Friday, August 19, 2022

AN EX HERO

 


குன்றத்தனை நிதியும் அன்றைப்பொழுதில் அழியும்...
நங்கநல்லூர்  J K SIVAN 

இது ஒரு கற்பனை . எவரையும் குறிப்பிடவில்லை  என்றாலும் எங்கோ எவருடனோ பொருந்தினால் அது  அதிசயம் தான்.
அவன் குரல் இப்போது வெளியே எழும்பவில்லை. சினிமா உலகம் அவனை மறந்து போய்விட்டது ஒரு காலத்தில் கொடி கட்டி பரந்த பாடும் அழகு நடிகன் அவன்.  குரல் வெண்கல நாதத்தில்  மத்தாப்பூ  போல  சங்கதிகள் உதிரும் அபூர்வ குரலோன்.  அவனை சிறுவயதில்  யாரோ ஒரு அறிவாளி பட தயாரிப்பாளனோ  இயக்குனனோ கண்டுபிடித்ததே  ஒரு கதை.  

ஓடும்  ரயிலில் அந்த சிறுவன் பெட்டி பெட்டியாக ஏறி, கையில் ஒரு அலுமினியம் லோட்டாவை பாடிக்கொண்டே  நீட்டுவான்.  அவனது  ராக ஆலாபனை, குரலின் காந்த சக்தி அந்த சினிமாக்காரனுக்கு பிடித்தது ஐந்து ரூபாய் காசுகள்  போட்டு தலையசைத்து ரசித்தான்.  வண்டி நின்றதும்  இறங்கும்போது அந்த தனவான்  ''பையா நீயும் என்னோடு வருகிறாயா, உன்னை நாடக கம்பெனியில் பாட நடிக்க வைக்கிறேன்'' என்றதும் ஆனந்தம் அந்த சிறுவனுக்கு.    அவனோடு சென்றான். அவன் தாய் தந்தை அவனைப்பற்றி கவலைப்படவில்லை.

மதுரை  திருச்சி  திருநெல்வேலி  மதராஸ்  கோவை என்று பல இடங்களுக்கு  நாடக கம்பெனி சென்றது.  வருஷங்கள் ஓடியது சிறுவன் இப்போது அயன் ராஜ பார்ட் நடிகன். அவன் பெயரைப் போட்டு  கும்பல்  சேர்ந்தது. கொட்டாய் நிரம்பியது. பதினெட்டு வயதான காளை அவனை சினிமா உலகம் அடையாளம் கண்டுகொண்டது. படத்தில் நடிக்க வைத்தார்கள்.  அத்தனையும்  வெற்றிப்படங்கள்.    பல இசைத்தட்டுகள் அவன் பாடல்களை தாங்கி ஊர் உலகமெல்லாம் கேட்டு மயங்கியது.   அவனைத்  தெரியாத ஆளே கிடையாது. குதிரை மேல்  சவாரி செய்தான்.   பெரிய மாளிகை கட்டி வாழ்ந்தான்.    பன்னீரில் குளித்து தங்கத்தட்டில் உண்டான். பல பெண்கள் அவனை நாடினர்.  மணந்தான். பலரை கைவிட்டான். நடித்தான். குடித்தான்.  பணம் அவனை அறிவிலியாக்கி சிக்கல்கள்  சூழ்ந்தன. கொலை வழக்கிலும் சிக்கினான்.  சிறை சென்றான். பல வருஷங்கள் கழித்து வெளிவந்தான். குரல் மங்கியது. பட உலகம் ஒன்றிரண்டு சந்தர்ப்பம் கொடுக்க முன் வந்தது.  கண்டிஷன்கள் போட்டது. அவன்  சுய கௌரவம்.அதை ஏற்க மறுத்தது.   படவுலகம் பாட்டை மறந்து பேச்சை ஆதரித்தது. அவனுக்கு பேச தெரியாது. கடன் வாங்கினான். தானே படமெடுத்தான். அவனைத் தவிர அதை பார்க்க அதிக ஆளில்லை.  முடங்கினான். வியாதி வந்தது. சொத்தை விற்று  கடனை அடைத்தான்.   ஓட்டாண்டியானான்.  ஆரம்ப வாழ்க்கை திரும்பியது. கோவில்கள் வாசலில் அமர்ந்து பாடினான்/ தான் யாரென்று அடையாளம் காட்டிக்கொள்ள  மறுத்தான். பாடின போதெல்லாம்,    கேட்டவர்கள்  ''ஆஹா நீ அந்த  பெரிய நடிகன் பாடுவானே  அவனைப்போலவே  அழகாக  பாடுகிறாயே, குரல் தான் அவனைப் போல இல்லை''   என்று அவனிடமே சொன்னார்கள். தனது புகழ் இன்னும் முற்றிலும் மங்கவில்லை என்ற சந்தோஷம் அவனை வாழ விட்டது.  

அன்று காலை யாரோ ஒரு புது நடிகநின் படம் வெளிவருவதால் பிரம்மாண்டமான  பெரிய  படம் சட்டம் கட்டி  தெருவில் நிற்க வைத்து ஏணி வைத்து  ஏறி அந்த நடிகன் படத்தின் தலையில் பால் குடம் குடமாக ஊற்றினார்கள்.  அவன் ஒரு பெருமூச்சு விட்டான். அந்த படத்தில் இருந்த நடிகன் ஒரு காலத்தில் அவனுக்கு கால் பிடித்து விட்ட இளம் சிறுவன்.

மெதுவாக ஒருநாள்  நடக்க முடியாமல்   கிழிந்த ஆடைகளோடு தெருவில் நடந்தவன் ஒரு டீக்கடை வாசலில் நின்றான். அந்த டீக்கடையில் தினச் செய்தி பத்ரிகைகளும் நாடார் விற்றார். அந்த கடையில் தொங்கிய  செய்தித்தாளில்  அவன் படம்.  அவன்   நாடக சினிமா உலகில் 30 40  ஆண்டுகள்  தலை சிறந்து கோலோச்சியது,  அவன்  நாடகங்கள்  சினிமா படங்கள் வெகுநாட்கள் ஓடியது பற்றி பல பழைய படங்களில் இருந்து போட்டோக்கள் இருந்தது.  அதையே உற்றுப்  பார்த்துக்  கொண்டிருந்தவனுக்கு  அந்த பத்திரிகை வாங்க கூட காசில்லை. 

''என்னா  பெரிசு, சினிமா ந்யூஸ் பார்க்கிறியா. ஒரு காபி நாலு ரூபா''   அவன் பதில் பேசாமல் தனது படங்களின் போட்டோக்களை பார்த்துக்கொண்டிருந்தான். திடீரென்று கண்களில் நீர் பெருகியது.  '' ஹே நன்றி  கெட்ட உலகமே, நான் தான் அது''  என்று கத்த  முயன்றான். நெஞ்சை ஏதோ அடைத்தது. பேச்சு வரவில்லை, மூச்சுத் திணறியது.  டீக்கடை பெஞ்சில் சாய்ந்தான். மண்டையில்  ஒரு  கல் இடித்து ரத்தம் சொட்டியது. ' ஹும் '  என்று ஒரு வார்த்தை எழுந்து அடங்கியது. 

பால்ராஜ்  சோடா  வாயில் ஊற்றியபோது அது வழிந்தது.  திறந்திருந்த கண்களை மூடி விட்டார். நடிகன் இப்போது  விண்ணுலகத்தில் நடிக்க போய்விட்டான்.  போலீஸ் வந்தது. அவன் யாரென்று அடையாளம் தேடியது. அவனது கிழிந்த ஜிப்பாவில் ஒரு பிளாஸ்டிக் கவரில்  அவன் பெயர் அச்சிட்ட  புகைப்படங்கள், எல்லாம் ஹிட் படங்களில் அவன் ஹீரோ வாக நடித்த காட்சிகள் தாங்கிய பழைய படங்கள்.....  மறுநாள்  அவன் பெயர், பழைய பெருமை, அவன் சாதனைகள் தாங்கிய பத்தி பத்தியாக செய்திகள் வந்தபோது அவன் ' காலமானான் ''  என்ற வார்த்தையும்  அதில் இருந்தது...... நாடார் கடையில் பலர்  பத்ரிகை  வாங்கினார்கள். பழைய  ரசிகர்கள் கண்ணீர் சிந்தினார்கள்....


 


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...