பழங்கதை J K SIVAN
சாதுக்களும் மசூதி மந்திரமும்....
ஒரு காலத்தில் நமது பாரத தேசத்தின் ஒரு சிறப்பு அம்சமாக நாடெங்கிலும் துறவிகள், தாடியோடு, மீசையோடு, சடையோடு, மழித்த மொட்டை தலையோடு, காவியோடு, ருத்ராக்ஷம், மணி, துளசி மாலைகளோடு கையில் வெறும் கொப்பரையோடு, அல்லது ஒரு ஜோல்னா பையோடு வெறுங்காலோடும், காலணி அணிந்தும், உடலில் திருமண் ணோ, சாம்பலோ, குங்குமமோ, தரித்தவர்கள் எங்கும் காணப்பட்டார்கள். அவர்களுக்கு நிரந்தர இடம் என்று இல்லாமல் கோவில் குளம், காடு மேடு சத்திரம் சாவடி மரத்தடி என்று தங்கி வாழ்ந்தார்கள்.
குடும்பம், சொத்து, சொந்த பந்தம் இல்லாத சுதந்திரர்கள் இவர்கள் சாதுக்கள் எனப்பட்டார்கள். இப்போது குறைந்துவிட்டார்கள்.
பழங்காலத்து ஒரு காட்சி.ரெண்டு குழந்தைகள், ஒரு பத்து பன்னிரண்டு வயது , பையன் ஒரு பெண் அவன் தங்கை 8-10 வயது இருக்கலாம். தங்களது பாடி வீட்டிலிருந்து தங்கள் கிராம வீட்டை நோக்கி எங்கிருந்தோ வெகுதூரம் நடந்து வருகிறார்கள். தூரத்தில் மலையை பார்த்துக்கொண்டே நடந்தார்கள். தெருக்கள் எதுவும் கிடையாது. வயல்வெளிகள். காடுகள், புதர்கள். அஸ்தமன நேரம். இனி இருள் கொஞ்சம் கொஞ்சமாக கவ்வும். சீக்கிரம் வீட்டை அடையவேண்டும். மனதில் அந்த குழந்தைகளுக்கு ஒரு பயம் வந்துவிட்டது. எங்கும் திருடர்கள் கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள் என்ற பயம் அப்போதெல்லாம் மக்களுக்கு உண்டு. தெருக்கள் கிடையாது. விளக்கொளி வெளியில் எங்கும் இல்லை. ஒரு சில வீடுகள் குடிசைகளில் முணுக் முணுக் என்று எண்ணெய் தீபங்கள் எரியும். மறையும் ஒளியில் உற்றுப்பார்த்துக் கொண்டு ஒரு பெரிய ஆலமரம் தெரிகிறதா என்று தேடினார்கள். அது தெரிந்தால் அதற்கு அருகில் தான் அவர்கள் வீடு. மரம் எங்கோ இருட்டில் தெரிந்தும் தெரியாமலுமாக இருந்தது. நிறைய மரங்கள் வேறு இருக்கிறதே. வெள்ளை மேகத்திரையா, புகையா, அது வேறு எல்லாவற்றையும் மறைக்கிறது.
எங்கிருந்தோ ரெண்டு ஆஜானுபாகுவான சாதுக்கள் அந்த குழந்தைகள் கண்களில் படுகிறார்கள். இவர்கள் எங்கிருந்து திடீர் என்று முளைத்தார்கள். சிறுவன் சிறுமிக்கு ஒருபுறம் ஆச்சர்யம் அதே சமயம் பயம். இந்த ஆட்கள் நல்லவர்களா, கெட்டவர்களா? பயம் நெஞ்சடைக்க குழந்தைகள் வேகமாக நடக்கிறார்கள்.
அந்த ரெண்டு சாதுக்களும் காவித்துணி கட்டியவர்கள். மொட்டைத்தலை, மீசை தாடியில்லாத முகங்கள். குழதைகளை வெட்டி காளிக்கு நரபலி கொடுக்கும் பழக்கம் இருந்தது.
சிறு குழந்தைகள் இருவரையும் பார்த்துவிட்டார்கள். முகத்தில் ஒரு சிரிப்பு. ''வா வா ''என்று சைகை காட்டுகிறார்கள். ஒரு சாது தனது ஜோல்னா பையை தொட்டு காட்டுகிறார். ''உனக்கு பிடித்த தெல்லாம் இதில் இருக்கிறது '' என்று ஆசைகாட்டுகிறாரா? கிடு கிடு வென்று அந்த குழந்தைகள் எதிரே தெரியும் ஆற்றில் இறங்குகிறார்கள்.
''திருடர்களோ, நம்மைப் பிடித்துக் கொண்டு போய்விடுவார்களோ என்று பயமோ என்ன சந்தேகமோ, அந்த குழந்தைகள் மனதில்?' ஆற்றில் படகுக்காரர்கள் கரைகளில் வாடிக்கையாளர்களுக்கு காத்து இருப்பது தெரிகிறது. ஒரு படகுக்காரன் ஏதோ கேட்கிறான். புரிந்த பாஷை என்பதால் குழந்தைகள் ஏதோ சொல்ல ஒரு படகில் அமர்த்திக் கொள்கிறான். படகு எதிர்க்கரை செல்கிறது. தாவி கர்ப்பிணிக்கு ஓடும் சிறு குழந்தைக்கு எதிரே பெரிய ஆலமரம் தெரிகிறது. சற்று தள்ளி அவர்கள் வீட்டுக்கு ஒடத்தெறியும். இந்த காட்சி என் மனதில் பல வருஷங்களுக்கு முன்பு பதிவானது. இன்னும் மறக்கவில்லை...
சூளைமேட்டில் ஒரு மசூதிக்கு ஏழு எட்டு வயதான என்னை இளம் வயது நண்பர்கள் சான் பாஷா, கரீம், ஆகியோர் கூட்டி செல்வார்கள். வாசலில் நிறைய பெண்கள், தாய்மார்களும், பாட்டிகளுமாக, குழந்தை களை கையில் ஏந்தி நிற்பார்கள். தொப்பி, தாடி நீள ஜிப்பா, லுங்கி அணிந்த சிலர் மசூதியிலிருந்து தொழுகை முடிந்து வெளியே வரும்போது வரிசையாக அந்த சிறு குழந்தைகள் மேல் ஊதி விட்டு செல்வார்கள். காசு வாங்கமாட்டார்கள். மந்திரிப்பது கூட இலவசம் தான்.காலை மாலை இருவேளையும் இந்த சேவை தொடரும்.
வாசலில் ஒரு மூங்கில் தடி கொம்பில் நிறைய கலர் கலராக பட்டுநூல் கயிறுகள் கட்டிக் கொண்டு ஒரு முஸ்லீம் நிற்பார். தோளில் அழுக்கு கித்தான் பையில் சில தாயத்துகளும் இருக்கும். காசு கொடுத்தால் தாயத்து கோர்த்து பட்டுநூலை கையிலோ இடுப்பிலோ கட்டிவிடு வார். காசு ரொம்ப இல்லை தாயத் துக்கு நாலு அணா. தாயத்து வாங் கினால் நூல் free. வெறும் நூல் கட்டி விட்டால் அரையணா.
எங்கள் தெருவில் ஒருவன் தேவாங்கு (AYE AYE/ LORIS ) என்று ஒரு சிறு வால் நீண்ட குரங்கு மாதிரி பெரிய கண்களோடு மொசு மொசு வென்று இருக்கும் சிறு மிருகத்தை இடுப்பில் கயிறு கட்டி ஒரு தடி கொம்பு மேல் உட்காரவைத்துக்கொண்டு வருவான். அவனது மூக்கில் கைத்தடியின் மேல் சௌகர்யமாக உட்கார்ந்து இருக்கும். இல்லையென்றால் தூங்கும். அதன் கையில் ஒரு நூல் கொடுத்து அது தடவிக்கொடுத்ததும் இடுப்பில் கட்டி விடுவான். அது. ரக்ஷை. தோஷங்கள், வியாதிகள் குணமாகும் என்று பரிபூர்ண நம்பிக்கை தாய்மார்களுக்கு இருந்தது. நான் வெகுகாலம் தேவாங்கு கொடுத்த அரணாக்கயிறு (அரை ஞாண்) கட்டிக்கொண்டிருந்தவன் தான்.
No comments:
Post a Comment