Tuesday, October 29, 2019

NEELA DEVI



             
நீளா தேவி  -  ஜே கே . சிவன் 

தீபாவளி ஒவ்வொரு வருஷமும் வந்தாலும் ஒவ்வொரு வருஷமும் மட்டற்ற மகிழ்ச்சியையும், வண்ண தீப்பொறிகளாக வாணங்களோடும், ஒளி மயமான தீபங்களுடனும், செவி பிளக்கும் வெடி யோசைகளுடனும் புத்தாடை அணிந்த,இனிப்புகளை எதிரில் தட்டோடு  நமக்கு  அளிக்கிறது. இப்போதெல்லாம்  கன்னா  பின்னா என்று கண்டதையெல்லாம், கண்டநேரத்தில்  வெடிக்க தடையும் உள்ளது.

தீபாவளி என்றால் கிருஷ்ணன் நினைவு வரவில்லை என்றால் அவன் ஹிந்து இல்லை.
கிருஷ்ணனைத்  தெரிந்தால்  ராதாவை தெரிந்ததாகத்  தானே  அர்த்தம்.  கிருஷ்ணன் என்பதே  ராதையின் மூச்சுக்கு பெயர். ராதை ஒரு கோபி.  பசுக்களை பராமரித்து, பால்,தயிர் வெண்ணை என்று சேகரிப்பதில் வாழ்வின் பெரும் பகுதியை செலவழிப்பவள். கோபிகளில் சிறந்த பெண்மணி. கோகுலத்திலும்  பிருந்தாவனத்திலும்  கண்ணனின்  இளம் வயதில்  விளையாடி சண்டையிட்டு நேரம் கழித்தவள். பாக்கியசாலி.  ஏனோ  என்ன காரணமோ, ஸ்ரீ வைஷ்ணவத்தில் ராதையைப்  பற்றி பேச்சையே காணோம். முழு கவனமும்  அவர்களுக்கு  விஷ்ணு புராணம், ஸ்ரீமத் பாகவதத்திலேயே லயித்து விட்டது. ஆனால்  இந்த ரெண்டு நூல்களும் ராதையை தெரியாதவையாக இருப்பது ஏன்?

கண்ணனைத் தாயாக வளர்த்த யசோதைக்கு ஒரு சகோதரன் கும்பகன். அவன் பெண் தான் நப்பின்னை. கண்ணன் மாமன் மகள். அவளை மணக்க அப்பன் போட்ட  கண்டிஷன் என்னவென்றால் அவனிடம் இருந்த  பலமிக்க பொல்லாத கோபக்கார ஏழு காளைகளை அடக்கி சாதுவாக்கிய  பிறகே தனது பெண் நப்பின்னையை மணமுடிக்கவேண்டும்.  நல்ல பயிற்சி. காளைகளை அடக்கிய அனுபவம் நப்பின்னையை மணந்த பிறகு மாப்பிள்ளைக்கு பெரிதும் உதவும் என்று நினைத்தானோ?  கிருஷ்ணன்  ஏழு காளைகளையும் அடக்கி சாதுவாக்கியோ, கொன்றோ, பிறகு நப்பின்னையை மணந்தான்.  இந்த விவரம்  ஹரிவம்சத்திலும்  கருடபுராணத்திலும் சில ஆழ்வார்கள் பாசுரத்திலும்  காண்கிறது.

நப்பின்னையைப் பற்றி பேச என்ன காரணம் என்றால் அவள் யார்? யாருடைய  அவதாரம் என்பதை அறிய .
விஷ்ணுவின் நாயகிகள் மூவர்.  முப்பெருந்தேவிகள் என்று தலைப்பு சொல்கிறதே. அவர்கள். செல்வத்துக்கு  அதிபதி  ஸ்ரீ லட்சுமி, பூதேவி  எனும் பூமிக்கெல்லாம் தேவியான பூமாதேவி,  மூன்றாவது நாயகியை  நீளா தேவி என்று பாசுரங்கள் பாடுகிறதே அந்த நீளாதேவி தான் நப்பின்னை என்கிறார்கள்.  இன்னும் சில விவரங்களும் உண்டு. அப்புறம் பேசுவோம்.

யஜுர்வேதத்தில்   தைத்ரிய ஸம்ஹிதை நான்காவது காண்டத்தில் ( 4.4.4.12-13)  நீளா தேவி  போற்றப்படுகிறாள். அதை தான்  நீளா ஸு க்தம் என்போம். இன்னொரு பெயர்  அதிதி ஸூக்தம், விஷ்ணு பத்னி  ஸூக்தம்.   இது பஞ்ச ஸூக்தங்களில் ஒன்று.

Stomathrayasthrimse bhuvanasya pathni,
Vivasvadwathe abhi nom grunahi,
Gruthawathi savithar aadhipathyai payasvathi,
Ranthir aashaa na asthu.
''ஆஹா   முப்பத்து  மூன்று ஆக  துலங்கும் ஸ்தோமா,   நீயே  லோக ரக்ஷகி,  ஞான ஸ்வரூபிணி,
  உன்னைத்தானே  விவஸ்வான்  ஸ்வாசிக்கிறான்.  என் கோரிக்கைகளை கேள் தாயே,  அவற்றை  நிறைவேற்றம்மா. செவி சாய்த்து கேளம்மா பூரண ஞானம்  தெளிவாக அறிய உதவி அருள்பவளே.   உனது  கருணாசாகரத்தில் மூழ்கி உன் அன்பை எல்லா திசையிலிருந்தும் பெற எனக்கு அருள்வாய் அம்மா.

Dhruva Disaam Vishnupathni Aghora,
Asya Eeshaana Sahaso Ya Manotha,

எங்கு நோக்கினும்  நின் காருண்ய கடாக்ஷம் பெற அருள்வாய் ஸ்ரீ விஷ்ணு தேவியே,   நினது மணாளர்  ஸ்ரீ மஹா  விஷ்ணுவல்லவோ   பிரபஞ்ச நாயகர் . சர்வ திசைக்கும் நாதன். சகல ஜீவர்களும் போற்றும் சர்வ ரக்ஷகர்

Brahaspathir Mathariswotha,
Vayu Sandhuvanaa Vata,
Abhi no Granathu

''தேவகுரு பிரஹஸ்பதி, வாயு தேவன், மதரீஷ்வர்  ஆகியோர்  எம் மீது மகிழ்ச்சி அடையட்டும், ஆசி புரியட்டும், அருள் அமோகமாக தரட்டும். எங்கள்  போற்றுதலை பெற்று வாழ்த்தட்டும். அனுகிரஹிக்கட்டும்.

Vishtambho Dhivo
Dharuna Pridhvya,
Asyeshana Jagatho Vishnu Pathni
Visvavayachaa Ishayanthi Subhoothi
Hiva no Asthu Adithir Upasathe,

''அம்மா  மஹா தேவி,  நீ யல்லவோ இந்த விண்ணுலகத்தையே தூக்கி நிறுத்துபவள். பூமியையும்  தாங்கி நிற்பவள். சகல சக்தி  ஸ்வரூபிணி நீயல்லவோ, மூவுலகும் ஆளும்  மஹாராணி உன்னை அன்றி வேறு யார்? விஷ்ணுபிரியா,  நீ  மஹாராணி யாயிற்றே. சர்வ வியாபி .  எங்கும் நிறைந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி அல்லவோ?.  எங்கும்  எதிலும்  காண்பவள். கேட்டதெல்லாம் வாரிக் கொடுக்கும் வள்ளல், சந்தோஷ காரிணி. அதிதி என்ற நாமத்தில் உய்விக்கும்  அன்னையே,நீ எங்களுக்கு சாந்தியைத்  தா.  சேய் எங்களை மடியில் இருத்தி பாதுகாப்பவளே. பராசக்தி.

''அம்மா நீளாதேவி, வீசும் காற்றெல்லாம் தென்றலாக்குபவளே, ஆகாசத்தைக்  குடையாக்கி  எங்களுக்கு பிடிப்பவளே, பூமியை பசும்புல் போர்த்த  படுக்கையாக்கி தாங்குபவளே, எங்கள் தாயே,  வேத நாயகி,   உனக்கு நமஸ்காரம்

''ஆஹா,  வேதம் என்று சொல்லும்போதே  அவை எப்படி உண்டாயின என்று நினைக்க வைக்கிறது.  எத்தனையோ கல்பங்களுக்கு முன்பு, ரிஷிகள்  காலம் காலமாக  தவம் புரிந்து அதன் பயனாக ஆகாசத்தில் கடவுளர் எழுப்பும் நுண்ணிய சப்தங்களை செவி மடுத்தனர். அவர்களுக்கு   மந்த்ர  த்ரஷ்டாக்கள் என்று பெயர். மந்திரங்களின்  சப்தம், ஒலியை கிரஹித்து  அவற்றின் உள்ளர்த்தங்களை விஸ்தரித்து வேத மந்திரங்களாக  பரம்பரை பரம்பரையாக  உபதேசித்தார்கள். தவறில்லாமல் உச்சாடனம் செய்தார்கள்.  யார் செய்த புண்யமோ,  துவாபர யுகத்தில் வியாசர்  நான்கு வேதங்களாக அவற்றை பிரித்து  இயற்றினார். வேத சம்ஹிதை என்று அவற்றின் பெயர்.  அதனால்  வேத வியாசர் என்ற பெயரும் பெற்றார்.   ''வ்யாஸாய விஷ்ணு ரூபாய''  என்று விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் போற்றுகிறோமே ,  அந்த வியாசர் விஷ்ணு தான்.   அவை பிற்காலத்தில் நமக்கு அச்சில்  எழுத்தாக கிடைக்க நாம் ஒரு வித முயற்சியும் செய்யாத அதிர்ஷ்ட சாலிகள்.

தெய்வங்கள் இவ்வாறு உபதேசித்த மந்திரங்களாக விண்ணில் கிடைத்ததை   ''த்ரஷ்டாக்கள்''  செவிமடுத்து வேதங்களானதை யோசிக்கும்போது  எந்த  த்ரஷ்டா  (ரிஷி ) எந்த மந்திரத்தை  கிரஹித்தார் என்பதை அநுக்ரமணிகள்  என்ற ஒவ்வொரு  வேத  தொகுப்பில் அறிய முடிகிறது.

நீளா தேவி ஸூக்தம் எந்த ரிஷியால் கிடைத்தது என்பதை ஆராய்வது ஒரு பக்கம் இருக்க இன்றும்  திருப்பதி திருமலையில் ஸ்ரீ  வேங்கடேசன் நீளா தேவிக்கு பக்தர்கள் முடி காணிக்கை கொடுப்பதை ஏற்றுக்கொள்ள வரமளித்திருக்கிறார்  என்பது  செய்தி.  முதன் முதலில்  ஒரு பக்தையின் முடி காணிக்கை நீளாதேவிக்கு கொடுக்கப்பட்டது.  அந்த இடம் தான்  இன்றும் இருக்கும்  நீளாத்ரி எனும்  மலை.  அந்த பெயரை சூட்டியவர்  ஸ்ரீ நிவாஸ பெருமாள்.

ஒரு கதை உண்டு.  ஒரு மாடு மேய்ப்பவன் பூமியைத்  தோண்டும்போது  பூமியில் இருந்த ஸ்ரீனிவாச பெருமாளின் தலையில் அவனது ஆயுதம் பட்டு அவர் தலையில் உச்சியில் முடியோடு சதை பிய்ந்து ஒரு சிறு பகுதி முடி இல்லாமல் போய்விட்டது. முடி இல்லாத ஸ்ரீனிவாசன் தலையை பார்த்த கந்தர்வ இளவரசி நீளாதேவி  வருந்துகிறாள். இவ்வளரு அழகிய வதனம் கொண்ட ஸ்ரீனிவாசன் தலையில் ஒரு இடத்தில் முடியற்று இருப்பது அவர் அழகைக் குறைத்து விடுமோ என்ற கவலையில் தனது கூந்தலில் ஒரு பகுதியை வெட்டி  தனது  சக்தியால் அது அவரது தலையில் நிரந்தரமாக அந்த இடத்தை மறைக்க செய்கிறாள்.

ஒரு பெண்ணுக்கு கூந்தல் அழகை கூட்டும் சக்தி வாய்ந்தது.  அதையே  தியாகம் செய்ய முன்வந்த அந்த கந்தர்வ பெண் நீளாதேவியின் தியாகத்தை  ஸ்லாஹித்து  ''இனி எனக்கு முடி காணிக்கை கொடுக்க வரும் பக்தர்களின் முடி காணிக்கை எல்லாம் நீளாதேவியை சேர்ந்தது '' என்று  வரமளிக்கிறார்.

முடி காணிக்கை என்பதன் தாத்பர்யம் நமது அகங்காரத்தை, கர்வத்தை அழிப்பது. இன்றும் திருப்பதி பாலாஜி ஆலயத்தில் டன்  டன்னாக (TON) அன்றாடம் முடி காணிக்கை  சேர்கிறது.அவை தேவஸ்தானத்தால் திருத்தப்பட்டு உள்ளூரில் சவுரியாக, வெளியூருக்கு  ஏற்றுமதியாகவும்  செல்கிறது.

ஸ்ரீ எனும் லக்ஷ்மியின் பெயர் சந்தோஷத்தை, பாதுகாப்பை, வளத்தை, உள்ளுணர்வை, செல்வத்தை குறிக்கிறது. நீலத்தாமரை சிவப்பும் வெண்மையும்  கலந்த பிங்க் கலர்  தாமரை  லக்ஷ்மியை அடையாளம் காட்டுவன.

உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா.  நேபாளத்தில்  ஸ்ரீ என்கிற  அக்ஷரம்  அவர்கள் ஊர் தலாய் லாமாவை காக்கும். சில  நூல்களில் லக்ஷ்மியை முக்கண்ணாள்  என்று போற்றுகிறது.  நீலம் அவள் விரும்பும் வர்ணம். செந்தாமரை மற்றுமொரு விருப்பமான  மலர் அவளுக்கு. நமது இதய தாமரை மலர அவள் அருள் தேவை.
வானத்தில் செங்கதிரோன் இளங்காலை மலரும்போது மனதில் ஆனந்தம் ஏற்படுகிறதே அது அவள் விரும்பும்  வண்ணத்தை கொண்டதால் தான்.

ஸ்ரீதேவி, லக்ஷ்மி என்றெல்லாம் பெயர்கொண்ட பாற்கடலில் உதித்த  விஷ்ணு பத்னி பூதேவி எனும் பூமாதேவி, நீளாதேவி என்றும் விஷ்ணு பத்னிகளாக  நம்மை ரக்ஷிப்பவள்  இரு  கரங்களோடு  பத்மாசனத்தில் வீற்றிருக்கும் கோலம் அனைவர் மனதில் பதிவான ஒன்று.  அவளையே சதுர்புஜங்கள் கொண்டவளாக,   அவற்றில் பாசம், அங்குசம், மணிமாலை தாமரையோடும்  ரவி வர்மா படங்களில் பார்த்திருக்கிறேன்.

விஷ்ணு தேவியர் சக்தி ஸ்வரூபங்கள். விஷ்ணுவின் அம்சம்.  விஷ்ணு ஸ்ரீயுடன்  ஸ்ரீனிவாசனாக, லட்சுமியுடன் லக்ஷ்மிநாராயணனாக,  லட்சுமி தாயார்,   ஸ்ரீதேவி  பூமாதேவி எனும் பூதேவியாகவும்  பிரிந்தும் காண்கிறாள். நிறியப்படங்களில் லக்ஷ்மியை  கிரீடத்தோடு,   தங்க நிற  ஜரிகை கரை போட்ட,   சிகப்பு நிற புடவை, பச்சை ரவிக்கை யோடு  சித்திரங்கள் கண் முன் நிற்கிறது.

விஷ்ணு தேவியரின்  தயை, கருணை, பொறுமையைப்  பாடாத  வைஷ்ணவ பக்தர்கள், ஆச்சார்யர்கள்,  ஆழ்வார்கள் கிடையாது. தாயின் கருணையோடு அருள்பவள் இல்லையா?

பாரத தேசத்தில் பல பகுதிகளில் நீளா தேவி வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு போற்றப்படுகிறாள்.  நீலிமா, நீலம் ரத்னா.   சில இடங்களில் அபூர்வமாக  நீளாதேவி  சனீஸ்வர பகவானின் தேவியாக,  குலிஞன் எனும் ரிஷி யின் தாயாராக வழிபடப்படுகிறாள்.   சனீஸ்வரனின் சக்திக்கு காரணமாக  விளங்குகிறாள். நீலக்கல் அணிவது அவள் அருளை பெற.   இன்னொரு விஷயமும் அறிந்தேன்.  நீளாதேவி  பிரம்மனின் ஐந்தாவது சிரத்தின் சக்தியாம்.

ஹிந்துக்களின் புராணங்களில் ஒன்று  சிவபெருமான் சனீஸ்வரனையும் நீலாதேவியையும் ஒரே சமயத்தில் படைத்தார் என்கிறது.  சனீஸ்வரன்  சகராத்மக சக்தி (POSITIVE  ENERGY) எனவும்  நீளாவை கி நகராத்மக  சக்தி (NEGATIVE ENERGY) என்கிறது.  வேடிக்கையாக இன்னொரு சேதியும் கிடைக்கிறது.  பிறந்தனுவுடன் நீளா  விஸ்வகர்மாவால்  அவரது லோகத்தில் சக்தியாக  சிறை வைக்கப்படுகிறாள், பன்னிரண்டு வருஷங்கள் கழித்து உடல் பெறுகிறாள். சனீஸ்வரனின் எதிரிகள்  ராகு, சஞ்சனா, சந்தியா, இந்திரன் அவளுக்கு  நகராத்மக சக்தியை ஊட்டி அவள் சனீஸ்வரனுக்கு எதிரியாகிறாள். சனீஸ்வரனுக்கு நீளாவுக்கும் யுத்தம் நடந்து சனீஸ்வரனை சிறைப்படுத்துகிறாள். பிறகு எப்படியோ சனீஸ்வரனுக்கும் அவளுக்கும் சமாதானம்  ஏற்படுகிறது.   தான் சனீஸ்வரனின் கட்டுப்பாட்டில் இருப்பதை உணர்கிறாள்.  தனது சக்தியை எல்லாம் சனீஸ்வரனுக்கு அளித்து விடுகிறாள்.

ஸ்ரீவைஷ்ணவர்கள் பாஞ்சராத்ரத்தில் நீளாதேவி ஸ்ரீமன் நாராயண னோடும் மற்ற அவரது இரு தேவியர்களோடும்  சேர்ந்து இருப்பவள். ஸ்ரீ தேவி பூதேவி சமேதராகதான் ஸ்ரீமன் நாராயணன் அநேகமாக சித்திரிக்கப்படுகிறார், ஆலயங்களில் காட்சி தருகிறார். அருள் பாலிக்கிறார்.  அவரது வலப்புறம் ஸ்ரீ தேவி, இடப்புறம் பூ தேவி என்று தான் சிலா ரூபத்தில் வணங்குகிறோம். பெருமாளுக்கு பின் புறம் நீளாதேவி நிற்பதாக சொல்வார்கள்.  அவள் ஆஹ்லாத சக்தி. ஆசிர்வதிக்கும் சக்தி.  அருள்பவள்.  மூவருமே ஸ்ரீ லக்ஷ்மிதேவியின் அம்சம் என்று ஏற்கனவே மேலே சொன்னதை இன்னொருமுறை ஞாபகப் படுத்து கிறேன்.நீளாதேவியை  ஜேஷ்டதேவி என்பார்கள். வயதில் மூத்தவள்.  ஸ்ரீ விஷ்ணு தான் சனீஸ்வரன்  என்றும்  ஒரு ஐதீகம் நிலவுகிறது.

ஸ்ரீ தேவி  சீதாவாக  ராமாவதாரத்தில், பூதேவி வராகஅவதாரத்தில் ஸ்ரீமன் நாராயணனோடு சேர்ந்திருந்தது போல  நீளாதேவி கிருஷ்ணாவதாரத்தில் நாராயண மகிஷி.

துவாபர யுகத்தில்  நாராயணன் கிருஷ்ணனாக அவதரித்தபோது நீளாதேவியும் கோகுலத்தில் கண்ணனை வளர்த்த தாய்  யசோதையின் சகோதரன்  மகள்  நப்பின்னையாக பிறந்து  மணாளனாக அடைகிறாள்.   அவள் சகோதரன்  சுதாமா.

எந்த  அளவுக்கு கிருஷ்ணனை நப்பின்னை தன் அழகால் கவர்ந்தாள்  என்பதை அழகாக பராசர பட்டர் ஒரு ஸ்லோகத்தில் வர்ணிப்பதிலிருந்து அறியலாம்:  
 ''நீளா துங்க ஸ்தன கிரி தடி சுப்தம்''    நப்பின்னையை   தமிழ் கூறும் நல்லுலகம்  மட்டுமே கொஞ்சம் கூடவே  போற்றிப்  புகழ்கிறது.   

ஸ்ரீ ஆண்டாள்  திருப்பாவையில்  நப்பின்னையை முதலில் துயிலெழுப்பிவிட்டு பிறகு தான் கிருஷ்ணனை துயிலெழுப்புகிறாள். ஸ்ரீவைஷ்ணவத்தின்  பிரதான கோட்பாடான சரணாகதியை நப்பின்னை வாயிலாக  கிருஷ்ணாவதாரத்தில் காட்டப்படுகிறது.   இன்னொரு விஷயம்.  ஆண்டாள் நாச்சியார் திருமொழியில் ருக்மணியை பாடுகிறாள்.  கோபிகையாக  திருப்பாவையில் நப்பின்னையை ஸ்தோத்தரிக்கிறாள்.  ஆழ்வார் வாக்கில்  ஸ்ரீ தேவி பொன்மகள், பூதேவி நிலமகள், நீளாதேவி புலமகள் (ஐம்புலன்களின் ஒருமைப்பாடு) போகத்தில் கண்ணனை கட்டுப்படுத்தியவள்.
.
நீளா தேவி தான்  ராதா, ராதாராணி , ராதிகா என்ற பெயர்களாலும் வடக்கே  பாடப்படு கிறாள். வழிபடப் படுகிறாள்.

ராதை கண்ணனின் பிரேமி என்றால்  நீளா தேவி அவன் மனைவி.

ஸ்வாமி  தேசிகன் தனது யாதவாப்யுதயத்தில்  எப்படி கிருஷ்ணன் தனது தாய்  யசோதையின்  சகோதரன் கும்பகனின் ஏழு காளைகளை வென்றான், எப்படி குழந்தைகளான அவன் மகள்  நப்பின்னையும் கிருஷ்ணனும்  யசோதையிடம் வளர்ந்தார்கள் என்று விவரிக்கிறார். 

'' தயா சதகத்' தில்  " நிஸாமயது  மாம்  நீளா  யத் போக  படலை : த்ருவம்''   nisAmayatu mAm nIla yat bhOga patalai: druvam" என்று வர்ணிக்கிறார்.   கிருஷ்ணன் யாதவ  க்ஷத்திரியன்.   ருக்மியின்  சகோதரி  ருக்மணியைக்  கடத்தி  காந்தர்வ விவாகம் செய்து கொள்கிறான்.  பிருந்தாவனத்தில் கண்ணன் ஒரு யாதவ வைசியன், ஒரு  கோபன், ஆகவே  நந்தகோபன் மனைவி சகோதரன் மகள் நப்பின்னையை மணக்கிறான்.  அதனால் தான் நீளா ஸுக்தம்  க்ருணாஹி - ghruNAhi - க்ரு தவை , ghrutavai - பயஸ்வதி  என்று  கோபிகைகளுடைய
குணாதிசயங்களை நப்பின்னைஎனும் நீளாதேவி கொண்டிருந்தாளென்று  சொல்கிறது.  

அவளை  ஸ்ருத தேவி என்று வர்ணிப்பதுண்டு ஸ்ரீ கிருஷ்ணனின் தந்தை வசுதேவருக்கு ஐந்து  சகோதரிகள்  உண்டு  அவர்களில் ஒருவள் மகள் நீளாதேவி  என்று ஒரு சேதி. 

நீலகிரி என்கிற  குளிர்ந்த மலையின் பெயர் அவளால்   வந்தது என்கிறார்கள்.  ஜம்பு த்வீபத்தில்  இளவர்த்தம் என்று அதற்கு பெயர்.   சுனிலா  என்று ஒரு  பெயர். கருநீலம் அல்லது கருப்பு நிறம் விரும்புபவள் .   சனீஸ்வர
னுக்கு  ஆடையை நீலமாகவும் கறுப்பாகவும் அணிவிப்பது புரிகிறது.

நீளா தேவியை ஆராயப்போனால்  எல்லை இல்லை போல் இருக்கிறது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...