ப்ரம்மாவின் ஒரு நாள்.... நங்கநல்லூர் J K SIVAN
நாம் இப்போது வசிக்கும் வாழும் கலியுகம் பற்றி நாம் முழுதாக தெரிந்து கொள்ளவில்லை. ரொம்ப ரொம்ப கஷ்டமான ஒரு கால கட்டத்தில் நாம் ஜீவிக்கிறோம் என்று மட்டும் தெரிகிறது.
கலியுகத்தைப் பற்றி தெரிந்துகொள்ள சில புள்ளிவிவரங்கள் முதலில் அறிந்து கொள்வோம்.
எழுதப்போவதை படிக்கவும்.
நம்மைப் படைக்கும் ப்ரம்மாவுக்கு ஒரு நாள் என்பது ....ப்ளீஸ்.... கால்குலேட்டரைத் தேடவேண்டாம். அதால் கணக்கு போட முடியாது.... பக்கத்தில் கம்பம், தூண் இருந்தால் கெட்டியாக பிடித்துக்கொண்டால் விழாமல் இருக்கலாம்.
நமது வீட்டில் ஏதாவது விசேஷம் நடக்கும்போது வலது தொடை மீது இடது உள்ளங்கை வைத்து அதன் மீது வலது உள்ளங்கை மூடி சங்கல்பம் செய்கிறோமே. அந்த மந்திரத்தை கொஞ்சம் ஞாபகத்துக்கு கொண்டு (மனப்பாடமாக இருந்தால்) இல்லாவிட்டால் கவலையே இல்லை. அடுத்த முறை வாத்யார் சொல்லும்போது காதாலாவது கேட்கலாம்.
"...ஆத்ய பிரம்மணே , த்வீதிய பரார்த்தே, ஸ்வேத வராஹ கல்பே, வைவஸ்தவ மன்வந்தரே, கலியுகே, ப்ரதமே பாதே, ...................''
இது என்ன சொல்கிறது? பிரம்மாவிற்கு ரெண்டு காலவரையறை. ஒரு பரார்த்தம் 50 வருஷங்கள் கொண்டது. ரெண்டு பரார்த்தம் தான் அவர் பதவி காலம்.
இப்போது பிரம்மாவிற்கு ரெண்டாவது பரார்த்தம் .அதாவது 51-100 பீரியட் . 51 வது வருஷ சர்வீஸ் நடக்கிறது..இங்கு ''வருஷத்தில்'' தான் சூட்சுமம் இருக்கிறது.
நமது வருஷம் போல் 12 மாதம், X 30 நாள் சமாசாரம் இல்லை பிரம்மாவுக்கு.>
ஒவ்வொரு நாளும் ஒரு ''கல்பம்''. மொத்தம் 30 கல்பம் முப்பது நாள். (உதாரணம்: ஸ்வேத வராஹ கல்பம், நீல லோஹித கல்பம், வாம தேவ கல்பம் இத்யாதி.....) ஆச்சா.
''கல்பம்'' என்றால் என்ன?
ஒரு கல்பம் 14 மன்வந்திரம் கொண்டது.
என்னய்யா புதுசு புதுசா அடுக்குறீர். ''மன்வந்த்ரம்'' ன்னா என்னது?
மன்வந்தரம் என்பது நமது கணக்குப்படி, 17.28 லக்ஷ வருஷங்கள் இடைவெளி கொண்டது.
அப்படியென்றால் பிரம்மாவுக்கு நடுவிலே ரெஸ்ட். படைப்பு தொழிலுக்கு ஹாலிடேயா? இல்லை.
ஒவ்வொரு மன்வந்தரமும் 71 மஹா யுகங்களை கொண்டது.
ஒரு மகா யுகம் என்பது நாலு யுகங்களை உடைய க்ரூப். ( சத்ய , த்ரேதா, த்வாபர, கலியுகங்கள்) இவற்றிற்கு முறையே 4, 3, 2, 1 பாதங்கள் உண்டு. கணக்கு இன்னும் முடியலை. இன்னும் இருக்கிறது. கவலை வேண்டாம்.
ஒரு பாதம் என்பது நமது கணக்குப்படி 4,32,000 வருஷங்கள்.
நாம் இப்போது உள்ளது 7வது மன்வந்தரத்தில் 28வது கலியுகத்தில்.
ஒவ்வொரு மன்வந்தரத்திற்கும் ஒரு தலைவன். அவன் தான் மனு. ஆசாமி பேர் இல்லை. பதவிக்கு பேர்.
இந்த மனு பதவிக்கு நியமனம் பெற்றவர்கள் 14 பேர். (1. ஸ்வயம்புவ, 2. ச்வரோசிஷா, 3உத்தம, 4.தாமச, 5.ரைவத, 6 சக்ஷுசன், 7 வைவஸ்வதன் -- இவர்தான் இப்போதைய மனு அதிகாரி. .(சூரியனின் பிள்ளை) 8. சூர்ய சவ்மி ,, 9 தக்ஷ சவ்மி , 10. பிரம்ம சவ்மி . 11. தர்ம சவ்மி , 12. ருத்ர சவ்மி , 13.தேவ சவ்மி 14 இந்திர சவ்மி .
ஒவ்வோர் மன்வந்திரத்திலும் ஒரு இந்திரன் உண்டு. அவன் தான் தேவலோக ராஜா.
இந்திரனுக்கு கீழே புரந்தரர்கள் என்று சில பேர்.
ஒவ்வொரு புரந்தரருக்கும் உதவியாக 7 ( சப்த) ரிஷிகள் இருக்கிறார்கள்.
இப்போதுள்ள சப்த ரிஷிகள் யார் தெரியுமா?
அத்ரி, வசிஷ்டர் , காச்யபர், கவ்தமர் , பரத்வாஜர், விஸ்வாமித்ரர், ஜமதக்னி.
அடுத்த இந்திர பதவிக்கு காத்துக்கொண்டிருப்பவன் மஹாபலி.
மஹாபலி அடுத்த இந்திரன் ஆனால் அவனுக்கு உதவ சப்த ரிஷிகள் ரெடியாகி விட்டார்கள்: அவர்கள் யார்?
பரசுராமர், தீப்திமதர், காலவ ரிஷி, கிருபர் , அஸ்வத்தாமா, வியாசர், ரிஷ்ய ஸ்ரிங்கர்/
இப்போது நடக்கும் கலியுகம் 28 வது சுற்று. நமது கலியுகம் ஆரம்பித்தது 3102 B.C (கிருஷ்ணன் இருந்த காலத்தில் கடைசியில்)
அடுத்து வரப் போகும் மனு : சூர்ய சவ்மி (விவஸ்வான் பிள்ளை,சூரியனின் பேரன்-- அங்கும் வாரிசு ஆட்சி தானோ?)
சாஸ்திரங்கள் என்ன சொல்கிறது தெரியுமா. இந்த மகா காலத்தைப் பற்றிய விவரங்களை அறிந்து கொண்டாலே ஒருவன் தனது பாபங்களில் இருந்து விடுபடுகிறான் என்று.
இதையெல்லாம் படித்தாகிவிட்டது. நான் இப்போது ஒரு கேள்வி கேட்கிறேன்.
உங்கள் பெயர் என்ன???????
மேலே படித்ததில் தலை சுற்றி உங்கள் பேரே மறந்து போய் விட்டதா? இது தான் பிரம்மாவின் ஒரு நாள் .....