#குருவாயூரப்பன் - நங்கநல்லூர் J K SIVAN
ஒரு அருமையான விஷயம் சொல்லட்டுமா?
குருவாயூர் கிருஷ்ணன் ஆலயத்தில் நாள் தோறும் விடிகாலை மூன்று மணிக்கு நிர்மால்ய தரிசனத்திற்கு வைகுண்டத்திலிருந்து அந்தர்யாமியாக அதாவது நம் கண்ணுக்குத் தெரியாமல், எண்ணற்ற தேவர்கள் ரிஷிகள், மஹான்கள் வருகிறார்கள். அவர்கள் தான் முப்பத்து முக்கோடி தேவர்கள், பாகவதோத்த மர்கள் என நாம் அறிய இயலவில்லை. அவர்கள் ஸூக்ஷ்ம சரீரத்தோடு வருவதால் அவர்களால் தொந்தரவில். நெரிசல் நமக்கு நம்மால் தான். அவர்களில் வியாஸர், ப்ரஹலாதன், நாரதர், குரு, வாயு, துருவன், அம்பரீஷன், தும்புரு அஷ்டதிக் பாலர்கள் இன்னும் எத்தனையோ பக்தர்களும் உண்டு. .
நாராயண பட்டத்ரி மெதுவாக உடல் அசைய முடியாமல் மெதுவாக அந்த கூட்டத்தில் ஒருவராக உள்ளே நுழைந்தார். தானாக இல்லை. பலர் அவரைத் தூக்கிக் கொண்டு சென்றார்கள். பட்டத்ரிக்கு தேவர்களை பார்க்கமுடியாவிட்டாலும் அவர்களுக்கு பட்டத்ரியை தெரியுமே. ஆஹா இவர் தான் நாராயண பட்டத்ரியா? . இவரால் அல்லவோ அற்புதமான ஸ்ரீமன் நாராயணீயம் உலகத்துக்கு பக்தர்கள் மகிழ தினமும் பாராயணம் பண்ண கிடைக்கப் போகிறது என்று மட்டற்ற மகிழ்ச்சி கொண்டனர்.
குருவாயூரப்பனின் தரிசனம் ஒரு விநாடி நேரமாவது கிடைக்காதா என்று எண்ணற்றோர் ஏங்கிக் கொண்டிருக்க பட்டத்ரியைத் தூக்கிக் கொண்டு வந்தவர்கள் சந்நிதிக்கு நேர் இடது பக்கத்தில் உள்ள ஒரு சிறிய திண்ணையைக் கண்டனர். பகவானுக்கு வலப் பக்கம் தமக்கு இடப்பக்கம் உள்ள அந்தத் திண்ணையில் அவரை அமர வைத்தனர்.
பட்டத்ரிக்கு பரம சந்தோஷம். ஆஹா என் வாழ்வில் நான் இப்போது தான் முதன்முறையாக குருவாயூர் வருகிறேன் . குருவாயூரப்பனைப் பற்றி கேள்விப்பட்ட துண்டு ஆனால் பார்த்ததே இல்லையே. பரவசத்தில் மெய் சிலிர்த்தது. ஒரு அல்பன், சாதாரண மனிஷனான என்னை என்னப்பன் கிருஷ்ணன் என் மேல் கருணை கொண்டு இங்கே வந்து தரிசனம் பெற வைத்தானே . இவ்வளவு திவ்ய ஸ்வரூபத்தைக் காண கண் கோடி வேண்டுமே? எத்தனை அழகு? எவ்வளவு தேஜஸ்? இப்பேர்ப்பட்ட அழகு வாய்ந்த சுந்தர பாலனை என்னால் பார்க்க முடியுமா? பாட முடியுமா? நான் அவனை முதல் அவதாரமான மத்ஸ்யாவதாரத்தி லிருந்து பாட வேண்டுமாமே . என்ன பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது. ஆனால் அதற்கு நான் தகுதி உடையவனா? என் ஸ்லோகங்களை அவன் ஏற்றுக் கொள்வானா? அவனது பாதா ரவிந்தங்களில் நான் விழ அனுமதிப்பானா?
''ஹரி நாராயணா, அம்மே நாராயணா, எண்டே குருவாயூரப்பா''' என்று பக்தர்கள் கோஷம் காதைப் பிளந்தது. பட்டத்ரி தன் மேல் நம்பிக்கை யில்லாமல் அவனை வேண்டிக்கொண்டு குருவாயூரப்பனைக் காணக் காத்திருந்தார்.
அந்த திண்ணையில் இருந்து அமர்ந்து கொண்டு, உள்ளே எட்டிப்பார்க்க முயற்சித்தார். தலையை திருப்ப முடியவில்லை. ''கிருஷ்ணா உனது தேஜோமய திவ்ய ஸ்வரூபத்தைக் காட்டு, மனக்கண்ணால் பார்க்கிறேன். கிருஷ்ணா கிருஷ்ணா'' என்று கதறினார். கண்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தன.
அவர் அமர்ந்திருந்த திண்ணை மண்டபம் குருவாயூரப்பனுக்கு வலப் பக்கம். வாத ரோகம் பிடிப்பு கழுத்தை திருப்பி அவனை பார்க்க முடியாமல் தவித்தார். கிருஷ்ணா! பரந்தாமா! என்று விடாமல் ஜெபிக்கிறார். அப்பனே உன்னை தரிசிக்காமல் நான் எப்படியடா உன்னைப் பற்றி எழுதுவேன்? நீ எனக்கு உன் திவ்ய தரிசனம் தருவாயா? முதன் முதலாக உன்னைக் கண்ணார காண வந்திருக்கிறேன். உன் திவ்யாலங் கார சௌந்தர்ய ரூபத்தை காட்டு. ஒருமுறை பார்த்து விட்டு உன்னை வர்ணிக்கிறேன்.
மெல்லிசாக அவர் காதுக்குள் மட்டும் ஒரு குரல் கேட்டது
''பட்டத்ரி, என்னால் உன் கழுத்தை சரி செய்ய முடியாது. நீ வந்த காரியம் முதலில் முடி, என்னைப் பாடு. அப்புறம் உன் வியாதி நீங்கும்''
'அப்படியே செய்கிறேன் கிருஷ்ணா''
''பட்டத்ரி ஒருவிஷயம் சொல்லட்டுமா. உன்னால் வேண்டுமானால் கழுத்தை திருப்பி அங்கிருந்து என்னை பார்க்க முடியாது. ஆனால் நான் கழுத்தை சாய்த்து உன்னை இங்கிருந்தே நன்றாக பார்க்க முடியும்.
இடுப்பில் இரு கைகளை வைத்துக்கொண்டு விட்டலனாக நாராயணன் நின்றான். சாய்ந்து பட்டத்ரியை பார்த்தான்.
''எங்கே ஆரம்பி ''என்றான்.
உலகமெல்லாம் இந்த ப்ரபஞ்சமெல்லாம் குருவாயூர் ஆலயம் முதற்கொண்டு எல்லாம் கிருஷ்ணனுடையது. ஆனால் நாராயண பட்டத்ரி உட்கார்ந்து நாராயணீயம் எழுதிய அந்த திண்ணை மண்டபம் இன்றைக்கும் என்றைக்கும் பட்டத்ரி மண்டபமாகத்தான் அறியப்படுகிறது. அடுத்த முறை குருவாயூர் போனால் அதைப் பார்த்து மகிழலாம்.ஸ்ரீமன் நாராயணீயம் நூறு தசகங்களையும் அர்த்தத்தோடு எழுதியாயிற்று. முகநூலிலும் பதிவிட்டாகிவிட்டது. 750 பக்கம் குறையாமல் வரும். அதை அச்சேற்ற காத்திருக்கிறேன். எவரையாவது நாராயணன், குருவாயூரப்பன் இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ள செய்தால் இலவசமாக தேவைப் பட்டவர்களுக்கு விநியோகமாகும்.
No comments:
Post a Comment