Monday, October 7, 2019

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம்   J K  SIVAN 
மஹாபாரதம் 

                                                       
                                     ஞானிகளின் சம்பாஷணை

நாம் ஜீவிப்பதே  காற்றினால் தான். காற்றில்லை யென்றால் மூச்சடைக்கிறது என்று சொல்கிறோம். மூச்சே நின்று போகும். அதனால் தான்  யோகிகள், சித்தர்கள்  நாம் எல்லோரும் காற்றடைத்த பைகள் என்கிறார்கள்,  காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா.....  இந்த பையில் நிறைய  துளைகள், ஒன்பது துளைகள், நவத்துவாரம் இருந்தும் உள்ளே இருக்கிற காற்று வெளியே போகாதிருப்பது நமது அதிர்ஷ்டம். அப்படி உள்ளே இருக்கிற காற்று ஐந்து வகையானது.  அதையே  பஞ்ச பிராணன் என்கிறோம்.

அதை தான்  பீஷ்மர்  யுதிஷ்ட்ரனுக்கு  விளக்குகிறார்.

'யுதிஷ்டிரா, உயிர் வாழும் ஜீவன்களுக்கு பஞ்சபிராணன், (வாயு), புரியும் சேவை என்ன தெரியுமா? வித வித மான செயல்களை உடலில் புரிந்து உயிர்களை பூமியில் வாழ உதவுகின்றன.  உயிர் வாழ பிரதானமானது பிராணன்.

முதல் வாயுவாக சொல்லப்படும் சமானன் (பிரவாஹன்)மேலே மேகக்கூட்டங்களை புகையாலும் உஷ்ணத்தாலும் உருவாக்குகிறது.

இரண்டாவது வாயு (ஆவாஹன்)மனித உடலில் உதானன் என்று பெயர். மேகங்களை இடிக்கச் செய்து ஒளியும், ஒலியும் உண்டாக்குபவன்.

நீர்நிலை,கடல் போன்ற நீர்ப்பரப்பில் நீரை உஷ்ணத்தால் உறிஞ்சி உருகி ஆவியாகி மேகமாகச் செய்ய உதவுபவன். வியானன் என்ற மூன்றாம் வாயு செய்வது இது.

நான்காவது வாயு பலம் மிக்கவன். மலைகளை தாக்குபவன்.

ஐந்தாவது வாயு சக்தியும் வேகமும் கூடியவன். மரங்களையே வேரோடு சாய்ப்பவன். மேகங்களை இடப்பெயர்ச்சி செய்பவன். (விவாஹன்)

ஆறாவது ஒருவன் இருக்கிறான். அந்த வாயு மேலே விண்ணுலக நதிகள் நீர் நிலைகளை பூமியிலே விழாமல் தாங்கிப் பிடிப்பவன். சூரியனின் உஷ்ணத்தையே பூமியில் தகிக்க செய்யாமல் தடுத்து குறைப்பவன். அவன் சக்தியால் தான் சந்திரன் தேய்ந்தும் வளர்ந்தும் காணப் படுகிறான்.அவன் பெயர் பரிவாஹன்.

உலக வாழ்க்கை இருக்கிறதே அது ஒரு நதி போல.மனிதனின் தனித்தன்மை தான் அதன் கரைகள். மனது தான் நீரோட்டம்.அவனது விருப்பு வெறுப்புகள் பிடிப்புகள் தான் தீவுகள்.அவனது ருசி தான் சுழல். நுகர்வது தான் சேறு.பேச்சு தான் நதியின் ஜலம்.

பிறவி எடுத்த உடல் என்னும் ஓடத்தால் தான் வாழ்க்கையெனும் நதியை கடக்க வேண்டும். மன்னிக்கும் குணம் தான் படகை செலுத்தும் துடுப்பு. ஓடம் ஆடாமல் அசையாமல் சீராக செல்ல உதவும் முன் பாரம் பின் பாரம் தான் சத்தியம். நேர்மை தான் படகை சரியான, தேவைப் படும் பக்கம், இழுத்துச் செல்லும் பாய்மரம். தானம், தர்மம், தான் ஓடத்தை சாதகமாக இழுத்துச் செல்லும் காற்று.

அப்பனே, இந்த உலகவாழ்க்கையில் சுகத்தின் அளவை விட துக்கத்தின் அளவு அதிகம். இதில் சந்தேகமே வேண்டாம். எனவே தான் ஐம்புலன்களால் கிட்டும் சுகத்தையே விரும்பி அதன் விளைவாக கடைசியில் நேரும் மரணத்தை கண்டு அஞ்சுபவர்கள் அதிகம். விஷயம் அறிந்த ஞானி சுகம் துக்கம் இரண்டையுமே உடைத்து துடைத்து எறிந்துவிட்டு பிரம்மத்தை அடைகிறான். இப்படிப் பட்ட ஞானி இந்த உலகை விட்டு நீங்கும்போது விஷயமறிந்தவர்கள் அவனைப் பற்றிய எந்த வருத்தமும் துயரமும் கொள்வதில்லை.

செல்வம், செல்வம், என்று விடாது துரத்தி அதைத் தேடுபவர்கள் அறியாதது என்ன தெரியுமா? அதை சேர்ப்பதிலும் துன்பம், அதை செலவழிப்பதிலும் துயரம் அதைப் பாதுகாப்பதிலும் துக்கம் அடைய வேண்டி யிருக்கிறது. செல்வத்தை நாடி ஓடி அலைபவன் திருப்தியை என்றும் அடைந்ததில்லை. அடையும் முயற்சியிலேயே ஆயுள் முடிந்து துன்பத்தோடும் அதிருப்தியோடும் தான் மறைகிறான்.

ஒவ்வொருவனுக்கும் குறித்துள்ள வாழ்நாளில்  ஒவ்வொரு கணமும் மரணத்தை நோக்கி அவனை இழுத்துச் செல்கிறது என்று புரிந்துகொண்டு உடலின் திருப்தி காரணம் அற்றது, தேவை அற்றது என்று உணர வேண்டும். உடலே நிலையானதல்ல என்ற போது அதற்கு திருப்தி வேறா? துடைப்பத்துக்கு பட்டுக் குஞ்சலமா?

உயரத்தில் இருப்பதாக காண்பதெல்லாம் தரைமட்டமாகும். கூட்டுச் சேர்க்கை காலப் போக்கில் தனிமையில் தள்ளும். வாழ்க்கை மரணத்தை தழுவும். தாகம் தணியாமலேயே மனிதன் மரணத்தை அடைவான். எனவே தான் ''போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து ''என்கிறார்கள். அளவற்ற திருப்தியை அது தரும்.

பழைய பாட்டு ஒன்று நினைவிருக்கிறதா? ''உலகே மாயம், வாழ்வே மாயம், நிலையாக நாம் காணும் சுகமே  மாயம்''. என்ற அந்த பாட்டு எவ்வளவு அரத்த புஷ்டியோடு இதை உணர்த்துகிறது. (தமிழ் சினிமாக்களில் பிச்சைக் காரர்கள், பைத்தியக்காரர்கள், குடிகாரர்கள் தான் நீதி வேதாந்தம் எல்லாம் பேசுவார்கள்.பாடுவார்கள். ஏனோ அப்படி ஒரு டைரக்ஷன் அப்போது?? )

நாரதரிடம் பேசிக்கொண்டிருக்கும் சுகர் மேலும் சொல்கிறார்: '

'மனிதனின் கை கால்களை வழி நடத்துவது அவன் கண்கள். அந்த கண்களை, காதுகளை, ஐம்புலன்களையும் கட்டுப்படுத்துவது மனம். அவன் மனத்தையும் வாக்கையும் ஆளுமை செய்வது அறிவு. இதெல்லாம் அறிந்து அடக்கமாக இருப்பவன் அறிவாளி எனப்படுகிறான்.சுகம் அடைகிறான்.

தனது ஆன்மாவை உணர்ந்தவன் வேறெதிலும் நாட்டம் கொள்வதில்லை ஆகையால் பரம யோகியாய் ஆனந்தத்தில் ஆழ்ந்து இன்புறுகிறான். தன்னை அறிந்தவன் எதற்கு மற்றதை அறியவேண்டும்?

இரவுகளும் பகல்களும் மனித வாழ்க்கையின் அளவைக் குறைத்துக் கொண்டே வருகின்றன. .நதியில் வெள்ள நீரோட்டம் ஓடுவது போல் ஒரே போக்கில் மரணத்தை நோக்கி இழுத்துச் செல்கின்றன. தேய் பிறை, வளர் பிறை காலங்கள் அவன் வாழ்க்கையை நடத்திச் செல்கிறது. உதயமும் அஸ்தமனமுமாக சூரியன் மனிதனது செயல்களுக்கு நேரம் கொடுத்து சுக துக்கங்களை அனுபவிக்க விடுகிறான். பாவம் மனிதன் ஆசை, விருப்பம் எதிர்பார்ப்பு என்று நிழலைத் தேடி ஓடுகிறான். ஞானம் உள்ளவன் இதெல்லாம் உணர்ந்து பற்று நீக்கி, நீங்கி, சுக துக்க அனுபவங்களிலிருந்து விடுபடுகிறான்.

இது போல நிறைய நாரத ரிஷி சுகருக்கு எடுத்துச் சொன்னதும், சுகர் அவரை சுற்றி வந்து நமஸ்காரம் செய்து ''ப்ரம்ம ரிஷி எனக்கு ப்ரம்ம ஞானம் உபதேசித்தது என்னை மேலும் சீராக்கியது '' என்று கூறுகிறார்

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...