Wednesday, June 8, 2022

RAMAKRISHNA PARAMAHAMSA

 அருட்புனல் -  நங்கநல்லூர்  J K   SIVAN

ராமகிருஷ்ண பரமஹம்ஸர்

 'அம்மா  வந்தாள் ''

எந்த குருவுமில்லாமல், பள்ளி செல்லாமல், இயற்கையாகவே ப்ரம்மஞானம் பெற்ற  பிறவி ஞானிகள் வெகு வெகு அதிசயமான ஒன்றிரண்டு பேர் மட்டுமே.  ரமணர்  ராமகிருஷ்ணர்  போன்றவர்கள். நம் அதிர்ஷ்டம் அவர்கள் தோன்றிய தேசத்தில் நாம் பிறந்தவர்கள். இன்னும் சிலரோ பலரோ  இவர்களைப் போல குடத்திலிட்ட விளக்காக  எங்கோ இருக்கலாம். காலம் அடையாளம் காட்டும் போது வெளியே தெரியும். காசு விளம்பரம் சொகுசு, சுகம் தேடும்  போலிகள் அல்ல இவர்கள்.
ராமகிருஷ்ணர்  அமானுஷ்யமான  இரவின் அமைதியில்
மயானத்தில் தியானம் செய்யும்போது நிர்வாணமாக இருப்பார். ஹ்ரிதய்க்கு இது ஒருநாள் தெரிந்தது. அவரைக் கேட்டான்:

 ''கதாதர்,  நீ  ஏன் இப்படி பண்ணுகிறாய்?''

''என்  தாயோடு நான் ஹ்ரிதயம், மனம்,  கலந்து இணையும்போது நான் எல்லாவற்றிலிருந்தும்  விடு
பட்டு இருக்கவேண்டாமா? பிறக்கும்போது எட்டு தடைகளோடு பிறக்கிறோம். வெறுப்பு, வெட்கம், உறவு, உயர்ந்தவன்  தாழ்ந்தவன்  பேதம், பயம், ரகசியம், ஜாதி வித்யாசம், துக்கம் என்ற இதெல்லாம்  நீங்க வேண்டும்.  பூணல் நான் ஒரு உயர் ஜாதி  பிராமணன் என்ற நினைப்பைத்  தருகிறது. என் தாய்க்கு முன் நான் நிற்கும்போது எதற்கு அது?

''ஐயோ, கதாதரனுக்கு இப்படி சின்ன வயதிலேயே  பைத்தியம்  பிடித்து விட்டதே '' என கவலையுற்றான் ஹ்ரிதய்.

நாட்கள் செல்லச் செல்ல பூஜை பண்ணும் வழி முறை களும் தடை பட்டன. கமலகாந்த் , ராம்பிரசாத் போன்ற காளி பக்தர்களுடைய  பாடல்களைப்  பாடிக்கொண்டு மணிக்கணக்காக பவதாரிணி முன் அமர்ந்தார் ராமகிருஷ்ணர். அவளை நாடி, தேடி, தாயிடமிருந்து பிரிந்த சேயானார்.

''அம்மா நீ எங்கேம்மா  இருக்கே.  என்னை விட்டுவிட்டு  எங்கே போய்விட்டாய் . வா  என்னிடம் ? என்று தரையில் முகத்தை இடித்துக் கொண்டு அழுதார்.

''சொல், நீ உண்மையிலேயே  என் அம்மாவா? இல்லை சும்மாவா? நீ உண்மையிலேயே  என்  அம்மாவாக  இருப்பவளானால் ஏன் என் முன்னே  இன்னும்  வரக்காணோம்?

மணிக்கணக்கில் தரையில் அவள் முன்னே ஜமக் காளத்தை மடித்து போட்டு அதன் மேல் உட்கார்ந்து கொண்டு அவளை வெறித்து பார்த்துக் கொண்டி ருப்பார்.    அன்ன ஆகாராதிகள் தூக்கம் எல்லாமே கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தன. நின்று போய் விட்டன.

எதிர்பார்த்த நேரம் ஒருநாள் வந்துவிட்டது. பவதாரிணி  ராமகிருஷ்ணரின்  கண் முன் தோன்றினாள்.இந்த முதல்  தரிசன அனுபவத்தை பின்னால் அவரே  விளக்குகிறார்:

''ஈரமான துணியை பிழிவோமே அதுபோல் என் ஹ்ரிதயம் பிழிபட்டது. எங்கோ பறப்பது போல் லேசானேன். இந்த ஜென்மத்தில் அவளைக்  காண முடியாமல்  போய் விடுமோ என்ற பயம் என்னை பிடித்துக் கொண்டிருந்தது.  பிரிவு இனிமேல் தாங்கமுடியாது என்ற நிலைக்கு வந்து விட்டேன்.  சே, இதற்கு எந்த வாழ்வு?  உயிரோடு இருந்து என்ன பிரயோஜனம்?'' என்று கூட  தோன்றியது. அம்பாளுக்கு மேல், சுவற்றில் தொங்கிய வாளின் மேல் என் கண் அப்போது  போனது.
'
'ஆஹா. நல்ல யோசனை.   சரியான முடிவு. இது தான் என் வாழ்வின் கடைசி நேரம்.'' பந்து போல் எகிறினேன். மேலே இருந்த அந்த வாளை எடுத்தேன். வாளுக்கும் எனக்கும் இடையே திடீரென்று ஒளிமயமாக, அப்பப்பா,  என் தாய், என் அம்மா, என் இதய தெய்வம்.. பவதாரிணியின் முகம் தோன்றி யது.  அந்த  வினாடி நேரத்தில்  என் எதிரே எல்லாமே தலை  கீழாக வேகமாக சுழன்றது. கோவில், கட்டிடம், கங்கை, மரங்கள்  , கோபுரம், நந்தவனம்,  எல்லாமே ஏன் இப்படி படு வேகமாக  சுற்றுகிறது?. அதில் ஒவ்வொன்றிலும் பெரிதும் சிறிதுமாக எங்கும் எதிலும் என் தாயின் முகமும்  பளிச்சென்று காண்கிறதே....சுழலும் வேகம் அதிகரித்தது. இன்னும்....., இன்னும்...... ''ஓ''  வென்ற சப்தத்திலும் வேகத்திலும் உருவங்கள் மறைந்தது. நான் எங்கிருக்கிறேன்? . என் கண் இருண்டது.   எங்கோ பெரு வெள்ளத்தில் இழுத்துக்கொண்டு போகப்படுகிறேன். நினைவு அழிந்தது.. பிறகு அமைதி.  ஒவென்ற  பேரிரைச்சல் என்னை எதுவோ  ஆழமாக  இழுத்துக்கொண்டே  போகிறது.  எங்கே மூழ்குகிறேன்.  கங்கையா ?  யாரோ  என்  கையைப் பிடித்து அழைத்துப் போகிறாளே , ஓஹோ  அது தான் என் தாயா? பவதாரிணியா ?அசைவற்று போனேன். எல்லாம் மறைந்து ஒரு எல்லையற்ற காலமற்ற வெள்ளம்... பிரஞை உணர்வு. பேரிடி போன்ற சப்தம். அதன் எதிரொலியில் நடுக்கம். மூச்சு திணறியது. எது என்னை மூழ்கடிக்கிறது? நினைவு தப்பிவிட்டது.   வெளி உலகத்தில் எது நடந்ததோ எனக்கென்ன தெரியும்? என்னுள்ளே ஒரு ஒளி பெரிதாகிக் கொண்டே வந்தது. என் தாய், என் அம்மா ஒளியாகி என்னுள்ளே வியாபித்தாள் ..அப்பாடா அவளை பிடித்து விட்டேன். இனி அவள் என்னுள்ளே''.ராமகிருஷ்ணர் கண் விழித்தார்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...