Friday, June 3, 2022

TRAVELLOGUE

 நாலு நாள்  யாத்திரை  -  நங்கநல்லூர் J K SIVAN 

 
சில வருஷங்களுக்கு முன்பு ஒரு 
நான்கு நாட்கள்  என் வாசகர்களுக்கு திருநாள்.  நான் தான் எழுத முடியாதே !  என்னிடமிருந்து விடுதலை.    ஐந்தாவது நாள்?  செய்த  பாவம்  யாரை விட்டது.  மீண்டும்  துளைத்தெடுக்க  வந்துவிட்டேன். அதிலிருந்து  தப்ப  வழியேது ? 

ராமேஸ்வரம்  ஒரு தீவு. ஏழாயிரம் வருஷத்துக்கு முன்னால்   ராவணன்  என்கிற பிராமணனைக்   கொன்ற பிரம்மஹத்தி தோஷம் நீங்க  ராம  ராராஜா  இலங்கைலிருந்து  திரும்பி  இங்கு வந்து  ஒரு  சிவலிங்கமும்  கிடைக்காமல்  ஹனுமனை விட்டு    ''ஹனுமா, சீக்கிரம்  பற .கைலாசத்திலிருந்து ஒரு  சிவலிங்கம்  கொண்டு  வா''   என அனுப்பினார்.  அதற்குள்  சீதை   மண்ணால் ஒரு  சிவலிங்கம்  பிடித்து  அதற்கு  ராமர் பூஜை செய்து தனது ப்ரம்மஹத்தி தோஷத்தை ராமர்  தீர்த்துக்கொண்டார்.  ராமர் வழிபட்ட அந்த  ஈஸ்வரன்  தான்  ராமேஸ்வரன், அந்த  ஊர்  தான்  ராமேஸ்வரம்.   உலகத்திலேயே  பெரிய  அழகிய பெரிய  ப்ரஹாரம்   கொண்ட  அற்புதமான கோவில் ,பன்னிரண்டு  பிரசித்தி பெற்ற  த்வாதச லிங்கங்களில்  ஒன்றான ராமலிங்கம் இருக்கும்  ராமேஸ்வரம்.  

வெளியே  கிழக்கு  மேற்காக 690 அடி  நீளம்,  வடக்கு  தெற்காக  435 அடி.  உள்  ப்ரஹாரம்  395 அடி.  இருக்கும் தூண்கள்  1212.   தரையிலிருந்தே  மேலே கூரை  வரை  23 அடி உயரம்.  ராமநாதபுரம்  ராஜாக்கள்  சேதுபதி மன்னர்கள் செய்த  கைங்கர்யம்  சொல்லியோ  ஏட்டில் எழுதியோ  மாளாது.  ஒரு  பெரிய நந்தி  நாக்கைத்  துருத்திக்கொண்டு   ராமேஸ்வரம் சென்றால், ராமேஸ்வரன்  சந்நிதிக்கு  முன்னே  பிரம்மாண்டமாக  அமர்ந்திருப்பதை  காணத் தவறாதீர்கள்.   

ராமேஸ்வர சமுத்திர ஸ்நானம்   ஒரு  மறக்க  முடியாத இன்ப  அனுபவம்.  ஆழமே கிடையாது.  ஆனால்  கல் நிறைய.  அழுக்கு, கந்தல் துணிகள்  நிறைய . பரவாயில்லை.  மனதை  உள்ளே செலுத்தி ராமேஸ்வரனை வேண்டி   முழுக்கு  போட்டவர்களுக்கு தான்   அந்த  சுகம் புரியும்.  படிக்கட்டுகள்  இருக்கிறது.  கீழே  கல் காலை  குத்தவில்லை.   அலைகள் பயம்  இல்லாது  கரையிலிருந்து   இருபது முப்பது   அடி தூரம்   முழங்கால்  அளவோ,  குள்ள மானவர்களுக்கு  வயிற்றளவு  வரையிலோ  ஜலம் சுகமாக இருக்கும்.  இங்கே பயமில்லாமல்  பெண்கள்   சந்தோஷமாக ஸ்நானம்  செய்கிறார்கள். 

 போன இடத்திலும்   துர்பாக்கியம் சிலரை  விட்டு  வைப்பதில்லை.   இது சில  பேர் ஜாதகம்.   ராமேஸ் வரத்தில் போய்  பாபம் தீர்த்துக் கொள்ளலாம் என்று   சென்றேன்.  அங்கு  போனவர்களுக்கு தெரியும்.  22  புண்ய தீர்த்தம் என்று  கிணறுகள்/ஊற்றுக்களிலிருந்து குட்டி குட்டி வாளிகளில்  ஜலம் மொண்டு  தலையில்  ஊற்றுவார்கள்.  வரிசையாக  நகர்ந்து செல்லவேண்டும்.  ஒவ்வொரு கிணறாக போய்  நிற்கவேண்டும்.  இந்தியாவின் பல பாகங்களிலிருந்து யாத்ரீகர்கள், பக்தர்கள் வருவார்கள்.  வடக்கத்தி  தெற்கத்தி என்று வித்யாசம்  எல்லாம்   இந்த இடத்தில் கிடையாது.  வரிசையாக  வந்து  நெருக்கியடித்து   நின்று  வாளி ஜல அபிஷேகம்  பெற்றுக் கொள்வார்கள்.  சில  கிணறுகளில்  ஊற்றுக்களில்  கொஞ்சமாக  ஜலம்  இருந்தால்  கால் வாளி   நீருக்கு  ஐந்து  ஆறு தலைகள்  நீளும்.   சில  தம்ளர்கள் ஜலம்  தான்   தலையில்  கிடைக்கும்.  என் மனைவி  ரெண்டு  கிணற்று ஜலம் வாங்கிக்  கொண்டு  நகர்ந்த இடத்தை  ஒரு குஜராத்தி  பெண்மணி  பிடித்துக்  கொண்டு என்னைப் பிடித்துத் தள்ளிக் கொண்டவாறு  என் நிழலாய் ஒட்டி  என் தலையில் விழும் துளி ஜலத்தில் தானும் பங்கு பெற்றுக்  கொண்டாள். என்ன செய்வது?   அவளுக்கு  முதலில்  இடம்  விட்டால் கூட   அவள் எனக்கு முன் போகவே இல்லை.ஒவ்வொரு கிணறாக  என் தலையில் விழும்  புனித நீரிலும்  பங்கு எதிர்பார்த்தாள்.   இவ்வாறு  நாலைந்து கிணறுகளில்  புண்ய  ஜலம்  நாங்கள்  இருவரும்  எனது விருப்பமின்றி  அவள் என்னோடு சேர்ந்து  புண்யம்  தேடுகையில்  எனது  எதிர்கால   குடும்ப  நிம்மதியைக்  கருதி  அந்த  பெண்மணியைத்  தொலைக்க  பாடு பட்டுக்கொண்டிருக்கும்  சமயம்  தான்  ராமனாதேஸ் வரர்  ஒரு தெலுங்கு காரர்  குடும்ப  உருவில்  ஆபத் பாந்தவனாக வந்து  என்னைக்   காப்பாற் றினார்.  அந்த  தெலுங்கு குடும்பம்  அவளை ஒரு  கோழிக் குஞ்சை  வளைத்துக்  கொண்ட  கழுகுகளாக  சூழ்ந்து கொண்ட தில்  நான்   மீண்டேன்.   குடும்ப  எதிர்ப்பு  ஆபத்திலிருந்தும்  விடுபட்டேன்.  சாவதானமாக அந்த  கூட் டத்தை  நகர்ந்து  முன்னே செல்ல  இடம் விட்டு பின்னால்  நின்று கொண்டேன்.  என்னைக் காப்பாற்றிய    அந்த  கிணற்றுக்கு என்ன  பெயர் என்று  மேலே  பார்த்தபோது  ஆஹா  அங்கே  ஒரு  ஆச்சர்யம் காத்திருந்தது.

நான் அந்த வடக்கத்திய பெண்மணியிடமிருந்து  விடுபட்ட  இடம்   ''பிரம்மஹத்தி  சாப  விமோசன தீர்த்தம்''.  என்னை விட்டு  தெலுங்குக் காரரை  அது  பிடித்துகொண்டதோ  என்னவோ  அது  அவர்  வந்த வழி.

நான் பல  வருஷங்கள்  கழித்து  சென்றதால் எனக்கு ராமேஸ்வரம்  ரொம்ப   மாறிவிட்டிருந்தது தெரிந்தது. 
கடைசியாக பத்து பன்னிரண்டு  வருஷங்களுக்கு  முன்  பார்த்தபோது.  நடக்க  தெருவில் இடம்  இருந்தது.  சில  தென்னிந்திய  குடும்பங்கள்  சுடச்   சுட  இட்லி,  பொங்கல்,வடை  தந்தார்கள்.  இப்போது காணோம்.    பரோட்டா கடைகள்  பரவி இருப்பதைத்தான்  பார்க்க  முடிகிறது.  பேருந்துகளை  நடக்க முடியாத   தூரத்தில்  நிற்க வைத்து விடுவதால்  வெறும்  காலில் செருப்பின்றி  நடப்பது ஒரு தண்டனை. 

 வண்டலூர்  மிருக காட்சி சாலைக்குப்   பிறகு ராமேஸ்வரத்தில்  தான் பேட்டரி   கார் பார்த்தேன்.   சென்ட்ரல் ரயில்  நிலையத்தில் அதில்  ஏற ஆசைப்பட்டாலும்  ஒரு முறை  கூட  நிறைவேற சந்தர்ப்பம்  வாய்க்க வில்லை.   

அப்துல் கலாம்  வீடு  பார்க்க   சென்ற இடத்தில்   சங்கு வியாபார  விளம்பரம்   கண்ணை உறுத்தியது. ''கலாம்  வீடு''  என்ற ஒரு  சார்த்தி யிருந்த ஒரு வீட்ட்டின்  கதவை பார்த்தேன்.  அவர்  குடும்பத்தார் காலத்திற் கேற்ப  வீட்டை   மாற்றியிருந்ததால் என் கற்பனை  வீட்டைக்   காண முடியவில்லை.  ஒரு  அபூர்வ  மனிதர் வீடு  அதே  பழைய  உருவில் பாதுகாக்கப்பட்டால்  அதற்குண்டான  மதிப்பே  வேறு  என்பது அவர்களுக்கு தெரியாதா  என்ன?  அப்துல் கலாம் ஐயாவின் மதிப்பையும்  பெருமையையும்  அவர்  வீட்டு பெயிண்டிங் கலரை வைத்து  மதிப்பு  போடாதவர்களில்  நானும்  ஒருவன்.

ராமர்  பாதம் என்று  ஒரு   சிறு  குன்றின்  மேல்  ஒருவர்  வாய் ஓயாமல்   பண உதவி கேட்டுக்  கொண்டிருப் பது அவரது  கவனம்  ராமர் மேல் இல்லை  என்று பறை சாற்றியது.   இருந்தாலும்  நமது  மனத்தை  ராமர்  மேல் செல்லாமல்   அவர்  துன்புறுத்துவது  ராமருக்கே  பிடிக்காது  என்பதால்  தான்  ராமர்  பாதம்  வாசலில்  கூரான கொம்புகளோடு  நன்றாக  வளர்ந்த  சில  ஆடுகள்  நம்மை  நகர விடுவதில்லை.  கையில் உள்ள   வாழைப் பழம்  தருகிறாயா, குடல் ஆட்டுக் கொம்பு மூலம்   வெளியே உருவட்டும?   குடல் உள்ளேயே  இருக்க வேண்டுமானால் வாழைப்பழத்தை  கட்டாய தர்மம் செய் என்ற  முடிவை   ஆடுகள் எடுக்க வைத்தது.     கந்தமாதனம்  இன்று   இந்த குன்றுக்கு  பெயர்.  இங்கு தான்  ராமர்  நின்று  இலங்கை  எந்த பக்கம்  கிட்டே   என்று  சோதித்தார்.   எங்கு சேது பாலம்  அமைப்பது  என்று  முடிவெடுத்தார்.  நின்று பார்த்தால்   ''அதோ அது தான் இலங்கை '' என்று ஒரு பச்சை பசேல்  பகுதி தூர  கண்ணில் பட்டதைக் காட்டினார் ஒருவர்.

ராமர்  தீர்த்தம்  என்று  குளம் ஒன்றுக்கு  அழைத்து செல்லப்பட்டேன்.  குளத்து  ஜலத்தை  ப்ரோக்ஷணம்  பண்ணிக்  கொண்டால் ஜன்மாந்திர  பாபங்கள் விலகும்  என்று  அங்கு  யாருக்கோ  ஒரு  வாத்தியார்  சொல்லிக் கொண்டே தக்ஷிணையை வாங்கி  இடுப்பில் முடிந்தார். குளத்துக்குச்  சென்றோம்.  குளத்தில் நிறைய ஆடுகள்  மாடுகள் மேய்ந்து  கொண்டிருந்தன.  ஒரு  பொக்லைன் வண்டி  மண் வாரிக் கொண்டி ருந்தது.  

 'அப்பனே அவ்வளவு சுலபத்தில்   உன் ஜன்மாந்திர பாபம்  தொலையுமா?   ஜலத்துக்கு காத்திரு''  என்று  குளம் சொல்லியது.   சரி என்று  திரும்பினேன்.   ராமர் தீர்த்தம்  மாதிரியே  லக்ஷ்மண தீர்த்தம், அதையும்    இதே  காரணத்தால் பார்க்கவில்லை.  

வில்லுண்டி (வில்லூன்றி?) தீர்த்தம்  என்று  சற்று  தொலைவில்  மதுரை போகும்   வழியில் உள்ளதே. இங்கு தானே,  ராமர்  சீதை  லக்ஷ்மணர்கள் ஆயாசத்தோடு  நடந்து வந்தபோது  ''நாதா, தாகமாக உள்ளதே''  என்று  சீதை கேட்க,   லக்ஷ்மணன் எங்கும்   குடிநீர்  தென்படவில்லையே,  சுற்றிலும்   கடலாக உள்ளதே  என்று  சொல்ல,  ராமரும்   பார்த்துவிட்டு  ''சரி   முயற்சி செய்வோம்''  என்று  வில்லை எடுத்து  ஒரு  சரம் தொடுத்து  பூமிக்கடியிலிருந்து  கடல் நீர்   கலக்காமல்  ஒரு  சுனை  ஏற்படுத்தி  சுகமாக குடிநீர்  கொண்டு வந்து   கொடுத்தார்.  சீதை  குடித்து மகிழ்ந்தாள்.  இப்போது அந்த  இடத்தில்  ஒரு  கிணறு.  கடலில்  இருக்கும்  அந்த  கிணற்றுக்கு   போக ஒரு   பாலம்.  பாலத்திற்கு  மேலும்  கிணற்றின்  சுவர்.  அந்த  கிணற்றுக்கு  காவல்காரர்   என்றோ  சொந்தக்காரர் என்றோ   சொல்லும் அளவுக்கு  அதை  நெருங்கி இருப்பவர்  ஒரு புகைப்படக் காரர்.  கிணற்றை  சுற்றி   நிற்க வைத்து  கையோடு ஒரு   படம் எடுத்து  கொடுக்க  ஐம்பது  ரூபாய்.   கூட்டத் துக்கு தக்கவாறு  விலை  ஏறும்.   போட்டோ   எடுப்பார்.   பாலத்தின் மீது  ஓடுவார்,    கரையில் இருக்கும்  ஒரு பழைய  சிறிய  சிவன்  கோவில் வாசலில்  அட்டையால்  மூடி  ஒரு   பாட்டரியில்  இயங்கும்  போட்டோ பிரிண்டர் வைத்திருக்கிறார்.. ஒரு  சில   நிமிஷங்களில் போட்டோவில்  வில்லுண்டி  தீர்த்த  கிணற்றோடு நீங்கள்  சிரித்துக்  கொண்டு எத்தனை  காபி  வேண்டுமோ  அத்தனை காப்பியிலும்  எப்போதும்  நிற்பீர்கள்.   அந்த  நீரை எடுத்து  தருவதற்கு   காமிராவோடு ஒரு  நீள  கயிற்றில் கட்டிய   சொம்பும்  அவரிடம்  உள்ளது.    தண்ணீர் உப்பு  கரித்தது.   ஏன் என்று  கேட்கும் முன்னரே '' கடல் நீர்   எங்கோ கசிந்து  அடியில்  நல்ல  நீர்  ஊற்றோடு  கலந்து விட்டது ''  என்று சொல்லி  விட்டு   அடுத்த வாடிக்கையாளரைக் கவனிக்க   ஓடினார். பிழைக்க வழி  தெரிந்த இளைஞர். 

ராமேஸ்வரத்திலிருந்து  திருப்புல்லாணி  என்கிற  திவ்ய  தேச  வைஷ்ணவ ஸ்தலத்துக்கு  எல்லோரும் செல்வார்கள். ராமநாதபுரத்தில்   8ம்  நூற்றாண்டில்  ராமநாதபுரம்   சேதுபதி மன்னர்கள்  கட்டிய  இந்த ஆதி ஜகன்னாத பெருமாள்  ஆலயம்  திருமங்கையாழ்வாரைக்  கூட  இங்கே  வரவழைத்திருக்கிறது.  ராமர்  இலங்கைக்கு  ராவண யுத்தத்திற்கு  புறப்படு முன்னால் தர்ப்பையில்  சயனித்து  த்யானத்தில்  இருந்த  இடம்.  எங்கு  சேது பாலம்  கட்டலாம்  என்று  சமுத்ர   ராஜனின்  சீற்றம் அடங்க காத்திருந்த  இடம். விபீஷணன்  வந்து சரணாகதி  அடைந்த இடம்.  சமுத்ர ராஜன்  தம்பதியோடு வந்து  ராமரை  வணங்கிய சிலைகள்   அற்புதமாக உள்ளன.  ராம  அவதார  கார்யம்  முடியும்  முன்னே  தர்ப்பை  சயனத்தில்  எதிர்பார்ப்புகளோடு  இருந்த  ராமன்  இந்த கோவிலில்  ராவண  வதம் எல்லாம்  முடிந்து பட்டாபிஷேக  ராமர்  கோலத்திலும் காதி அளிக்கிறார். சந்நிதி  தனியே  உள்ளது.  பத்மாசனியை  தரிசனம் செய்ய  இரு  கண்கள்  நிச்சயம் போதவே  போதாது. 

ராமேஸ்வரம்- மதுரை சாலை நன்றாக இருப்பதால்  தூக்கம்  கெடாது. மதுரையில்  மீனாக்ஷி  அம்மன்  கோவில் பற்றி எழுத  நிறைய விஷயங்கள்  இருக்கிறது.  அதை   தனியே தான்  வைத்துக்கொள்ள  வேண்டும்.  திருமலை நாயக்கன்  மஹால்  என்று  ஒரு பெரிய  பெரிய  தூண்களோடு  கூடிய  கட்டிடத்தை  கட்டியவர்  ஒரு  இத்தாலிய கட்டிட கலைஞராம்.  தூண்களில்   '' பாலு  கோமதி, ராஜகோபால்  மைதிலி''  காதல் ஜோடிகளின்   பெயர்களை ஆட்டின்   கிளாவர்  வடிவத்துக்குள்  கிறுக்குவதில்  நமக்கு நிகர்  நாம்  தான் உலகத்திலேயே. 

 புராதன  சரித்திர புகழ் பெற்ற  இத்தகைய அசாத்திய  பொது பொக்கிஷங்களை அழிப்போர்  மீது  கடும்  தண்டனை  எடுத்தால்,  அபராதம் விதித்து  அதன் மூலம்  அரசாங்கத்துக்காவது வருமானம் வரட்டுமே. 

தமிழகம்  ஒரு காலத்தில்  கிருஷ்ணதேவ ராயர்  ஆளுமையில்  இருந்தபோது  மதுரையில்  சில  கலகங்கள்  நடந்ததை கேள்விப்பட்டு  அதை ஒடுக்க  தனது  சேனாதிபதிகளில் ஒருவரான  நாகம  நாயக் என்பவரை மதுரைக்கு அனுப்பினார்.  உள்ளூர் சச்சரவு  கலகம் எல்லாம்  அடக்கிய  நாகமன்  தானே  அங்கு  அரசனாகிவிட்டது கிருஷ்ண தேவராயருக்கு  கோபத்தை வரவழைத்தது.  ''நீ  போய்  உன்  அப்பனின் கொட்டத்தை  அடக்கி  அவனை சிறைப் பிடித்து வா ''என்று  நாகமன் மகன்  விஸ்வநாத  நாயக் கை ராஜா  அனுப்பினார்.  அப்படியே  செய்தான் மகன்.  பிறகு  சமயம்  பார்த்து   ராயர்  கொஞ்சம்  சந்தோஷமாக  இருக்கும்போது    ''ராஜா,  என் அப்பா  செய்தது  நியாயம்  தான்.  அங்கு  ஒரு  அதிகாரம்  உள்ள  சிற்றரசன்  இருந்தால்  தான்  உள்ளூர்  கலககாரர்கள் மீண்டும்  தலையெடுக்க மாட்டார்கள். மதுரை பொல்லாத  ஊர்.  என்றான்  மகன். '' அவன் நேர்மையை  மெச்சினார்   ராயர். 

 ''ஓ  அப்படியா  விஷயம்.  போனால்  போகிறது.   நீ  சொல்வதைக்  கேட்டு  உன் அப்பா  நாகமனை   விடுதலை செய்கிறேன்.  ஆனால்  இன்றுமுதல்  நீ தான்  மதுரைக்கு  சிற்றரசன்.  போய் வா '' என்றார்  ராயர்.  1530லிருந்து  நாயக்க மன்னர்கள்  மதுரையை  ஆண்டுவந்ததில்  திருமலை நாயக்  7 வது அரசன். (1623-1659)  திருமலை பலே அரசன்.  அருமையான  சிற்பக் கலை  நிறைந்த  அறுபுதமான  உலகில் எங்கும் பார்க்க முடியாத  ஒரு  புது வசந்த மண்டபம் மீனாக்ஷி அம்மன் கோவில்கிழக்கு  வாசல் எதிரே கட்டினான். (அதன்  கதி  இப்போது  என்  கண்ணில்  நீர்  வரவழைத்தது)  மதுரையில்  இருக்கும்   வண்டியூர் தெப்பக்குளம்  நிர்மாணித்தவன்   இவனே. தெப்பக்குளம்  இன்னும்  யாராலும்  அழிக்கப்படவில்லை.  அதை சுற்றி  சுவர் இருப்பதாலும்  உள்ளே தண்ணீர்  நிரம்பி இருந்ததாலும்.  நான்  சென்றபோது  குளத்தில் மாடு  மேய்ந்தது. குளம்  மழைக்கு காத்திருந்தது.  வைகை கண் திறந்தால் மீண்டும்  நிரம்பும்.  வசந்த மண்டபம்  இப்போது ஊசி குத்த  இடம் இல்லாமல்,  பிளாஸ்டிக்,   பித்தளை, அலுமினிய,  துணிக்  கடைகளாக  போய் விட்டது.  சிற்பங்களை மறைத்து  கடைக்காரர்களின் அட்டகாசம்.  யாருக்குமே  பொறுப்பில்லையா.  வாசலில்  ராவணன் ஒரு  தூணில் சாமகானம் வாசித்து  பரமேஸ்வரனை  கைலாய  மலையோடு  தூக்கும்  அற்புதம்  கல்லால் ஆனதால்  தப்பி  வருகிறது.அதன் படம் தந்திருக்கிறேன்.  ராவணனை சுற்றி  பிளாஸ்டிக்  இரும்பு தட்டு முட்டு சாமான்கள்  விற்பனை பொருள்கள்.  ராவணன்  பாவம் கைலாய மலையில்  சிவன்  பார்வதி  யோடு  அவற்றையும்  சுமக்கிறான்.

தெப்பக்குளம்  தோண்டியபோது எடுத்த  மண்ணை தான்  இந்த  கட்டிடங்கள்  கட்ட  திருமலை நாயக்  உபயோகித் தானாம். திருமலை  நாயக் கட்டிய  அற்புத  கட்டிடங்கள்  திருப்பரங்குன்றம்,  அழகர் கோவில்  ஸ்ரீவில்லிப்புத்தூர் செல்பவர்கள் நின்று பார்க்க  நேரம்  இருந்தால்  ரசிக்கலாம்.  சாப்பாடு  தேடி  ஒடுபவர்கள்  கண்ணுக்கு இவை  கண்டிப்பாக  தப்பிவிட வாய்ப்பு அதிகம்.  






No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...