Friday, August 5, 2022

RAME RAME MANORAME


 

''ரமே ராமே மனோரமே'' --  நங்கநல்லூர் J.K. SIVAN
அத்யாத்ம ராமாயணம் -  கிஷ்கிந்தா காண்டம் -  ஸர்கம் 4


கிரியா யோக விளக்கம்

மழைக்காலம் என்றால் அதுவும் அந்த வனப்ரதேசத்தில் கேட்கவே வேண்டாம். மிருகங்களே கூட நடமாட அஞ்சும் அளவுக்கு வெள்ளம், குளிர், இருட்டு, பயம். எனவே ராமர் லக்ஷ்மணனோடு மாரிக்காலத்தை மலைக்  குகை  ஒன்றில்  கழித்தார்.  மலைகளில் கிடைத்த காய் கனி வர்க்கங்களைப் புசித்து திருப்தி அடைந்தார். மான்கள் பறவைகள் போன்ற பல ஜீவராசிகள் எங்கும் ராமனைப் பின் தொடர்ந்து சென்றன. ராமன் நேரம் கிடைத்தபோது  எல்லாம்  த்யானத்தில் இருந்தார். ஒரு நாள் லக்ஷ்மணன் ராமனிடம் பக்தியோடு கைகட்டி நின்றான்.

''என்ன லக்ஷ்மணா தயங்குகிறாய்,   சொல் என்ன விஷயம்?

''ராகவா, முன்பு  ஒருமுறை எனக்கு உபதேசம் செய்தீர்கள், அதனால் அவிவேகத்தால் எழுந்த சந்தேகங்கள் பல என் மனத்தை விட்டு நீங்கின. தற்போது இந்த சந்தர்ப்பத்தில் தங்களிடம் சில விஷயங்கள் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். அனுக்ரஹிக்க வேண்டுகிறேன்'' என்றான்.

''லக்ஷ்மணா, உனக்கு என்ன தெரிந்துகொள்ளவேண்டும் என்று நினைக்கிறாயோ அதைக் கேள்''

''ஸ்ரீ ராம பிரபோ, வெகுநாட்களாக என் மனதில் ஒரு கேள்வி. சாக்ஷாத் பரமாத்மாவான உங்களை பூஜா முறைகளால் (கிரியா யோகம்) எப்படி ஆராதிப்பது உசிதம்?.  நாரதர் வியாசர், போன்ற மா முனிவர்களும் யோகிகளும், ஏன் பிரம்மனுமே, இந்த கிரியாயோக வழியே சிறந்த சாதனம் என்கிறார்களே. நான்கு வர்ணத்தாரும் பெண்களும் சன்யாசிகளும் கூட மோக்ஷத்தைபெற இதுவே சுலப முறை என கூறுகிறார்களே.''

அத்யாத்ம ராமாயணத்தை  பரமேஸ்வரன் பார்வதிக்கு  சொல்வதாக  இந்த  ஸ்லோகங்கள் உள்ளன.  ஆகவே  சிவன்  பார்வதிக்கு  என்ன பதில் சொன்னார் தெரியுமா>

''ஸ்ரீ ராமன் லக்ஷ்மணனுக்கு விவரித்ததை நான் உனக்கு கூறுகிறேன் கேள் பார்வதி'' என்று பரமேஸ்வரன் தொடர்ந்தார்........

''லக்ஷ்மணா,  நீ  விரும்பியபடியே  கூறுகிறேன் கேள் '' என்று  ராமர் துவங்கினார். ராமர் சொன்னதை  சுருக்கமாக  சொல்கிறேன்: 

பரமாத்மாவை பூஜை செய்ய கணக்கற்ற முறைகள் உண்டு. அவற்றை வரிசைக்கிரம படுத்துகிறேன்.
அவரவர் தத்தம் குல சம்பிரதாயப்படி, உபநயனம் போன்ற காலக்கிரம சடங்குகள் முடிந்து, பக்தி ஸ்ரத்தையோடு ஒரு சத்குருவிடம் மந்த்ரோபதேசம் பெற்று அவர் கற்றுத் தந்தபடி  ராமருக்கு பூஜை செய்யலாம்..
ராமரை  தமது ஹ்ருதயத்திலோ, சூரியனிலோ, அக்னியிலோ, விக்ரஹத்திலோ த்யானித்து அர்ச்சிக்கலாம்.
சாளக்ராமத்தில் பூஜிக்கலாம். 

(நண்பர்களே, சாளக்ராமம் வாங்குவோர் விஷயம் தெரிந்தவர்களை அணுகி பிறகு வாங்கவேண்டும். கடையில் பேரம் பேசி வாங்குவதால் பயனில்லை. சாளக்ராம உபாசனைக்கு சில விதிமுறைகள் உண்டு-சிவன் )

''உடல் தூய்மை மட்டுமின்றி, உள்ளத் தூய்மைக்கென மந்திர உச்சாடனங்கள் செய்துகொண்டும், ஆற்று மண்ணைக் கொண்டு உடல் சுத்தம் செய்வதும் . விடியற்காலை ஸ்நானம். அன்றாட நியம நிஷ்டைகள், நித்ய கர்மாக்கள் விடாமல் செய்வதும் சிறந்தது. .
சங்கல்பம் செய்துகொண்டு, ஆசார்யனை  ராமனாக பக்தியோடு பாவிக்க வேண்டும்.
விக்ரஹ ஆராதனை செய்பவர்கள் நித்ய அபிஷேகம் செய்யவேண்டும் (யந்த்ரம், படம் என்றால் சிறிது ஜலம் தெளித்தால் போதும் ). 
நல்ல மலர்ந்த மணமுள்ள மலர்கள், சந்தனம் இவற்றால் பூஜித்தால் நல்ல பலன் உண்டு.
பக்தி ஸ்ரத்தையோடு, தூய மனத்தோடு அலங்காரம் செய்து விக்ரஹம், பிரதிமை ஆகியவற்றை வழிபடல் வேண்டும்.
முழு ஈடுபாடுடன்   ஜலம்  ஒரு உத்ரணி மட்டுமே எனக்கு சமர்ப்பித்தாலே கூட நான் ஏற்றுக்கொள்வேன். எனக்கு பக்தா, உன் மனம் தான் முக்கியம்'   என்று கீதையில் ஸ்ரீ கிருஷ்ணன் சொல்லி இருக்கிறாரே.
அட்சதை, சந்தனம், புஷ்பம், அறுசுவை உண்டி இவற்றோடு ஆராதித்தல் ஸ்லாக்கியம்.

பூஜை செய்பவர் அமரும் ஆசனம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? 
தரையில் தர்ப்பையை போட்டு, அதன் மேல் மான்தோல், அதற்கு மேல் வஸ்த்ரம் அணிவித்து பூஜை செய்யும் தெய்வத்துக்கு நேரே அமர வேண்டும். பாஹிர் மாத்ருக, அந்தர் மாத்ருக நியாசங்கள், த்வாதச நாமங்களைக் கூறி, தத்வ நியாசம் செய்துகொள்ளவேண்டும். 
உள்ளும் வெளியும் பரிசுத்தமானபின் தான் பகவானுக்கு பூஜை தொடங்குவது முறை . 
இடதுபக்கம் கலசம். வலது பக்கம், புஷ்பம். அர்க்யம், பாத்யம், மதுபர்க்கம், ஆசமனம் பண்ண 4 வட்டில்கள், (பாத்திரங்கள்).
விக்ரஹத்துக்கு பாத்யம், அர்க்யம், ஆசமனீயம், ஸ்நானம், வஸ்த்ரம் ஆபரணம் எது கிடைக்கிறதோ அதை வைத்து கபடமில்லாத மனத்தோடு பூஜை செய்யவேண்டும். 
தூப, தீப, நைவேத்ய, நீராஜனம் என்று ஸாஸ்திரப்படி தசாவரண பூஜை செய்யவேண்டும். 
ஸ்ரத்தை தான் முக்யம். 
ஹோமம், ஒளபாஸனம் முறையாகச் செய்யவேண்டும். 
மூல மந்த்ரத்தையோ, புருஷ சுக்தம் சொல்லியோ ஆஹூதி கொடுக்கவேண்டும். 
த்யானம், ஆடல்பாடல், ஜபம் எல்லாம் ராமனுக்குப் பிரீதியாக செய்யவேண்டும். 
சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யவேண்டும். 
ராமனுக்கு அர்ப்பணித்த மலர்களை பிரசாதமாக தலையில் சூட்டிக்கொள்ளவேண்டும். 
பிரார்த்தனையோடு நமஸ்காரம் பண்ணவேண்டும்.

இவ்வாறு முறைப்படி பூஜை செய்பவன் சகல நலனும் அடைவான். சாரூப்யத்தை அடைவான்.'' லக்ஷ்மணனுக்கு சொல்லியவாறு  நமக்கும் ராமன் இதை உபதேசிக்கிறார்.

இதற்கிடையில் ஹனுமன் கிஷ்கிந்தையில் சுக்ரீவனைச் சந்தித்து சீதையைத் தேடும் காரியத்தில் சுக்ரீவன் காலம் தாழ்த்துவதை எடுத்துரைத்து ராமனுக்கு கொடுத்த வாக்கு நிறைவேற்றாவிட்டால் வாலிக்கு நேர்ந்த கதி அவனுக்கும் நேரும் என்று சுக்ரீவனுக்கு புத்திமதி சொல்ல, சுக்ரீவன் தனது தவறை உணர்ந்து பல்லாயிரக்கணக்கான வானரர்க்ளை பல திசைகளுக்கும் அனுப்பி பெரும் படை ஒன்று தயார் செய்வதில் ஈடுபட்டான்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...