ஐந்தாம் வேதம் J K SIVAN
ப்ரம்ம தத்தன் கிளி
அம்பு படுக்கையில் உத்தராயணத்தில் உயிர் துறக்க காத்திருக்கும் பீஷ்மர் யுதிஷ்ட் ரனுக்கு பல நற் போதனைகளை சொல்கிறார். போதனைகளை நடுநடுவே சில குட்டிக் .கதைகள் சொல்கி றார்.
அவற்றில் ஒன்று நான் சுருக்கமாக சொல்லும் இந்த கதை.
''ப்ரம்ம தத்தன் கம்பிலியா நாட்டுக்கு ராஜா, அவன் மாளிகையில் என்ன நடந்தது என்று சொல்கிறேன் கேள், யுதிஷ்டிரா.
அவனிடம் ஒரு பச்சைக்கிளி. அதென்ன பச்சைக் கிளி. கிளி வேறே கலரிலா இருக்கும் என்று கேட்பவர்களே, கிளி பஞ்சவர்ணத்திலும் உண்டு. ப்ரம்மதத்தனின் கிளியின் பெயர் புஜானி . யார் என்ன பேசினாலும், பாடினாலும் அதேபோல் அது பேசிக்காட்டும் பாடிக்காட்டும். ஏதோ ஒரு கிளியாக பிறந்துவிட்டதே தவிர அதற்கு அபரிமிதமான ஞானம். புஜானிக்கு ஒரு குஞ்சு கிளி. ரொம்ப செல்லம் அது. ராஜாவுக்கும் ஒரு பிள்ளை குழந்தை. புஜானி தினமும் வெகு தூரம் பறந்து ஏதோ மரத்தில் நல்ல பழங்கள் கொண்டு வரும். தன் குஞ்சுக்கும் ராஜாவின் குழந்தைக்கும் கொடுக்கும். உயர்ந்த ரக அபூர்வ பழங்கள் கொண்டுவரும். ராஜாவின் பிள்ளை கிளிக் குஞ்ஜோடு விளையாடுபவன் ஒருநாள் அதை அழுத்தி பிடித்து மூச்சு திணறி கிளிக்குஞ்சு இறந்து விட்டது. வெளியே சென்று திரும்பிய புஜானி தனதுகுஞ்சு இறந்ததை கண்டு வருந்தியது.அழுதது. க்ஷத்ரிய ராஜ சிநேகம் என்றும் நல்லதல்ல என்று புரிந்து கொண்டது.
''க்ஷத்ரியர்கள் காரியவாதிகள். காரியம் நடந்துவிட்டால் கழுத்தை வெட்டுபவர்கள். நம்பத் தகாதவர்கள். நான் விடப்போவதில்லை.என் குஞ்சு இறந்ததற்கு பழி தீர்ப்பேன். என் குஞ்சும், அவன் பிள்ளையும் ஒரே நாள் பிறந்தவர்கள்.ஒரே வீட்டில் வளர்ந்தவர்கள் ஒரே உணவை உண்டவர்கள். நான் அவர்களை நம்பினேன். துரோகம் செய்யப்பட்டேன் ''
புஜானி தனது கூரிய நகங்களால் இளவரசன் கண்ணை குதறிவிட்டது. ப்ரம்ம தத்தன் நடந்ததை அறிந்தான். நேராக புஜானியிடம் வந்தான்:
'' ஓ புஜானி , என் பிள்ளை உன் குழந்தையை கொன்றான். நீ அவனைக் குருடனாக்கி விட்டாய்.பழி தீர்த்து விட்டாய். கணக்கு தீர்ந்துவிட்டது. நீ இனி எங்கும் செல்லவேண்டாம். இங்கேயே இருந்துவிடு''
' இல்லை மஹாராஜா. பழி தீர்த்த ஒருவன் பழிக்கு பலியானவன் குடும்பத்தோடு மீண்டும் சேர்ந்து வாழ்வது என்பது நடக்காத காரியம். கற்றோர்கள்,சான்றோர்கள் இதை ஒப்புக் கொள்வதில்லை. மாறாத வடு நெஞ்சில் இருக்கும்போது என்றும் அது எரிமலையாக வெடிக்கும். பிரிந்து அவரவர் வழியில் செல்வதே நல்லது. பழி பாவ உணர்வினால் வரும் பின் விளைவை, அழிவை தவிர்ப்பது நல்லது. சேர்ந்து இருந்தால் அது நம்பிக்கை த்ரோகத்தில் முடியும். மனதில் அமைதி குடி புகாது. நான் முன்பு உன்னோடு இருந்ததும், இனி இங்கே உன்னோடு வாழ்வதும் வேறு வகை. இங்கு நாம் அன்போடு நட்போடு இருந்தோம். நடக்கக்கூடாதது நடந்துவிட்டது. இனி அந்த நினைவு நெஞ்சில் ஆறாத வடுவாக உறைந்திருக்கும்போது மீண்டும் நட்பு, பாசம், அன்பு இவற்றிற்கு இடம் இல்லை. ஒரு பயத்தோடு தான் வாழவேண்டும். அது நமக்குத் தேவையல்ல'' என்றது கிளி.
'' நான் சொல்வதைக் கேள், புஜானி, நீ எங்கும் போகவேண்டாம். நான் செய்த தவறுக்கு நீ செய்த செயல் பரிகாரமாகி விட்டது . ஆகவே என் மனத்தில் எந்த கோபமும் கொலைவெறியும் இல்லை. நீ இங்கேயே இரு'' என்றான் பிரமதத்தன்.
'இல்லை, ப்ரம்மதத்தா, நமக்குள் முறிந்த உறவு மீண்டும் பழையபடி ஒட்டாது. ஒன்று சேர்வதில்லை. நமக்குள் இருக்கும் காயம் என்றும் தணியாது. அதன் வடு மாறாது. அதனால் விளைந்த கோபம் அழியாதது. ''அப்படியெல்லாம் நடக்காது நீ இங்கேயே என்னுடன் இரு'' என்று நீ சொல்லும் வார்த்தைக்கு அர்த்தம் இல்லை. பரஸ்பர நம்பிக்கைக்கு இதில் இடமே இல்லை. இனி நாம் சந்திக்கவே வேண்டாம். ஆயுதத்தால் மட்டும் ஆபத்து வருவதில்லை. மிருதுவான வார்த்தைகளாலும் பேராபத்து நிகழலாம். சக்தி வாய்ந்த காட்டு யானைகளைக் கூட பழக்கிய பெண் யானைகளைக் காட்டி குழியில் தள்ளி விடுகிறார்கள்'' என்றது புஜானி
''புஜானி, அப்படியெல்லாம் இல்லை. என்னை உனக்கு தெரியும். உனக்கும் என்னைத்தெரியும். நீ இங்கேயே இரு ''
''ப்ரம்ம தத்தா, விரோதம் ஐந்து காரணங்களால் உண்டாவது. சான்றோர்கள் அதை அறிவார்கள். பெண், மண், கடுஞ்சொல், இயற்கையாகவே உள்ள பொருந்தாத குணம். காயம். இவை தான் அந்த முக்கிய காரணங்கள்.
விரோதம் ஒரு பரந்த மனது கொண்டவனோடு விளைந்தால் க்ஷத்திரியன் அவனை நேராகவோ, மறை முகமாகவோ, கொல்லக்கூடாது . ஒரு நல்ல நண்பனோடு ஏற்பட்ட விரோதம், வெளிப்படையாக தெரியாது. மரத்தில் தீ மறைந்திருப்பது போல், எந்த நேரமும் தாக்கும். நம்பிக்கை பறந்துவிடும். என்னதான் பரிசுகள், அன்பு வார்த்தைகள் மேலோட்டமாக நிகழ்ந்தாலும், அடிமன கோபம், பழி தீர்க்கும் எண்ணம் மாறாது. எதிர் விளைவு பற்றி பயம், பழி தீர்த்தவனுக்கும் உள்ளூர இருந்து கொண்டே இருக்கும். உன் மீதுள்ள பழைய நம்பிக்கை இனி எனக்கு இல்லை ப்ரம்மதத்தா'' என்றது புஜானி .
''புஜானி உனக்கு தெரியாதா, காலம் எல்லா புண்களையும் ஆற்றிவிடும். நீ நினைப்பது போல் இல்லை, காலம் எல்லாவற்றையும், எல்லோரையும் ஒருநாள் மறையச்செய்துவிடும் '' என்றான் ப்ரம்ம தத்தன்.
''தப்பு ப்ரம்மதத்தா. காலம் கனியக் காத்திருக்கும். தக்க சமயத்தில் பழிவாங்கும். சிசுபாலனை அழிக்க கண்ணன் 100 தவறுகள் அவன் செய்யும் வரை காத்திருந்தான்.அதுவரை அவனிடம் கோபம் கொள்ளவில்லை. விரோதத்தை காட்டிக் கொள்ளவில்லை.
காலம் புண்களை ஆற்றிவிடும் என்றால் எதற்காக மருத்துவனை நாடுகிறார்கள்.? உடனே நோயிலிருந்து நிவாரணம் பெறத்தானே?
காலம் தான் எல்லாவற்றையும் கணக்கு தீர்த்துவிடும் என்று தெரிந்தும் ஏன் தவறுகளுக்கு பிராயச்சித்தம், ஹோமம் எல்லாம் செய்யவேண்டும்? சொல் . உன் பிள்ளை என் பிள்ளையை கொன்றான். நான் அவனை குருடாக்கினேன். நீ அதற்கு என்னை பழிவாங்கினால் கொல்ல முற்பட்டால், அது எதிர்பார்த்த செயலாக தான் இருக்கும்.
என் போன்ற பறவைகளைக் கொன்று தின்கிறார்கள். கூண்டில் அடைத்து வைக்கிறார்கள். இதை அறிந்த பறவைகள் மனிதர்கள் கண்ணில் படுவதில்லை, அவர்கள் கையில் சிக்குவதில்லை. தப்புகின்றன. துக்கம், துன்பம் இவற்றிலிருந்து தப்ப வழியில்லை. எல்லோரும் இன்பமாக இருக்கத்தான் விரும்புகிறோம்.
துன்பத்திற்கும் துயரத்திற்கும் எத்தனையோ உருவம். வறுமை, ஏமாற்றம், சுடு சொல், துரோகம், தனிமை, பிரிவு, மரணம், சிறை எல்லாம் கூட துன்பம் துயரத்திற்கு காரணம். பெண்களும் ஒரு காரணம். என் பிள்ளையின் மரணம் என் துக்கம். ப்ரம்மதத்தா, உன் மகன் நினைவு உனக்கு இருக்கும் வரை என் மேலிருக்கும் கோபம் தணியாது. எனக்கு இது தெரியும். புரியும். நம்பிக்கை முழுமையான இன்பத்தை தராது. சமாதானமாக யுத்தத்தை நிறுத்தும் க்ஷத்ரியர்கள், அரசர்கள், அடுத்து எப்போது படையெடுப்போம், வெல்வோம் கொல்வோம் என்ற அடிமனது எண்ணத்தோடு தான் ஒற்றுமை தேடுவார்கள். இது உலகில் எல்லோரும் அறிந்தது.
''நம்பிக்கை ஒன்றே எல்லா சந்தேகங்களையும் தகர்க்கும் ,புஜானி '' என்று முணுமுணுத்தான் ப்ரம்ம தத்தன்.
''நடக்காது பிரம்மதத்தா, தன் சக்தி, பலத்தை அறியாமல் எவன் ஒருவன் எதிர்ப்படும் தவறான கொடிய பாதையில் சென்றால் அவனுக்கு அழிவு நிச்சயம். காலம் அறியாமல் நிலத்தை உழுதால் நீரின்றி விதை விதைத்தால், ஊர் சிரிக்கும். விளைச்சல் எப்படி முடியும்?
வருமுன் காப்போன் அறிவு பூர்வமாக சிந்திப்பவன். புத்திசாலித்தனம் தான் ஒருவனுடைய உண்மை நண்பன். அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தால் தான் அவர்களுக்கு பாதுகாப்பு, நன்மை,மதிப்பு. நான் ஒரு பறவை, அரண்மனை வாழ்க்கை எனக்கு உகந்ததல்ல.இதை அறியாமல் ஏதோ சந்தோஷமாக, இன்பம் துய்ப்பதாக தவறான பாதையில் சென்ற எனக்கு என் குழந்தையின் இறப்பு கண்ணைத் திறந்துவிட்டது. நான் செய்தது என் குழந்தைக்கு பெரிய துரோகம். எங்கோ ஒரு மரத்தில் இருந்தால் என் குழந்தை பிழைத்திருக்கும். கூடா நட்பு கேடாய் முடிந்தது.
நான் வருகிறேன் நண்பா என்று ப்ரம்ம தத்தனிடம் சொல்லிவிட்டு புஜானி காட்டை நோக்கி பறந்தது.
No comments:
Post a Comment