Friday, August 12, 2022

BARTHRUHARI

பத்திரகிரியார் புலம்பல்  --  நங்கநல்லூர்   J K  SIVAN  

இன்று  சிறிது  பத்திரகிரியார் புலம்பலை கேட்போம்.  அவர் புலம்பல் அவருக்காக மட்டும் அல்ல, நமக்கும் சேர்த்து  தான் என்பதை மறக்க வேண்டாம்.
                       
தக்கும்வகைக்கு ஓர்பொருளும் சாராம லேநினைவில்
பக்குவம்வந்துன் அருளைப் பார்த்திருப்பது எக்காலம்?

இந்த உலகில் எது  ஐயா  சாஸ்வதம் ?  யாருக்கு தெரியும்?  அறிந்தவன்  பரமேஸ்வரா  நீ ஒருவன் தான்.  ஆகவே தான்  கெஞ்சுகிறேன்.  உன் நினைவே என் மூச்சாகும் பக்குவம் வந்து உன் அருளை பெறுவேனா? அது  எப்போதப்பா ?'

கள்ளக் கருத்தை எல்லாம் கட்டோடு வேரறுத்து இங்கு
உள்ளக் கருத்தை உணர்ந்திருப்பது எக்காலம்?

எத்தனையோ எண்ணங்கள் என் மனதில்  ஓயாத கடல் அலையாக ஒன்றன்பின் ஒன்றாக ஓய்வின்றி,     எழும்புகிறதே,  அதில் முக்கால் வாசி தப்பான  எண்ணங்கள் தான் என்பதும் நமக்குத்   தெரியும்.  தெரிந்து செய்கிற  தப்புக்கு  தண்டனை  ஜாஸ்தி.  ஆகவே  இனிமேல்  அதை எல்லாம் அறுத்தெறிந்து   பரமேசா,  ,உன் நினைவே என் நெஞ்சில் நீங்காமல் இருக்க செய்ய  முடியுமா,  அது எப்போது?

அட்டகாசம் செலுத்தும் அவத்தைச் சடலத்துடனே
பட்டபாடு அத்தனையும் பகுத்தறிவது எக்காலம்?

அடடா, இந்த உடம்பு என்னமாய் என்னை  அதன் போக்கில் ஆட்டி வைக்கிறது, அலைக்கழிக்கிறது, அவஸ்தை பட வைக்கிறது.  நான்  அடிமையாகிவிட்டேன். சுதந்திரம் எப்போது?   அதன் பிடியிலிருந்து  தப்ப  முடியவில்லையே.   இதிலிருந்து விடுபட்டு   பரமேசா  உன்னை அறிவது எப்போது?

தோன்றாசை மூன்றும் பிரிந்தறிவது எக்காலம்?
ஊன்றாசை வேரை அடிஊடறுப்பது எக்காலம்?

மண், பெண்,  பொன் ஆசைகளில் இருந்து எப்போதப்பா  என் மனதுக்கு விடுதலை?  அதில் ஊன்றிப்போன என்னை வேருடன் கிள்ளி அந்த பந்தத்திலிருந்து எப்போது விடுவிப்பாய்?

அடர்ந்த மனக்காட்டை அஞ்செழுத்தாம் வாளாலே
தொடர்ந்து தொடர்ந்து வெட்டிச் சுடுவது இனிஎக்காலம்?

என் மனது  நிச்சயமாக  ரொம்ப பெரிய  ஒரு அடர்ந்த  காடு, அதில் எண்ணற்ற உலக பந்த பாச, சுயநல,  பேராசை எண்ணச் செடிகள், கொடிகள், வேர்கள், மரங்கள்,   முளைத்து வளர்ந்து சூரிய ஒளி புகமுடியாமல்  இருண்டு  தா நிற்கிறதே.  இதையெல்லாம்     ஹே  பரம சிவனே உன் பஞ்சாக்ஷரம்,  எனும் ஓம் நமசிவாய   எனும்  ஐந்தெழுத்து ஆகிய  வாளால்,   அழிக்கவேண்டும்  எப்போது நான்  உன் பஞ்சாக்ஷர மந்திரத்தை சொல்லி அவற்றை  அழிப்பேனோ?  வேரோடு வெட்டி சாய்த்து எரித்து,  என்னை  உள்ளும் புறமும்  நீ ஆட்கொள்ளுவது எப்போது?

ஐந்து பொறிவழிபோய் அலையும் இந்தப் பாழ்மனத்தை
வெந்து விழப் பார்த்து விழிப்பது இனி எக்காலம்?

எதற்கு நீ இந்த ஐம்புலன்களை எனக்கு வைத்து என்னை படாத பாடு  பட வைத்து விட்டாய்?. அதன் வழிகளில் ஒன்று இல்லை யென்றால் மற்றொன்றில் அலைந்து களைத்து விட்டேனே. என் மனதை சுட்டு எரித்து சுண்ணாம்பாய் பண்ணுகிறது இந்த புலன்கள். அதிலிருந்து நான் மீள்வது எப்போது?

அமையா மனம் அமையும் ஆனந்த வீடுகண்டு அங்கு
இமையாமல் நோக்கி இருப்பது எக்காலம்?

அமைதியில்லா என் மனம் அமைதியை பெற்று ஆனந்தம் நிறைந்த மோக்ஷம் பெற்று அங்கு தேவர்களை போல்  கண் இமைக்காமல் உன்னையே நோக்கியவாறு இருப்பது எப்போது? அது உனக்குத் தானே  தெரியும்?  சீக்கிரம் உதவுவாயா? எப்போதப்பா?.

கூண்டுவிழும் சீவன் மெள்ளக் கொட்டாவி கொண்டாற்போல்
மாண்டுவிழும் முன்னே நான் மாண்டிருப்பது எக்காலம்?

இந்த உடலாகிய  கூண்டிலிருந்து என் ஜீவன் வாயிலிருந்து கொட்டாவி வெளிவருவது போல் விடுபட்டு பறந்து போகும் முன்  நான் உன்னையே நினைத்து உன்னில் கரைந்து போவது எப்போது?  சீக்கிரமே  அதைச் செய்யேன்.

ஊன் நிறைந்த காயம் உயிர் இழந்து போகுமுன்னம்
நான் இறந்து போக இனி நாள் வருவது எக்காலம்?

 இதோ நாளுக்கு நாள் என் எடை கூடிக்கொண்டே வருகிறதே,    புதிதாக  வாங்கிய சட்டை கூட  தொப்பையை பிடித்து நசுக்குகிறதே. கழட்டி எறிய  வேண்டியிருக்கிறது.  இப்படி  வேகமாக  நாளுக்கு நாள்  என் சதை, தசை எல்லாம் பருத்து பெருத்து போகிறதே இந்த உடல் இப்படி வளர்ந்து ஒருநாள் டப் பென்று வெடித்து என் உயிர் போய்விடும்  என்கிற பயம் வேறு என்னை அதற்கு முன் கொன்றுவிடும் போல் இருக்கிறதே?.    அதற்கு முன்  ''நான்'' ''எனது'' என்ற எண்ணங்கள் முதலில் இறந்து போக வேண்டும். அது உன்னால் தான் முடியுமா  பரமேசா, சொல்  அது எப்போது?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...