அறுபத்து மூவர் - நங்கநல்லூர் J K SIVAN
இளையான் குடிமாறன்
அடியார்க்கும் அடியேன்''
ஆஹா சோழ ராஜாக்களே, எவ்வளவு பக்தி உங்களுக்கு என்று இருகரம் தூக்கி வணங்க வைக்கிறது. அடடா எத்தனை ராஜாக்கள், அவர்கள் கட்டிய எத்தனை எத்தனை கோவில்கள். ஒன்றைக்கூட எங்களால் நன்றியோடு பராமரிக்க முடியாதவர்களா நாங்கள்? இவ்வளவு அபூர்வ கலைத் திறன். பரந்த மனம்.. பேதமில்லாத சைவ வைணவ பக்தி.
எங்கெல்லாம் இப்படி அந்தக்கால ராஜாக்கள் கோவில்கள் கட்டினார்களோ அங்கெல்லாம் அளவில்லாத புராண, சரித்திர பின்னணி. சான்றுகள். நிறைய பேர்களை நாம் தெரிந்து கொள்ளமுடியும் வகையில் கல்வெட்டுகள், அடையாளங்கள் எல்லாம் வேறு விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்.
சரித்திரத்தில் இந்த ஊர் இந்திர அவதார நல்லூர். இங்கு பிறந்த ஒரு மகா சிவபக்தர் பற்றி இன்று தெரிந்து கொள்வோம்.
இந்திரன் யாரோ ஒரு ரிஷியிடம் சாபம் வாங்கி கட்டிக்கொண்டு பரிகாரம் தேடி இங்கே வந்தான். சிவ லிங்கங்களை ஸ்தாபித்து பூஜை செய்தான். இந்த சிறப்பு மிக்க ஊர் இளையான்குடி, காரைக்குடி போகும் பாதையில், பரமக்குடியில் இருந்து 10 கி.மீ. தூரம். அக்காலத்தை போல் இல்லாமல் இப்போது நிறைய பஸ் வசதி. போக வர கையில் காசும் மனதில் ஆசையும் தான் வேண்டும்.
இங்கு சோழன் கோவில் கட்டுவதற்கு முன்பே மஹாவீரர் தோற்றுவித்த ஜைனர்கள் இருந்திருக்கிறார்கள் என்று தடயங்கள் இருக்கிறது. பௌத்த நடமாட்டமும் இருந்திருக்கிறது. ராஜேந்திரசோழன் கட்டிய சிவன் கோவில் ஏற்கனவே இடிந்திருந்த ஒரு ஜைன கோவில் என்கிறார்கள். இந்த ஊரைச் சார்ந்த மஞ்சுபுதூர் செட்டியார்கள் ஒருகாலத்தில் ஜைனர்களாக இருந்து சைவம் தழுவியவர்கள் என்று அறிந்தால் ஜைனர்கள் இங்கிருந்தது புரியும். நாம் அதற்குள் போகவேண்டாம். கோவிலுக்குள் மட்டும் போவோம். அங்கு ஒருவருக்கு சந்நிதி இருக்கிறது. அவர் தான் இளையான்குடி மாற நாயனார். அன்னதான பிரபு அவர்.
மாற நாயனார் எட்டாவது நூற்றாண்டில் சுந்தரர் திருத்தொண்ட தொகையில் பாடிய ஒரு சிவ பக்தர். ளையான்குடியில் பிறந்தவர். அவர் இயற் பெயர் என்னவோ தெரியவில்லை. எல்லோராலும் அவர் அறியப்படுவது இளையான்குடி மாறனார் என்ற அறுபத்துமூவரில் நான்காவது நாயன்மார்.
மாறனார் விவசாயி. பயிர்த்தொழில். நிறைய நிலம். அமோகமாக பயிர்கள் விளைந்து செல்வம் சேர்ந்தது. அவர் சிறந்த சிவபக்தர் என்பதால் ஒரு விரதம். எந்த சிவ பக்தர், பசியாக வந்தாலும் அவருக்கு அன்ன தானம் செய்ய வேண்டும். ஒரு நாளாவது இது தவறக்கூடாது. இதற்கு பெரிதும் ஒத்துழைத்தவர் அவர் மனைவி புனிதவதி. பெயருக் கேற்ற புண்யவதி.
ஒரு நல்ல மழைக்காலம். மேகங்கள் சூரியனை மறைத்து பகலே இரவு போல் இருட்டாக இருக்கும்போது இருட்டி லேயே ஒருவர் வந்தால் தெரியுமா? விடாது பெய்த மழையில் ஊரே வெள்ளமாக நீர் நிறைந்து எங்கும் குளமாக காட்சியளித்தது. ஜன நடமாட்டமே இல்லை. பறவைகள் வண்டுகள் சில விலங்குகளின் அலறல் தான்.
”யாரோ இந்த அகால வேளையில் வந்திருக்கிறார்கள்'' என்று புனிதவதி கூற மாறனார் கை விளக்கோடு வாசல் வருகிறார். தொண்டு கிழவரை மழையில் நனைந்தவாறு நிற்பவரை பார்க்கிறார்.
யார் என்று கேட்கும் முன்பே அந்த கிழவர் ''ஐயா உம்மை பற்றி கேள்விப்பட்டேன். பசி காதை அடைக்கிறதே. ஏதாவது உணவு கிடைக்குமா?' என்கிறார்.
''அடடா என்ன அற்புத சிந்தனை உனக்கு புனிதவதி, நீ பெயருக்கு ஏற்றவள் தான். இதோ ஓடுகிறேன்.''
கொட்டும் மழையில் தலையில் ஒரு கோரைப் பாயை போர்த்திக்கொண்டு மாறனார் வயலுக்கு ஒடி, கூடை நிறைய சேற்றில் துழாவி எடுத்த நெல் விதைகளை சேகரித்து மழைநீரில் அவற்றை கழுவி புனிதவதி அதை ஒருவாறு வாணலியில் சூடேற்றி வறுத்து ஈரம் போக்கி, இடித்து உமி அகற்றி சோறாக்கினாள். கிட்டத்தட்ட கஞ்சி மாதிரியான சாதம். அதற்கு எதை குழம்பாக்குவது. காய் கறிகள் இல்லையே. கிடைக்காதே எங்கும்.
இருளில் பளிச்சென்று அங்கே ஒரு திவ்ய ஒளி தோன்றியது. வேயுறு தோளி பங்கன், விடமுண்ட கண்டன், பொன்னார் மேனியனாய், புலித்தோலை அரைக்கசைத்து, மின்னார் செஞ்சடையோடும் உமை யொரு பாகனாக ரிஷபாரூடனாக காட்சி அளித்தார்.
No comments:
Post a Comment