நரசிம்ம தரிசனம் -- நங்கநல்லூர் J K SIVAN
ஒருநாள் அதிகாலையில் காசியில் ஆதி சங்கரர் ஆற்றங்கரை ஓரத்தில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். சிஷ்யர்கள் அருகே சற்று தூரத்தில் கண் பார்வையில் இருந்தார்கள்.
சுற்று முற்றும் பார்த்துக்கொண்டே அவரை நோக்கி ஒரு காபாலிகன் வந்தான். போதையில் மயங்கிய சிவந்த கண்கள், கூரான சூலம், இடையில் வாள், மண்டையோட்டு மாலைகள். உடலெல்லாம் பிணத்தை எரித்த சாம்பல் பூசியவாறு ஜடாமுடியோடு சங்கரர் எதிரே வந்தான். அவனுக்கு பரம சந்தோஷம். ஒரு துறவியை பைரவருக்கு நரபலி இன்று கொடுக்க சங்கரர் கிடைத்துவிட்டார் என்று மகிழ்ச்சி. சங்கரரை வணங்கினான்.
எதிரே வந்து நின்றவனை சாந்தமாக நோக்கிய ஆதி சங்கரர்
''என்ன வேண்டும் உனக்கு?'' என கேட்டார்.
''பைரவர் உபாசகன் நான். பைரவ பூஜைக்கு உங்கள் உதவி கேட்க வந்தேன்.''
''ஆஹா பைரவ பூஜை நன்றாக நடக்கட்டும். நான் என்ன உதவி செய்யவேண்டும்?''
'' ஒரு துறவியின் சிரம் காணிக்கையாக சண்டி தேவிக்கு அர்பணிக்கவேண்டும்''
'' நான் ஒரு துறவி. என் சிரம் வேண்டுமா ?''
''ஆமாம் நீங்கள் ஒப்புக்கொண்டால் உங்கள் சிரத்தை வெட்டி எடுத்துக் கொண்டு போகிறேன்''
'எப்போது வேண்டும்?''
''நாளை விடி காலையில்..
''சரி ஒரு விஷயம். என் சிஷ்யர்கள் யாரும் இல்லாத சமயம் வா. அவர்கள் இருந்தால் உன்னைத் தடுப்பார்கள்''
ஆதி சங்கரருக்கு ரொம்ப சந்தோஷம். ஆஹா என் சிரத்தை பைரவனுக்கும் சந்திக்கும் அர்ப்பணிக்க நான் பாக்கியசாலி. சிவனுக்கு கபாலி என்று தானே பெயர். மைலாப்பூர் என்றாலே கபாலீஸ்வரர் தான் நினைவுக்கு வருகிறார்.
மறுநாள் அதிகாலையிலேயே காபாலிகன் வந்துவிட்டான். அருகே ஒரு குகையில் சங்கரர் முன்னேற்பாட்டின் படி காபலிகனுக்காக காத்திருந்து சிவ தியானத்தில் இருந்தார்.
எங்கோ கங்கைக்கரையில் சற்று தூரத்தில் ஜபம் பண்ணிக்கொண்டிருந்த பத்மபாதருக்கு திடீரென்று உடல் நடுங்கியது. அவர் உபாசிக்கும் நரசிம்மம் அவரை ஆட்கொண்டது போல் தோன்றியது. என்னவோ போல் ஆகி விட்டது அவருக்கு. உக்ர நரசிம்மனாக ஆகிவிட்டார் பத்மபாதர். கர்ஜித்துக்கொண்டே தாவி ஓடி குகையின் பக்கம் வந்தவர் உள்ளே பாய்ந்தார். காபாலிகன் கையை உயர்த்தி ஆதி சங்கரரின் சிரத்தை வெட்டப்போகும் நேரம். தலை சாய்த்து வாகாக காட்டிக்கொண்டிருந்தார் சங்கரர்.
சிம்ம பலத்தோடு, ஆக்ரோஷமாக தாவிய நரசிம்மர் காபாலிகனை கிழித்து வீசி எறிந்தார். கடித்து துண்டாக்கினார். அவன் உடம்பை கூறிய நகங்களால் நாராக்கினார். அந்த கணமே காபாலிகன் ''ஹா '' என்று கத்தியவாறு உயிரிழந்தான். அங்கே இரணியனை நரசிம்மன் வதம் செய்த காட்சி மீண்டும் அரங்கேறியது re play. வினாடி நேரத்தில் எல்லாம் நடந்து முடிந்தது.
சங்கரர் சிம்ம கர்ஜனையும் காபாலிகன் அலறலும் ஒரு சேர கேட்டு தியானம் கலைந்தார். எதிரே பத்மபாதரை நரசிம்மராக கண்டார். பத்ம பாதர் உடலெல்லாம் காபாலிகன் ரத்தம். பல கோடி சூரியனாக அவர் முகம் திகழ்ந்தது. நடந்ததை புரிந்துகொண்டு நரசிம்ம த்யானம் செய்தார். பத்ம பாதர் வெகுநாளாக வேண்டிய நரசிம்ம தரிசனம் தக்க நேரத்தில் அன்று சித்தி ஆயிற்று.
No comments:
Post a Comment