Tuesday, August 9, 2022

OLDEN DAYS MEMORY

 பழைய நினைவுகள்.--#நங்கநல்லூர்_J_K_SIVAN



அநேகமாக  இப்போது   யாருமே  ராகு காலம், எமகண்டம்,  சகுனம்  எதையும்  அலக்ஷிய பாவத்தோடு  தான் ஒதுக்கி வைக்கிறார்கள்.  அதனால்  ஏற்படும் தீங்குகளை அறிவதில்லை.  அவர்கள் பிரயாசை, முயற்சி தோல்வியடைகிறது, எதிர்பாராத  துன்பம் விளைகிறது. வெள்ளைக்கோட்டு  டாக்டர்கள்  காட்டில் மழை. 

ஜோசியர்கள் எண்ணிக்கையில் குறைந்து விட்டார்கள். இருக்கும் ஒரு சில ஜோசியர்கள் காட்டில் மழை. அநேக குடும்பங்களில்  நாள், நக்ஷத்ரம், திதி எல்லாம் பார்க்கும் வழக்கம் நின்று போய் விட்டது.

அறுபது எழுவது வருஷங்களுக்கு முன்பே  கூட,   கிராமங்களில்  கல்யாணம் நிச்சயமாகிவிட்டால்  மாப்பிள்ளை  பெண் வீடுகளில் அமளி துமளிப்படும்.  உறவினர்கள் கூடி விடுவார்கள்.  கல்யாணப் பேச்சு தான் காதில் எப்போதும் விழும்.  ஒவ்வொருவரும் ஒவ்வொரு  பொறுப்பை எடுத்துக்கொண்டு அதைச் சிறப்பாக செயது  நாலு பேர் மெச்ச வேண்டும் என்று  போட்டாபோட்டியோடு  ஈடுபடுவார்கள்.  கல்யாண மண்டபம், ஹால் எதுவும் அப்போது கிடையாது.

பெண்வீட்டார்  வீடு அதற்கடுத்த வீடுகள் எல்லாம் கல்யாண வீடுகள் தான்.  தெருவையே  வளைத்து பந்தல் போட்டுவிடுவார்கள்.  வண்டிகள் அப்போது தெருவில் இப்போது போல் கிடையாதே. மாட்டுவண்டி குதிரை வண்டிகள் அந்த தெருவிலி  நுழையாது தெரு முனையி லே திரும்பிவிடும்.   ஊரிலே கல்யாணம் மாரிலே  சந்தனம்.   யார் வீட்டிலேயும்  தனியாக அடுப்பு எரியாது. மூன்று வேளையும்  ஐந்து ஆறுநாட்களுக்கு  சாப்பாடு  கல்யாண வீட்டில் தான்.

இன்னிக்கு மாப்பிள்ளை வீட்டிலே இருந்து வருகிறார்கள் என்று சேதி கேட்டதும் காலையிலே பெண் வீட்டில் களை கட்டிவிடும்.

நாயனக்காரர், நாதஸ்வர கோஷ்டி, வீட்டு வாத்யார் கோஷ்டி, பசுமாடு கன்னுக்குட்டி, வெற்றிலை பாக்கு தாம்பூல தட்டுகள், பெண்கள் மடிசார் கட்டிக்கொண்டு,  குறுக்கும் நெடுக்கும் ஓடுவதும், தெருவெங்கும் கோலம் போட்டு அழகாக சிங்காரித்தும்  வைத்திருப்பார்கள். தோரணங்கள் தெருமுழுதும் இரு பக்கத்திலும் கட்டப்பட்டிருக்கும். 

ஊர்க் கோடி எல்லையில் தயாராக காத்திருந்து வில் வண்டி வருவது தெரிகிறதா என்று  கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருப்பார்கள். சம்பந்திகள் ரயிலில் வருவதாக அறிந்தால், ஊரில் ரயில் நிலையம் இருந்தால் அங்கே சென்று ரயில் எத்தனை மணிக்கு வரும் என்று கேட்டு  விடாமல் ஸ்டேஷன் மாஸ்டரை  துளைத்துக் கொண்டே இருப்பார்கள். ஒரு விஷயம்.

அப்போது எல்லாம் ரயில்கள் சொன்ன நேரத்தில் வராது. புகை வண்டி தான் ஜிகு புகு என்று வந்து சேரும். வண்டி வருவதற்கு முன்பே அதன் சப்தம் எதிரொலிக்கும்.   மேலெல்லாம் கரித்தூளோடு ஹோலி பண்டிகையில் மாட்டிக் கொண்டவர்கள்  போல், பிரயாணிகள்  கூட்டமாக  ரயில்  வண்டியிலிருந்து இறங்கி  வெளியே வருவார்கள்.

அப்போதெல்லாம் முதல் வகுப்பு,  ரிசர்வேஷன், எதுவும்  கிடையாது. பென்ச் தான். மரப்பலகை, அல்லது இரும்பு பலகை தான்.  கம்பார்ட்மெண்ட் நம்பர் ரயில் பெட்டி எண் எல்லாம் கிடையாது.  விருந்தாளிகளை வரவேற்க வந்த  பெண்வீட்டார், கையில் மாகளோடு  ஒவ்வொரு பெட்டி ஜன்னலுக்குள்ளும் எட்டிப் பார்த்துக்கொண்டே பிள்ளை வீட்டுக்கார்களைத் தேடி ஓடுவார்கள்.

ஊர்  எல்லையில்  பிள்ளை வீட்டார்  ரெட்டை ஜோடி மாடு பூட்டிய  வில் வண்டியைப் பார்த்ததுமே மேள தாளத்துடன் குதூகலமாக ஒலிக்க மாப்பிள்ளை வீட்டாரை பூரண கும்ப உபசாரத்தோடு பெண் வீட்டுக்கோ அவர்கள் தங்க ஏற்பாடு செய்த வீட்டுக்கோ அழைத்து வருவார்கள்.

கல்யாணத்தன்று முக்கியமாக காசி யாத்திரைக்கு முன்பாக முதல் நாளே நிச்சயதார்த்தம் செய்து லக்ன பத்திரிகை படிக்கும் வழக்கம் அப்போது  இல்லை. லக்ன பத்திரிகை , நிச்சயதார்த்த பத்திரிகை என்பது  கல்யா ணம் நிச்சயமானதை அறிவிப்பது.    ஆகவே  அடுத்த நாள்  கல்யாண  மாப்பிள்ளை காசிக்குப் போகும்போது அவரை  வழி மறித்து,  வீட்டுக்கு அழைத்து காசிக்கு போகவேண்டாம்   உனக்கு என் பெண்ணைத் தருகிறேன் என்ரூ பெண்ணின் அப்பா சொல்வது  கல்யாண ஒப்பந்தத்துக்கு முரண்பாடானது இல்லையா? 

ஆனால்  இப்போது காலத்தை உத்தேசித்தோ அதன் அர்த்தம் தெரியாமலோ இதெல்லாம் நடக்கிறது. எல்லாமே  வேடிக்கை வினோத விளையாட் டாக போய்விட்டது.  பண விரயம் தான் மிச்சம். 
இன்னொரு விஷயமும் கவனிப்பதில்லை. கன்னூஞ்சல் என்பது சாஸ்திரப்படி கல்யாணம் ஆனபிறகு தம்பதிகளாய் பெண்ணையும் பிள்ளையையும் சேர்த்து ஊஞ்சலில் உட்காரவைத்து கௌரவித்து கொண்டா டப் படும்  விஷயம். 

கோவில்களில் ஸ்வாமிக்கு  திருக் கல்யாண உற்சவங் களில் விவாஹம் ஆன பிறகு தான் திவ்ய தம்பதிகளை ஊஞ்சலில் வைத்து பூஜிக்கிறோம். லாலி பாடுவார்கள். கல்யாணத்திற்கு முன்னால் அவர்கள் தம்பதிகளாகாத போது எப்படி பிள்ளையையும் பெண்ணையும்  சேர்த்து வைப்பதை ஒப்புக் கொள்ளமுடியும்? 

இப்போதுள்ள நிலையில்  எந்த சந்தர்ப்பத்திலும்  கழுத்து தாலி  ஏறுவதற்கு முன்பே  ஏதாவது துர்பாக்கி யமாக சம்பவம்  ஏற்பட்டு விவாஹம் தடைபடுகிறது. அப்போது அவர்களை தம்பதிகளாக கௌரவித்து கொண்டாடியதற்கு என்ன அர்த்தம்? பெண் கழுத்தில் மாப்பிள்ளை கட்டும் தாலி ஏறும் வரை அவர்கள் தம்பதிகள் இல்லையே.

பண்டைய காலத்தில் இன்னொரு விஷயத்திலும் ரொம்ப கண் குத்தி பாம்பாக இருந்தார்கள். சுபமுகூர்த்தம் பார்த்து நிச்சயித்து அந்த நல்ல லக்னத்தில் மாப்பிள்ளை பெண்ணின் கரத்தை க்ரஹிக்க வேண்டும் என்பது தான் பாணிக்ரஹணம். இப்பொழுது முதலிலேயே (ஊஞ்சல் பிறகு) கையைப் பிடித்துக் கொள்ளச்சொல்லி வாத்தியார்கள் அவர்களை மணமேடைக்கு அழைத்து வருகிறார்கள். கைப் பிடிக்கும் வேளை ராகு காலம் எமகண்டமாய் கூட   இருக்கலாம். யார் கண்டது?  

 ஊஞ்சலுக்கு பிறகு பெண்ணும் பிள்ளையம்  கை பிடித்துக் கொள்ளும் நேரம் சுப லக்னமாக நல்ல நேரமா என்று யார் பார்க்கிறார்கள்? அப்புறம் மேடையில் பாணிக்ரஹணம் அர்த்தமில் லாமல் போகிறதே.
பழைய காலத்தில் நூல் புடைவை தான் கூறைப்புடைவை. விவாஹம் செய்யும்போது பாவத்தை தேடிச் சென்று சேர்த்துக் கொள்ளக்கூடாது. ஆயிரக்கணக்கான பூச்சிகளைக் கொன்று பட்டு இழை எடுக்கிறார்கள். ஆகையால்  நிறைய  உயிர்களை பரிதாபமாகக் கொன்ற  பாவம் சேர்ந்த இந்த பட்டுப் புடவையைக் கட்டிக்கொண்டால் விவாஹம் பாவத்திற்கு உட்படுகிறது. தம்பதிகளின்   க்ஷேமத்திற்கு இது  உதந்ததல்ல.  

பலமுறை மஹா பெரியவா இதற்காகத்தான் பட்டுப்புடவையை கட்டிக்கொள்ளாதீங்கோ என்று சொல்லி இருக்கிறார். அவருடைய பக்தர்கள் பலர்  இதை லக்ஷியம் பண்ணாவிட்டால் யாரை என்ன குறை சொல்லமுடியும்?   

மஹா பெரியவாளை பார்க்க வரும்போது பக்தர்கள் குடும்பம் பட்டுப்புடவையோடு வந்து நமஸ்காரம் பண்ணினால்  அவர்   என்ன செய்வார்? அஹிம்ஸா பட்டு உடுக்கலாம்  அல்லது பருத்தி நூல் புடவை உடுத்தால் என்ன?

ஒரு பழக்கம் கொஞ்சம் மனதை உறுத்துவது போல் அப்போது இருந்தது. விவாஹப் பணம் (Dowry): எனும் வர தக்ஷிணை தான் அந்த விஷயம். மாப்பிள்ளை வீட்டார் எதிர் ஜாமின் வகையறா வாங்குவது சாஸ்திர விரோதம். மேலும் விரதங்களை தங்கள் வீட்டில் செய்து கொண்டு தான் கல்யாணத்திற்கு வர வேண்டும். இது பிள்ளை வீட்டாருடைய முக்கிய பொறுப்பு. இப்படிச் செய்தால் சத்திரத்திற்கு காலையில் வந்தால் போதும். நேரே விவாஹம் மந்தர பூர்வமான சடங்குகளைப் பிரதான மாகச் செய்யலாம். நிறைய வேத வித்துகளுக்கு தக்ஷிணைக் கொடுத்து அக்னி சாக்ஷியான விவாகத் தைச் சிறப்பாக நடத்தலாம்.  செலவும் குறையும். நகை ஆடம்பரம் தவிர்த்து ஒருவேளை ஆகாரத்துடன் முடித்து மிச்சமாகும் பணத்தை ஒரு ஏழைக் குடும்ப கல்யாணத் திற்கு உதவலாம் அல்லது சேமிக்கலாம்.

ரிசப்ஷன் எனும் வரவேற்பு இப்போதெல்லாம் கல்யா ணத்துக்கு முதல் நாளே காலத்தின் கட்டாயத் தால் வைத்துக் கொள்கிறார்கள். இது சாஸ்திரப்படி கல்யா ணம் நடத்த   பெற்றோர்கள் ஆசைப்பட்டால் ரொம்ப தப்பு. தம்பதிகளாகச் சேரும் முன் இருவரையும் ஒன்றாய் உட்காரவைப்பது தவறு. நமது கலாசாரத்திற்கு முரண்பட்டது. கோவில்களில் கல்யாணம் செய்தால் வரவேற்பு  விழாவை  லௌகீகமான நிகஸ்ச்சியாக அது இருப்பதால்  ஏதாவது சத்திரத்தில் காலியாயிருக்கும் தினத்தில் (கிழமை பார்க்க வேண்டாம்) செய்யலாம். செலவும் குறையும்.
திருமங்கல்ய தாரணம்: விவாகம் என்பது வெறுமே தாலி காட்டும் திருமங்கல்ய தாரணம் மட்டும் அல்ல. வேத பூர்வமான மந்த்ரம் திருமங்கல்ய தாரணத்திற்கு இல்லை. ஸ்லோகம்தான். மந்த்ர பூர்வமான விவாகம் தான் முக்கியம்

உதாரணமாக  காலை 9-10:30 முகூர்த்தம் என்றால் 10:30க்குள் திருமங்கல்ய தாரணம் செய்துவிடுகிறார்கள். எல்லாரும் எழுந்து போய்விடுகிறார்கள். உண்மையான விவாகச் சடங்குகள் பிறகுதான் நடக்கின்றன. முகூர்த்தத்துக்கு எல்லோரையும் நேரம் கொடுத்து அழைப்பது அவர்கள் கல்யாணத்துக்கு சாக்ஷியாக  இருக்கவேண்டும் என்பதற்காக.  கல்யாணத்துக்கு முக்கியமாக அக்னி தான் சாக்ஷி.  அக்னி சாட்சியாக என்று தான் அப்போது சத்யம் செய்வது வழக்கம்.
கல்யாணத்து வந்தவர்கள் இந்த கல்யாண   முஹூர் த்தம்  நடைபெற்றதும் அக்ஷதை, புஷ்ப ஆசீர்வாதம் பண்ணவேண்டும் என்பதற்காக.   ஆனால்  சாப்பிட  நேரம் எப்போது என்று எதிர்பார்த்து,  கடகட வென்று கையில் இருக்கும் அக்ஷதை புஷ்பத்தை மேடைமேல் செருப்புக்காலோடு யார் மீதோ வீசி எறிந்து விட்டு  மாடிப்படி ஏறுவதில்லை  கவனமாக இருக்கிறார்கள்.
முகூர்த்த காலத்திற்குப் பின் ராகுகாலம், எம கண்டம் இருக்கலாம். ஆகையால் எல்லாம் சப்தபதி உள்பட முகூர்த்த காலத்திற்குள் முடித்துவிட வேண்டும். சுபகாலத்தில் தான் சடங்குகள் செய்ய வேண்டும். அப்போது  தான் தம்பதிகளுக்கு க்ஷேமம் உண்டாகும். 

எவ்வளவோ லக்ஷங்கள் செலவு செயது நடந்த கல்யாணங்கள் விரைவில் முறிந்து போக  இது கூட முக்கிய காரணமாக இருக்குமோ என்று பயமாக இருக்கிறது.

கூறைப்புடைவை என்று சொன்னேனே, அதன் பின்ன ணி தெரியுமா? மாயவரத்திற்கு அருகில் கொறை நாடு என்ற ஊரில்தான் முகூர்த்தப் புடவை  நெய்வது  அக்கால வழக்கம். கொறை நாடு புடவை என்பது தான் கூறை ப்புடவை ஆகிவிட்டது.   பருத்தி நூலில் சிவப்புக் கட்டம் போட்டு அழகாக நெய்வார்கள். சுப காரியங்களில் கருப்பு நூல் கூடாது.

உண்மையான கூறைப்புடவை என்றால் நூல் புடவை தான்.  நாம் தற்போது பணவசதியால் பெருமைக்கு ஆசைப்பட்டுப் பட்டு ஜரிகையை, ஆயிரக்கணக்கில் செலவு செய்து பாவத்தைத் தேடிக்கொள்கிறோம்.1966-ல் மஹா பெரியவா ஒரு உத்தரவு போட்டார்கள். அது எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கிறதோ தெரியவில்லை.

“என் நிபந்தனைகளுக்கு உட்படாமல் செய்யப்படும் விவாஹப் பத்திரிகைகளில் என் பெயரைப் போடுவது தவிர்க்கப்பட வேண்டும்” ஏனென்றால் சாஸ்த்ர விரோதமாக எல்லாவற்றையும் கூசாமல் செய்துவிட்டு '' ஜகத் குரு காஞ்சி பரமாச்சார்யா அனுக்ரஹத்தோடு .. என்று ஏன் என் பெயரை போடுகிறீர்கள் என்று அவர் கேட்டது பரம ஞாயம் என்றே படுகிறது.    

காஞ்சிக்கு பத்ரிகை எடுத்துக் கொண்டு நேரில் செல்பவர்கள், காஞ்சிபுரத்தில் பல கடைகளில் பட்டுப்புடவை பேரம் பேசி முடித்து வாங்கிக்கொண்டு தான் மடத்திற்கு சென்று பெரியவாளை தரிசித்து பத்ரிகை வைத்து நமஸ்கரித்து அனுக்ரஹம் கேட்கிறார்கள். அந்தோ பரிதாபம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...