Sunday, June 12, 2022

ARPANAM

 ''காயேன வாசா ... #நங்கநல்லூர்_J_K_SIVAN


வீட்டில் எந்த பூஜை செய்தாலும், சுப காரியங்கள், கிரியைகள், ஸ்ராத்தம் தர்ப்பணம் ப்ரம்மயஞம், வேறு எந்த ஸம்ஸ்காரமாக இருந்தாலும் கடைசியில் ஒரு குட்டி மந்திரம் சொல்லவைப்பார் நமது வாத்யார்.

கையில் பஞ்சபாத்ரத்தை ஜலத்தோடு வைத்துக்கொண்டு கைகூப்பிக்கொண்டு, அல்லது உள்ளங்கையில் துளசி ஜலத்தை வைத்துக்கொண்டு கிளிப்பிள்ளை மாதிரி அவர் சொல்வது படியே சொல்பவன் அதி மேதாவி.

தப்பு தப்பாக அநர்த்தமாக சொல்பவன் நம்மாளு. நாம் அநேகர் நம்மாளு தான். இப்போது கூட எத்தனை பேருக்கு நாம் எதற்காக அந்த குட்டி மந்திரம் சொல்கிறோம், அதற்கு என்ன அர்த்தம் என்பதே தெரியாது அல்லவா? ஒரு சில நிமிஷங்கள் இதை கண்ணால் பார்த்து கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா?

இது எல்லோருக்கும் தெரிந்த விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் கடைசியில் வரும். மனப்பாடம் பண்ணி சொல்பவர் ஏராளம். நாராயணனுக்கு நாம் சமர்ப்பணம் செய்வது.

कायेन वाचा मनसेन्द्रियैर्वा ।
बुद्ध्यात्मना वा प्रकृतिस्वभावात् ।
करोमि यद्यत्सकलं परस्मै ।
नारायणयेति समर्पयामि ॥

Kaayena Vaacaa Manase[a-I]ndriyair-Vaa
Buddhy[i]-Aatmanaa Vaa Prakrteh Svabhaavaat |
Karomi Yad-Yat-Sakalam Parasmai
Naaraayannayeti Samarpayaami ||

காயேன வாசா மனஸேந்த்ரியைா் - வா
புத்த்யாத்மனா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத் l
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை
நாராயணாயேதி ஸமா்ப்பயாமி ll


''என் உடம்பாலும், வார்த்தைகளாலும், மனதாலும், என் அங்கங்கள், புலன்களாலும் நான் எதையெல்லாம் செயகிறேனோ, என் புத்தியை உபயோகித்து பிரயோகிக்கிறேனோ, இயற்கையாகவே எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் குணத்தாலும் , என் உணர்வுகளை காட்டுகிறேனோ, என் இதயத்தால் உணர்கிறேனோ, மனது போகிற போக்கில் நினைத்து செயல்படுத்துகிறேனோ, நான் எனக்கும் மற்றவர்களுக்கும் இதனால் என்னென்ன செயகிறேனோ, அது எனக்கு பலன் எதிர்பார்த்து செய்வதாக இல்லாமல் செய்துவிடு. அதில் என் சுயநலம் இல்லாமல் விலக்கிவிடு, இப்படிப்பட்ட செயகைகளை எண்ணங்களை எல்லாம் தாமரைப் பாதங்கள் கொண்ட ஸ்ரீமன் நாராயணா உன்னை சரணடைந்து உனக்கே அர்ப்பணிக்கிறேன்''


அவை, நம் ஆசைக்காக, நாமே அவனுக்குக் கொடுப்பவை. நாராயணன் எதையும் நம்மிடம் எதிர்பார்ப்பவன் இல்லை. தாய் குழந்தைக்கு செய்வதெல்லாம் பிரதியுபகாரம் பெற அல்ல.

"பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி"

"ஒரு இலையோ, பூவோ, கனியோ, ஒரு துளி நீரோ, எதை நீ ப்ரீதியோடும் பக்தியோடும் தருகிறாயோ, அது போதுமே எனக்கு. சின்ன இலைத்துண்டு, ஒரு உத்ரணி ஜலம் , காய்ந்த ஒரு திராக்ஷை இதை உன் பக்தி தோய்ந்த தூய மனத்தோடு அளித்தால் நான் ரொம்ப திருப்தியாக பெரிய விருந்தனவாக ஏற்றுக் கொள்வேன் என்கிறான் கிருஷ்ணனாக.

அவன் எதிர்பார்ப்பதெல்லாமே, இந்த த்ரிகரண சுத்தியே!-- மனம், வாக்கு, காயம் ஆகியவற்றில் தூய்மை. .
ஆத்மார்த்தமாக, ப்ரியத்தோடு நாம் தருகின்ற எதையும் ஏற்றுக்கொள்ள அவன் ஸித்தமாக இருக்கிறான்..

இவ்வளவு எளிமையானவனுக்கு, இனிமையாய் நம்மையே அளிப்போமே..அது தான் ஸார் சரணாகதி.

இனிமேல் எப்போதாவது "காயேன வாசா.." என்று வெறுமே வாய் மட்டும் சொல்லாமல், அற்புதமான மேலே சொன்ன அர்த்தத்தை அனுபவித்து மனமார நம்மை அவனுக்கு அர்ப்பணிப்போமா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...