விரட்டி.. #நங்கநல்லூர்_J_K_SIVAN
இப்போது சமையல் என்றாலே உடனே ஞாபகத்துக்கு வருவது gas சிலிண்டர்.
இதற்கு முன் ஸ்டவ் சமையல் கட்டில் ராஜாவாக இருந்தது. ஸ்டவ்வில் ரெண்டு வகை. ஒன்று பம்ப் அடிக்கும் ஸ்டவ். இன்னொன்று கெரோசின் எண்ணை நிரப்பி எரிவது. திரிகள் பெரிதும் சிறிதுமாக திருகி உஷ்ணம் ஏறும் இறங்கும்.
அதற்கு முந்தைய சாம்ராஜ்யம் அடுப்பு. அடுப்பில் ரெண்டு வகை. வீட்டில் இரும்பு அடுப்பு வளைந்து இருப்பது, மண் அடுப்பு. பெரிய பெரிய கல்யாணங்கள் சமாராதனைகள், விருந்துகள் எல்லாம் களிமண் அடுப்பால், செங்கல் அடுப்பால் சமைக்கப்பட்டு ருசியாக பரிமாறப்பட்டவை.
வெளியே காற்று தொந்தரவு இல்லாமல் தட்டி கட்டப்பட்டு கோட்டை அடுப்புகள் பெரிய பெரிய அண்டா குண்டாக்களை சுமந்து எரிந்தன. சாம்பார் ரசம் சாதம் எல்லாம் கொதித்தது. எரிக்க விறகு கட்டைகள் உபயோகப்பட்டன. பெரிய மரக்கிளைகள் வெட்டப்பட்டு காய்ந்து போனபின் எரிபொருளாகியது. வீட்டில் சவுக்கு கட்டை பிளந்து அடுப்பு எரிந்து சாப்பிட்டவர்கள் நாங்கள்.
குமுட்டி என்று ஒரு சாதனம். கரியில் எரிந்தது. லீகோ என்று ஒரு கரி நிதானமாக வெகு நேரம் எரிந்தது. குமுட்டியில் பெரிய பாத்திரங்களில் சமைக்க வசதியில்லை. வீட்டில் சிறிய குடும்பத்துக்கு, தோசை அடை வடை கூட இதில் தான் பண்ணினார்கள்.
அடுப்புக்கும், குமுட்டிக்கும் ஊதாங்குழல் தேவைப்பட்டது. இரும்பு பைப் துண்டு வழியாக மூச்சைப் பிடித்து என் அம்மா ஊதிரி அடுப்பு குமிட்டி எரித்திருக்கிறாள். அடுப்பிலும்
குமுட்டியிலும் சமைத்தபின் சாம்பல் நிறைய இருக்கும். அதை வீட்டுக்கு பின் புறம் ஒரு குழியில் குப்பைகளோடு போடுவோம். அதற்கு எருக்குழி என்று பெயர். அப்போதெல்லாம் குப்பை வண்டிகள் கிடையாது. எருக்குழி சேமிப்பு தென்னை, வாழை மா மரங்களுக்கு உயிர் சத்தாக அமைந்தது.
இதைத்தவிர இன்னொரு எரிபொருள் தான் விரட்டி. கிராமத்தில் பல சுவர்களில் வட்டமாக வட்டமாக பெண்கள் சாணியை தட்டி வைத்து வெயிலில் காயும். மாட்டு சாணம் உமி, நெல் பதர், வைக்கோல் கரித்துண்டுகள் மரத்துண்டுகள் சக்கைகள் எல்லாம் கலந்து காய்ந்தபின் அதற்கு பெயர் விரட்டி.
கிராமத்தில் பெண்கள் சாணி உருண்டைகளை கைநிறைய எடுத்து லாகவமாக சுவற்றின் மேல் சப்பென்று எறிவது ஒரு கலை . வரிசையாக ஒன்றன் பக்கத்தில் ஒன்றாக சுவர் முழுதும் சாணி உருண்டைகள் சப்பையாக ரவுண்டாக விரட்டிகளாக காய்ந்து ஒருவித மணம் அந்த தெருவில் போனாலே வீசிய காலம் உங்களுக்கு அநேகருக்கு தெரியாது.
என் சிறிய வயதில் என்னோடு பள்ளிக்கூடத்தில் படித்த பத்து பதினோரு வயது நீலா எங்கள் தெருவில் பால்காரர் வெங்கடேச நாயக்கர் பெண். அவளை ப் போல் வெகு வேகமாக இடது கையில் சாணிஉருண்டை எடுத்து பள்ளிக்கூட கோவில் வெளிப்புற சுவர்களில் வரிசையாக ஒரே அளவாக விரட்டி யாராலும் தட்டமுடியாது. அவள் தாயார் ட்ரைனிங்.
ஹோமங்களுக்கு யாகங்களுக்கு, அத்தியாவசியமாக விரட்டி தேவைப்பட்டது. கோவில் வீடுகள் எல்லா இடத்திலும் வீட்டில் விரட்டி ஸ்டாக் இருந்தது. புகை வராமல் அதை விசிறிக்கொண்டே இருக்கவேண்டும். அரையணா ஓரணாவுக்கு மூன்று விரட்டிகள் கிடைத்தது. இப்போது பிளாஸ்டிக் கவர்களில் போட்டு விரட்டிகளை பெரிய கம்பெனிகள் விற்கிறது. 450 ரூபாய் வரை விலை என்று கூகிளில் பார்த்து அசந்து போனேன். அமேஸான் விரட்டி விற்கிறது.
பயோகாஸ் மாட்டு சாணியில் தயார் பண்ணுகிறார் கள். பெரிய மால்களில் கூட ஆயுர்வேத விரட்டிகள் விற்கப்படுகிறது. மாட்டு சாணம் கிருமி நாசினி. அதன் புகை கொசுவை விரட்டும். வீட்டில் கிருமி நுழையாவண்ணம். வாசலில் சாணி கரைத்து மொழுகுவார்கள். அதன் மேல் மாக்கோலம் போட்டு செம்பருத்தி ஜெவந்தி சாமந்திப் பூ வைத்தபோது பார்க்கவே ஜம்மென்று இருந்தது.
No comments:
Post a Comment