எங்க கால பள்ளிக்கூடம் - நங்கநல்லூர் J K SIVAN
நான் சொல்றது 75-76 வருஷம் முன்னாலே. அப்போ எந்த பள்ளிக்கூடத்திலேயும் யாரும் சாகலே. காசும் பள்ளிக்கூடம் வாங்கலே. அப்போ இது மாதிரி பள்ளிக்கூடங்களில் படிச்ச சில பெரிசுகளுக்கு மட்டும் தான் இது ஞாபகம் வரும்.
பள்ளிக்கூடம் கூரை கொட்டகை தான். மண் தரை. பாதிநேரம் வெளியிலே மரத்தடி நிழலில் தான் காற்றாட வட்டமாக உட்கார்ந்திருப்போம். கிளாஸ் ரூம் என்று தடுப்பு கிடையாது. பென்ச் கிடையாது. ஸ்லேட் என்ற பலகை வைத்திருப்போம். அதை மடியில் வைத்துக்கொண்டு தான் பலப்பத்தால் எழுதுவோம். ஹெட்மாஸ்டர் ரூமில் மட்டும் தான் கரும்பலகை என்று கருப்பு பெயிண்ட் அடித்த மர போர்டு முக்காலி மாதிரி ஒன்றின் மேல் ஒரு மூலையில் நிற்கும். அதன் வலது கோடியில் மேலே மொத்த மாணவர்கள் எவ்வளவு, வந்தவர்கள் எவ்வளவு என்று ஒரு நம்பர் மட்டும் சுப்ரமணிய அய்யர் எழுதி வைப்பார்.
பாதிக்கு பாதி தான் நம்பர் அது காட்டும். மேலே கூரை. வகுப்பின் எல்லையாக ரெண்டு பக்கமும் மண் சுவர் இடுப்பளவு எழுப்பி இருக்கும். இடையே இருக்கும் இடைவெளி தான் வாசல். ஒரே ஒரு மர நாற்காலி முக்கால் வாசி கையில்லாமலோ, கை காணாமல் போனதோ இருக்கும். ஒரு வகுப்புக்கும் அடுத்த வகுப்புக்கும் வித்யாஸம் பையன்கள் பெண்கள் திரும்பி உட்கார்ந்து இருப்பது தான் அடையாளம்.
குரல் அங்கிருந்து இங்கே, இங்கிருந்து அங்கே தாராளமாக கேட்கும். பெண்கள் ஒரு பக்கம், ஆண்கள் ஒருபக்கம் என்று சில வகுப்புகளில் இடம் இருந்தால் மாற்றி அமர்வோம். இல்லையேல், அனைவரும் பக்கத்தில் தான் உட்காருவோம். வகுப்பில் மின்சாரம் கிடையாது, லைட் FAN எல்லாம் தெரியாது. நிறைய நேரங்களில் காற்றில்லாமல் வெளியே மரத்தடியில் வகுப்பு நடக்கும். கரும்பலகை அங்கே வராது. ஆசிரியர் வாயில் சொன்னதை எழுதிக் கொள்வோம்.
வரதராஜ முதலியார் என்று ஒரு சார். எனது மூன்றாம் வகுப்புக்கு ஆசிரியர். ஒரு சிறிய குட்டி மாட்டு வண்டியில் தான் வருவார். ஒரே ஒரு மனிதன் மட்டும் அமரும் குட்டி வண்டி. அவருக்கு இடது கால் யானைக்கால் என்ற FILARIA வியாதி. வேஷ்டியால் அதை மூடிக்கொண்டு நடக்க முடியாமல் வண்டியை விட்டு இறங்கி வருவார். அந்த வண்டியை ஒரு மரத்தடியில் விட்டு, அந்த குள்ள காளைக் கன்றை பள்ளிக் கூடத்தில் புல் தரையில் மேய விடுவார். நாங்கள் அவ்வபோது அதற்கு ஒரு பக்கெட்டில் தண்ணீர் காட்டுவோம். அது எங்களிடம் நட்போடு பழகாது. கொம்பில்லாமலேயே முட்ட வரும். முதலியார் மேல் உள்ள கோபத்தை எங்களிடம் காட்டும்.
காளைக்கன்றின் கழுத்திலே சிவப்பு பட்டு நூல் கயிறு கட்டி வைத்திருப்பார். ''ராமா'' என்பார். திரும்பி பார்க்கும். அவர் எப்போதும் முணுமுணு என்று வெளியே புரியாமல் யாரையோ திட்டிக்கொண்டே இருப்பார். கையை ஆட்டி ஆட்டி அந்த உருவமில்லா மனிதனையோ, மனிதையையோ மனைவி யையோ, கோபிப்பார்.
வரதராஜ முதலியார் தனது குடும்ப வாழ்க்கையின் துன்பத்திலிருந்து சற்று விலகி இருக்கவே விடாமல் பள்ளி வந்திருக்கிறார் என்று இப்போது புரிகிறது. அவர் பாடம் நடத்துவது கொஞ்ச நேரம் தான் . எல்லார் பலகையையும் ( சொல்ல மறந்து விட்டேனே. பலகை என்றால் ஸ்லேட். அதில் எழுதும் ஆயுதம் பலப்பம். ஸ்லேட்டுக்குச்சி என்போம். கோவைப்பழம், போட்டு பலகையை துடைத்தால் மினு மினு என்று கறுப்பாக இருக்கும். மாவு பலப்பம் என்பது வெள்ளையாக அச்சு கொட்டி எழுதும்.) அதில் தான் வாய்ப்பாடு எழுத வைப்பார். எனக்கு தெரிந்து அவர் எங்களுக்கு வாய்ப்பாடு எழுத வைத்து அதை திருத்தி கொடுப்பது ஒன்றை மட்டுமே பலகாலம் செய்து வந்தார் இன்று இப்போது தெரிகிறது. வாய்ப்பாடு எழுதும்போது சத்தம் போடாமல் தலை குனிந்து எங்கள் மண்டையை குடைந்து கொண்டு கூட்டி கூட்டி எழுதும்போது நேரம் நிறைய தேவை என்று தெரிந்து வைத்துக்கொண்டு இந்த உத்தியை கையாண்டு இருக்கிறார். அந்த நேரத்தில் தனது சொந்த கவலையை சிந்திக்க அது உதவி இருக்கிறது.
''திருத்துவது'' என்றால் ஒவ்வொரு பையன், பெண்ணிடமிருந்து பலகையை வாங்கி அவரிடம் கொடுக்க வேண்டும். இடது காலை நாற்காலி மேல் வைத்து அதை பிடித்துக்கொண்டே உட்கார்ந்து இருப்பார். முழுக்கை சட்டை தான் போட்டுக்கொண்டு வருவார். வண்டி மாடு ஓட்டும் குச்சி கையில் இருக்கும். அது எங்கள் மேல் பதம் பார்க்கும். கோவம் அதிகம் அவருக்கு. சிரித்தே நான் பார்த்ததில்லை. நெற்றியில் ஒரு சிகப்பு கோடு தான் இருக்கும். தலை வாராமல் வெள்ளையும் கருப்புமாக தாடி மீசையோடு தான் வருவார். என்றாவது ஒருநாள் க்ஷவரம் பண்ணிய முகத்தோடு வந்தால் எங்களுக்கு அவரை அடையா ளம் கண்டு பிடிக்க முடியாதவாறு மாறியிருப்பார்.
ஒன்றிலிருந்து 10 வரை வாய்ப்பாடு மட்டுமே கற்று தந்து ஏழெட்டு மாதங்கள் ஓடிவிட்டது. ஒருநாள் அவர் வரவில்லை. அதற்கப்புறமும் அவர் தொடர்ந்து வரவில்லை. மணியடிக்கும் அய்யாசாமி அவர் ''செத்துட்டார்'' என்று சொன்னபோது எங்களுக்கு அதன் அர்த்தம் சரியாக புரியவில்லை.
நாலாம் க்ளாஸ் காவேரியம்மாள் தொடர்ந்து எங்கள் வகுப்பையும் பார்த்துக்கொண்டாள் . காவேரி டீச்சரை எங்களுக்கு பிடிக்கும். காது மட்டும் திருகுவாள் . வீட்டிற்கு வந்து என் அம்மாவுடன் பேசும்போது நான் ஓடிவிடுவேன். அவளை ஒரு தூரத்தில் மரியாதையோடும் பயத்தோடும் தான் பார்த்து வந்தேன். அவள் தனது குடும்ப கஷ்டங்களை எல்லாம் சொல்லி என் அம்மாவிடம் அழுவாள். அம்மா ஏதேதோ சொல்லி அவளை ஆறுதல் படுத்துவாள். நிறைய தடவை எங்கள் வீட்டில் காவேரி அம்மாள் சாப்பிட்டி ருக் கிறாள்.
கவர்மெண்டில் பால் தருகிறார்கள் என்று சொல்லி ஸ்கூல் காவலாளி அய்யாசாமி ஒரு பெரிய தவலையில் நிறைய நீர் கலந்து பால் பவுடர் போட்டு காய்ச்சி சர்க்கரை இன்றி அனைவருக்கும் அலுமினிய டம்ப்ளரில் பால் வரிசையாக நிற்க வைத்து கொடுப்பார். வரிசையிலிருந்து யாராவது அசைந்தாலே சத்தம் போடுவார். நல்ல மனிதர். நிறைய பையன்கள் இதற்காகவே காலை வகுப்பை உதறி விட்டு மாலை வகுப்புக்கு வருவார்கள்.
தாமோதரன் என்ற பையன் பள்ளிக்கூடத்திற்கு அடுத்த குடிசை வீட்டில் வசிப்பவன். அப்போதே பிழைக்க தெரிந்தவன். பால் விநியோக நேரத்திற்கு மட்டும் வகுப்புக்கு வருவான். அவன் வரும்போது பள்ளிக்கூடத்தில் படிக்காத அவன் தம்பி தங்கைகளையும் கூட்டிக்கொண்டு வருவான். அய்யாசாமி கண்டு கொள்ள மாட்டார். அனைவருக்கும் பால் விநியோகம்.
தனியாக ஒரு பொட்டலத்தில் பால் பவுடர் தன் வீட்டுக்கு என்று மூட்டை கட்டி வைத்திருப்பார். அதை ஞாபகமாக வீட்டுக்கு கொண்டு செல்வார்.
எங்கள் பள்ளிக்கூடத்தில் குடிநீர் வசதி எப்படி தெரியுமா?ஒரு சிறிய சிமெண்ட் தொட்டி கட்டி வைத்திருப்பார்கள். அதில் அய்யாசாமி நிறைய குடம் குடமாக கிணற்று நீர் நிரப்பி வைப்பார். மேலே தகர மூடி போட்டு வாய் மூடி இருக்கும். கீழே பித்தளை குழாய்கள் ரெண்டு சின்னதாக பொருத்தி இருக்கும். ஒன்று நீர் கசிந்து கொண்டே இருப்பதால் குழாயின் உடம்பு பூரா துணி சுற்றி வைத்திருப்பார். எனவே ஒரு குழாய் வழியாக வரும் தண்ணீர் தான் குடிநீர். அலுமினிய டம்பளர் ஒன்று ஒரு துளை போட்டு கயிற்றினால் அந்த குழாயோடு பிணைந்திருக்கும். வாய் வரை வரும் அளவுக்குத் தான் கயிறு இருக்கும். நெட்டையான பையன்கள் குனிந்து குடிக்க வேண்டும்.
அய்யா சாமிக்கு என்றைக்காவது குஷி வந்தால் கிராமத்து கரகப்பாட்டு, தெருக்கூத்து பாட்டு எல்லாம் உரக்க பாடுவார். அதையும் கேட்போம். எனக்கு சில வரிகள் இன்னும் நினைவிருக்கிறது.
''பீம சேன மவராசா மரத்தேப்பு டிங்கினானே'' என்று ஆலாபனை நடக்கும். பீம சேன மகா ராஜா கோவத்தில் அருகே இருந்த ஒரு மரத்தை வேரோடு பிடுங்கி எதிரியை அடித்திருக்கிறான் போல் இருக்கிறது. அய்யாசாமி ராகத்திற்காகவும் தாளத்திர்காகவும் ''மரத்தேப்பு'' என்றும் ''டிங்கினானே'' என்றும் பாடும்போது அர்த்தம் அனர்த்தம் தான். யார் இதையெல்லாம் அப்போது கண்டது. அந்த ராகம் குரல் அதில் உள்ள பாவம், அவர் நடிப்பு, எல்லாம் எங்களை ஏதோ ஒரு இன்ப புரிக்கு இட்டுச் சென்றது.
அய்யாசாமி பாதிநாள் அரை வேட்டி கணுக்காலுக்கு மேல் கட்டிக்கொண்டு ஒட்டிய வயிறுடன், அரை வழுக்கையோடு, காதில் வெள்ளி கடுக்கனோடு, முண்டாசு மட்டும் கட்டிக்கொண்டு வருவார். சட்டை போட்டு பார்த்ததில்லை.
ஒருநாள் தலைமை ஆசிரியர் சுப்ரமணிய அய்யரை மாற்றிவிட்டார்கள். எனவே காவேரியம்ம்மா தான் ஆல் இன் ஆல் அந்த பள்ளிக்கூடத்திற்கு. அவளைப்பார்க்கும்போது மட்டும் அய்யாசாமியின் முண்டாசு அவிழ்ந்து தோளுக்கு தாவி விடும். நான் படிக்கும்போது இந்தியா சுதந்திரம் அடையாததால் எங்கள் பள்ளியில் ஆகஸ்ட் 15 கிடையாது. மிட்டாய் கொடி எல்லாம் கொடுக்கவில்லை.
'' நீங்க அத்தினி பெரும் நல்ல புள்ளேங்க . எப்பவும் நல்ல புள்ளேங்களாகவே இருக்கோணும். புள்ளை யாருக்கு தினமும் தோப்புக்கரணம் போடணும்'' என்று ரெண்டு காதையும் கைகளால் மாற்றி பிடித்துக் கொண்டு தோப்புகரணம் போட எல்லாருக்கும் சொல்லிக்கொடுப்பாள் காவேரி அம்மாள். பள்ளிக் கூடத்தில் ஒரு சுவற்றில் மாடப் பிறையில் பிள்ளையார் சிலை வைத்திருந்தார்கள். அதற்கு விளக்கேற்றி வைப்பது அய்யாசாமியின் வேலை.
பள்ளிக்கருகே நிறைய வெள்ளெருக்கு செடி இருந்ததால். எருக்கம்பூ பறித்து நூலில் கோர்த்து
மாலை கட்டிக்கொண்டு வருவோம். வெள்ளிக்கிழமை எல்லோருக்கும் பொரி கடலை, நாட்டுசக்கரை கலந்து கை நிறைய கொடுப்பார்கள்.
''கைத்தல நிறைகனி '' பாட்டு தினமும் காலை வேளையில் காவேரியம்மாவோடு சேர்ந்து பாடுவோம். ஆகவே தான் இப்போதும் ஞாபகம் இருக்கிறது. இக்காலத்தில் பள்ளிகளில் பிரேயர் என்ன என்றே புரியவில்லை.
No comments:
Post a Comment