Thursday, June 23, 2022

ithihasa purusha

 இதிகாச  புருஷர்கள் -   நங்கநல்லூர் J.K. SIVAN


ராமாயணத்தில் வந்தவர்கள் பாரதத்திலும் வருகிறார்கள். யுகங்கள் கடந்தவர்கள் அவர்கள்.
ரெண்டாயிரம் வருஷம்  இடைவெளி கடந்த காலமாக இருந்தாலும்  இவர்கள் அதிலும் உண்டுஎன்று சொல்லத்தக்கவர்கள் சிலரை அறிவோம். நிறையபேர்களை இப்படி தேடலாம். என்றாலும் உடனே  கிடைப்பவர்கள்  பன்னிரண்டு பேரை ஞாபகம் வைத்துக் கொள்வோம்.

1)  ஜாம்பவானிலிருந்து ஆரம்பிப்போம். த்ரேதா யுகத்தில் ராம ராவண யுத்தத்தில் பெரும்பங்கு கொண்ட தலைவன். கரடி ராஜன். அவன் உணர்த்திதான் ஹநுமானுக்கே தனது பலம் தெரிந்தது.  ஹனுமான்  நீ எங்கே போகவேண்டும் தெரியுமா?  என்று  சஞ்சீவி மூலிகை இருக்கும் இடம் சொல்லி  கொண்டு வரவைத்தவன். ஹநுமானுக்கு வழி சொன்னவன்.
துவாபர யுகத்தில் க்ரிஷ்ணனோடு யுத்தம் புரிந்தவன். சியாமந்தக மணியை கிருஷ்ணனுக்கு அளித்தவன் தனது மகள் ஜாம்பவியை கிருஷ்ணனுக்கு மனைவியாக அளித்தவன். என் அம்மாவுக்கு   ஜம்பாவதி என்ற பெயரை  ராமாயண சக்ரவர்த்தி  புராண  சாகரம்   என் தாத்தா அதனால் தான் பெயர் வைத்திருப்பாரோ. 

2) மகரிஷி துர்வாசர். ராமனும் சீதையும் பிரிவார்கள் என்று முன்கூட்டியே அறிவித்தவர். அத்ரி மகரிஷி அனுசூயாவுக்கு மகனாக பிறந்தவர். கோபக்கார  ரிஷி என்று பெயர் எடுத்தவர்.

துவாபர யுகத்தில் வனவாசத்தின் போது துரியோதனன் அனுப்பியதால் பாண்டவர்களை தனது ஆயிரக்கணக்கான சீடர்களோடு திடீரென்று சந்தித்து போஜனம் செய்ய வருகிறார். திரௌபதி  அக்ஷய பாத்திரம் அன்று உதவாத நிலையில் என்னசெய்வது என்று தவிக்கும்போது கிருஷ்ணனால் மகரிஷியும் அவர்களது சீடர்களும் வயிறு நிரம்பி வாழ்த்தி செல்கிறார்கள். குந்தி போஜன் அரண்மனையில் கன்னிகை குந்தியை வாழ்த்தி அவளுக்கு உபதேசித்த மந்திரத்தால் பாண்டவர்கள் பிறந்தனர்.

3. நாரத முனிவர். திரிலோக சஞ்சாரி. எப்போது எங்கு வேண்டுமானாலும் வருவார் போவார். ராமாயணத்தில் சில இடங்களில் வருகிறார். பாரதத்திலும் கிருஷ்ணனை சந்திக்கிறார். ஹஸ்தினாபுரத்தில் கிருஷ்ணன் தூது சென்றபோது அங்கு இருந்தவர். இன்றும்  நினைவில் இருப்பவர்.

4) வாயுதேவன் - ராமாயணத்தில் மிக முக்கியமான பாத்திரமான ஹனுமானின் தந்தை.
அவரே மஹாபாரதத்தில் மிக முக்கியமானவன் பீமனின் தந்தை. வாயு இல்லாத இடமே இல்லை.  கால் முட்டியையும்  வயிற்றையும்  ரொம்ப படுத்துபவராகவும் இருக்கிறார்.

5) ப்ரம்ம ரிஷி வசிஷ்டர் பிள்ளை சக்தியின் மகன் பராசரர். 
பராசரரின் மகன் 
வேத வியாசர். வசிஷ்டர் ராமாயணத்தில் வருகிறார். ராமனுக்கு முடிசூட்டிய குல குரு. வியாசரைப் பற்றி கேட்கவே வேண்டாம். பாரதத்தை எழுதியவர். வசிஷ்டர் சத்யவ்ரத மனு காலத்திலிருந்து த்ரேதா யுக ராமன் காலம் வரை வாழ்ந்தவர். ராமனுக்கு குரு.

6) மயாசுரன். ராவணனுடைய  மாமனார். மண்டோதரியின் அப்பா. மஹாபாரதத்தில் காண்டவ வனத்தை கிருஷ்ணன் அருகில் இருக்க, அக்னியை திருப்தி படுத்த அர்ஜுனன் அழிக்கிறான். அந்த பெரும் அக்னி கபளீகரத்தில் மயன் மட்டும் உயிர் தப்புகிறான்.அவனை அழிக்க கிருஷ்ணன் சுதர்சன சக்ரத்தை எடுக்கிறார். அர்ஜுனனை சரணடைந்து காப்பாற்ற வேண்டு கிறான் மயன் .  பாண்டவர்களின்  தலைநகரமாக   இந்த்ரப்ரஸ்தத்தை அழகாக கட்டிக்கொடுக்கிறான் மயன்.

7) பாரத்வாஜர் . வால்மீகியின் சீடர். ராமர் சித்ரகூடத்தில் பாரத்வாஜர் ஆஸ்ரமம் சென்று அவரை வணங்குகிறார். பாரதத்தில் துரோணரின் தந்தை பாரத் வாஜர்..

8) குபேரன் - ராவணனின் அண்ணா. பீமன் சௌகந்தி புஷ்பம் எடுக்க செல்லும் போது பீமனால் சாபம் நீங்க பெறுகிறான்.

9) பரசுராமன் - சீதையை மணந்து ராமன் திரும்பும்போது ராமனை எதிர்த்து தன்னுடைய விஷ்ணு தனுசுவை நாண் ஏற்ற சொல்லி ராமன் எளிதில் அவன் கர்வத்தை அடக்குகிறார். இதே பரசுராமர் தான் பாரதத்தில் கர்ணனுக்கு அவன் பிராமண சீடனாக வேடம் பூண்டு அஸ்திர வித்தை கற்கிறான். அம்பைக்கு உதவ பரசுராமன் பீஷ்மருடன் மோதி தோற்கிறான்.

10) சிரஞ்சீவி ஹனுமான் எந்த யுகத்திலும் உள்ளவர். திரேதாயுகத்தில் ராம தூதன். மஹா  பாரதத்தில் பீமனுடன் மோதி அவனுக்கு கர்வத்தை அடக்கி ஆசி புரிகிறார். அர்ஜுனன் தேரில் கொடியில் இருந்து உதவுகிறார். அர்ஜுனனோடு அம்பு பாலம் கட்டுவதில் போட்டியிடுகிறார். தனியாக ஒரு கதை இது பற்றி எழுதி இருக்கிறேன்  மீண்டும் பதிவிடுகிறேன். எத்தனை தடவை வேண்டுமானாலும் படித்தாலும்  இதிகாச சம்பவங்கள் நமக்கு அலுப்பதில்லை. 

11) விபீஷணன். - ராவணன் தம்பி. ராமாயணத்தில் அவனுக்கு நல்ல அறிவுரைகள் தந்து, அவன் கேளாததால் வெளியேறி ராமரை சரணடைகிறான். யுதிஷ்டிரனின் ராஜசூய யாகத்தில் பொன்னும் மணியும் இலங்கையிலிருந்து பரிசளிக்கிறான். சிரஞ்சீவி என்பதால் மரணம் அற்றவன்.  ஸ்ரீரங்கம் கோவில் பற்றி நினைக்கும்போது மனதில் தோன்றுபவன் விபீஷணன். அவனால் தான் நமக்கு ரங்கநாதர் கிடைத்தார். 

12) ரிஷி அகஸ்தியர் - ராவண யுத்தத்துக்கு முன்பு ராமனுக்கு ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகங் களை உபதேசிக்கிறார். மகா பாரதத்தில் துரோணருக்கு பிரம்மாஸ்திரம் அளிக்கிறார்  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...