Wednesday, October 30, 2019

VISHNU SAHASRANAMAM




ஐந்தாம் வேதம்     J K SIVAN 
விஷ்ணு ஸஹஸ்ரநாமம் 

                                                          ஆயிர  நாமன் 

மஹா பாரதம்  எனும் மஹா காவியத்தை எளிய முறையில் தெளிவாக  எழுத பிரயாசைப்பட்டேன்.  லக்ஷத்துக்கும் மேற்பட்ட ஸமஸ்க்ரித  ஸ்லோகங்களில் வேத வியாசர் அளித்ததை இரவும் பகலுமாக  கிட்டத்தட்ட  ஒன்றரை - ரெண்டு வருஷமாக  படித்து அர்த்தம்  புரிந்து கொண்டேன்.  அதில்  மூன்று கட்டங்கள்  என்னை சோதித்தன.

முதலில்   வனவாசத்தில் யுதிஷ்டிரன்   யக்ஷனாக  மாறுவேடத்தில்  வந்த தர்ம தேவதையோடு  எதிர்ப்பட்டு அவனது கேள்விகளுக்கு அருமையாக பதில் அளித்து  இறந்த  தனது  நான்கு சகோதரர்களை உயிர்மீட்டது.  இது ''யக்ஷ ப்ரஸ்னம்''   எனும் அருமையான   பொருட்செறிவு மிகுந்த பகுதி.  அதை ஒருவாறு திருப்திகரமாக  அவனருளால் எழுதி முடித்து அந்த பகுதியை ஒருவாறு  கடந்து  அது ஒரு புத்தகமாகவே ஆங்கிலத்திலும் தமிழிலும்  வெளிஇடப்பட்டு  ''அவசர கேள்வியும் அவசிய பதிலும்''  என்று  தமிழிலும்,   THE ETERNAL  QUESTIONS  WITH  EVERLASTING  ANSWERS  பெயரில்  ஆங்கிலத்திலும்  இலவசமாக  விநியோகித்தோம். 
 

அடுத்தது இன்னும் பெரிய ஒரு சோதனை.  பதினெட்டு நாள் யுத்தம் ஆரம்பத்தில் அர்ஜுனன் சோர்வுற்று யுத்தம் புரிய விருப்பமின்றி அயர்ந்து போய் தரையில் அமர்ந்த இடம். அப்போது அவனுக்கு  வாழ்வின் ரகசியத்தை  கர்மா, கடமை, பக்தி ஞானம் தர்மம் முதலிய உயரிய விஷயங்களை உணர்வித்து யுத்தம் புரிய வைத்த பகுதியான பகவத் கீதை.  இதையும் அந்த ஸ்ரீ கிருஷ்ணன் அருளினால் ஒருவாறு திருப்திகரமாக எழுதி முடித்து ''விஸ்வரூபன் காட்டும் வழி''  என்ற புத்தகமாக  வெளியிட்டோம்.
அதற்கடுத்த  மிகப் பெரிய சோதனை இப்போது.''விஷ்ணு ஸஹஸ்ர நாமம்'' .  

ஸ்ரீ கிருஷ்ணன்,  '' யுதிஷ்டிரா, இன்னும் சில நாளில் பீஷ்மர்  விண்ணுலகெய்திவிடுவார்.  அவரை அணுகி வணங்கி அவரிடம் ஆசிபெற்று  விஷ்ணுவின் ஆயிர நாமங்களை அறிந்து அதை உச்சரிப்பதினால் கிடைக்கும் பலனையும்  அறிந்து  கொள்'' என்று பீஷ்மரிடம் அவனை அனுப்புகிறார்.  இந்த பகுதி  மிகவும் அர்த்தம் செறிந்த சிறந்த தெய்வீக ஸ்லோகங்கள் நிறைந்தது. அதையும்  தமிழில் தெளிவாக விளக்கி குழந்தைகளுக்கு பரிசளிக்க அந்த  கிருஷ்ணனையே  வேண்டினேன்.எனக்கு தெம்பு கொடுத்தான்.  எழுத ஆரம்பித்தேன்.

முதலில் நான் புரிந்து கொண்டால் போதுமானது. ஏனெனில் என்னிலும் தாழ்ந்தவர் இருக்க முடியாதே. ஆகவே நான் புரிந்து கொள்ளும்படியாக அமைந்தால் எனது முயற்சி இதை மற்றெல்லோரும் படித்து எளிதில் புரிந்து கொள்ளலாம்.  இது  ''ஆயிர நாமன்'' என்ற பெயரோடு ஒரு சிறு புத்தகமாக வழக்கம்போல்   பள்ளிச் சிறுவர்களுக்கு இலவசமாக சென்றடைய வேண்டும் என்ற என்  விருப்பம்  மேற்சொன்ன  மூன்று புத்தகங்க ளும் வேண்டுவோர் என்னை  வாட்ஸாப்ப்  நம்பரில் 9840279080ல்  அணுகவும்.

இனி உள்ளே சென்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணனின் (மஹா விஷ்ணுவின்)  ஆயிர நாமங்களை பீஷ்மர் உச்சரிக்க  கர்ணாம்ருதம் பெறுவோம்.  ஸ்ரீ   கிருஷ்ணனே இதை நம்மோடு பீஷ்மர் சொல்லும்போது குறுக்கே பேசாமல்  கேட்டுக் கொண்டி ருக்கிறார்.   கடைசியில் திருவாய்  மலர்கிறார்.

 இனி தெய்வீக பகுதிக்குள் பிரவேசிப்போம்.

இதில் ஏதேனும் தவறுகள் இருப்பின் அது அடியேனின் அறியாமையால் விளைந்ததாகும்.  சரியாக இருப்பின் ஸ்ரீ கிருஷ்ணனின் அனுக்கிரஹம் என்று எடுத்துக்கொள்வோம்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...