Wednesday, August 31, 2022

THE TWO HOLY RIVERS

 புண்ய தேவிகள்  -   நங்கநல்லூர்  J K  SIVAN 


அந்த ரெண்டு பேருமே ரொம்ப  வயசானவர்கள். ஓடிக்கொண்டே இருப்பவர்கள்.
இனம் இனத்தோடு சேரும்  என்பார்களே அது போல் அந்த  இரண்டு தாய்களுமே இணைபிரியாதவர்கள். ஒன்று சேர்ந்தவர்கள்.  எங்கோ பிறந்து வளர்ந்து உழைத்து  தேய்ந்து களைத்து கடைசியில் ஒன்று சேர்ந்தவர்கள்.  ஒருவள்  தங்கநிறம். மற்றவள்  மாநிறம்.  
''வாம்மா,  யமுனா தேவி.  உன்னைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன் இப்போது தான்  சந்தித்தேன்''  என்கிறாள் கங்கம்மா.
''கங்கா, நான் சொல்ல நினைத்ததை நீ சொல்லி முந்திக்கொண்டாய்...உன் பெருமை என்ன, புகழ் என்ன. ஒருநாளாவது உன்னை சந்திப்பேனா என்று ஏங்கின  எனக்கு  தான் உன்னை சந்தித்ததில்  பரம சந்தோஷம் ' என்றாள் யமுனா தேவி.
''யமுனா நீ யார் உன் பூர்வோத்திரம் சொல். கேட்க ஆசையாக இருக்கிறது.''
நானும்  உன்னைப்போல  தான்  ஹிமாச்சலத்தில் பிறந்தவள். நான் பிறந்த இடம் யமுனோத்ரி. நீண்ட  வழி வந்தவள் ஆயிரம் மைல்கள்  கடந்து வந்தவள். என் தந்தை  சூர்ய தேவன்.  சகோதரன்  யமராஜன். யமன்.  அதனால் என் பெயர் யமி , யமுனா என்று கூப்பிடுகிறார்கள்.
''ஆஹா  எப்பேர்ப்பட்ட புண்யசாலி நீ ''என்றாள்  கங்கம்மா .
''நிறுத்து போதும்.  அக்கா  நீ  சாதாரணமானவளா? பரமேஸ்வரனே உன்னைப் போற்றி  தன் தலையில் சூட்டிக்கொண்ட பெருமை கொண்டவள். எவ்வளவு  உயிர்களுக்கு  உணவளிப்பவள். எத்தனை பேர்  பாபங்களை வாங்கிக் கொண்டு  புனிதப் படுத்துபவள். இந்த தேசத்துக்கு புகழ் தருபவள்.  எத்தனை தெய்வங்கள் உன்னை வணங்குகிறார்கள்.அக்கா   கங்காதேவி,  உன் முன்பு  நான் ஒரு சிறு ஓடை. அவ்வளவே."
"இல்லை  யமுனா, உன் பெருமை நான் அறிவேன்.
ரிஷிகள்  என்ன சொல்கிறார்கள் தெரியுமா? கங்கையை நூறு மடங்கு புனிதப்படுத்தினால் கிடைப்பவள்  யமுனா.  விஷ்ணு என்கிற நாராயணனின் ஆயிரம் நாமத்தை விட ராமா என்கிற பெயர் உசத்தி. அப்படிப்பட்ட ராமனின் மூன்று நாமங்களுக்கு ஈடு கிருஷ்ணன் என்கிற ஒரு நாமம். இது பாகவதத்தில் இருக்கு.
யமுனையில் நீராடினால் ஒருவன் செய்த பாபத்தின் விளைவுகள் அவனை விட்டு விலகும் 
''கங்கா தேவி  நான் உன் சகோதரி என்ற பெருமையே போதும்.''
''யமுனா, நீ ரொம்ப புண்யம் செய்தவள். புண்யம் தருபவள். உன்னில் ஒருமுறை ஸ்நானம் செய்தவன் குளித்து எழும்போது மனம் பூரா கிருஷ்ணனின் நினைவுகளோடு தான் கரையேறுகிறான். சைதன்யர் சொன்னதம்மா இது.

''யமுனா, உனக்கு தெரியுமா? பிருந்தாவனத்தில் வசித்து அன்றாடம் உன்னிடம் ஸ்நானத்துக்கு வருபவர்களால் இந்த உலகமே சுத்தமாகிறது. நீ மறந்துவிட்டாயா? எத்தனை ஆயிரம் முறை உன்னில்  மூழ்கி விளையாடியிருக்கிறான் கிருஷ்ணன் நண்பர்களுடனும் கோபியர்களுடனும்!! அவன் பாதத்தை எவ்வளவு ஆயிரம் தடவை நீ தொட்டு புனிதமடைந்தவள். யாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம்??? 

''அக்கா  உன்னோடு இருந்தால் தான் கிருஷ்ணனைப் பற்றி முழுதும் உனக்கு சொல்ல முடியும் என்றாயே , இனி உன்னை விடமாட்டேன், இதோ வந்துவிட்டேன் ....சொல்லு ஆர்வமாக இருக்கிறது கேட்க....''
யமுனாவும்  கங்கையும்  அணைத்து  இறுக்க  கட்டிக்கொண்டார்கள்  ஒன்று சேர்ந்தார்கள்.  
அங்கே  தான் நாம்  இருவரையும் நமஸ்கரித்து கண்ணுக்கு தெரியாத  சரஸ்வதியையும் சேர்த்து வணங்கி திரிவேணி சங்கமம் என்று ஸ்னானம் செயது பாவத்தை போக்கிக் கொள்கிறோம்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...