நரசிம்ம தரிசனம். -- #நங்கநல்லூர்_J_K_SIVAN
ஆதி சங்கரர் காசிக்கு சென்று விஸ்வநாதரை தரிசனம் செய்து கொண்டு கங்கையில் ஸ்னானம் செய்து கொண்டு உபதேசங்கள் நிகழ்த்திக் கொண்டிருந்தார். அத்வைத சித்தாந்தத்தை பரப்பிக்கொண்டிருந்த சமயம்.
அப்போது ஒரு பதினாறு வயது கூட நிரம்பாத ஒரு பாலகன் சங்கரரை தரிசிக்க வந்தான்.
'யாரப்பா நீ?
என்ன வேண்டும் உனக்கு?''
''ஐயா நான் உங்கள் சிஷ்யனாக உபதேசம் பெறவேண்டும்.
''உன் பெயர் என்ன?
''சநந்தனன்''
''எந்த ஊர்க்காரன் நீ?'
'''தெற்கே நெடுந்தூரம். சோழநாடு என்று பெயர். அங்கிருந்து வந்தவன்''
'சநந்தனா , உனக்கு என்ன தெரியும் ?'
'''எங்கள் ஊரில் ஒரு முனிவரிடம் நரசிம்ம மந்த்ர உபதேசம் பெற்றேன். அவர் சொல்லியபடியே தினமும் பல தடவை தியானம் செய்தேன். பல நாள் தேடியும் நரசிம்மர் தரிசனம் கிடைக்கவில்லை. காட்டில் போய் நரசிம்மரை நினைத்து அவர் தரிசனம் வேண்டும் விடாமல் தியானம், தவம் செய்தேன்.'''
'அப்புறம் என்ன நடந்தது?''
''ஒரு நாள் ஒரு வேடன் நான் இருக்கும் இடத்திற்கு வந்தான்.'
'பையா எதற்கு இங்கே தனியாக உட்கார்ந்து ஏதோ வேண்டுகிறாய்? சொல் என்ன வேண்டும் உனக்கு?''
வேடனுக்கு தவம் நரசிம்மர் தரிசனம் என்று சொன் னால் புரியுமோ புரியாதோ என்று சந்தேகித்து, வேறு விதமாக பதில் சொன்னேன்
''ஐயா நான் ஒரு மிருகத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.''
''பையா, எனக்கு தெரியாத மிருகம் இந்த காட்டில் கிடையாது. சொல் என்ன மிருகம் அது?'
''மனித உடல் சிங்க தலை கொண்ட மிருகம்'
'''அட அப்படி ஒன்றை நான் இதுவரை பார்த்ததே இல்லையே. அதை தேடி உனக்கு பிடித்து தருகி றேன்''
'அதன் பெயர் நரசிம்மம்'' என்று சொல்லி சிரித்தேன்.
எதற்கு தம்பி சிரிக்கிறாய்? என்றான் வேடன்.
''உன்னால் பிடிக்க முடியாது. நரசிம்மம் கண்ணுக்கு தெரியாது'' என்றேன்
.''என்னை என்ன நினைத்தாய். நாளைக்கு சூர்ய அஸ்தமனம் முன்பு அந்த மிருகத்தை தேடி பிடித்து உன்னிடம் கொண்டு வருகிறேன். அப்படி கொண்டு வரமுடியவில்லை என்றால் என் தலையை வெட்டிக் கொண்டு மரணம் அடைகிறேன் '' என்று அந்த வேடன் சென்றான்.
வேடன் எங்கெங்கோ அன்றும் மறுநாளும் காட்டில் தேடி அலைந்தான். நரசிம்மம் கிடைக்கவில்லை. அன்ன ஆகாரம் இன்றி வேடன் களைத்தான். சூரிய அஸ்தமனம் நெருங்கியது.'வாளை உருவி தனது தலையை வெட்டிக் கொள்ள வேடன் தயாராகும் சமயம் எதிரே மரங்களி டையே ஒரு சலசலப்பு. வேடன் உற்று பார்த்தான்.ஒரு விசித்திரமான உருவம். மனிதன் போல் உடல். ஆடை அணிந்திருந்தாலும் அதன் பெரிய தலை ஒரு ஆக்ரோ ஷமான ஆண் சிங்கம். கண்களில் நெருப்பு . கர்ஜனை காதை செவிடாகப் பண்ணியது. மெதுவாக வேடனை நெருங்கியது வேடனால் தன் கண்ணை நம்ப முடியவில்லை. சநந்தன் விவரித்தது போலவே அந்த நரசிம்மம் இருந்தது.வேடன் அங்கும் இங்கும் தேடி நிறைய பச்சைக் கொடிகளை இழுத்து வந்து அந்த நரசிம்மத்தை கட்டி இழுத்துக் கொண்டு சநந்தனி டம் வந்தான்
.''இந்தா நீ கேட்ட நரசிம்மம்'' என்று சந்தோஷமாக சொன்னான் வேடன்
.எனக்கு நரசிம்மம் இருப்பது கண்ணுக்கு தெரிய வில்லை . கொடிகள் மட்டுமே தெரிந்தது. சிம்ம கர்ஜனை மட்டும் காதில் விழுந்தது.
''நரசிம்மா உன்னை தேடி எத்தனை காலம் தவம் இருக்கிறேன். உன் தெய்வ உருவத்தை இந்த வேடனுக்கு மட்டும் காட்டியவன் ஏன் எனக்கு காட்ட வில்லை?'
''சநந்தனா , இந்த வேடன் பல ஜென்மங்களாக செய்த புண்ய பலன் காரணமாக நான் அவனிடம் கட்டுண் டேன். நீ கோடி வருஷம் தவம் இருந்தாலும் அவன் செய்த புண்யபலன் அடையமுடியாது. இதோ உனக் காக அன்ன ஆகாரமில்லாமல் தூக்கமின்றி, ஓய் வின்றி, நீர் கூட பருகாமல், என் உருவத்தை மனத்தில் நிரப்பிக்கொண்டு என்னைத் தேடி ரெண்டு நாளாக அலைந்து கடைசியில் தனது முயற்சி தோல்வி அடையும் என்று கருதி கொடுத்த வாக்கை காப்பாற்ற தன்னையே மாய்த்துக் கொள்ள துணிந்தவன் இந்த வேடன். நீ அவனைத் தெரிந்தவன், அவனால் உனக்கும் என் கர்ஜனை சப்தம் கேட்டது. நீயும் என்னை நோக்கி தியானம் செய்பவன். தக்க சமயத்தில் உனக்கும் என் தரிசனம் கிடைக்கும்'' என்கிறார் நரசிம்மன்.
ஆதி சங்கரர் புன்முறுவல் செய்தார். அதன் பின் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. அதில் சனந்தனர் என்கிற பத்ம பாதருக்கு நரசிம்ம தரிசனம் கிடைத்தது. அதை இன்னொரு பதிவில் சொல்கிறேன்.
No comments:
Post a Comment