கொஞ்சம் அட்வைஸ் - #நங்கநல்லூர்_J_K_SIVAN
எல்லோருக்கும் ஒரு வார்த்தை பழக்கமாகி விட்டது. ' ரொம்ப 'ஸ்ட்ரெஸ்'' stress , டென்ஷன் ரொம்ப '' என்கிறார்கள். அது என்ன ஸ்ட்ரெஸ். டென்ஷன்? மன அழுத்தத்திற்கு ஆங்கில பெயர் தான் ஸ்ட்ரெஸ், டென்ஷன். எதற்கு மனம் அழுத்தம்? அது என்ன? ஏன் மனத்தை அழுத்த வேண்டும்?.
தேவையில்லாமல் மனத்தைத் துன்புறுத்துகிறோம். வேண்டாத கவலைகளை நிறைய படுகிறோம். அதையே திரும்ப திரும்ப நினைத்துக் கொண்டு மனத்துக்கு உளைச்சல் தருகிறோம். மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ள சில வழிகள் இருக்கிறதே. அதைப் பற்றி பேசுவோம்:
ஒவ்வொருநாளும் விடிகாலையில் படுக்கையை விட்டு எழுந்து விடுவோம்.
நாம் எங்கேயோ இன்று போகவேண்டும் என்று முன்பே தெரியும். ஆகவே உடனே அந்த பயணத்துக்கான ஆடைகள், சாதனங்கள் பொருள்களை ஒரு பெட்டி யிலோ பையிலோ சேகரித்து எடுத்த வைத்துக் கொள்வோம்.
காலையில் எழுந்தவுடன் இன்று நாம் என்ன செய்யவேண்டும்,எப்படி, எப்போது, என்று ஒரு லிஸ்ட் போடுவோம்.
எங்கேயாவது மணிக்கணக்கில் WAIT பண்ணி காத்தி ருக்கவேண்டும் என்றால் அப்போது மனதை ஈடுபடுத்த ஏதாவது பிடித்த புத்தகம் ஒன்றை எடுத்துச் செல்வோம்.
செய்யவேண்டிய வேலைகளை அப்புறம் செய்யலாம் என்று தள்ளிப்போடுவதால் மன அழுத்தம் கூடும்.
நேரம் தாழ்த்தாமல் அதை உடனே செய்து விடுவோம்.
எதையும் எப்படி செய்ய இயலும் என்று அவசரம் இன்றி முன்பே யோசித்து வைப்போம். கடைசி நேரம் வரை காத்திருந்த பின் வேக வேகமாக செய்யும்போது தான் உடலும் மனமும் சோர்வடைகிறது. கார்யம் திருப்தி யாக நிறைவேறாமல் போகிறது.
எங்காவது போகவேண்டும் என்றால் முன்பாகவே கிளம்பிவிட்டால் டென்ஷன் இருக்காது. ஒரு மணி நேரம் தேவைப்படும் என்றால் கால் மணி நேரம் முன்பாகவே சென்றால் எதிர்பாராத தடங்கல், தாமதம் எங்காவது நேர்ந்தாலும் அதை கடக்க இந்த பதினைந்து நிமிஷம் உதவும். குறித்த நேரத்தில் போகவேண்டிய இடத்தை அடையலாம்.
ஆல்டர்நேட்டிவ் ALTERNATIVE என்போமே, ஒன்று இல்லை யென்றால் மற்றொன்று என்று வழிமுறை. அதை யோசித்து வைப்போம். பஸ் கிடைக்காவிட்டால், ஆட்டோ, ரயிலில் போவோம் என்று யோசித்து வைத் தால் ஒன்று ஏமாற்றம் தந்தால் அடுத்ததற்கு தயார் நிலையில் இருப்போம்.
நடந்த தவறை நினைத்துக்கொண்டே இருப்பதால்
பயனில்லை. இனி தவறு நேராமல் என்ன செய்ய லாம் என்று பாசிட்டிவ் ஆக யோசிக்க வேண்டும். சரியாக செய்ததை நினைத்து மகிழலாம். நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் பாட்டை அடிக்கடி கேட்கலாம்.
நம்மால் செய்ய முடியாது என்று நிச்சயமாக தெரிந்த விஷயத்தில் ஈடுபடவேண்டாம். ஸாரி என்னால் முடியாது என்று சொல்லி தவிர்க்கலாம். இழுத்து விட்டுக்கொண்டு ரெண்டும் கெட்டானாக விழிக்க வேண்டாம்.
உணவு உடை, தங்க இடம் விஷயமாக இருப்பதை, கிடைத்ததை வைத்து வாழ மனதை பக்குவப்படுத்திக் கொள்வோம். எளிமையாக வாழ்வது சிறந்த நிம்மதி யைத் தரும். மன உறுதியை தரும்.
உடலுக்கு தூக்கம் அவசியம். நல்ல விஷயங்கள் பற்றி கேட்பது நினைப்பது நிம்மதியான தூக்கம் தரும். ஒவ்வொரு பொருளையும் அதனதன் இடத்தில் மட்டு மே வைக்க பழகினால் தேடுவதில் நேரம் வீணா காது, டென்ஷன் அதிகரிக்காது.
ஆழமாக , நிதானமாக மூச்சை உள்ளே இழுத்து மெதுவாக வெளியே விடுங்கள். முடிந்தால் எண்ணங் களை எழுதப் பழகுங்கள். கவலைகளை, எரிச்சல்களை, தோல்விகளை குறைக்க எழுத்து வடிகாலாகும். தனிமையைப் போக்கும்.
குழப்பம், கவலைகளை உள்ளுக்குள் புதைக்காமல் நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் பகிர்வோம். .
தினமும் மனதை மகிழச்செய்யும் செயல்கள் எதையா வது செய்வோம். அதனால் காசு தேறுமா என்று பார்க்கவேண்டாம். நிம்மதியை காசு மூலம் பெறமுடியாதே .
பிறருக்காக எதையேனும செய்தால் சந்தோஷம் உண்டாகும். . செய்யும் அனைத்து செயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யுங்கள். பலன் எதிர்பார்க்கவேண்டாம் என்று கிருஷ்ணன் அப்போதே சொல்லி விட்டாரே.
என்னை யாரும் புரிந்து கொள்ளவில்லையே என்று அங்கலாய்க்காமல் முதலில் பிறரைப் புரிந்து கொள்வோம்.
நமது உடை, நடை பாவனைகள் தன்னம்பிக்கை ஊட்டுவதாக இருக்கட்டும். படாடோபம் வேலைக்கு ஆகாது.
நிறைய வேலைகளை ஒரே நாளில் முடிக்க முடியாது. ஆகவே ஒவ்வொரு வேலைக்கும் இடையே கொஞ்சம் கொஞ்சம் இடைவெளி இருக்கட்டும் . அன்றன்றைய வேலைகளை அன்றே செவ்வனே செய்தால் நாளைய பணிகள் தானாக நடைபெறும். சில வேலைகளை செய்ய விருப்பமில்லை. ஆனால் செய்யவேண்டுமே என்றிருந்தால், முதலில் அதை செய்து முடித்தால்
பிடித்தமான வேலைகள் செய்வதில் ஈடுபட்டு மனது லேசாகும்.
தப்புகள் எல்லோரும் தான் பண்ணுகிறோம். மன்னிக் கும் மனப்பான்மை வளரட்டும்.
No comments:
Post a Comment