Thursday, October 24, 2019

PESUM DEIVAM




பேசும் தெய்வம் J K SIVAN
மஹா பெரியவாவின்  தீபாவளி பரிசு


கடலும் கடவுளும்

நான் அடிக்கடி சொல்லிண்டே  இருக்கி றேனே.  மஹா பெரியவா எவ்வளவு கடினமான தத்துவமாக இருந்தாலும் எளிதில் புரிகிற மாதிரி சின்ன சின்ன எல்லோருக்கும் தெரிந்த உதாரணங்களை வைத்து விளக்குவார் . சமுத்ர ஜலத்தை உதாரணமாக காட்டி சர்வேஸ்வரனை   புரிய வைத்த விஷயம் தான் இந்த செய்தி.      இதை படிக்கிறபோது நான் அனுபவித்த சந்தோஷத்தை  நீங்களும் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே சுருக்கி தருகிறேன்.

இந்த  சிவனுக்கு  ஒண்ணுமே தெரியலையே. சொன்னதையே  திருப்பி திருப்பி சொல்றானே.  எழுதியதையே  திரும்ப திரும்ப எழுதறானே என்று தோன்றலாம். தப்பே  இல்லை. 'எனக்கு இது ஏற்கனவே தெரியுமே, ஏன்யா இதையே திருப்பி திருப்பி அனுப்பறே?'' என்று கோபித்துக்  கொள்ள நிறையவே  காரணம் இருந்தாலும் ''ஐயா, தெரியாதய்யா'' என்று  நான்  கெஞ்ச மாட்டேன்.  தியாகராஜ சுவாமிகள் கீர்த்தனை எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னாலே எழுதி ஆயிரம் தடவை கேட்டபோதும் ''நீ தய ராதா'' என்று ஒருவர் பாவத்தோடு பாடினால் சைக்கிளை சுவற்றில் சார்த்தி விட்டு கண்களை மூடி தலையை ஆட்டி ரசித்து நின்று கேட்கிறோமே. மகாபெரியவா ஞானத்தை என் போன்ற ஒரு சாதாரணம ஆசாமி தனக்கு தெரிந்தவரை  ஏதோ ஆர்வத்தோடு எழுதினால்  கூட  அந்த  பரம ஞானியின்  வாக்கு பற்றி படிக்க கசக்குமா?

”சமுத்திரம் ஆடாமல் அசையாமல் இருக்கிற போது ஒரு காற்று அடித்தால் உடனே அதில் ஜலத்துளிகள் குமிழ்களாகத் தோன்றுகின்றன. இன்னோரு காற்று அடிக்கிறபோது அந்தக் குமிழ்கள்உடைந்து போகின்றன. பரமாத்மா ஆடாத அசங்காத சமுத்திரம் மாதிரி. மாயை என்ற காற்றினால் அதிலே ஜீவாத்மாக்கள் என்கிற நாமெல்லாம் குமிழ் மாதிரி தோன்றியிருக்கிறோம். ஆசாரியாருடைய கடாக்ஷம் என்கிற நல்ல காற்று நம் மேல் பட்டால் குமிழ் உடைந்து ஜலத்துளி சமுத்திரத்தோடு ஜக்கியமாகி விடுவதுபோல், நாமும் பரமாத்மாவிடம் இரண்டறக் கலந்து விடுவோம்.''

''சமுத்திர ஜலம் என்றென்றும் அளவு குறையாமலேதான் இருக்கிறது. அதிலிருந்து ஆவி பிரிந்து மேகமாக மேலே சென்று மழையாகி, உலகத்தில் பல விதங்களில் நதி, ஒடை, வாய்க்கால், ஏரி, குளம், கிணறு என்று ஜலாசயங்களாக ஆகின்றன. சமுத்திரம் வற்றுவதில்லை. அதில் புதிதாக வெள்ளம் வருவதுமில்லை. அதிலிருந்து வந்த ஆறு குளங்கள் வற்றலாம். அல்லது இவற்றில் வெள்ளம் வரலாம். வெயில் நாள்களில் வீட்டுக் குழாய்களில் ஜலம் இல்லை. ரெட்ஹில்சில் ஜலம் இல்லை என்கிறோம். .மழைக் காலத்தில் கோதாவரியில் வெள்ளம், காவேரியில் உடைப்பு என்று பேசுகிறோம். ஆனால் சிருஷ்டி காலத்தில் இந்த உலகத்தில் எத்தனை ஜலம் இருந்ததோ அதில் ஒர் இம்மிகூட - க்ரெயின் grain  கூட -இன்றுவரை குறைய வில்லை. கூடவும் இல்லை.''

''பணக்காரர்கள் சிலர் நிலத்தை விற்று வீடு வாங்குவார்கள். வீடுகளை விற்று பாங்கில் போடுவார்கள்.பங்குப் பணத்தை ஷேர்களாக மாற்றுவார்கள். மொத்தச் சொத்து மாறாது. அவற்றின் ரூபம் தான் பலவிதங்களில் மாறும். எல்லாவற்றையும் கூட்டினால் கணக்கு சரியாக இருக்கும். அப்படியே தான் லோகத்தில் உள்ள மொத்த ஜலம் சமுத்திரத்தில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மேகத்தில்இருக்க வேண்டும். அல்லது நதியாக, ஏரி, குளங்களாக இருக்க வேண்டும்.''

''பரமாத்மாதானே   பலவாகத் தோன்றி யிருக்கிறார். தோன்றிய பின்னும் சமுத்திரம் மாதிரி கூடாமல், குறையாமல் இருக்கிறார். நமக்குக் கூடுதல், குறைவு எல்லாம் உண்டாகிற தாகத் தோன்றுகிறது.ஆனால் உள்ளது ஒன்றேதான் என்ற ஞானம் வந்தால், எங்குமே கூடுதலும் இல்லை. குறைவும்இல்லை.''

''ஜலத்தை திருஷ்டாந்தமாக வைத்துப் பரமாத்ம- ஜீவாத்ம ஸம்பந்தத்தைச் சொல்லும்போது நதிகளைப் பற்றி விசேஷமாகச் சொல்ல வேண்டும்.

சமுத்திர ஜலம் மழையாகி அதிலிருந்து ஏரியும், அதிலிருந்து குளமும், குட்டையும், கிணறும்உண்டாகின்றன. இவை மறுபடியும் சமுத்திரத்தில் கலப்பதில்லை. ஆனால், எல்லா நதிகளும்சமுத்திரத்தையே தேடி வந்து கலந்து விடுகின்றன.

வடக்கே ஒரு நதிக்கு ஸோன் என்று பெயர். சோணம் என்றால் சிவப்பு. இந்த நதி சிவப்பான மண் வழியே ஒடுகிறது. ஆந்திராவில் கிருஷ்ணா நதி இருக்கிறது. கிருஷ்ணா என்றால் கருப்பு. இந்த நதி கருப்பு மண்மீது ஒடுகிறது.

கங்கை என்றால் வெளுப்பு. இதுவும் அது ஒடுகிற பிரதேசத்தைப் பொருத்து அமைந்த பெயர்தான். மூன்றும் ஒரே கடலில்தான் கலக்கின்றன. சிகப்பு ரஜோ குணம், கருப்பு தமோ குணம். வெள்ளை ஸத்வகுணம். மனசானது முக்குணங்களில் எதில் பாய்கிறதோ, அதை ஒட்டி ஜீவாத்மாவின் சுபாவம் அமைகிறது. எப்படியானாலும், கடைசியில் பரமாத்ம சமுத்திரத்தில்தான் கலந்தாக வேண்டும்.( water finds its level ).

தொடர்புடைய நீர்ப்போக்கு ஒரே மட்டத்தில் இருக்க  முயலும் என்பார்கள். மலை உச்சியில் மழை பொழிந்து நதி உண்டாகிறது. அங்கிருந்து கீழே கன வேகமாக, ஒரே இரைச்சலோடு நதி விழுகிறது. அப்போது அதற்கு நாம் வைக்கும் பெயர் நீர் வீழ்ச்சி. பூமியில் ஒடும்போது அத்தனை சத்தம் இல்லை. முடிவில் சமுத்திரத்தில் கலந்த பின் சத்தமே இல்லை. அப்போதுதான் நதி தன் லெவலுக்கு வருகிறது. அதாவது 'லெவலுக்கு' வந்தவுடன் பரம சாந்தமாகிறது. எதிலுமே சரி, 'லெவல்' - அதாவது அளவு அறிந்து, அந்த மட்டத்தோடு நிற்கிற மனோபாவம் வந்தால் தான் சாந்தம் உண்டாகும். 'லெவலுக்கு' மீறிச் செய்கிற தாட்பூட் காரியங்கள் பிறருக்குப் பிரமிப்பூட்டலாம். ஆனால் இதனால் நாமே நம் சாந்தியைக் குலைத்துக் கொள்வது தான் பலன்.

உருட்டல், புருட்டல், மிரட்டல், இரைச்சல் எல்லாவற்றையும் குறைத்து அடக்கமாக வருகிற நதியை சமுத்திரம் எதிர் கொண்டு சென்று ஏற்று பின் வாங்கிச் செல்கிறது. இதனால் தான் நதியின் சங்கம ஸ்தானங்களுக்குச் சிறிது தூரம் முன்னாலிருந்தே உப்புக் கரிக்கிறது. நாம் லெவலை மீறாமல்,அடக்கமாகச் சென்றால், பரமாத்ம சமுத்திரமும் நம்மை எதிர் கொண்டு அழைத்துப் போய் தனக்குள் அடக்கம் செய்து கொண்டு விடும்”

மேலே   மூன்றாவது பாராவிலிருந்து  இதுக்கு முதிய பாரா வரை பெரியவா வாக்கு. தெய்வத்தின் குரல்.   இதைக்  காட்டிலும் தெளிவாக யாராவது சொல்ல முடியுமா. இதை நீங்களும் ரசித்து தெரிந்த அறிந்த அத்தனை பேருக்கும்  தீபாவளி பரிசாக  அனுப்புங்கள். உங்களால் ஒரு நல்ல காரியம் முடியுமென்றால் செய்ய என்ன யோசனை?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...