பத்மபாதர் -- நங்கநல்லூர் J K SIVAN
நேபாளம் முழுக்க முழுக்க ஒரு ஹிந்து தேசம். அங்கே கண்டகி நதியில், கரையில் சாளக்ராமங்கள் நிறைய விதவிதமாக கிடைக்கிறது. விஷ்ணுவின் அம்சம் அவை. சங்கு சக்ரம் இயற்கையாகவே அதில் பார்க்கலாம். ஹிந்துக்களால் இல்லத்திலும் ஆலயத்திலும் பூஜிக்கப்படுபவை. காஞ்சி காமகோடி பீடத்திலும் பூஜையில் சாளக்ராமம் உண்டு. அது நரசிம்மரால் ஆதி சங்கரருக்கு அளிக்கப்பட்டது. நரசிம்ம அம்சம் கொண்ட சாளக்ராமம்.
பத்மபாதர் எனும் ஆதி சங்கரரின் சிஷ்யர் பூரி கோவர்தன மட முதல் அதிபதி. அவர் தான் கேரளத்தில் திரிசூரில் தெக்கே மடம் என்ற மடத்தை ஸ்தாபித்தவர். அவரை ஒரு நம்பூதிரி பிராமணன், வேமனில்லம் எனும் குடும்பத்தை சேர்ந்தவர் என்கிறார்கள். ஆனால் அவர் சரித்திரம் அவர் சோழ தேசகாரர் என்கிறது.
பத்ம பாதர் பஞ்ச பாதிகா எனும் நூலை இயற்றியவர். இது சங்கரர் விருப்பப்படி பத்மபாதர் ப்ரஹ்மசூத்ர பாஷ்யத்துக்கு எழுதிய ஒரு வியாக்கியானம் ஆகும்.
பத்மபாதரின் இயற் பெயர் சநந்தனன். குருவைத் தேடி ஞானம் பெற காசிக்கு சென்றவர் அங்கே அத்வைத உபதேசம் செய்து கொண்டிருந்த ஆதி சங்கரரை தரிசிக்கிறார். அவரையே குருவாக ஏற்கிறார்.
குரு ஆதிசங்கரர் தான் ப்ரத்யக்ஷ தெய்வம். சனந்தனன் என்ற பெயர் கொண்ட அவர் ஒருநாள் கங்கையின் மறுபக்க கரையில் குருவின் வஸ்திரங்களை தோய்த்துக்கொண்டிருந்தார். அப்போது....
''சநந்தனா இங்கே வா' -- சங்கரரின் குரல் கேட்டதும் குரு இருந்த மறு கரைக்கு செல்ல ஓடினார். அதற்குள் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆற்றில் இறங்கிவிட்டார். விடுவென்று நதியில் இறங்கி நடந்தார். வெள்ளத்தில் மூழ்கி விடுவோம் என்ற பயமே இல்லை. உயிரின் மேல் லக்ஷியம் இல்லை. குரு வாக்கியம் ஒன்றே பிரதானம். ஆனால் கங்கா மாதா அவரை நீரில் மூழ்க அனுமதிக்கவில்லை. அவரது குருபக்தியை மெச்சி சநந்தனரின் ஒவ்வொரு பாதத்தின் அடியிலும் ஒரு பெரிய தாமரை மலர் தாங்கி அடுத்த கரையை அவர் அடைய உதவியது. அன்று முதல் சனந்தனர் பத்ம (தாமரை ) பாதர் (திருவடி கொண்டவர்) என்று அழைக்கப்பட்டார்
No comments:
Post a Comment