எழுபது வருஷத்துக்கு முன் தீபாவளி நினைவு..
J K SIVAN
இந்த வருஷம் ரொம்ப தீபாவளி பற்றி சுவாரஸ்யம் காணோம். பட்டாசு அலைமோதுமே. திடீர் திடீரென்று சந்து பொந்திலிருந்தெல்லாம் வண்ணங்கள் விர்ரென்று காதருகே செல்லுமே. ஏன்? ஒன்று பட்டாசு வெடிப்பதால் காசு தான் கரியாகும் காலியாகும் என்ற ஞானமா? பட்டாசு இன்னின்ன தான் வெடிக்கலாம் இத்தனை மணிக்குள், பொது ஜனங்களுக்கு தெருவில் இடையூறு தடங்கல் கூடாது என்று சட்டமா? மொபைலில் பட்டாசு வெடித்தால் மட்டும் போதுமா ??
எப்போது தீபாவளி வரும் என்று ரெண்டு மூன்று மாதங்களுக்கு முன்பே ஆவலாக காத்திருந்த காலம் மலையேறிவிட்டதா? பள்ளிக்கூடத்தில் மரத்தடியில் பக்கத்தில் தரையில் அமர்ந்து கொண்டிருக்கும் மற்ற மாணவர்களோடு கூடி பேசுவோம். திட்டம் போடுவோம். யார் எவ்வளவு பட்டாசு வெடிப்பார்கள். பட்டாசு பெயர்கள் எல்லாம் அத்துப்படி அப்போது. சட்டார் கடையில் முஹைதீன் பலசரக்கு வியாபாரம் நிறுத்திவிட்டு பட்டாசு வியாபாரத்தில் கவனமாக இருப்பான்.
என் லெவெலுக்கு கிடைத்தது கேப் , சாட்டை எனும் கயிறு, மத்தாப்பு பேட்டிகள், சிவப்பு பச்சை, அதிகபட்சம் ஒவ்வொருவருக்கும் 6 தீப்பெட்டிகள். கேப்பை வெடிப்பிக்க ஒரு கல். துப்பாக்கி ஒன்று தான். அதை என் அண்ணா விடமிருந்து வாக்கி ஒவ்வொரு கேப்பாக அதில் வைத்து வெடிக்க நேரமும் பொறுமையும் வேண்டும். ரெண்டுமே இருந்தும் துப்பாக்கி தரமாட்டான். புஸ் வாணம் என்று கூம்பு போல் முனையில் திரியோடு இருக்கும்.அதை வாசலில் கேட்டுக்கு பக்கத்தில் வைத்து கம்பி மத்தாப்பூவால் கொளுத்தவே ரொம்ப பயம். பளிச்சென்று ஒளியோடு ஐந்து ஆறு அடி உயரம் வரை பூப்பூவாக கொட்டி செத்து போகும். கம்பி மத்தாப்பூவில் முள்ளு முள்ளாக இருக்கும் கம்பி சட்பட் என்று தீப்பொறி களோடு சில சமயம் பூக்களை வீசும். வழவழவென்று ஒரு கம்பி மத்தாப்பூ சாதுவாக நல்லபிள்ளையாக பூக்களை கொட்டும். ரெண்டு கையில் ரெண்டு வைத்துக்கொண்டு ABCD எழுதியது நினைவில் இருக்கிறது. ஸ்டார் என்று ஒரு நீள பெட்டியில் கம்பி மத்தாப் பூக்கள் எங்கப்பா வாங்கித்தருவார். நாலு பெட்டியில் 24 இருக்கும். அதில் ஆளுக்கு 4 வரும்.
ஓலைப்பட்டாசு என்று பனைஓலையில் ஒரு வெடி காதை கெடுக்காத சத்தத்துடன் வெடிக்கும். அதைக் கையில் பிடித்துக் கொண்டே வெடிப்போம். எலக்ட்ரிக் பட்டாசு என்று ஒன்று சரம் சரமாக திரிகள் ஒன்றோடு ஒன்று ஒற்றுமையாக இணைந்து இருக்கும். தொட்டால் கந்தக பொடி கையில் ஓட்டும். ஒட்டிய திரிகளை திரி நழுவாமல் பிரித்தால் தான் ஒரு ஆளுக்கு எத்தனை என்று பிரித்து எண்ணி தருவான் என் அண்ணா. பட்டாசு பொட்டலத்தில் மேலே செகோட்டை படம் போட்டு இருக்கும். லேபிள் எல்லாம் தெருவில் பொறுக்கி சரித்திரம் புஸ்தகத்தில் வைத்திருப் பேன். அதை முத்துகிருஷ்ணன் எக்ஸ்சேன்ஜ் பண்ணிக்கொள்வான். அறுபது எழுபதுக்கு மேல் அவனிடம் வெவ்வேறு லேபிள்கள் இருந்தன. அதேபோல் மேட்ச் பாக்ஸ் MATCHBOX லேபிள் நிறைய நூற்றுக்கணக்கில் சேர்த்து வைத்திருந்து ஸ்லேட்டில் SLATEல் எழுதும் பலபத்துக்கு பாதி பலபத்திற்கு ரெண்டு என்று கொடுப்பான்.
பூங்காவனம் வீட்டில் கோவைக்காய் செடி இருந்தது. கோவைக்காய் பாதியாக வெட்டி நண்பர்களுக்கு மட்டும் கொடுப்பான். அதை பேப்பரில் சுற்றி பையில் வைத்துக் கொள்வோம்.ஸ்லேட்டில் துடைப்பதற்கு ஈரமாக உடனே அழிக்கும். ஸ்லேட் காய்ந்து விடும். தீபாவளி பக்ஷணங்கள் யார் வீட்டில் என்ன என்று பேசுவோம். எது யாருக்கு பிடிக்கும் என்று ஆராய்ச்சி பண்ணுவோம். புது டிரஸ் ரொம்ப பிடித்த பேச்சு.
''எங்கப்பா எங்களுக்கு தீபாவளிக்கு புது துணி வாங்கியாச்சு''
''உனக்கு என்ன?''
''இந்த வருஷம் தான் எனக்கு ஒரு முழுக்கை சட்டை தைக்கறதாக அப்பா ஓத்துண்டிருக்கார். அதுவும் அம்மா சண்டை போட்டு எனக்காக சிபாரிசு பண்ணினதாலே.
''உங்கப்பா அரைக்கை சட்டை தான் தைக்க சொல்லுவார் னு சொல்லுவியே''
பின்னி பாக்டரிலே யாரையோ பிடிச்சு குறைச்ச விலைலே 10 கஜம் பச்சை கலர் காட்டன் ட்ரில் துணி , கொட்டடி போட்ட மில் காட்டன் சட்டை துணி, பிடித்துக்கொண்டு வந்துட்டார் அப்பா வின் நண்பர்.
அப்பாவைப் பொறுத்தவரை எனக்கும் என் இரு சகோதரர்களுக்கும் அரை நிஜார் அரை கை சட்டை எத்தனை அதில் தைக்க
முடியுமோ டைலர் ஜப்பார் பாய் கிட்டே அவ்வளவு சமாளிக்க சொல்லுவார். ஜப்பார் அளவு எடுக்கும்போது எவ்வளவு நிஜார் முட்டிக்கு மேலே தூக்கி இருக்க வேண்டுமோ அதை அளவாக எடுத்துக் கொள்வார். தைக் க்கும்போது என் பெரியண்ணா அளவில் மற்ற எங்கள் இருவருக்கும் சட்டை நிஜார். தொள தொள வென்று எனக்கு சட்டை நிஜார். நான் வளர்ந்துவிட்டால் நிஜார் சட்டை சின்னதாக போனால் என்ன செய்வது. சட்டை நிஜாருக்காக நான் சீக்கிரம் வளர வேண்டிய நிலையில் இருந்தேன்.
அப்பாவின் கண்டிஷன்: சட்டை நீளம் ரொம்ப வேண்டாம். வயிறுக்கு கீழே மூன்று நாலு அங்குலம் போதும். ஒரு பாக்கெட் சின்னதா. மொட்டை கழுத்து போதும். காலர் வேண்டாம் என்று துணி சிக்கனம் பிடித்து மூன்று பேருக்கும் ரெண்டு சட்டைகள் வந்து விடும். அந்த வருஷ யூனிபார்ம் எங்களுக்கு அது தான். பள்ளிக்கூடத்த்தில் யூனிபார்ம் எல்லாம் கிடையாது. மாற்றி மாற்றி போட்டுக் கொள்வதால் அது எங்கள் யூனிபார்ம்.
ஜப்பார் இதனால் பாக்கெட் அளவுகளை சிறிதாக பண்ணினார். சட்டை நீளத்தை குறைத்தார். மொத்தம் பத்து பதினைந்து வீடுகளில் அவர் தான் குடும்ப டைலர். பழைய துணி தீபாவளி நேரத்தில் கிழிசல் ஒட்டு போட, ஓரம் அடிக்க அவைகளை எடுத்துக் கொள்ள மாட்டார்.
தீபாவளி கிட்டத்தட்ட ஒரு மாதம் முன்பே துணிகள் அவரிடம் நிரம்பிவிடும். நாங்கள் பதினைந்து இருபது நாட்களுக்கு முன்பு கொடுப்பதால் சீக்கிரம் கிடைக்காது. அடிக்கடி ஜப்பார் பாய் வீட்டுக்கு படையெடுத்து எப்போது கிடைக்கும் என்று கேட்போம். கோபம் வந்தால் உருதுவில் திட்டுவார். நல்ல வார்த்தையாக நிச்சயம் இருக்காது. ஆனால் எங்களுக்கு அர்த்தம் புரியாது. ஜப்பார் துணி திருடுகிறார் என்று கொல்லையில் அடுத்து வீடு மாமிகள் பேசிக்கொள்வார்கள்.
எங்கள் தொந்தரவு பொறுக்க முடியாமல்
இதோ இன்னிக்கு, நாளைக்கு, சாயந்திரம் என்று டைம் சொல்லுவார் பாய். ஆனால் தீபாவளிக்கு முதல் நாள் கிடைத்தால் அதிருஷ்டம். எங்களை போல் பலர் நெருக்கடி கொடுப்பதால் தான் போல் இருக்கிறது. மணி என்கிற கருப்பு வெளுப்பு நாயை அவர் வீட்டில் தானாகவே எங்கிருந்தோ வந்து வளர்ந்தது. அதைப் பர்ர்க்கும் போதெல்லாம் திட்டி விரட்டுவார். ஆனால் அது என்ன வாத்சல் யமோ அவர் வீட்டை சுற்றி சுற்றி வந்து வாசலில் படுத்துக் கொண்டிருக்கும். அவர் வீட்டு தெருவுக்கு வந்தாலே குலைக்கும் கடிக்க வரும். கண்களில் கோபம் காட்டும். அதற்கு சில ஜெம் பிஸ்கட்கள் வாங்கி வைத்திருப்பேன். சட்டார் கடையில் ஒரு அணாவுக்கு எட்டு ஜெம் பிஸ்கெட் கொடுப்பார். அவர் இல்லாத போ அவர் மனைவி கை நிறைய எடுத்து கொடுப்பாள். அவர் இல்லாத நேரத்தில் கடைக்கு போவேன்.
ஜெம் பிஸ்கட் தான் விலை குறைவு. மரக்கடை ராமண்ணா அதற்கு பக்கத்திலே பூவரசம் மரத்தடியில் ஓர் பெட்டிக்கடை வைத்திருந்தார். மரத்தில் செய்த ஒரே கதவு கொண்ட சின்ன பெட்டி கடை.
அவர் குனிந்து உள்ளே போய் ஒரு சின்ன மணைப்பலகை மேல் அமர்ந்து கொள்வார் , எதிரே ஒரு தராசு தொங்கும். சுற்றி சில காலி ஹார்லிக்ஸ் பாட்டில்களில் பிஸ்கெட் , சூடு பெப்பர்மென்ட், கமர்கட், சிகப்பு பச்சை நீலம் வெள்ளை மஞ்சள் என்று சின்னதாக கோலி உருண்டை மிட்டாய்கள். ஒரு அணாவுக்கு இத்தனை என்று ஒவ்வொருநாளும் ஒவ்வொரு மாதிரி குறைத்து கூட்டி கொடுப்பார். ஒரு தட்டில் பச்சை வெற்றிலை அதற்கு மேல் ஈரத்துணி. ஒரு ஜாடியில் பட்டணம் பொடி . அதனுள் நீண்ட ஒரு உலோக கரண்டி. எத்தனை சிட்டிகை என்று கணக்கு உண்டு. காய்ந்த உரித்த வாழை பட்டையில் எங்க அப்பாவுக்கு அவர் கடையில் இருந்து மூக்குப் பொடி வாங்கி போவோம். பேப்பரில் மடித்துக் கொடுக்கும் பழக்கம் இல்லை. கவர்னர் ருஸ்தும் பீடிகள் நிறைய வியாபாரம் ஆகும்.
தீபாவளிக்கு சில புஸ்தகங்கள் கொண்டு வந்து விற்பார். ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், அமுதசுரபி, தான் பிரபலம். பழைய வருஷ தீபாவளி மலர்கள் வாடகைக்கு படிக்க விடுவார். படங்கள் கிழித்திருக்கிறதா என்று எண்ணி பார்த்து தான் வாங்குவார் கொடுப்பார். அவருக்கு தமிழ் படிக்க தெரியாது.
தீபாவளி மலர்களில் மாலி, கோபுலு, சில்பி, எஸ். ராஜம் படங்கள் ஆனந்தவிகடனில் ரொம்ப அழகாக இருக்கும். ஆனந்த விகடனில் சில்பியின் கலர் படம் ஏதாவது ஒரு கோவில் சுவாமி படமாக பெரியவா படமாக இருக்கும். நேரில் பார்ப்பது போல் இருக்கும். ஐந்து ஆறுவயதிலேயே என் மனத்தில் சில்பி மூலமாக கோவில் படம், பெரியவா படம் இடம் பிடித்து விட்டது ஆச்சர்யம்.
கல்கியில் அட்டைப்படத்திலும் உள்ளேயும் மணியம் படம் கண்ணை பறிக்கும். ரொம்ப காக்காய் பிடித்து ராமண்ணாவின் தம்பி செல்வராஜை பிரெண்டு பிடித்து '' பார்த்து விட்டு கொடுக்க'' அரைமணி நேரம்
அனுமதிப்பான். ராமண்ணாவுக்கு தெரியாமல் இந்த அர்ரேஞ்ஜ் மென்ட்.
திருப்பிக் கொடுக்க போகும்போது சட்டைக்குள் ஒளித்து வைத்துக்கொண்டு செல்வேன். ராமண்ணா இருந்தால் கடைக்கு பின் புறம் செல்வராஜை கூப்பிட்டு கொடுப்பேன்.
கோடம்பாக்கம் ஸ்கூல் வாத்யார் ராமநாதன் என்னை ராமண்ணா கடையில் ஒவொரு வாரமும் கல்கி வாங்கி வர சொல்வார். சூளைமேடு ஆற்காட் ரோடு வரை ஓடிப்போய் வாங்கி வந்து அவர் வீட்டு மாமி இடம் கொடுப்பேன். எந்த வேலையில் இருந்தாலும் அதை அப்படியே விட்டுவிட்டு பொன்னியின் செல்வன் முதலில் படித்து விட்டு என்னிடம் கொடுப்பாள். வீட்டுக்கு எடுத்து சென்று என் அம்மாவிடம் கொடுப்பேன். ஒரு மணி நேரத்தில் திருப்பி கொண்டுவா என்று ராமநாதன் வீட் டு மாமி டைம் சொல்லுவாள்.
No comments:
Post a Comment