Monday, June 6, 2022

yaksha prasnam

 யக்ஷ ப்ரஸ்னம்   -   நங்கநல்லூர்  J K  SIVAN 


 
யக்ஷன் கேட்கும் கேள்விகளும்  அதற்கு யுதிஷ்டிரன் சொல்லும் அற்புத பதில்களும்  மிகப் பழமையானவை.  ஐந்தாயிரம் வருஷங்களுக்கு முன்பு நடந்த சமாச்சாரம் என்றாலும் இன்றும் நமக்கு அன்றாட வாழ்வில் மிகவும் உதவுபவை.  நல்ல விஷயங்களுக்கு வயசு கிடையாது.
யக்ஷன் கேள்விகளை தொடர்கிறான்:

12. ஒரு பிராமணனுக்கு  எது பாப கார்யம்?
     மற்றவர்களிடம்  குறை  காண்பது.  எல்லாவற்றிலும் நல்லதையே காண்பது தான் இயற்கை குணம்.
 
13. (பரவாயில்லையே  யுதிஷ்டிரா  இதுவரை   நன்றாகவே பதிலளித்தாய். இப்போதுசொல்)
     ஒரு க்ஷத்திரியனுக்கு  எது  தெய்வீகமாகிறது?
அவன்  கையாளும்  ஆயுதங்களே  அவனுக்கு  தெய்வீகத்தை  அளிக்கும். பலம் என்பது உடல் பலம் மட்டும்  அல்ல. நெஞ்சுக்கு தைர்யம். இதயத்துக்கு உறுதி. அது தெய்வ பக்தியால் தான் வரும். சிறந்த  க்ஷத்ரியர்கள் தங்களது ஆயுதத்தை தவம் செயது, ஜபம் செயது பெற்றவர்கள். அதிலிருந்தே  அவை சாதாரணமாக  கரும்பிலிருந்து செய்யப்பட்டு நாம்  வாங்கும் கத்தி கோடாலி கடப்பாரை போன்றவை அல்ல என்று விளங்கும்.

  14. ஒரு  க்ஷத்திரியனுக்கு  எது  தர்மம்?
      அக்னி   தியாகம்  செய்வதே  க்ஷத்ரிய தர்மம்.  ராஜாக்கள்  நிறைய  யாக யஞங்கள் செயது தமது சக்தியை தேவர்களின் தெய்வங்களின் வரங்களோடு பெற்று சிறந்தார்கள். தர்மம் என்பது  மனக்கட்டுப்படும் பக்தியும் கூடியது.

15. க்ஷத்திரியனிடத்தில்  எப்போது  மானிடம் தெரிகிறது.?
     ஒரு க்ஷத்திரியன்  எப்போது  பயத்தில்  அஞ்சுகிறானோ அப்போதே அவன் சாதரணனாகிவிடுகிறான். போரில்  யுத்தத்தில் அவன் பின் வாங்க மாட்டான். புற முதுகு காட்டி ஓடமாட்டான்.  தைர்ய லக்ஷ்மியை இழந்தவன்  சாதாரண மானிடனாக  தரம் தாழ்ந்து விடுகிறான்.

16. க்ஷத்திரியனுக்கு எது பாபம்?
     தன்னை  நம்பி வந்தவனுக்கு  பாதுகாப்பு  அளிக்க தவறும்போது.  தன்  உயிரைக் கொடுத்தாவது ஒரு ராஜா தன்னை அண்டி வந்தவனை பாதுகாப்பது அவனுக்கு மரபு. அழகும் கூட.   அப்படிச் செய்யாதவன் நரகத்தை அடைகிறான்.

 17. அக்னி ஹோமங்களுக்கு  எது  சாம வேதம்?
     ஆன்மா  ஒன்றே. வேதங்களும்  யாக யஞங்களும்  இணை பிரியாதவை.  யாகங்கள் யஞங்கள் ஹோமங்கள் எல்லாமே  வேத சாஸ்திரத்தில் உள்ளபடியே செய்யப்படுபவை. 
 
18 யாக யஞத்தில் முக்யமான  ரிக் எது தெரியுமா?
     மனசு  ஒன்று தான் அதி முக்ய ரிக். யாகத்தில் மனசு தான் ரிக் வேதம்.  முழு மனசுதான் ஈடுபடும் யாகம் தான் ரிக் வேதம். 
 
19 எதால் அக்னி யாக ஹோமம் நடைபெறும்?
     ரிக் வேத மந்த்ரம் போதும். அது உணர்த்தும் சாஸ்திரங்கள், சம்பிரதாயங்களை பின் பற்றினால்  தேவர்களும் தேவதைகளும் திருப்தி அடைந்து வேண்டியதை வாரி வழங்குவார்கள்.

20. அக்னி யாகம்  எதில்  கட்டுப்படுகிறது?
     ரிக் வேத மந்திர பலத்தில். மனதை கட்டுப்படுத்த  வைராக்கியம் வேண்டும். அந்த வைராக்கியம்  மந்திரபலத்தால்  ஏற்படுவது. மனம் எதையோ நினைக்க வாய் மந்திரம் எதையோ சொல்ல சம்பந்தமில்லாமல் கைகள்  ஹோமத்தீயை வளர்த்தால் எந்த பயனும் இல்லையே.
 
21.(தர்மா  நீ  சளைத்தவனே  அல்ல.  உன்னை  இப்போது  வேறு வித  கேள்விகள் கேட்கிறேன்.)  உழவனுக்கு, விவசாயிக்கு எது முக்கியம்?
   எல்லோருக்கும் தெரிந்த விடை  மழை. மழை இல்லாமல் எந்த ஜீவனும் பூமியில் உயிர் பெறாது.  உலகில் எந்த உயிரும் ஜீவிக்க  மழை அத்தியாவசியம். 
 
22.   எதை  பூமியில் அவசியமாக  இடவேண்டும்?
 நல்ல, உயிர்ச்சத்து கொண்ட  நம்பகமான  விதை  ஒன்று தான் பூமியில் நாடவேண்டிய அவசியமான வஸ்து . அதனால் பல உயிர்கள் தானே  வளரும். உபயோகம் தரும்..

23. ஒருவனின் வாழ்வில் எது  நிரந்தர செல்வம்?
ஈடற்ற செல்வம்  பசுக்களை  வளர்த்து  பராமரிப்பதே.  ஒவ்வொரு பசுவும் காமதேனு தான். தாய்க்கு சமமானது பசு. அன்பும் பாசமும் கொண்டது பசு. மிருகங்களிலேயே தெய்வீகமானது பசு. அதிக பசுக்களை உடையவன் சிறந்த செல்வந்தன் என்று கருதப்படுபவன்.  பசுக்களையே  யாகங்களில் தானமாக அதனால்  தான் தந்தார்கள்.
தொடரும்  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...