முறுதி யில்லை;-எதிலும்
குழப்பம் வந்த தடீ!
கணமும் உள்ளத்திலே-சுகமே
காணக் கிடைத்த தில்லை.
பாலுங் கசந்ததடீ!-சகியே!
படுக்கை நொந்த தடீ!
நாலு வயித்தியரும்-இனிமேல்
நம்புதற் கில்லை யென்றார்;
பாலந்துச் சோசியனும்-கிரகம்
படுத்து மென்று விட்டான்.
கனவு கண்டதிலே-ஒருநாள்
கண்ணுக்குத் தோன்றா மல்,
இனம் விளங்க வில்லை-எவனோ
என்னகந் தொட்டு விட்டான்,
வினவக் கண் விழித்தேன்;-சகியே!
மேனி மறைந்து விட்டான்;
மனதில மட்டிலுமே -புதிதோர்
மகிழ்ச்சி கண்ட தடீ!
உச்சி குளிர்ந்ததடீ;-சகியே!
உடம்பு நேராச்சு
மச்சிலும் வீடுமெல்லாம்-முன்னைப்போல்
மனத்துக் கொத்த தடீ!
இச்சை பிறந்ததடீ-எதிலும்
இன்பம் விளைந்த தடீ;
அச்ச மொழிந்த தடீ;-சகியே!
அழகு வந்த தடீ!
எண்ணும் பொழுதி லெல்லாம்-அவன்கை
இட்ட விடத்தினி லே
தண்ணென் றிருந்ததடீ!-புதிதோர்
சாந்தி பிறந்ததடீ!
எண்ணி யெண்ணிப் பார்த்தேன்;-அவன்தான்
யாரெனச் சிந்தை செய்தேன்;
கண்ணன் திருவுருவம் -அங்ஙனே
கண்ணின் முன் நின்ற தடீ! attached is my drawing of Bharathi....
No comments:
Post a Comment