மாற்றம் நம்மிடம் தான். - நங்கநல்லூர் J K SIVAN
''ஸார், இந்த உலகமே ரொம்ப மாறிடுத்தே ?''
''இல்லேப்பா, உலகம் என்னிக்கும் அப்படியே தான் இருக்கு. அதில் இருக்கிற நாம தான் மாறிண்டே இருக்கோம். முன்னே இருந்தவா இப்போ இல்லே, முன்னே நல்லதா இருந்ததெல்லாம் இப்போ அப்படி இல்லே. முன்னே தெரிஞ்சதெல்லாம் தப்பு இப்போது தான் எல்லாம் சரி, கரெக்ட். இப்படி நாம் தான் சொல்லிக்கொண்டே பரம்பரை பரம்பரையாக மாறிக் கொண்டே வருகிறோம்.
''இந்த உலகத்தை மாத்தணும் ஸார்''
''மறுபடியும் இல்லேன்னு சொல்றேன். நாம் தான் முதல்லே மாறணும். நாம் மாறினால் உலகத்தில் மாற்றம் தெரியும்.
நிறைய பேசறோம். நிறைய தூங்குகிறோம். நிறைய வயிறு புடைக்க தின்கிறோம். நிறைய பேரோடு
பழகுகிறோம். இதெல்லாம் மாறுதல் கொண்டு வராமல் வேறு என்ன பண்ணும்?
நம் உடம்பு சீர் குலைய காரணமே, நமது கவலைகள், துயரங்கள், துக்கம், இத்யாதி. பசி, நேரம் கடந்து தூங்குவது . இதற்கு வேறு யாரும் பொறுப்பல்ல.
முகம் சோர்ந்து, சந்தோஷம் குறைந்து எங்கோ ''பே '' என்று ஏன் பார்க்கிறோம் தெரியுமா?பொய் சொல்லுவதாலும், கேட்பதாலும், நம்புவதாலும், எவரிடமும் மரியாதை இல்லாமல் இருப்பதாலும் , அதிகப்ரசங்கியாக இருப்பதாலும் . பிடிவாதத்தாலும் எது உண்மை என்று தெரியாமலே வாதம் செய்வதாலும் , தீய பழக்கங்களைக் கொண்டிருப்பதாலும் தான்.
இதே முகத்தை பிரசன்ன வதனமாக வைத்துக் கொள்ளவும் வழி இருக்கிறதே. ஆசாரமாக, கடவுள் பக்தி, பெரியோரிடம் மரியாதை, முன்னோருக்கு நமது கடன்களை செய்வது, நேர்மை, தாராள குணம் , எவரும் கேட்பதற்கு முன்னரே தேவை அறிந்து அவர்களுக்கு உதவுவது போன்ற குணங்கள் தான்.
நம்மிடம் இருக்கக்கூடாத பழக்கங்கள்: சூரிய உதயமானபிறகும் தூங்குவது. பகவானுக்கு பிரார்த்தனை பண்ணாதது. சோம்பேறித்தனம். நம்பகத்தன்மை இல்லாமல் நடந்து கொள்வது.
இந்த உடலைக் கொடுத்து, அதில் ஒரு உயிரைப் புகுத்தி நமக்கு அழகான ஒரு உலகத்தைக் கொடுத்து வாழச் செய்தது நாமும் சந்தோஷமாக வாழ்ந்து நம்மைப்போல் பகவானால் உருவாக்கப்பட்ட மற்ற ஜீவங்களுக்கும் அந்த சந்தோஷத்தை அளித்து எல்லோரும் இன்புற்றிருக்க செய்வது தான். நாம் கேட்காமலேயே இந்த அற்புத உடலையும் உலகத்தையும் கொடுத்தவனுக்கு நம்மில் இருக்கும் உள்ளத்தையாவது கொடுக்கவேண்டாமா?
No comments:
Post a Comment