Sunday, August 7, 2022

KALIYUGAM

அப்போதே சொன்ன சுகர்:   நங்கநல்லூர்  J K  SIVAN  
கலிகாலம் 8

प्रजा हि लुब्धै राजन्यैर्निर्घृणैर्दस्युधर्मभि: ।आच्छिन्नदारद्रविणा यास्यन्ति गिरिकाननम् ॥ ८ ॥

prajā hi lubdhai rājanyairnirghṛṇair dasyu-dharmabhiḥ ācchinna-dāra-draviṇā yāsyanti giri-kānanam
ப்ரஜா ஹி லுப்³தை⁴ ராஜந்யைர்நிர்க்⁴ரு’ணைர்த³ஸ்யுத⁴ர்மபி:⁴ ॥ ஆச்சி²ந்நதா³ரத்³ரவிணா யாஸ்யந்தி கி³ரிகாநநம் ।ஸ்ரீமத் பாகவதம் 12.2.8

ரிஷிகளும், முனிவர்களும் எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை முன்கூட்டியே அறியும் சக்தியைப் பெற்றிருந்தனர். அவர்களின் அதீத அறிவாற்றலினால் கண்டறியப்பட்ட பல உண்மைகள், இன்று அறிவியல் பூர்வமாக ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கின்றன.

ஹே பரீக்ஷித் மஹாராஜா,  கலியுகத்தில், நாளுக்கு நாள்  மதப்பற்று, சத்யம், சுத்தம்,  பொறுமை, கருணை, வாழ்நாள், தேகபலம், புத்தியின் சக்தி எல்லாமே  குறைந்து கொண்டே வரும்.  அதாவது ஒரு மனிதனிடம் இருக்கவேண்டிய, இருந்த  நல்ல  எண்ணங்கள்,  செய்கைகள் குறையும்.  தர்மம் சாஸ்திரம், சம்ப்ரதாயம் எல்லாம் காற்றில் பறக்கும்.   

சத்யம்  என்று சொன்னால்  ''அங்கே என்ன படம் ஓடுகிறது?'' என்று தான்  கேட்பான்.
மூக்குக்கு மேல் கோபம் எல்லாவற்றிலும், எதற்கும் வரும், அப்போது பொறுமை, கருணை  சகிப்பு தன்மை,  எங்கிருந்து வரும்?

பணம் ஒன்றே தான்  பிரதானமாக செயல்படும். காசே தான் கடவுளடா.  உண்மை, நேர்மை, சத்யம் எல்லாமே  பணத்திற்கும், அது தரும் பதவிக்கும் அதிகாரத்திற்கும் அடிமையாகிவிடும்.   (நாம் தான் நிறைய பார்க்கிறோமே, படிக்கிறோமே). பணம் இருந்தால் படிக்காதவன் கூட  டாக்டர். ஊசி போடுபவர் அல்ல, நீளமான தொள  புளா  கோட்டு மாதிரி கருப்பாக ஒன்று போட்டுக்கொண்டு தலையில் சதுரமான தொப்பி போட்டுக்கொண்டு கையில்  சுற்றிய காகிதத்தைப் பலபேர் முன்னிலையில்  கைதட்டலுடன் ஒன்றுமே  தெரியாமல், செய்யாமல் பல்கலைக்கழகத்தில்  பெற்றுக்கொள்பவன்.    தடி எடுத்தவன்  தண்டல்காரன்.

சுகப்ரம்மம்  இப்போது நம்மோடு  வாழ்பவரைப் போலவே,  நமது அனுபவங்களை தானும்  அனுபவித்தவர் போலவே  ஐந்தாயிரம் வருஷங்களுக்கு முன்பு எப்படி  உணர்ந்திருக்கிறார் என்பது தான் ஆச்சர்யம்.  மஹான்களால் எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன்கூட்டியே  சொல்லமுடியும்.

பரிக்ஷித்  இனி எதிர்காலம் கலியுகத்தில் தடுமாறும்.   படிப்பு, நேர்மை, நாணயம் இதற்கெல்லாம் மதிப்பில்லை என்று சொன்னேனே, அதோடு பக்தியையும் சேர்த்துக்கொள்.  காசு  மட்டும் இருந்துவிட்டால்  இதெல்லாம் இருப்பதாக உலகம் உன் தலையில் கற்பூரம் ஏற்றி அடித்து சத்தியம் செய்யும்.

பணத்தை  இன்னொருவனிடமிருந்து அபகரிக்க பெண்ணையும்  பிள்ளையும்  பலி ஆடுகளாக  காட்டி இரக்கமில்லாத  பெற்றோர்களே   சுயநல விரும்பிகளாக மாறிவிடுவார்கள்.

நமது  கலாச்சாரங்கள், புராணங்கள், வேதங்களை விற்பனை பொருளாக  மாற்றி  சிலர்  யோகிகளாக, ஞானிகளாக  சாதிகளாக ( டம்பாச்சாரிகளாக  என்று வார்த்தையை உபயோகிக்கிறார்) ஏமாற்றுவித்தையில்  சிறந்தவர்கள்  பிழைப்பார்கள்.   கடவுளையே  திருடி விற்பார்கள்.  பொற்சிலைகளை சுரண்டி பித்தளைச் சிலைகளை  பொற் சிலையாக  காட்டி பக்தர்களை ஏமாற்றுவார்கள்.

நாம்  பேப்பரில் படிப்பதை சுகர் எழுதவில்லை.  பேப்பர் உண்டாவதற்கு முன்பே  சமஸ்க்ரித ஸ்லோகத்தில் இதெல்லாம் கலியுகத்தில் நடக்கும் என்று அழுத்தமாக சொல்கிறார்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...